இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

இறுதிக்கால யுகம் - உந்நத இலட்சியம்!

கிறீஸ்தவ சமயத்தைப் பெருவாரியான மக்கள் அதன் முழுமையில் அநுசரித்து வருவார்களானால், மனுக்குலம் கண்ணீர்க் கணவாயாகிய இவ்வுலகில் எவ்வளவு கூடுமோ அந்த அளவு நிறைந்த மகிழ்ச்சியைக் காண முடியும்.

ஞானஸ்நானத்தின்போது, தேவ இஷ்டப்பிரசாதம் ஆன்மாவில் புகுகின்றதே, அந்நேரமே பரலோகம் நமக்கு இவ்வுலகிலேயே ஆரம்பமாகிறது என்று வேதசாஸ்திரிகள் பொதுவாகக் கூறியுள்ளார்கள்.

அர்ச். அருளப்பர் கூறுகிறபடி, இந்தத் தெய்வீக வாழ்வென்பது, தேவ அன்புதான். இந்த அன்பு ஒரு வெளிச்சத்தைப் போல் மற்ற மக்களுக்கும் ஒளி வீசுகிறது. அவர்களுக்கு வரவிருக்கும் பரலோக வாக்குறுதியை ஒரு சிறு அளவிலாவது கொடுக்கிறது. ஏனென்றால் தேவ வரப்பிரசாதம் என்பது, இந்தப் பரதேச வாழ்வில் நம் மகிமையாக உள்ளது.

ஜான் பவுல் சார்ட்டர் என்பவர், “இருப்பதை ஏற்கும்” கொள்கைவாதி. இவரிடம் நரகம் இருக்கிறதா என்று கேட்கப்பட்ட போது கூறிய பதில்: “மற்றவர்கள்தான் ஒருவனுக்கு நரகம்” என்றாராம்.

பாவம், சார்ட்டருக்கு விசுவாச வரம் இல்லை. ஒரு கிறீஸ்தவன் என்ன கூற முடியுமென்றால், “மற்றவர்கள்தான் ஒருவனுக்கு மோட்சம் ” என்று.

காரணம் என்ன? கிறீஸ்தவ போதனை, குறிப்பாக அர்ச். சின்னப்பர் கூறுவதன்படி, ஒரு கிறீஸ்தவன் தன் பிறனிடத்திலே கிறீஸ்துவைக் கண்டு மரியாதை செலுத்த வேண்டும் என்பது அவனுக்குக் கட்டளை.

மனித சரித்திரம் என்பது என்ன? உள்ளதை ஒப்புக்கொள்ள வேண்டுமானால், அது அடக்குமுறை, குரூரம் இவற்றின் துயர குறிப்பேடுதானே! ராபர்ட் பர்ன்ஸ் என்பவர் கூறுவது போல: “மனிதன் தன் போன்ற பிற மனிதனுக்கு மனிதத் தன்மையற்றுச் செய்யும் செயல், எண்ணிக்கையற்றவர்களைக் கண்ணீர் வடிக்க வைக்கிறது. தன் அயலானைச் சந்திக்கும் ஒரு மனிதன் ஒரு வகையில் அளவில்லாத கடவுளையே சந்திப்பதாக மனிதர்களை நம்பச் செய்ய இயலுமா? 

எத்தனையோ தனியார் வெளிப்படுத்தல்களின் மூலம் நாம் அறிய வருவது என்னவென்றால், சம்மனசுக்கள் மனிதர்களுக்குத் தோன்றுகையில் மனிதர்களை விட மிகவும் அழகு வாய்ந்தவர்களாகக் காட்சியளிக்கிறார்கள் என்பது. சம்மனசுக்களின் அறிவு எவ்வளவு மேம்பட்டதென்றால், மிகக் கூரிய அறிவுடைய மனிதன் மிகக் குறைந்த அறிவுடைய சம்மனசுக்களின் முன் கருதக் கூடாத அளவுக்கு முட்டாளாகத் தோன்றுகிறான். வரப்பிரசாதத்தில் மரிக்கும் மனிதர்கள், நமது ஆண்டவரே கூறியுள்ளபடி, சம்மனசுக்களைப் போல் நித்திய ஆனந்தத்தில், எந்த நாவாலும் உரைக்க முடியாத இன்பத்தில் இருப் பார்கள் (மத். 22:30).

நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும், மனுஷியும் தெய்வச் சாயல் உடையவர்களாயும், நித்தியம் நோக்கிச் சென்று கொண் டிருக்கும் ஆன்மாவாகவும் நம் கண்ணுக்குக் காணப்பட வேண்டும். இக்காரணத்தால் நாம் ஒருவருக்கொருவர் வணக்கமும், அன்பும் செலுத்தவும் வேண்டும். இந்த நியதி எல்லா வகுப்பினருக்கும் பொருந்தும். இந்த நன்மதிப்பைப் பெறுவதற்கு அவர்கள் மனிதர்களாக இருப்பது போலும். மனிதர்களாக, நம் சகோதரராகிய சேசுக் கிறீஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்டு, கெட்டுப்போன சம்மனசுக்கள் இழந்த பரலோக ஆசனத்தை அடைய அழைக்கப்பட்டவர்களா யிருப்பது போதும் (காட்சி. 12:4).

நிச்சயமற்று உறுதி குலைந்து நிற்கும் மனிதனுக்கு நாம் எடுத்துக் காட்டக் கூடிய மிகப் பெரிய இலட்சியம் இதுவே. மனிதர்கள் இதை ஏற்றுக் கொள்வார்களானால், இதன் நன்மதிப்பை உணர்வார்களானால், இதன் உண்மையை ஒப்புக்கொள்வார்களானால், இதன் நடைமுறையை ஏற்று நடப்பார்களானால், அவர்கள் இவ்வுலகிலும் மறுவுலகிலும் அரசிளங்குமரர்களாக ஆகின்றார்கள். அப்படியானால், இவ்வுலகில் அவர்கள் அனுபவிக்க நேரிடும் உயர்வு தாழ்வுகள், துன்ப துயரங்கள் யாவும் அவர்களுடைய உள் அமைதியையும் மகிழ்ச்சியையும் குலைப் பதில்லை. மாறாக அவைகளைப் பெருகச் செய்கின்றன. இதனாலேயே கடவுள் தாம் தெரிந்தெடுத்த தம் மக்களை இவ்வுலகில் துன்பப்பட அனுமதிக்கிறார்.

ஆன்மீக வாழ்வு வாழ்வதில் ஏற்படும் கஷ்டங்களை சற்றேனும் நாம் குறைத்துக் கூற விரும்பவில்லை. தன்னைத் தானே பரித்தியாகம் செய்து அனுதினமும் தனது சிலுவையைத் தூக்கிக் கொண்டு தம்மைப் பின்செல்ல அழைக்கும் கிறீஸ்துவின் சவால் என்னவென்று வளர்ச்சி யடைந்த மனிதன் ஒவ்வொருவனுக்கும் தெரியும். ஜென்மப் பாவத்தால் நிலைகுலைந்து போயிருக்கும் நம் மாமிச இயல்பின் வேதனை அப்படியேதான் உள்ளது. ஆனால் தம்மைப் பின்செல் பவர்கள் நூறு மடங்கு அதிக மகிழ்ச்சியுடன் இருப்பார்கள் என்று கிறீஸ்துநாதர் கூறிய வாக்கியத்தை இவ்வுலகத்திலேயே அப்படி இருப்பார்கள் என்று அவர் அழுத்திக் கூறிய சொல்லை, அவர் மாற்று வதில்லை என்று ஆணித்தரமாகக் குறிப்பிட வேண்டும். தங்கள் மாமிச திருப்தியைத் தேடி அடைகிறவர்களை விட கிறீஸ்துநாதரைப் பின்செல் கிறவர்கள் உறுதியாகவே நூறு மடங்கு அதிக மகிழ்ச்சியை அடையவே செய்கிறார்கள். இவ்வுண்மையைப் புள்ளி விவரத்தோடு கூட எண்பிக்கலாம். ஒழுக்கக் கேட்டில் விழுந்து கிடக்கும் நாடுகளில் தற்கொலைகளும், நரம்புக் கோளாறுகள் பிடித்தவர்களின் தொகையும் எத்தனையோ மடங்கு அதிகம்! மனித இயல்புப்படி நாம் எல்லோரும் ஒரு காரியத்தில் ஒரே தன்மையுடையவர்களாக உள்ளோம். அதுதான் நாம் மகிழ்வோடிருக்க விரும்பும் விருப்பம். ஒரு வங்கியை உடைத்துத் திருடுகிற திருடன் கூட, தான் அதனால் மகிழ்வாயிருக்க முடியும் என்றே அப்படிச் செய்கிறான். இவன், மற்ற எல்லா வகைக் குற்றவாளி களையும் போலவே வாழ்க்கைத் தத்துவம் என்னவென்றே அறியாத அறியாமையில் இருக்கிறான்.

எந்த ஒரு நாடும் அதன் தத்துவக் கொள்கைக்கு மேலாக இருக்காது. காரணம், மனிதனை மிருகத்தினின்று வேறுபடுத்தி உயர்த்துவது அவனுடைய சிந்திக்கும் சக்தியே. அறிவைச் சரியான முறையில் பயன்படுத்துவதே ஞானம். கடவுளின் முத்திரை உலகெங்கும், பிரபஞ்சமெங்கும் பதிக்கப்பட்டிருப்பதைக் காண்பதே ஞானம். அவரை வணங்கி, அவருடைய கட்டளைகளை ஏற்று நடப்பதே ஞானம். சேசுக்கிறீஸ்துநாதர் மனிதாவதாரம் எடுத்த கடவுளின் ஞானமாயிருக்கிறார் என்று அர்ச்சியசிஷ்டவர்கள் உரைக் கிறார்கள். பிளங்கெட் என்ற அயர்லாந்துப் புலவர் கிறீஸ்துவை இயற்கையின் அழகு என்று குறிப்பிடுகிறார். “கிறீஸ்துவின் திரு இரத்தத்தை சிவந்த ரோஜாவிலும் அவருடைய கண்ணொளியின் மாட்சிமையை நட்சத்திரங்களிலும் காண்கிறேன்” என்று இப்புலவர் பாடியுள்ளார்.

எனவே மனித இனத்தின் ஒப்பற்ற பிரதியாயிருப்பவர், ஒப்பற்ற இலட்சியமானவர் கிறீஸ்துவேயாவார். அவரே நீதியின் கதிரவன். அவருடைய நீதியின் ஒளி எல்லா மானிடர்க்கும் ஒளி தருகின்றது. அவரே சுடர்விட்டெரியும் அன்பின் சுவாலை. இவ்வன்பிலேதான் நாம் யாவரும் அன்பால் ஒன்றிக்கிறோம்.

சுபாவ முறையிலோ, சுபாவத்துக்கு மேலான முறையிலோ கிறீஸ்துவுக்காகச் செய்யப்படும் ஒரு சிறு காரியமும் அளவற்ற முறையில் பலனளிக்கும். “அவர்கள் வாழ்வு பெறவும், அதை மேலும் நிறைவாகப் பெறவும் நான் வந்தேன்” என்று கிறீஸ்து சர்வ உண்மையோடு கூற முடிந்தது.

இத்தகைய உந்நத இலட்சியமாயிருப்பவர் மனிதர்களுக்கு ஊக்கமளிப்பார்; அவர்கள் நினைவுகளைத் தம் வசமாய் மாற்றுவார்; தங்கள் சுயநலத்துக்கும் மேலாக அவர்களை உயர்த்துவார்; குறைகளினின்று தூக்கி எழுப்புவார் என்று நம்ப முடியாதா நாம்? சரித்திரம் இதற்கு மாறுபாடாக சாட்சியம் கூற வருமோ? கேலி பேசுகிறவர்கள், இதுவரை உள்ள சரித்திரத்தைப் பார்த்து விட்டு, மனித இயல்பு இவ்வளவு உயரமாக எப்படி எழும்ப முடியும் என்று கூறிச் சிரிக்கலாம்.

ஆனால் இந்நூலின் ஆரம்பத்தில் நாம் பார்த்ததுபோல, கிறீஸ்தவ வெற்றியை முன்னறிவிக்கும் தீர்க்கதரிசன வசனங்கள் உரைக்கின்றபடி, இதற்கு முன் ஒருபோதும் இல்லாத முறையில் மனிதர்கள் கிறீஸ்துவின் இலட்சியத்தை ஏற்றுக் கொள்வார்கள் என்று தெரிகிறது. இதற்கு தேவதாய் கூறிய வாக்கும் சான்றாக உள்ளது; “இறுதியில் என் மாசற்ற இருதயம் வெற்றி பெறும்; ரஷ்யா மனந் திரும்பும்; உலகத்திற்கு ஒரு சமாதான காலம் அருளப்படும்.” 

பல தீர்க்கவசனங்களில் கூறப்பட்டுள்ள புதிய கிறீஸ்தவ சமூக தர்மம் எப்படியிருக்கும்?

நிச்சயமாய் உண்மையான சகோதர அன்பால் தூண்டப்பட்ட உள்ளார்ந்த அன்பு மனிதர்களுக்கிடையில் ஏற்பட்டு, அவர்களுடைய பழக்க வழக்கங்கள் சீர்ப்படும்.

இந்த சமாதான யுகத்திலே, தங்கள் அயலாரிடத்தில் மக்கள் கிறீஸ்துவைக் காண்பார்கள். தங்கள் அயலார் எவ்வளவு ஏழைகளாய், அறிவு குன்றியவர்களாய், எந்த நாடு, இனத்தைச் சேர்ந்தவர்களாயிருந் தாலும், “நீ துன்பப்படுத்தும் கிறீஸ்து நானே” என்று சின்னப்பருக்குக் கூறப்பட்ட கடிந்துரைக்கு இலக்காகாதபடி மக்கள் ஒருவர் ஒருவரை நேசிப்பார்கள்.

அந்த யுகத்தில் மக்கள் திரள் திரளாய் மனந்திரும்பி வருவார்கள். அர்ச். லூயிஸ் மோன்போர்ட் உரைத்துள்ளபடி, கிறீஸ்தவரல்லாத இனத்தவர்கள் கிறீஸ்தவ வேதத்திற்கு வருவார்கள்.

அந்த யுகத்தில் மிகக்கொடிய வறுமை, பட்டினி இவை இராது. ஆயினும் திருச்சபையின் சுவிசேஷ போதனையின்படி வறுமை நேசிக்கப்படும். பணம் என்பது “அசுத்த லாபம்” என்று கருதப்படும். அர்ச். இராயப்பரும், சின்னப்பரும் குறிப்பிட்டுப் பேசியதுபோல, அதாவது, நித்திய வாழ்வின் மகிமையை நோக்கிச் செல்லும் கிறீஸ்த வனின் கண்ணில் பணம் ஒரு பொருட்டாகப் படவே படாது.

போர்க்கருவிகள் இல்லாதொழியும். குற்றமும், பழிகளும் குறைந்து போகும். கிறீஸ்தவ முயற்சியினால், சமூக மனப்பான்மை யினால் பொருள் உற்பத்தி பெருகும். இதனால் வரிகளும், பண வசூல்களும் மிகக் குறைந்த அளவிற்கு வந்து விடும். விஞ்ஞானம் மனிதனுக்கு உண்மையாகவே ஊழியம் புரியும். கடவுள் விஞ்ஞானத்தை எதற்காகக் கொடுத்தாரோ, அந்தப் பணியை அது செய்யும். யுத்தக் கருவிகளுக்குப் பயன்படும் விஞ்ஞானம், இப்புதிய யுகத்தில் நம்ப முடியாத அளவிற்கு முன்னேற்றக் காரியங்களுக்கு உதவும். பாலைவனங்கள் சோலைகளாகும். கடவுள் மனிதனுக்கு அளித்துள்ள அறிவு வளத்தால் தானிய விளைவு இருமடங்கு மும்மடங்கு எங்கும் பெருகும்.

நம் அறிவைக் கொண்டு இந்த யுகத்தைப் பார்த்தாலும் என்ன தெரிகிறது? இந்த யுகம் கலை, இலக்கியம், கட்டடம், இசை, எதெது மனித உள்ளத்தை மேலெழுப்ப வல்லதோ, அத்தனை கலைகளும் உச்ச நிலையில் வளரும்.

இதனால் “சிலுவை” மனித வாழ்வினின்று அகற்றப்பட்டு, மனிதர்கள் பூலோகத்திலேயே மோட்சத்தைக் காண்பார்கள் என்று கூற முடியுமா?

அப்படியுமல்ல. ஏனென்றால் வாழ்வு மனிதனுக்கு அளிக்கப் படுவதே அவனைப் பரிசீலிப்பதற்குத்தானே! தங்கம் உலையில் புடம் இடப்படுவதைப் போல!

மனித சுபாவத்தின் கெட்டுப்போன தன்மை இன்னமும் இருக்கவே இருக்கும். அவனுக்குப் பலத்த சோதனைகளும் இருக்கும். மனித மனம் தெய்வ சித்தத்துக்கு எதிராக எழும்புவதும் இருக்கும். இதை மேற்கொள்ள அவன் செய்ய வேண்டிய சுய பரித்தியாகம் அவனுக்கு வேதனை தருவதாகவே இருக்கும்.

உண்மை என்னவென்றால், இந்த மாமரியின் யுகத்திலே, மானிடன் சிலுவைகளையெல்லாம் எளிதாகவும், அதிகப் பேறுபலன் களுடனும், அதிக மகிமையுடனும் சுமந்து செல்வான்.

சேசுக்கிறீஸ்துவை அடையும் நேரடிப் பாதை, எளிய பாதை, மிகவும் உந்நதப் பாதை, மிகவும் பாதுகாப்பான பாதை அவனுக்குக் காட்டப்படும். அந்தப் பாதைதான் மாமரி என்னும் பாதை. அவர்கள் வழியாக, தவறிப் பின்னடையாமல், வரப்பிரசாதமும், ஒளியும் பெற்றவனாய், வேறு வழிகளில் உத்தமதனம் அடைய முயல்கிற வர்களுக்குத் தெரியாத விதமாய், வெகு துரிதமாய் சேசுவை அடைவான்.

இதுவே மனிதனின் புதிய பட்டணம். பசாசு செய்யும் மாய, இருண்ட மேகங்களைத் தாண்டியவுடன் காணப்படும் பட்டணம். பசாசின் இறுதி வெற்றி இத்தோடு சரியாய்ப் போய்விடும். ஒவ்வொரு ஆன்மாவாக மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு மனிதர்கள் ஒப்புக் கொடுக்கப்படும்போதெல்லாம் இந்த நல்ல யுகம் அதிக அருகாமையில் வந்து கொண்டிருக்கிறது. ஒரு ஆன்மா ஜெபிக்கவும், தவம் செய்யவும் உறுதி பூணும்போதெல்லாம் அது நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. இதைச் செய்யும்படித்தானே பாத்திமாவில் தேவ அன்னை அவ்வளவு தூரம் நம்மை வற்புறுத்திக் கேட்டுக் கொண் டார்கள்!