இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

இறுதிக்கால யுகம் - பொறுக்கியெடுக்கப்பட்ட படையணி!

இன்றைய திருச்சபையின் மிகப் பெரிய பிரச்சினை என்ன தெரியுமா? சுவிசேஷத்தை அது இருக்கிறபடியே ஏற்றுக் கொண்டு, அதில் கூறப்பட்டுள்ள உத்தமதனத்தின் ஆலோசனைகளைக் கடைப்பிடிக்கக் கூடிய பொறுக்கியெடுக்கப்பட்ட மனிதர்களால் ஆன ஒரு அணியே இன்றைய முதல் தேவை.

கிறீஸ்தவம் தழைத்து வளர்ந்த காலங்களில் சந்நியாச துறவற சபைகள் இந்தத் தேவையைப் பூர்த்தி செய்து வந்தன. அவர்கள் கீழ்ப்படிதல், கற்பு, தரித்திரம் என்ற வார்த்தைப்பாடுகளைக் கொடுத்து, அவற்றைப் பிரமாணிக்கத்துடன் அனுசரித்து வந்தமையால், உண்மையாகவே “பூமியின் உப்பாக” இருந்தார்கள். அவர்கள் வழியாக ஐரோப்பாவை ஒளிர்வித்த ஆன்மீக ஒளி விளக்குகளான மேதைகள் தோன்றினார்கள்.

லிவர்பூல் அதிமேற்றிராணியார் ஒரு தடவை நகைச்சுவையாகக் கூறினார்: துறவற சபைகள் எல்லாம் அவற்றைத் தோற்றுவித்த ஸ்தாபகரின் மரணத்துக்குப் பின் 50 ஆண்டுகள் முடிந்தவுடன் தாங்களாகவே கலைந்து போய்விட வேண்டும் என்று. ஏனென்றால், அந்தக் காலத்திற்குள்ளாக, அந்தச் சபைகள் தங்கள் குறிக்கோளை இழந்து விடும் என்றார் அவர். நகைச்சுவையாகக் கூறிய போதிலும், இதிலே ஆழ்ந்த கருத்து ஒன்று உள்ளது. இந்தத் துறவற சபைகள் தங்களை முழுவதும் தங்கள் குறிக்கோளுக்கு அர்ப்பணிப்பது மிகவும் கடினமானது என்பது இதிலிருந்து புலனாகின்றது. திருச்சபை இந்தத் துறவற சபைகளில் வாழும் சந்நியாசிகள் கன்னியர்களைக் கொண்ட ஞானப் படையணிகளை எவ்வளவு தூரம் சார்ந்து நிற்கிறது என்று தெரிந்து கொண்டோம். ஏன்? இவர்கள் சர்வேசுரனுக்காக யாவற் றையும் துறந்து நிற்பதனால்.

ஆனால், 

“உப்பானது சாரமற்றுப் போனால்” என்ன நடக்கும்? “அது இனி வெளியே கொட்டப்படுவதற்கும், மனிதரால் மிதிக்கப்படுவ தற்குமே” உதவும் (மத். 5:13).

கிறீஸ்துவைத் துறந்து விட்ட ஒரு துறவியின் ஆன்மாவில் மகா பயங்கரத்துக்குரிய காரியங்கள் வெளியில் தெரியாமல் நடைபெறும். அவ்வான்மா கிறீஸ்துவை விட்டு விட்டதற்கு எப்பேர்ப்பட்ட காரணம் காட்டினாலும் பயங்கரம் பயங்கரம்தான்.

சுவிசேஷத்தில் பசாசு குடியிருந்த வீட்டிலிருந்து அது துரத்தப் பட்ட உபமானத்தை சேசு கூறுகிறார். அந்தப் பசாசு திரும்பி வருகிறது. அவ்வீடு அலங்கரிக்கப்பட்டிருப்பதைக் காண்கிறது. அது போய் தனனை விட பலம் வாய்ந்த வேறு ஏழு பசாசுக்களைக் கூட்டிவந்து, அவ்வீட்டைத் தாக்கிக் குடியேறுகிறது. இதனால் அந்த முந்திய நிலையை விடப் பிந்திய நிலை அதிகக் கேடுள்ளதாயிற்று என்று உரைத்தார் சேசு.

“நல்லவன் வீழ்ந்தால் மிகவும் கெடுவான்” என்பது இலத்தீன் பழமொழி. மிகச் சிறப்பாயிருந்த ஒருவன் கெட்டால் அவன் படுமோச மான பாழ்நிலைக்கு வருவான்.

துறவிகள் தங்கள் ஆன்மீகப் பிடிப்பை இழக்கச் செய்வது எது?

அர்ச்சியசிஷ்டவர்களும், ஞான ஆசிரியர்களும் இதற்கு ஒரே பதிலைத் திட்டமாகக் கூறுவார்கள். துறவிகள் ஏன் தங்கள் ஆன்மீகப் பிடிப்பை இழந்து போகிறார்களென்றால், ஏன் தங்கள் அழைத்தலை விட்டு விடுகிறார்களென்றால், அவர்கள் உத்தமதனம் அடைய முயற்சிப்பதில்லை. இதுவே காரணம்.

துறவுநிலை, வேதசாஸ்திரிகளால் உத்தமநிலை என்று பொது வாகக் கூறப்படுகிறது. துறவி என்பவர் ஓர் ஆன்மீகப் போர்வீரன். உத்தமதனத்தை அடைய முயற்சி செய்ய வேண்டிய தனிப்பட்ட பொறுப்பு துறவிகளுக்கு உண்டு. தாங்கரே (வீழிஐஸுற்ereதீ) என்ற ஞான ஆசிரியர் கூறுவதன்படி: “எல்லாத் துறவிகளும் தங்கள் அழைத்தலை முன்னிட்டு, உத்தமதனம் அடைய முயன்று கொண்டேயிருப்பது அவர்களின் கடமையாகும்.” அவர் மேலும் தொடர்ந்து கூறுவது: “இந்த உத்தமதனத்தைத் தேடியடையும் கடமை எவ்வளவு பெரியதென்றால், அர்ச். அல்போன்ஸ் தயக்கமின்றிக் கூறுவதுபோல்: உத்தமதனம் வேண்டாம் என்று உறுதியாய்த் தீர்மானிக்கும் ஒரு துறவி, அல்லது உத்தமதனத்தைப் பற்றிய சிந்தனையே கொள்ளாத ஒரு துறவி சாவான பாவம் செய்கிறான்.” நாம் இக்காலத்தில் என்ன காண்கிறோம்? இவ்வாறு முயற்சி செய்யாத துறவிகள் தங்கள் அழைத்தலையே இழந்து போகிறார்கள்!

1964 ஆகஸ்ட் 23-ம் நாள் பாப்பரசர் 6-ம் சின்னப்பர் உரோமையில் துறவிகளுக்கென நிகழ்த்திய ஓர் உரையில் இதைப் பற்றிக் குறிப்பிடுகிறார்: “ஆகவே, துறவற வாழ்வின் சொல்லற்கரிய முக்கியத்துவத்தையும், அத்தியாவசியமான ஊழியத்தையும் நினைவுக்குக் கொண்டு வர நாம் விரும்புகிறோம். ஏனென்றால் இந்த நிலைத்த துறவற வாழ்வு தன் தனித்த தன்மையை சுவிசேஷ அடிப்படையிலான வார்த்தைப்பாடுகளிலிருந்து பெற்றுக் கொண் டுள்ளது. சேசு கிறீஸ்துவின் போதனைகளின்படியும், மாதிரிகையின் படியும் வாழ உத்தமமான பாதை இது. தேவ சிநேக வளர்ச்சியை எப்பொழுதும் குறிக்கோளாகக் கொண்டிருந்து இறுதி உத்தமதனம் வரை செல்லும் ஒரு வாழ்க்கை நிலை இது” என்று கூறுகிறார்.

கத்தோலிக்க உலகின் துறவற ஸ்தாபனங்களைப் பரிபாலனம் செய்யும் உரோமை பரிசுத்த ஸ்தாபனம் 1955, ஜூலை 10-ம் நாளன்று ஒரு அறிவிப்பு விடுத்தது. இந்த அறிவிப்பு, ஐரோப்பாவில் தங்கள் மடங்களை விட்டு வெளியே வாழ வேண்டிய சந்தர்ப்பத்திலிருக்கும் துறவிகளைப் பற்றியது. இதில் இப்படிப்பட்ட துறவிகளுக்குப் பரிசுத்த ஸ்தானம் சில அறிவுரைகளையும், அவர்களுடைய தனிப்பட்ட சூழ்நிலைகளுக்கேற்ற ஊக்கத்தையும் கொடுத்தது. அந்த அறிவிப்பின் இறுதியில் கூறப்பட்டிருந்தது இதுவே: “நீங்கள் உங்கள் வார்த்தைப் பாடுகளைக் காப்பாற்றுவதில் பிரமாணிக்கமாயிருங்கள். கடவுளுக்கு உங்களை எப்போதும் பலிப்பொருளாக ஒப்புக்கொடுத்து வாருங்கள். இந்த ஒப்புக்கொடுத்தல்தான் துறவற வாழ்வின் முக்கிய அம்சமாகும். உலகக் காரியம் எதனாலும் தடை செய்யப்படாதீர்கள். நீங்கள் இப்படி வாழ்ந்தால் அகில திருச்சபைக்கும் அளவற்ற பரலோகப் பொக்கிஷங்களைச் சம்பாதிப்பீர்கள். ” 

2-ம் வத்திக்கான் சங்க இறுதியில் அந்நான்கு வருட உழைப்பு, விவாதம், கருத்தாய்வு யாவற்றையும் 6-ம் சின்னப்பர் பாப்பரசர் மூன்றே வார்த்தையில் கூறி முடித்தார். “ஆன்மீக புது வாழ்வு”. இப்புது வாழ்வு பற்றி பின்னால் அவர் குறிப்பிடுகையில் தாம் வெளிச்சடங்கு ஆசாரங்களைப் பற்றி இவ்வாறு கூறவில்லையென்றும் தெளிவுபடுத்தினார்.

ஆன்மிகப் புது வாழ்வைத்தான் அர்ச். சின்னப்பர், “கிறீஸ்துவை அணிந்து கொள்ளுதல்” என்றார் (உரோ. 13:14). நம் மாமிச இயல்பின் போராட்டங்களை வென்று, அறிவுக்கு அடங்கி, வரப்பிரசாத வாழ்வை ஏற்றுக்கொள்ளும்படி அவர் கூறினார்.

இதே போல் பாத்திமாவின் அத்தனை செய்திகளையும், நாமும் மூன்று வார்த்தைகளில் சுருக்கிக் கூறிவிடலாம். “ஆன்மீகப் புது வாழ்வு.” கிறீஸ்துவின் அன்னை பாத்திமாவில் இந்த “இருதய மாற்றத்தை” அடிக்கடி கேட்டார்கள். பசாசையும், அவனுடைய எல்லா மாய ஆரவாரங்களையும், வேலைகளையும் விட்டுவிட்டு, கிறீஸ்து நாதருக்கு ஊழியம் செய்யும்படி கேட்டார்கள். இந்தக் கடமை கிறீஸ்தவர்கள் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டபோது, அவர்கள் மீது சுமந்த ஒரு கடமையே.

பாத்திமாவில் தேவதாய் கூறிய செய்திகள் முழுவதும் நேரடியாக கத்தோலிக்கக் கிறீஸ்தவர்களுக்கே கூறப்பட்டன. ஆர்த்தடாக்ஸ் கிறீஸ்தவர்களுக்கும், புரோட்டஸ்டாண்ட் கிறீஸ்தவர்களுக்கும் நேரடியாக அல்ல, மறைமுகமாகவே கூறப்பட்டுள்ளது என்பது தெளிவு.

3-ம் உலக யுத்தம் வந்தால் ஆர்த்தடாக்ஸ் கிறீஸ்தவர்களும், புரோட்டஸ்டாண்ட் கிறீஸ்தவர்களும் கத்தோலிக்கர்களுக்குச் சமமாகவே பாதிக்கப்படுவார்கள். காரணம் அணுகுண்டுகளின் முன் அவன் இவன் என்ற பாகுபாடில்லை. ஆனால் பாத்திமாவின் செய்திகள் முதன்முதலில் கத்தோலிக்க மக்களுக்கே உரைக்கப்பட்டன. இதன் காரணம்: காட்சி கண்ட சிறுவர்கள் மூவரும் கத்தோலிக்கர்கள். அத்தோடு திவ்விய பலிபூசை, திவ்விய நற்கருணை, பாப்பரசர் பற்றிய குறிப்புகள் இவைகள் பாத்திமாவில் அதிகம் கூறப்பட்டதால், கத்தோலிக்கரல்லாத இதர கிறீஸ்தவ சபைகளுக்கு அச்செய்திகள் நேரடியாகச் சொல்லப்படவில்லை. ஆனால் இதனால் ஆர்த்தடாக்ஸ், புரோட்டஸ்டாண்ட் கிறீஸ்தவர்கள் ஜெபமாலை சொல்லக் கூடாது என்பதில்லை. தங்களை மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு ஒப்புக் கொடுப்பதையும் அவர்கள் தாராளமாகச் செய்யலாம்.

பாத்திமாவின் செய்திகள் முதன்மையாக கத்தோலிக்க மக்களுக்குச் சொல்லப்பட்டதாக இருக்குமானல், அதைவிட முக்கியமாகவும், சிறப்பாகவும் இச்செய்திகள் நம் மேற்றிராணிமார்களுக்கும், குருக்களுக்கும், துறவிகளுக்கும் கூறப்பட்டன என்றல்லவா நாம் கொள்ள வேண்டும்! பாத்திமாவில், நம் துறவிகள் தங்கள் கடமைகளை நிறைவேற்ற ஞாபகமூட்டப்பட்டார்கள். உத்தமதனத்தை அடைய முயற்சிக்க வேண்டும் என்று நினைவூட்டப்பட்டார்கள். இப்போது திருச்சபைக்கு மிக அவசியமான ஆன்மீகப் படையணி தேவையென்று கூறப்பட்டது. இது இப்படியிருக்க, பாத்திமா அன்னையின் செய்திகள் பெருவாரியான கத்தோலிக்க தேவ ஊழியர், துறவிகளால் மேலெழுந்தவாரியாகவேனும் ஏற்கப்படாமல் ஒதுக்கப் பட்டு வருவது மாமரியின் மாசற்ற இருதயத்திற்கு மிகப் பெரிய வேதனையாக இருக்க வேண்டும். ஏனென்றால் கடவுளுக்கென்று வசீகரம் பண்ணப்பட்டவர்களிடையிலிருந்துதானே பட்டணத்தைக் காக்கும் பத்துப் பேர் (ஆதி. 18:33) புறப்பட்டு வர வேண்டும்!

நம் தாய், கிறீஸ்துநாதருடன் ஆழ்ந்த ஐக்கிய உறவு கொள்ளும் படி நம்மிடம் கேட்கிறார்கள். இது அசமந்தமுள்ள மனித சுபாவத்துக்கு வேதனையாயுள்ளது. ஆயினும் இது மனிதர்களுக்குக் கொடுக்கப் படக்கூடிய மிகச் சிறந்த மகிமையுள்ள ஒரு பேறாகும்.

உலகம் முழுமைக்கும் கிறீஸ்தவர்கள் கிறீஸ்துவின் ஞான ஒளியைக் கொண்டு வருகிறார்கள். இதில் ஐயமே இல்லை. இந்த ஒளி இல்லையேல் உலகமே இருண்டு கிடக்கும்.

“வேதாகமத்திற்குப் பிறகு நம் வசம் உள்ள மிகச் சிறந்த ஏடு” என்று டானியல் ராப்ஸ் என்பவர் அழைக்கும் ஒரு புத்தகத்தில், 2-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தெளிவான உரை இதோ: “உடலுக்கு ஆன்மா எப்படியோ, அப்படியே உலகிற்குக் கிறீஸ்தவர்கள் இருக்கிறார்கள். மாமிசம் எப்போதும் ஆன்மாவைப் பகைத்து, அதற்கு விரோதமாய்ப் போர் எழுப்பிக் கொண்டிருப்பது போலவே, எப்போதும் கிறீஸ்தவர்களை உலகம் எதிர்த்துப் போராடிக் கொண்டேயிருக்கிறது. தன்னைச் சிறைப்படுத்தி வைத்திருக்கும் உடலை ஆன்மா எவ்வாறு காப்பாற்றி, உய்வித்து வருகிறதோ, அதே போல் கிறீஸ்தவர்கள் உலகத் தைக் காப்பாற்றி வருகிறார்கள்.”