இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

தேவசிநேகம் ஆத்துமத்தை ஒளிர்விக்கும் ஒளியாக இருக்கிறது!

"ஓ லுக்ஸ் பெயாத்திஸிமா.''

நம்மில் ஆதாமின் பாவத்தின் மிக மோசமான விளைவுகளில் ஒன்று, மனதை இருட்டாக்கிய ஆசாபாசங்களைக் கொண்டு நம் அறிவை அது குருடாக்கியது ஆகும். ஓ, எந்த ஓர் ஆசாபாசத்தால் ஆளப்படத் தன்னை அனுமதிக்கும் ஆத்துமம் எவ்வளவு பரிதாபத்திற்குரியது! ஆசாபாசம் என்பது ஒரு புகை, அது ஒரு மூடுதிரை, நாம் சத்தியத்தைக் காணாதபடி அது நம்மைத் தடுத்து விடும். எது தீமை என்று அறியாதவன் தீமையிலிருந்து எப்படி விலகியோடுவான்? தீமையின் இந்த மறைவான தன்மை, நம் பாவங்கள் அதிகரிக்கும் அளவுக்கேற்ப, தானும் அதிகரிக்கிறது. ஆனால் தமது தெய்வீக ஒளிக்கதிர்களோடு, மகா உன்னத, ஆசீர்வதிக்கப்பட்ட ஒளியானவர் என்று அழைக்கப்படுகிற பரிசுத்த ஆவியானவர் தம்மை நேசிக்கும்படி நம் இருதயங்களைப் பற்றியெரியச் செய்வது மட்டுமின்றி, நம் இருளையும் சிதறடித்து, சகல உலகக் காரியங்களின் வெறுமையையும், நித்திய நன்மைகளின் அளவற்ற மதிப்பையும், இரட்சணியத்தின் முக்கியத்துவத்தையும், வரப்பிரசாதத்தின் மதிப்பையும், கடவுளின் நன்மைத்தனத்தையும், நம்மிடமிருந்து பெற்றுக்கொள்ள அவர் தகுதிபெற்றுள்ள அளவற்ற நேசத்தையும், அவர் நமக்குக் காண்பித்துள்ள அளவற்ற நேசத்தையும் நமக்கு வெளிப்படுத்தவும் செய்கிறார்.

ஓ பரிசுத்த ஆவியானவரே, தெய்வீக தேற்றரவாளரே, பிதாவாகிய சர்வேசுரனையும், சுதனாகிய சர்வேசுரனையும் நான் ஆராதிப்பது போல், என் மெய்யான சர்வேசுரனாக உம்மையும் நான் ஆராதிக்கிறேன். உமது வரப்பிரசாதத்தாலும், உமது நேசத்தாலும் என்னை சந்தித்தருளும்; பரம திவ்ய இரகசியங்களைப் புரிந்து கொள்ள என்னால் இயலும்படியாகவும், பரலோகக் காரியங்களின் காட்சிதியானத்தால், என் நினைவுகளையும், நாட்டங்களையும் இந்த நீச உலகத்தின் வீணான சகல காரியங்களிலிருந்தும் நான் விலக்கும் படியாகவும், உமது புத்தியாகிய கொடையை எனக்குத் தந்தருளும் படியாக உம்மை மன்றாடுகிறேன்.

"மிருக சார்பான மனிதன் தேவ ஆவியானவர் சம்பந்தமான காரியங்களைக் கண்டுபிடிக்க மாட்டான்'' (1 கொரி. 2:14). மனிதன், இவ்வுலக இன்பங்களால் கிரகிக்கப்பட்டவனாக, இந்த உண்மைகளை மிகச் சிறிதளவே அறிந்திருக்கிறான். இதன் காரணமாக, தான் வெறுக்க வேண்டியதை மகிழ்ச்சியற்ற விதத்தில் அவன் நேசிக்கிறான், தான் நேசிக்க வேண்டியதையோ வெறுக்கிறான். ""ஓ அறியப்படாத நேசமே! ஓ நேசிக்கப்படாத நேசமே!'' என்று வியந்து கூறுகிறாள் அர்ச். பாஸ்ஸி மரிய மதலேனம்மாள். இதனாலேயே அர்ச். தெரேசம்மாளும், கடவுள் அறியப்படாததாலேயே அவர் நேசிக்கப்படுவதில்லை என்றாள். ஆகவே புனிதர்கள் எப்போதும் கடவுளிடமிருந்து ஞான வெளிச்சத்தைத் தேடினார்கள். ""உம்முடைய ஞானக் கதிர்களை வரவிடும்; என் இருளை ஒளிர்வித்தருளும், என் கண்களைத் திறந்தருளும்.'' ஆம், ஏனெனில் ஒளி இல்லாவிடில், ஆபத்தான மலைச் சரிவுகளில் விழுவதைத் தவிர்க்க இயலாது, கடவுளையும் காண இயலாது.

ஓ பரிசுத்த, தெய்வீக ஆவியானவரே, நீர் மெய்யான சர்வேசுரனாக, பிதாவோடும், சுதனோடும் ஒரே சர்வேசுரனாக இருக்கிறீர் என்று நான் விசுவசிக்கிறேன். நீரே அந்த ஞான ஒளிக் கதிர்களை எனக்குத் தந்தவர் என்று ஒப்புக்கொண்டு அடியேன் உம்மை ஆராதிக்கிறேன். அந்த ஒளியைக் கொண்டு, உம்மை நோகச் செய்ததன் மூலம் நான் செய்துள்ள தீமையையும், உமத்மை நேசிக்க எனக்குள்ள கடமையையும் நான் கண்டுபிடிக்கச் செய்தீர். இதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். உம்மை நோகச் செய்ததற்காக நான் மிகவும் மனம் நொந்து மெத்த மனஸ்தாபப்படுகிறேன். என் இருளில் உம்மால் கைவிடப்படவே நான் தகுதியுள்ளவனாக இருக்கிறேன். ஆயினும், நீர் இன்னும் என்னைக் கைவிடவில்லை என்பதை நான் உணர்கிறேன். ஓ நித்திய ஆவியானவரே, என்னைத் தொடர்ந்து ஒளிர்வித்து, இன்னும் அதிகமதிகமாக உமது அளவற்ற நன்மைத்தனத்தை நான் அறியச் செய்து, எதிர்காலத்தில் என் முழு இருதயத்தோடு உம்மை நேசிக்க எனக்குப் பலம் தந்தருளும். உமது அன்பால் மேற்கொள்ளப்பட்டு, வேறு யாரையுமன்றி உம்மை மட்டுமே நேசிக்கும்படி நான் நெருக்கப்படுமாறு, வரப்பிரசாதத்திற்கு மேல் வரப்பிரசாதத்தைத் தந்தருளும். சேசுநாதரின் பேறுபலன்களின் வழியாக நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன்; என்னை விட அதிகமாக உம்மை நேசிக்கிறேன்; என் இராஜரீக நன்மைத்தனமாகிய உம்மை நான் நேசிக்கிறேன். முழுவதும் உமக்குச் சொந்தமாயிருக்க நான் ஆசிக்கிறேன்; என்னை ஏற்றுக் கொள்ளும், இனி ஒருபோதும் உம்மை விட்டுப் பிரிய என்னை அனுமதியாதேயும். மரியாயே, என் மாதாவே, எப்போதும் உங்கள் பரிசுத்த பரிந்துரையால் எனக்கு உதவி செய்யுங்கள்.