இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

கிறீஸ்தவர்களுடைய சகாயமே!

கிறீஸ்தவ மக்கள் யாவரும் நமது தேவ மாதாவின் செல்லப் பிள்ளைகள்; அவர்களில் ஒவ்வொருவரையும் தாய்க்குரிய வாஞ்சையுடன் நேசிக்கிறார்கள் மாதா. அவர்களில் எவரேனும் நோயுறும் போதும், பாவச் சேற்றில் விழ நேரிடும்போதும், துன்ப துயரால் பீடிக்கப்படும் போதும், எவ்விதம் மாதா அவர்களுக்கு உதவி புரியத் தீவிரிக்கிறார்கள் என்பதை “வியாதிக்காரருக்கு ஆரோக் கியமே,” “பாவிகளுக்கு அடைக்கலமே,” “கஸ்திப்படுகிற வர்களுக்குத் தேற்றரவே” என்னும் ஸ்துதிகளைப் பற்றி ஆராய்ந்த போது விரிவாக எடுத்துரைத்தோம்.

ஆனால் நம் அன்னையின் உதவி இத்துடன் நின்று விடவில்லை. ஒரு குடும்பத்தின் தலைவன் எவ்விதம், தனது குழந்தைகள் ஒவ்வொன்றினுடையவும் நலத்தை மட்டும் கருதி நில்லாமல் குடும்ப முழுவதினுடையவும் நலத்தைப் பற்றிக் கவலையுறுகிறானோ, அவ்விதமே நமது தாயும், கிறீஸ்தவக் குடும்பமாகிய திருச்சபையை கவலையுடன் பாதுகாத்து வருகிறார்கள். தனது குடும்பத்தில் களவு ஒன்றும் நேரிடாதபடியும், குடும்பத்திற்கு அபகீர்த்தி யாதும் வராதபடியும், அதற்கு மாறாய் நற்பெயர் ஏற்பட வேண்டுமெனவும் ஒரு நல்ல தகப்பன் பிரயாசைப்படுவது போன்று, பரிசுத்த மாமரியும், திருச்சபையைப் பிறமதத்தாரின் கொடுமைகளினின்றும், பதிதர்களின் அட்டூழியங்களினின்றும் இவ்விரண்டாயிரம் ஆண்டளவாய்க் காத்து வருகின்றார்கள். 

நரகக் கூளியின் தாக்குதலினால் பாறையின் மேல் கட்டப்பட்ட திருச் சபைக்கு அணுவளவேனும் சேதம் வராதபடி காத்து வந்துள்ளார்கள்; ஆபத்து அடுத்து வந்த போது கிறீஸ்தவர்கள் “அம்மா” என்றலறி அவர்களிடம் உதவி கேட்டபோது, தடையின்றி அவர்களுக்கு உதவி தந்துள்ளார்கள். இதை நமக்கு நினைப்பூட்ட வேண்டியே, “கிறீஸ்தவர்களின் சகாயமே” என்று மாதாவை அழைக்கின்றது திருச்சபை. திருச்சபைச் சரித்திரத்தை எடுத்து வாசித்தால், ஒவ்வொரு நூற்றாண்டிலும் மாதா செய்துள்ள நன்மை எவ்வளவெனப் புலப்படும். அவை யாவற்றையும் இங்கு எடுத்துக் கூற முடியாதாகையால், சில முக்கிய சம்பவங்களை மட்டும் எடுத்துரைப்போம்.

16-ம் நூற்றாண்டின் ஆரம்பம் இஸ்லாமியம் மிகச் செழிப்புற்றிருந்த காலம். சென்றவிடமெல்லாம் வெற்றிக் கோலத்துடன் இஸ்லாமியர் திரும்பிய காலம் அது. ஐரோப்பாவை முற்றுகையிட்டு, கிறீஸ்தவ வேதத்தையே அடியோடு அழிக்கப் போவதாகப் பயமுறுத்தினர். லெப்பான்டோ (ஸிeஸ்ரீழிஐமிலி) குடாவில் முகமதியக் கொடி தாங்கிய பயங்கரக் கப்பற்படையொன்று தோற்றமளித் தது. கிறீஸ்துவர்கள் படையோவெனில் எண்ணிக்கை யிலும், வீரியத்திலும் குறைவுற்றிருந்தது; வெற்றி கிட்டுதல் சாத்தியமாகாதெனத் தோன்றியது. மகமதியர் அந்த யுத்தத்தில் வெற்றியடைந்தால் கிறீஸ்தவ நாடுகளின் கதி அதோகதியாகி விடும். 

அப்போது திருச்சபையை அரசாண்டவர் அர்ச். 5-ம் பத்திநாதர். அவர் இப்பயங்கர நிலையை அறிந்து, கிறீஸ்தவர்களுக்கு வெற்றி பெற்றுத் தர தேவ அன்னையாலேயே முடியும் என்று உணர்ந்து, ஜெபமாலையைப் பக்தியுடன் ஜெபித்து அன்னையின் உதவியை அனைவரும் நாட வேண்டுமென கிறீஸ்தவ மக்களுக்கு உத்தரவிட்டார். தேவ அன்னையும் உதவி புரியத் தாமதிக்கவில்லை. 

1571-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதி அற்புதமாய்க் கிறீஸ்தவப் படைக்கு வெற்றி கிடைத்தது. மகமதிய கடற்படை அன்றிலிருந்து தலை தூக்காவண்ணம் முறியடிக்கப்பட்டது. அவ் வெற்றிக்கு நன்றி கூறவும், தேவதாயின் சகாயத்தை நமக்கு எடுத்துக் காட்டவும், தேவ மாதாவின் பிரார்த்தனையில் “கிறீஸ்தவர்களுடைய சகாயமே” என்ற புகழையும் சேர்த்துக் கூற வேண்டுமென பாப்பரசர் அர்ச். 5-ம் பத்திநாதர் கட்டளையிட்டார்.

17-ம் நூற்றாணடில் துருக்கியர் ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னாவைத் தாக்கினர். கிறீஸ்தவர்களின் படை சிறியதாக இருந்த போதிலும், 2,00,000 துருக்கிய வீரரைத் தேவ அன்னையின் உதவியால் 1683-ம் ஆண்டு, செப்டம்பர் 12-ம் தேதி முறியடித்தது. இவ்வெற்றியின் ஞாபகமாக இன்றைக்கும் திருச்சபையில் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் 12-ம் தேதி “மரியாயின் திருநாமத்தின் திருநாள்” என்று ஒரு திருநாள் கொண்டாடப்பட்டு வருகின்றது.

19-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆட்சி புரிந்த 7-ம் பத்திநாதர் என்னும் பாப்பானவருக்கும் சரித்திரப் புகழ் பெற்ற பிரெஞ்சுச் சக்கரவர்த்தி நெப்போலியனுக்கும் ஏற்பட்ட தகராறுகள் ஏராளம். 1809-ம்ஆண்டு ஏற்பட்ட தகராறின் காரணமாக நெப்போலியன் 7-ம் பத்திநாதரைச் சிறைப் பிடித்துச் சென்றான். பாப்பரசரின் சிறைவாசம் சுமார் 5 வருடங்கள் நீடித்தன. ஆனால் தேவதாயின் அடைக்கலத்தின் மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கை மட்டும் குன்றவில்லை. 

1812-ம் ஆண்டிலிருந்து நெப்போலியன் சக்கரவர்த்திக்கு தோல்விகளே ஏற்பட்டன. கடைசியாக 1814-ம் ஆண்டு முற்றிலும் முறியடிக்கப்பட்டான். திருச்சபைத் தலைவர் 7-ம் பத்திநாதர் தமது சிறைவாசம் நீங்கப் பெற்று, வெற்றி வீரராய் உரோமை நகர் அடைந்தார். உரோமை சேர்ந்ததும் தேவதாய் தமக்குச் செய்த இப்பேருபகாரத்திற்கு நன்றியாக, தாம் விடுதலை பெற்ற நாளை (மே மாதம் 24-ம் தேதி) “கிறீஸ்தவர்களின் சகாயமான” மரியன்னையின் திருநாளாகக் கொண்டாட வேண்டுமெனக் கட்டளையிட்டார்.

திருச்சபை ஆரம்பத்திலிருந்து இதுவரை திருச் சபைக்கு விரோதமாய் எழும்பிய அரசாங்கங்களும் நாடுகளும் பல உரோமை மன்னர்களும், முகம்மதியர் களும், நெப்போலியன் போன்ற சக்கரவர்த்திகளும் திருச்சபையை எவவளவோ இம்சித்துள்ளனர். ஆயினும் இவ்விரோதிகளைக் காட்டிலும் பன்மடங்கு கொடிய வர்கள் தப்பறையான கொள்கைகளைப் போதிக்கும் வேத விரோதிகள் திருச்சபையின் ஆதித் தொடக்கத்திலிருந்தே அதற்குத் தீங்கிழைத்து வந்துள்ளனர். இவர்களின் கொட்டத்தை அடக்கி ஒடுக்கி, திருச்சபையைத் தப்பறையான போதனைகளினின்றும் காப்பாற்றியுள் ளார்கள் நமதன்னை.

12-ம் நூற்றாண்டின் இறுதியில் பிரான்ஸ் தேசத்தில் ஆல்பிஜென்ஸஸ் (Albigenses) என்ற பெயர் கொண்டவர்கள் திருச்சபைக்கு விரோதமாய்ப் பல கொள்கை களைப் போதித்து, நல்லவர்களைக் கெடுத்து வந்தனர். இவர்களை மனந்திருப்ப அனுப்பப்பட்ட அர்ச். சாமிநாதர் எவ்வளவோ முயன்றும் அதனால் பயனொன்றும் அடையவில்லை. தேவதாயின் உதவியை அவர் நாடவே, மாதா அவருக்குக் காட்சியளித்து ஜெபமாலை ஜெபிக்க வேண்டுமெனவும், அதன் மூலமாய் அநேகர் மனந்திரும்புவர் என்றும் சொல்லிவிட்டுச் சென்றார்கள். அதன்பின் அற்புதமான விதமாய் வேத விரோதிகளில் அநேகர் மனந்திரும்பினர்.

இதுவரை திருச்சபை சரித்திரத்தில் தோன்றிய விரோதிகளைக் காட்டிலும் பன்மடங்கு பயங்கரத்துக் குரிய விரோதிகள் நமது நூற்றாண்டில் தோன்றியுள்ளனர். அவர்கள்தான் பொதுவுடமைவாதிகள். தங்கள் தப்பறையான கொள்கைகளை எங்கும் போதித்து தேசங்களில் குழப்பங்களை உண்டு பண்ணுகின்றனர். “கடவுள் இல்லை,” “வேதமென்பது மக்கள் மனதை மயக்கும் அபின்” (Religion is the opium of the people) என்றெல்லாம் பிதற்றி மக்களை மிருகங்களாக்க முயலுகின்றனர். திருச்சபையை அடியோடு அழிக்கக் கங்கணங் கட்டித் திரிகின்றனர். மேல் நாடுகளில் திருச்சபைக்கும் அதன் அதிகாரிகளுக்கும் அவர்கள் இழைத்துவரும் தீங்கை யாவரும் அறிவர். 

ஆனால் ஒன்றுமட்டும் நிச்சயம். இத்தனை நூற்றாண்டுகளாகத் திருச்சபையைக் காத்துவந்த கிறீஸ்தவர்களின் சகாயமாகிய நமதன்னை இக்கொடிய விரோதிகளின் கையினின்றும் நம்மை விடுவிக்கத் தயங்க மாட்டார்கள். திருச்சபைக்கு வெற்றி கிடைப்பது நிச்சயமென அவர்களே பாத்திமாவில் வாக்குறுதி கொடுத்துள்ளார்கள். அவர்களை நம்பிக்கையுடன் அண்டிச் செல்லுவோம்; திருச்சபையைச் சகல ஆபத்துக்களினின்றும் காத்தருளுமாறு அவர்களை வேண்டுவோம்.

“பரிசுத்த மரியாயே! திருச்சபை விரோதிகளினால் எதிர்க்கப்பட்ட போதும், புயலில் அகப்பட்டு அலைக் கழிக்கப்பட்ட போதும், நீர் தீவிரித்து வந்து உமது வல்லமையால் அதைக் காப்பாறறினீர். இப்பொழுதும் திருச்சபையின் பிள்ளைகளாகிய எங்களைச் சகல ஆபத்துக்களினின்றும் காப்பாற்றும். அழுவோருக்கு ஆறுதல் அளியும்; மனங்குன்றி மயங்குவோருக்குத் தைரியம் அருளும்; குருக்களுக்காகவும், திருச்சபை அதிகாரிகளுக்காகவும், கன்னியர் சந்நியாசிகளுக்காகவும், திருச்சபை மக்கள் சகலருக்காகவும் வேண்டிக் கொள்ளும். சகலரும் உமது வல்லமையை உணர்வார்களாக. கடைசியாக திருச்சபைக்கு விரோதமாய் எழும்பியுள்ள பொதுவுடைமை வாதிகளை வென்று உமது திருக்குமாரன் சேசுவின் சமாதானம் எங்கும் நிரந்தரமாய் நிலவச் செய்யும் அம்மா.” 


கிறீஸ்தவர்களின் சகாயமே!
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!