இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

கன்னிசுத்தங் கெடாத மாதாவே!

“ஒரு பெண் கடவுளின் தாய்!” - புத்திக்கு எட்டாத சத்தியம் இது. “ஒரு கன்னிகை தன் கன்னிமையை இழக்காமலே சர்வேசுரனுக்குத் தாயாகும் பேறு பெற்றார்கள். சர்வேசுரனைப் பெற்ற பின்னும் அவர்கள் என்றும் கன்னியாகவே இருந்தார்கள்.” 

நமது மூளையைக் குழப்பி நம்மைத் திகைக்க வைக்கும் சத்தியம் இது; “இப்படியும் நடக்குமா? இது சாத்தியமாகுமா?” - இது போன்ற சந்தேகம் கலந்தகேள்விகள் ஒவ்வொன்றாய் எழுகின்றன. ஆயினும் இது மறுக்கக் கூடாத சத்தியம்; விசுவாசத்துடன் சகலரும் ஏற்றுக் கொள்ள வேண்டிய சத்தியம்.

மாதா பெற்ற இப்பெரும் பேற்றைக் குறித்துத் திருச்சபை அவர்களை “பழுதற்ற கன்னியாஸ்திரியாயிருக்கிற மாதாவே” என்று வாழ்த்திப் புகழ்ந்தது; ஆனால் அத்துடன் திருப்தியடையவில்லை. அப் பெறுதற்கரிய பெரும் பாக்கியத்திற்காக மீண்டும், மீண்டும் அவர்களைப் புகழ ஆவல் உண்டாகிறது. எனவே அவர்களை “கன்னி சுத்தம் கெடாத மாதாவே” என்று மறுபடியும் வாழ்த்துகிறது.

அர்ச். மரியம்மாள் “கன்னித்தாய்” என்ற புகழுரையின் உட்பொருளை அலசிப் பார்த்தோம். இங்கு அவர்கள் உண்மையாகவே “கன்னிகையாகவும், தாயாகவும்” இருந்தார்கள் என்பதற்குத் தக்க நியாயங்கள் உண்டாவென ஆராய்தல் நலம்.

இச்சத்தியத்தை மறுக்கத் துணிந்த வேத விரோதிகள் பலர் இருந்தனர். “அர்ச். மரியம்மாள் மற்ற பெண்களைப் போன்று கர்ப்பந் தரித்துத்தான் சேசுவைப் பெற்றார்கள்; கிறீஸ்துநாதரைப் பெற்றதால், அவர்கள் தன் கன்னித் தன்மையை இழந்தார்கள்” எனச் சில வேத விரோதிகள் கூறினார்கள்.

“மரியம்மாளுக்கு சேசுநாதரைத் தவிர வேறு பல குழந்தைகள் இருந்தனர். இவர்கள் யாவரையும் மற்ற தாய்மார்களைப் போலப் பெற்றெடுத்தார்கள். எனவே அவர்கள் நித்திய கன்னிகையல்ல” என்ற பிதற்றலை பல குருட்டு நியாயங்களைக் கொண்டு நிரூபிக்க முயன்றனர் சிலர். தற்காலத்தில் முதலாய் அநேக பதிதர்கள் இத்தப்பறையைப் பறை சாற்றி வருகின்றனர்.

முன்கூறின தப்பறைகளுக்கு விரோதமாய், தேவதாய் மெய்யாகவே கன்னித்தாய் என்பதை நிரூபிக்க, வேதாகமங்களிலும் திருச்சபையின் பழம்போதனைகளிலும், திருச்சபைப் பிதாக்கள் காரணங்கள் பல காட்டி சாட்சி கூறியுள்ளனர். அவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சுருக்கமாக ஆராய்வோம்.

நமதாண்டவர் பிறக்க சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர் வசித்த இசையாஸ் தீர்க்கதரிசி சொல்லுவதாவது: “இதோ ஒரு கன்னிகை கர்ப்பந்தரித்து குமாரனைப் பெறுவாள்” (இசை. 7:14). 

திருச்சபையின் வேதசாஸ்திரிகள் அனைவரும் ஒருவாய்ப்பட இத்தீர்க்கதரிசனம் தேவமாதாவையும், அவர்கள் ஈன்றெடுத்த சேசுவையும் குறிக்கிறதென எடுத்துக் காட்டுகின்றனர். 

சுவிசேஷகரான அர்ச். மத்தேயு, இத்தீர்க்கதரிசனம் எவ்விதம் மாமரியிடம் நிறைவேறியதென்பதை, தம் சுவிசேஷத்தில் குறிப்பிட்டுள்ளார் (மத். 1:22,23). 

சர்வேசுரனின் சர்வ வல்லமையை ஆக்காஸ் என்னும் யூத அரசனுக்கு நிரூபித்துக் காண்பிக்க இத்தீர்க்கதரிசனத்தைக் கூறுகிறார் இசையாஸ். 

ஒரு பெண், மற்றெல்லாப் பெண்களைப் போலும் கர்ப்பந் தரித்து பிள்ளை பெறுவதில் புதுமை ஒன்றுமில்லை. அதற்கு மாறாய், ஒரு பெண், தன் கன்னிமையை இழக்காமல், கர்ப்பந்தரித்து மக்கட்பேறு பெறுவதிலோ இயற்கைக்கு மேலான புதுமை அடங்கியிருக்கிறது; சர்வேசுரனுடைய சர்வ வல்லமை வெளிப்படுகிறது; அத்துடன் அப்பெண்மணியின் பெருமையும் புலனாகின்றது. இவ்வித புதுமைகளைச் செய்ய சர்வேசுரனுக்கு சக்தியுண்டென்பதை, இசையாஸ் தீர்க்கதரிசி ஆக்காஸ் அரசனுக்கு எடுத்துக் கூறி, சர்வேசுரனுடைய வல்லமையைப் பற்றி அவ்வரசன் கொண்டிருந்த அவிசுவாசத்தைக் கண்டிக்கிறார்.

தேவதாய்க்கு கபிரியேல் சம்மனசு மங்கள வார்த்தை சொன்னது முதல் கர்த்தர் பிறந்தது வரை நடந்த சம்பவங்களைப் பற்றி நான்கு சுவிசேஷங்களிலும் குறிக்கப்பட்டிருப்பனவற்றை, யதார்த்த மனதுடன் சிந்திப்பவர் யாவரும், “அவர்கள் மெய்யாகவே கன்னித் தாய்” என்பதை ஏற்றுக் கொள்ளுவார்கள். 

இதோ தேவதூதன் அவர்களை அணுகி, “நீர் கர்ப்பந்தரித்து ஒரு குமாரனைப் பெறுவீர்” என்கிறார். மரியாயோவெனில் பயந்து, கலக்கமுற்று, “இது எவ்விதம் நடக்கக் கூடும்?” என வினவுகிறார்கள். மெய்விவாக அந்தஸ்திலுள்ள ஏனைய பெண்களைப் போன்று நடப்பது மரியன்னையின் எண்ணமா யிருந்திருந்தால், தான் ஒரு குமாரனைப் பெறப் போகும் நற்செய்தியைக் கேட்டு அவர்கள் கலங்க நியாயமேது? நீதிமான் சூசையப்பரைத் தன் வாழ்க்கைத் துணைவராகத் தெரிந்து கொண்டிருந்த போதிலும், தன் கன்னிமை முழுமையும் கடவுளுக்குக் காணிக்கையாக ஒப்புக் கொடுத்திருந்தார்கள். இதினிமித்தம் தான் கர்ப்பந்தரித்து பிள்ளை பெறுவது முடியாதென நன்கறிந்திருந்தார்கள். 

எனவே, சம்மனசின் வார்த்தைகளைக் கேட்டுக் கலங்கினார்கள்; தான் கருத்தரிப்பது எங்ஙனம் என்று ஆச்சரியம் கலந்த அச்சமுறுகிறார்கள். தன் கன்னிமைக்கு யாதொரு பங்கமுமின்றி, தேவ வல்லமையால் அற்புதமாகக் கர்ப்பந்தரித்து, தேவ சுதனைப் பெறுவார்கள் என்று சம்மனசு வாக்குறுதி கொடுத்த பின்னரே தன் சம்மதத்தைத் தெரிவிக்கின்றார்கள். இச்சம்பவம் ஒன்றே மரியன்னையின் கன்னிமை பழுதடையவில்லை என்பதை நிரூபிக்கப் போதுமானது. எனினும் இன்னும் ஒரு சம்பவத்தைக் கவனிப்போம்.

அர்ச். மரியம்மாள் கர்ப்பந்தரித்திருப்பதை அறிந்த நீதிமான் சூசையப்பர் அச்சமுறுகின்றார்; காரணம் அறியாது கலக்கமடைகின்றார். அவரது அச்சமும், பயமும், கன்னி மரியாயின் கர்ப்பத்திற்குக் காரணம் அவரல்ல என்பதைக் காட்டுமானால், அதற்கு வேறொரு மனிதன் காரணம் என தேவதூஷணம் கூறுதல் முறையோ? இத்தூஷணம் கக்கும் நா நலமுறுமோ? மனித உதவியின்றி மரியம்மாள் கர்ப்பந்தரித்தார்கள் என்பது மெய்யாகையால், சர்வேசுரன் செய்த புதுமையே அதற்குக் காரணம் என்று கொள்ளுதல் முறையல்லவா? தேவ வல்லமையால் அற்புதமாய்க் கர்ப்பந்தரித்த போது, அவர்கள் தன் கன்னிமையை இழத்தல் எவ்விதம்?

இஸ்பிரீத்துசாந்துவின் ஏவுதலினால் தூண்டப் பட்டு, அவருடைய கண்காணிப்பின்கீழ் தங்கள் சுவிசே ஷங்களை எழுதின சுவிசேஷகர்கள் அர்ச். மரியாயைப் பற்றி எழுதும் போதெல்லாம், “கன்னிகை,” “கன்னித்தாய்,” “கன்னிமரியம்மாள்” என்றே அழைக்கின்றனர். மாதா தன் கன்னிமையை இழந்திருப்பின், அவர்களைக் கன்னிகை என்றழைப்பதின் அர்த்தமென்ன?

என்றும், எக்காலத்தும், எவ்விடத்தும் தவறாவரம் பெற்ற திருச்சபை மரியம்மாள் என்றும் கன்னித் தாய் (Semper Virgo) என்று போதிக்கின்றது. திருச்சபையில் கூடின பல சங்கங்களும் (Councils) இச்சத்தியம் உண்மையென வற்புறுத்திக் கூறியுள்ளன. மேலும் அவர்களை நோக்கிச் சொல்லும் ஜெபங்களில் அவர்களை “கன்னிகை” என்று கனிந்து அழைக்கின்றது; அவர்களைப் புகழ்ந்து பாடும் பாட்டுகளிலும் கீதங்களிலும் அவர்களைக் “கன்னித் தாய் மரியாயே” என்று கூறுகிறது.

நம் பரிசுத்த வேதத்தின் விசுவாச சத்தியங்கள் தொகுப்பாக அடங்கிய விசுவாச மந்திரத்திலும் இச்சத் தியம் அடங்கியுள்ளது. “அவர் இஸ்பிரீத்துசாந்துவினால் கற்பமாய் உற்பவித்து அர்ச். கன்னிமரியாயிடமிருந்து பிறந்தார்.” அர்ச். கன்னிமரியாயிடமிருந்து பிறந்தார் என்னும் வார்த்தைகளின் அர்த்தமென்ன? திருச்சபையின் துவக்கத்திலிருந்து வேத சாஸ்திரிகள், இச்சத்தியத்தை சந்தேகத்திற்கு இடமில்லாதவாறு தெளிவுடன் படிப்பித் துள்ளனர். அவர்கள் சொன்னவை யாவையும் இங்கு எடுத்துரைக்க அவசியமில்லையாதலின், முக்கியமான சிலர் சொன்னவற்றை மட்டும் சற்று கவனிப்போம். 

“ஆத்துமத்திலும், சரீரத்திலும் தேவமாதா எப்போதும் பரிசுத்தமானவர்கள்; நித்தியத்திற்கும் கன்னிகை” (Ep. x. ad Eus. de Ass. In Ezech. i, 13) என்று அர்ச். ஜெரோம் எழுதினார். 

“தேவமாதா கன்னிமையின் அரசி; அதன் மகிமை அவர்களிடம் கறைப்படவில்லை” (De Instit. Virg.) என்று அர்ச். அம்புரோஸ் கூறுகிறார். 

“சேசுநாதரைப் பெற் றெடுத்ததால் தேவமாதாவின் பரிசுத்ததனம் அதிகரித்தது; அவர்களுடைய கற்பு ஓர் புதிய பொலிவு பெற்றது; அவர்களது கன்னிமை பழுதற்றதானது” (Serm. cxlii) என்று கிரிசோலோகுஸ் இராயப்பர் சொல்லுகிறார். 

திருச்சபையின் வேதசாஸ்திரிகளில் பெரியவரெனப் போற்றப்படும் அர்ச். அகுஸ்தீனார் இச்சத்தியத்தை வியந்து அக்களித்துக் கூறுவதாவது: “அதிசயித்து ஆச்சரியப்படுங்கள்; ஓர் கன்னிகை கர்ப்பந்தரித்துள்ளார்கள்; மேலும் மேலும் அதிசயித்து பிரமிப்படையுங்கள்; ஓர் கன்னிகை ஒரு புதல்வனைப் பெற்றிருக்கிறார்கள்; பிள்ளைகளைப் பெற்ற பின்னும் பழுதற்ற கன்னிகையாகவே இருக்கிறார்கள்; என்ன ஆச்சரியம்! என்ன புதுமை! புதுமையிலும் புதுமை!!” (Serm. in Nat. Domini, xiii). 

கன்னிமாமரியிடம் இம்மாபெரும் புதுமையைச் செய்த தேவனுக்கு நன்றி செலுத்துவோம். அர்ச். எப்ரேமோடு சேர்ந்து, கன்னிமை குன்றா கன்னித்தாயை வாழ்த்துவோம்: “ஓ! கன்னிமை குன்றா அரசியே! தேவனின் மாசற்ற தாயே! மிகவும் சங்கைக்குரிய எங்கள் இராக்கினியே! வான மண்டலங்களிலும் மேன்மை பெற்றவர்களே! சூரியனின் ஒளிக்கதிர்களை விட பன்மடங்கு தூய்மையானவர்களே! நீர் தேவனை மனித சுபாவத்திலே பெற்றெடுத்தீர்; அவரைப் பெறும் முன்னும், பெறும்போதும், பெற்றபின்னும் நீர் கன்னியாயிருந்தீர்.” 

“தாயே, பரிசுத்ததனம் மலரும் பூந்தோட்டமே! கன்னித் தாய் என்னும் உமது நித்திய கன்னிமை நிலைக்கு எத்தகைய புகழ்ச்சிகள் கூறுவோம்! கேட்கப்படாத புதுமை என்போமோ! விவரிக்க முடியாத அதிசயம் என் போமோ! தீப்பற்றாத புதர் நீரே! நீர் ஒருவரே ஆத்துமத்திலும், சரீரத்திலும் பரிசுத்தமானவர்; மாசற்றவர்; கற்புக் கரசி; கன்னிமைக்கு இருப்பிடம்; அதே சமயத்தில் தேவனைப் பெற்ற தாய்! 

தேவன் உம்மில் நேசித்ததும், வானவர் உம்மில் கண்டு மகிழ்ந்ததும், பூவுலகோர் உம்மில் கண்டு ஆச்சரியப்படுவதுமான உமது நித்திய கன்னிமையை நாங்களும் நேசிக்கவும், நேசித்து மகிழவும், மகிழ்ந்து ஜீவிக்கவும் துணை புரிந்தருளும். கன்னித் தாய்மரியே, நாங்களும் கற்பை நேசித்து, கற்புள்ளவர்களாய் ஜீவிக்கச் செய்தருளும்.” 


கன்னிசுத்தம் கெடாத மாதாவே!
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!