இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

சேசுகிறீஸ்துநாதரின் திருப்பாடுகள் பற்றிய சிந்தனைகளும், அவற்றின் மீதான நாட்டங்களும்!

 பிரசங்கம்  01

சிலுவையில் அறையுண்ட சேசுவின் துன்பங்களிலிருந்து அல்லாமல், வாதைகளையும், வேதசாட்சியத்தையும், மரணத்தையும் கூட தாங்கப் புனிதர்கள் வேறு எந்த ஆதாரத்திடம் இருந்து தைரியத்தையும், பலத்தையும் பெற்றுக் கொண்டார்கள்? கப்புச்சின் துறவியான அர்ச். லியோனெஸ்ஸாவின் சூசை என்பவர், அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவன் தம் உடலில் செய்ய இருந்த வேதனை தரும் அறுவைக்காக, அவர்கள் தம்மைக் கயிறுகளால் கட்டப் போவதைக் கண்டவுடன், அவர் தமது கரங்களில் தமது பாடுபட்ட சுரூபத்தை எடுத்து, அவர்களை நோக்கி: ""ஏன் இந்தக் கயிறுகள்? எதற்காக இந்தக் கயிறுகள்? இதோ, இவையே என் சங்கிலிகள்--இதோ, என் மீதுள்ள அன்பிற்காகச் சிலுவையில் அறையப்பட்ட என் இரட்சகர்! அவர் தம் நிமித்தமாக ஒவ்வொரு துன்ப சோதனையையும் தாங்கிக் கொள்ளும்படி, தம் துன்பங்களின் வழியாக என்னை நெருக்குகிறார்'' என்றார். இவ்வாறு தமது உறுப்பு ஒன்று வெட்டி அகற்றப்பட்டபோது, எந்த முறைப்பாடுமின்றி, ""மயிர் கத்தரிப்போன் முன் ஊமையாகவும், வாய் திறவாமலுமிருந்த செம்மறிப் புருவையான'' (இசை.53:7) சேசுவையே உற்று நோக்கியபடி, அந்தக் கொடிய வேதனையைத் தாங்கிக் கொண்டார். அப்படியிருக்க, ""நம் பாவங்களுக்காகக் காயப்பட்ட'' (இசை.53:5) சேசுவைப் பற்றி ஒருவன் சிந்திக்கும்போது, தான் தவறான முறையில் துன்புறுத்தப்படுவதாக அவன் எப்படி முறையிட முடியும்? சேசுநாதர் ""மரணமட்டும் கீழ்ப்படிதலுள்ளவராக'' (பிலிப்.2:8) இருந்திருக்க, ஏதாவது ஒரு அசெளகரியத்தைக் காரணம் காட்டி, கீழ்ப்படிய மாட்டேன் என்று யார் சொல்ல முடியும்? சேசுநாதர் ஒரு மூடனைப் போலவும், பரிகார இராஜாவைப் போலவும், ஒழுங்கற்ற ஒரு மனிதனைப் போலவும் நடத்தப்படுவதையும், அடிக்கப் படுவதையும், திருமுகத்தில் துப்பப்படுவதையும், அவமானச் சிலுவை மரத்தில் உயர்த்தப்படுவதையும் கண்ட பின்னும், அவமானங்களை ஏற்றுக்கொள்ள யார் மறுக்க முடியும்?

நமது அன்பைத் தம்முடையதாக்கிக் கொள்வதற்காக எவ்வளவோ அதிகத் துன்பங்களுக்கும், அவமானங்களுக்கும் மத்தியில் இறப்பவராக சேசுநாதரைக் கண்ட பின்னும், அவரைத் தவிர வேறு ஒருவரை அல்லது ஒரு பொருளை யார் நேசிக்க முடியும்? கடவுளை உத்தமமான விதமாக நேசிப்பதற்காகத் தம்மால் என்ன செய்ய முடியும் என்று தமக்குக் கற்பிக்கும்படி பக்தியுள்ள ஒரு வனவாசி ஒரு முறை கடவுளிடம் ஜெபித்தார். தமது திருப்பாடுகளை இடைவிடாமல் தியானிப்பதை விடத் தம்மை உத்தமமான விதத்தில் நேசிப்பதற்கு வேறு சிறந்த வழி எதுவுமில்லை என்று நமதாண்டவர் அவருக்கு வெளிப்படுத்தினார். சேசுநாதரின் திருப்பாடுகள் பற்றிய தியானம், அவரது தெய்வீகத்தைப் பற்றிய காட்சி தியானத்திற்கு ஒரு தçடிடயாக இருக்கக் கூடும் என்பதால், அத்தகைய தியானத்தை விட்டு விட வேண்டும் என்று கற்பிக்கும் சில புத்தகங்களைப் பற்றி அர்ச். தெரேசம்மாள் ஆண்டவரிடம் அழுது முறையிட்டாள். ""ஓ என் ஆன்மாவின் ஆண்டவரே, ஓ சிலுவையில் அறையுண்ட என் சேசுவே, என் பொக்கிஷமே, உமக்கு ஒரு பெரும் துரோகத்தைச் செய்து விட்டேன் என்ற உறுத்தல் இல்லாமல் இந்தக் கருத்தை நான் ஒருபோதும் நினைவுகூர முடியவில்லை. என் ஆண்டவரே, அதிக மேலான நன்மையின் வழியில் நீரே எனக்கு ஒரு தடையாக இருப்பது சாத்தியமா? அப்படியானால், உம்மிடமிருந்து அல்லாமல் பேறு எங்கிருந்து நற்காரியங்கள் அனைத்தும் எனக்கு வந்து சேரும்?'' என்று அவள் கேட்டாள். அதன்பின் அவள் தொடர்ந்து, ""கடவுளைப் பிரியப்படுத்தவும், பெரும் வரப்பிரசாதங்களை நமக்குத் தந்தருளும் படி அவரைத் தூண்டவும், இந்த மிகப் புனித மனுஷீகத்தின் கரங்களின் வழியாக அவையெல்லாம் கடந்து வர வேண்டுமென்று அவர் சித்தங்கொள்கிறார், இந்த மிகப் புனித மனுஷீகத்திலேயே தாம் இன்பம் காண்பதாக அவரது தெய்வீக மகத்துவம் அறிக்கை யிட்டது என்றும் நான் கண்டிருக்கிறேன்'' என்றாள்.