இன்னும் சில கேள்விகள்

மீண்டும் ஒரு முறை இந்தக் கனவு மற்றொரு (ஜூன் 4) “நல்லிரவு” உரையின் கருத்தாக இருந்தது. சுவாமி பார்பெரிஸுக்கும், டொன் போஸ்கோவுக்கும் இடையில் நிகழ்ந்த இந்த உரையாடலின் போது, சபை முழுவதும் அங்கிருந்தது.

சுவாமி பார்பெரிஸ்: “டொன் போஸ்கோ, உங்கள் அனுமதி யோடு இன்று மாலையில் நான் ஒரு சில கேள்விகள் கேட்க விரும்பு கிறேன். கடந்த சில மாலைகளில் இவற்றைக் கேட்க நான் துணிய வில்லை. ஏனெனில் நம்மோடு விருந்தாளிகள் இருந்தார்கள். உங்கள் கடைசிக் கனவு பற்றி சிலவற்றைத் தெளிவுபடுத்திக் கொள்ள நான் விரும்புகிறேன்.”

டொன் போஸ்கோ : “நீங்கள் கேட்கலாம். நான் கடைசியாக இதுபற்றிக் குறிப்பிட்டு, சிறிது காலமாகி விட்டது. ஆனால் அது பிரச்சினையில்லை .”

சுவாமி பார்பெரிஸ் : “உங்கள் கனவின் முடிவில், சிலர் மரியாயின் மேற்போர்வையை நோக்கிப் பறந்து போனார்கள் என்றும், சிலர் ஓடினார்கள் என்றும், சிலர் மெதுவாக நடந்தார்கள் என்றும், இன்னும் ஒரு சிலர் சேற்றின் ஊடாகத் தவழ்ந்து சென்றார்கள், இதனால் அவர்களுடைய உடல் முழுவதும் சேறு அப்பிக் கொண்டது, இவர்கள் மேற்போர்வைக்குள் அடைக்கலம் புக முடியாதவர்களாக இருந்தார்கள் என்று நீங்கள் சொன்னீர்கள். அப்படிப் பறந்து போனவர்கள் மாசற்றவர்கள் என்று நீங்கள் ஏற்கனவே சொல்லி விட்டீர்கள். ஓடியவர்கள் யாரென்று எங்களால் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் சேற்றில் சிக்கிக் கொண்டவர்கள் என்று யாரைக் குறிப்பிடுகிறீர்கள்?”

டொன் போஸ்கோ : சேற்றில் சிக்கிக் கொண்டவர்களும், பெரும்பாலும் நம் அன்னையின் மேற்போர்வையைச் சென்றடைய முடியாதிருந்தவர்களும், இவ்வுலகக் காரியங்களில் பற்று வைத்துள்ள சிறுவர்களைக் குறிக்கிறார்கள். சுயநலமுள்ள இவர்கள் தங்களைப் பற்றி மட்டுமே நினைக்கிறார்கள்; இதன் காரணமாக அவர்கள் தங்கள் மீதே சேற்றை நிறைத்துக் கொண்டு, மேற்கொண்டு நிலத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ளவோ, பரலோகக் காரியங்களை நாடித் தேடவோ இயலாதவர்களாயிருக்கிறார்கள். மிகப் பரிசுத்த கன்னிகை தங்களை அழைப்பதை அவர்கள் காண்கிறார்கள். அவர்களிடம் போக விரும்பவும் செய்கிறார்கள். அதற்காக ஒரு சில அடிகள் எடுத்து வைக்கிறார்கள். ஆனால் சேறு அவர்களை அப்பிப் பிடித்து, கிழே இழுத்துக் கொள்கிறது. இது எப்போதுமே இப்படித்தான் நடக்கிறது. “உன் பொக்கிஷம் எங்கேயோ, அங்கேயே உன் இருதயமும் இருக்கும்” (மத்.6:21) என்று ஆண்டவர் கூறுகிறார். வரப்பிரசாதப் பொக்கிஷங்களை நோக்கித் தங்களை உயர்த்தாமல் இருப்பவர்கள் தங்கள் இருதயங் களை இவ்வுலகக் காரியங்களின்மீது இருத்துகிறார்கள். இன்பங்கள், செல்வங்கள், வியாபாரத்தில் வெற்றி, வீண் மகிமை ஆகியவை பற்றி மட்டும்தான் அவர்கள் சிந்திக்கிறார்கள். மோட்சம் சர்வ சாதாரண மாக அலட்சியம் செய்யப்படுகிறது.

சுவாமி பார்பெரிஸ் : நீங்கள் இன்னும் எங்களுக்குச் சொல்லாத ஒரு காரியம் இருக்கிறது டொன் போஸ்கோ. நீங்கள் சிலரிடம் அதைத் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டீர்கள். எங்களுக்கும் அதை நீங்கள் அறிவிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அது இதுதான்: ஒருவர் உங்களிடம் தாம் ஓடியவர்களில் ஒருவரா, அல்லது மெதுவாக நடந்தவர்களில் ஒருவரா என்றும், மரியாயின் மேற்போர்வையின் கீழ் தாம் அடைக்கலம் புகுந்தாரா, தமது களைவாரியின் கைப்பிடி புழு அரித்ததாக அல்லது உடைந்ததாக இருந்ததா என்றெல்லாம் உங்களிடம் கேட்டார். உங்களுக்கும் அவருக்கும் இடையில் ஒரு மேகம் இருந்ததால் உங்களால் தெளிவாகக் காண முடியாதிருந்தது என்று நீங்கள் பதில் சொல்லியிருக்கிறீர்கள்.”

டொன் போஸ்கோ : “நீங்கள் ஒரு இறை வல்லுனர். இதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். நல்லது, உண்மையில் மிகப் பலர் அல்ல, மாறாக என்னால் தெளிவாகக் காண முடியாத சில சிறுவர்கள் இருக்கிறார்கள். நான் அவர்கள் ஒவ்வொருவரையும் அடையாளம் கண்டுகொள்ளும் அளவுக்கு போதுமான அளவுக்கு நன்றாகப் பார்த்தேன். ஆனால் அதற்கு மேல் இல்லை. தங்கள் மேலதிகாரி களிடம் பேச விரும்பாத இறுகிய உதடுகளை உடைய சிறுவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அவர்களிடம் தங்கள் இருதயங்களைத் திறந்து காட்டுவதில்லை; இவர்கள் உண்மையுள்ளவர்களாக இருப் பதில்லை . இவர்கள் ஒரு மேலதிகாரி தங்கள் வழியில் வருவதைக் காணும்போதெல்லாம், அவரைச் சந்திப்பதற்குப் பதிலாக, எதிர்த் திசையில் ஓடி விடுகிறார்கள். அவர்களில் சிலர், கனவில் நான் அவர்களை எந்த நிலையில் கண்டேன் என்று என்னிடம் கேட்க வந்தார்கள். ஆனால் அவர்களுக்கு நான் என்ன சொல்ல முடியும்? நீங்கள் உங்கள் மேலதிகாரிகளிடம் நம்பிக்கை வைப்பதில்லை; நீங்கள் உங்கள் இருதயங்களை அவர்களிடம் ஒருபோதும் திறந்து காட்டுவதில்லை என்றுதான் நான் அவர்களிடம் சொல்ல முடியும். இப்போது நீங்கள் எல்லோரும் இதை நினைவில் வைத்துக் கொள் ளுங்கள்! உங்கள் மேலதிகாரிகளிடம் அதிக நம்பிக்கை வைத்து, அவர்களுடைய முற்றிலும் உண்மையுள்ளவர்களாக இருந்து, அவர்களுக்கு உங்கள் இருதயத்தைத் திறந்து காட்டுவதை விட அதிகமாக உங்களுக்கு உதவக்கூடிய காரியம் வேறு எதுவுமில்லை .”

சுவாமி பார்பெரிஸ்: “நான் இன்னொன்றையும் கேட்க விரும்புகிறேன், ஆனால் நான் அதிக வினோதப் பிரியமுள்ளவனாக இருக்கிறேன் என்று நீங்கள் சொல்வீர்களோ என்று அஞ்சுகிறேன்.”

டொன் போஸ்கோ : “அது எல்லோருக்கும் தெரிந்தது தானே? (எல்லோரும் சிரிக்கிறார்கள்). என்றாலும் ஆரோக்கியமான வினோதப் பிரியம் ஒன்றும் உள்ளது. உதாரணமாக, கற்றுக் கொள்ள ஆவலாக இருக்கிற ஒரு சிறுவன் கனமான காரியங்களைப் பற்றி, அவற்றை அறிந்திருக்கக் கூடிய ஆட்களிடம் கேள்விகள் கேட்டுக் கொண்டே இருக்கிறான். இதற்குப் பதிலாக வேறு சிலர் இருக்கிறார்கள். இவர்கள் முட்டாள்களைப் போல் வெறுமனே சுற்றி நிற்கிறார்கள். இவர்கள் எந்தக் கேள்வியும் கேட்பது கிடையாது. இது அவர்களைப் பற்றிய ஒரு நல்ல எண்ணத்தை உண்டாக்காது.”

சுவாமி பார்பெரிஸ்: “நல்லது, நான் அப்படி இருக்க மாட்டேன். நீண்ட நேரமாக உங்களிடம் கனவைப் பற்றி இந்தக் கேள்வியைக் கேட்க வேண்டும் என்று நான் விரும்பி வந்திருக்கிறேன். நீங்கள் ஒவ்வொரு சிறுவனுடைய கடந்த காலத்தை மட்டும் பார்த் தீர்களா, அல்லது அவனுடைய எதிர்காலத்தையும், அதாவது, அவனுடைய தேவ அழைத்தல், சாத்தியமான அவனுடைய வெற்றி, ஆகியவற்றையும் பார்த்தீர்களா?”

டொன் போஸ்கோ : “நான் கடந்த காலத்தை விட அதிகம் பார்த்தேன். அவர்களுடையதாக இருக்கப் போகிற எதிர்காலத் தையும் நான் பார்த்தேன். ஒவ்வொரு சிறுவனும் தனக்கு முன்னால் நீண்டு செல்லும் பல பாதைகளைக் கொண்டிருந்தான். சில, ஒடுக்கமாயும், முட்கள் நிறைந்ததாயும் இருந்தன. மற்ற பாதைகளில் கூர்மையான ஆணிகள் இருந்தன. ஆனால் கடவுளின் ஆசீர்வாதமும் இந்தப் பாதைகளில் பரப்பப்பட்டிருந்தது. இந்தப் பாதைகள் எல்லாம் எல்லா வித இன்பங்களாலும் நிரப்பப்பட்டிருந்த, அபூர்வ அழகு நிறைந்த ஒரு தோட்டத்தில் முடிவடைந்தன.”

சுவாமி பார்பெரிஸ் : “அதாவது, ஒருவன் எந்தப் பாதையில் செல்ல முடியும் என்று சொல்ல உங்களால் முடியும் என்பதுதான் இதன் அர்த்தம், அதாவது எங்கள் ஒவ்வொருவரின் தேவ அழைத் தலையும், எங்கள் முடிவு என்னவாக இருக்கும், எந்தப் பாதையை நாங்கள் பின்செல்வோம் என்பதையும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.”

டொன் போஸ்கோ : “இல்லை. ஒவ்வொரு சிறுவனிடமும் அவன் எந்தப் பாதையில் செல்வான் என்றோ, அவனுடைய முடிவு என்னவாக இருக்கும் என்றோ சொல்வது புத்தியுள்ள செயல் இல்லை . ஒரு சிறுவனிடம்: “நீ தீமையின் பாதையில் செல்லப் போகிறாய்” என்று சொல்வதால் எந்த நன்மையும் விளையப் போவதில்லை. அது அவனை அச்சப்படுத்த மட்டுமே உதவும். நான் அவனிடம் சொல்லக் கூடியது இதுதான்: ஒருவன் ஒரு குறிப்பிட்ட பாதையில் செல்கிறான் என்றால், அவன் மோட்சத்தை நோக்கிய சாலையில், அதாவது அவன் எதற்கு அழைக்கப்பட்டிருக்கிறானோ, அந்தச் சாலையில் செல்வதை அவன் நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒருவன் அந்த சாலையில் செல்லவில்லை என்றால், அவனால் சரியான பாதையில் இருக்க முடியாது. சில சாலைகள் ஒடுக்கமானவை, கரடு முரடானவை, முட்கள் நிறைந்தவை. என்றாலும், என் பிரியமுள்ள குழந்தைகளே, தைரியம் கொள் ளுங்கள். அங்கே முட்களோடு தேவ அருளும் இருக்கிறது. நம் பயணத்தின் முடிவில் எவ்வளவு அதிகமான மகிழ்ச்சி நமக்காகக் காத்திருக்கிறது என்றால், நாம் உடனடியாக நம் வலியையெல்லாம் மறந்து விடுவோம். உண்மையுள்ள விதமாக, நீங்கள் எல்லோரும் இதை நினைவில் கொண்டிருக்க நான் விரும்புகிறேன்: இது ஒரு கனவு. இதை நம்ப யாருக்கும் கடமையில்லை. ஆயினும் என்னிடம் விளக்கம் கேட்டவர்கள் என் ஆலோசனைகளைப் பெரும் அளவுக்கு ஏற்றுக் கொண்டதை நான் கவனித்திருக்கிறேன். ஆயினும், “ப்ரோபாத்தே ஸ்பீரித்துஸ் எத் க்வோத் போனும் எஸ்த் தெனேத்தே - எல்லாவற்றையும் பரிசோதித்து, நன்மையானதைக் கைப்பற்றிக் கொள்ளுங்கள்” (1 தெச.5:21) என்று அர்ச். சின்னப்பர் சொல்வது போலச் செய்யுங்கள். நீங்கள் மறக்காமல் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிற மற்றொரு காரியம் ஏழையாகிய உங்கள் டொன் போஸ்கோவுக்காக ஜெபிப்பதுதான். இல்லாவிடில், “கும் ஆலீயிஸ் ப்ரேதிக்காவேரிம், ஏகோ ரெப்ரோபுஸ் அஃபிச்சியார் - மற்றவர் களுக்குப் போதித்த பிறகு, நான் தள்ளுண்டவனாகப் போகக் கூடும்” (1 கொரி. 9:27) என்ற சின்னப்பரின் வார்த்தை எனக்குப் பொருந்தக் கூடும். அதாவது, உங்களுக்குப் போதித்த பிறகு, நான் நித்தியத் திற்கும் சபிக்கப்படலாம். உங்களை எச்சரிக்க என்னால் முடிந்ததை நான் செய்கிறேன். உங்களைப் பற்றிக் கவலை கொள்கிறேன், உங்களுக்கு அறிவுரைகள் தருகிறேன். ஆயினும் தன் குஞ்சுகளுக்காக வெட்டுக்கிளிகளையும், புழுக்களையும், விதைகளையும், மற்ற தீனிகளையும் தேடித் தந்தாலும், தான் சற்று உணவு எடுத்துக் கொள்ளவில்லை என்றால், பட்டினியால் இறந்து போகக் கூடிய ஒரு தாய்க் கோழியாக நான் செயல்பட்டுக் கொண்டிருக்கலாம் என்று அஞ்சுகிறேன். ஆகவே, இது நிகழாதபடியும், அதற்குப் பதிலாக, நான் என் இருதயத்தைப் பல புண்ணியங்களால் அலங்கரிக்கவும், கடவுளுக்குப் பிரியமானவனாக இருக்கவும், அதனால் ஒரு நாள் நாம் எல்லோரும் கடவுளைத் துய்த்து மகிழவும், அவரை மகிமைப் படுத்தவும் மோட்சத்திற்குச் செல்லும்படியாக, எனக்காகக் கடவுளிடம் வேண்டிக் கொள்ளுங்கள். நல்லிரவு வாழ்த்துக்கள்.”