சம்மனசுக்களின் கீதம்!

அதன்பின் இரு கன்னியர்களும் ஒரு வியத்தகு பாடலைப் பாடினார்கள். அந்தப் பாடலின் வார்த்தைகளும், இசையும் கம்பளத்தின் மையப்பகுதிக்கு மிக அண்மையில் இருந்த சம்மனசுக்களால் மட்டுமே பிறப்பிக்கப்படக் கூடியவையாய் இருந்தன. மற்றவர்களும் பாடினார்கள். ஆனால் அவர்கள் பாடுவதற்குரிய சைகைகளைச் செய்தார்கள், தங்கள் உதடுகளையும், வாய்களையும் அசைத்தார்கள் என்றாலும் டொன்போஸ்கோ அவர்களது குரல்களைக் கேட்க முடியவில்லை. இரு கன்னியர்களும் இப்படிப் பாடினார்கள்:

“மே ப்ரொப்தெர் இன்னோசெந்த்ஸியாம் சுஷெபிஸ்தி எத் கொன்ஃபிர்மாஸ்தி மே இன் கொன்ஸ்பெக்து தூவோ இன் ஏத்தெர்னும். பெனெதிக்துஸ் தேயுஸ் ஆ சேக்குலோ. ஃபியாத்! ஃபியாத்! - என் மாசற்றதனத்தின் நிமித்தம் நீர் என்னை உயர்த்தி, உம் பார்வையில் என்னை என்றென்றும் ஸ்தாபித்தீர். நித்திய காலங்கள் தோறும் சர்வேசுரன் வாழ்த்தப் பெறுவாராக. அப்படியே ஆகுக! அப்படியே ஆகுக!”

இதனிடையே, சம்மனசுக்களின் முதல் அணியோடு, மற்றவர்களும் வந்து சேர, அவர்களுடைய எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டேயிருந்தது. அவர்களுடைய உடை மனதை வசீகரிக்கிற பல வகையான நிறங்களையும், அலங்காரங்களையும் கொண்டிருந்தன. ஒவ்வொன்றும் மற்ற உடைகளிலிருந்தும், குறிப்பாக கன்னியர்களின் உடைகளிலிருந்தும் வேறுபட்டிருந்தன. ஆனால் அவற்றின் ஆடம்பரமும், மகத்துவமும் தெய்வீகமானதாக இருந்தது. எந்த ஒரு மனித மனமும் அவர்களுடைய அழகின் நிழலைக் கூட கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு அவர்கள் அழகு மிகுந்தவர்களாக இருந்தார்கள். அந்தக் காட்சி முழுவதுமே விவரிக்கப்பட இயலாததாக இருந்தது; ஆனால் வார்த்தைகளுக்கு மேல் வார்த்தைகளைச் சேர்ப்பதன் மூலம் ஒரு விதத்தில் குறைந்த பட்சம் ஒரு குறைபாடுள்ள அளவுக்காவது அந்தக் காட்சி எப்படி இருந்தது என்பதை விவரிப்பது சாத்தியம்தான்.

அந்தக் கன்னிகைகள் பாடுவதை நிறுத்தியபோது, ஒரு மிக அற்புதமான கீதத்தை அந்த சம்மனசுக்களின் படைத்திரள் முழுவதும் ஒன்றாய்ச் சேர்ந்து பாடுவதைக் கேட்க முடிந்தது. அது எவ்வளவு அற்புத சுருதி லயத்தோடு, இனிமை பொருந்தியதாக இருந்தது என்றால், அது போன்ற ஒரு இசையை இவ்வுலகில் இதுவரை யாரும் கேட்டதுமில்லை, இனி கேட்கப் போவதுமில்லை. அவர்கள் இப்படிப் பாடினார்கள்:

“ஏயி குயி பொத்தெஸ்த் வோஸ் கொன்ஸெர்வாரே சினே பெக்காத்தோ எத் கொன்ஸ்தித்துவேரே ஆந்த்தே கொன்ஸ்பெக்தும் க்ளோரியே சூவே இம்மாக்குலாத்தோஸ் இன் எக்ஸுல்தாத்ஸியோனே, இன் அத்வெந்த்து தோமினி நோஸ்த்ரி யேசு க்றீஸ்தி: ஸோலி தேயோ ஸால்வாத்தோரி நோஸ்த்ரி பெர் யேசும் க்றீஸ்தும் தோமினும் நோஸ்த்ரும், க்ளோரியா எத் மாக்னிஃபிச்செந்த்ஸியா, இம்பேரியும் எத் பொத்தெஸ்தாஸ் ஆந்த்தே ஓன்னே சேக்குலும் எத் நுங்க் எத் இன ஓம்னியா சேக்குலா சேக்குலோரும். ஆமென் - பாவமின்றி உங்களைக் காத்துக் கொள்ளவும், நம் ஆண்டவராகிய இயேசுக் கிறீஸ்துவின் வருகையின் போது அதீத மகிழ்ச்சியோடு அவருடைய மகிமையின் பிரசன்னத்திற்கு முன்பாக மாசற்றவர்களாக உங்களை சமர்ப்பிக்கவும் வல்லவராய் இருப்பவருக்கு, நம் இரட்சகராகிய அந்த ஒரே சர்வேசுரனுக்கு, நமதாண்டவராகிய இயேசுக்கிறீஸ்துவின் வழியாக மகிமையும், மகத்துவமும், அரசாட்சியும், வல்லமையும், காலங்களுக்கு முன்னதாகவும், இப்போதும், இனி எக்காலங்களிலும் உண்டாவதாக. ஆமென்.”

அவர்கள் பாடிக் கொண்டிருக்கையில் தொடர்ந்து அதிகமதிகம் தேவதூதர்கள் வந்து அவர்களோடு சேர்ந்து கொண்டே இருந்தார்கள். இந்த பரலோக கீதம் முடிந்த போது, கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் எல்லோரும் மேல்நோக்கி எழுந்து மறைந்து போனார்கள். இவ்வாறு அந்தக் காட்சி முழுவதுமே மறைந்து போயிற்று.