இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச். தோமையார் வரலாறு - திருப்பொருள்

போர்த்துக்கீசியர் மயிலாப்பூர் வந்துற்றபோது தோமையாரின் எலும்புகள் எல்லாமே கல்லறைக்குள் இருந்ததாக நம்பியிருந்தனர். இக்காலத்தில் நாம் அறியக்கூடிய அளவு, வரலாற்று விவரங்கள் அக்காலத்தவர்க்குத் தெரியாமையால், அப்படிப்பட்ட தவறான கருத்து அவர்களுக்கு உண்டானது. 

நாளாவட்டத்தில் பல சான்றுகளால் எலும்புகள் 'எதெஸா'வுக்குக் கொண்டுபோகப்பட்டன என்று கண்டுகொண்டனர். அவர்கள் கல்லறையைத் திறந்து பார்த்தபோது ஒரு சிறு எலும்பும் அதில் படிந்திருந்த ஈட்டி முனையுமே இருந்தன. 

இப்பொருட்களை அவர்கள் எடுத்து மிகுந்த பக்தியுடன் வைத்துக் கொண்டாடி வந்தனர். இன்னும் அவை மேற்சொல்லப்பட்ட புனித தோமையார் கோயிலிலேயே இருக்கின்றன.

சுத்த வெள்ளியினால் வெகு வேலைப்பாடாகச் செய்யப்பட்ட ஒரு சுடர் பாத்திரத்தின் மத்தியில் கண்ணாடிக் கூட்டுக்குள் மேற் சொன்ன திருப்பொருட்கள் அமைத்து வைக்கப்பட்டிருக்கின்றன. 

ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 21ஆம் தேதி கொண்டாடப்படும் புனித தோமையார் திரு நாளுக்கு முந்திய நவநாட்களிலும், அப்பெரு நாளன்றும் அவை மக்களின் வணக்கத்திற்குப் பீடத்தில் எழுந்தேற்றஞ் செய்யப்பட்டு வருகின்றன. 

மக்கள் அவற்றை முத்தி செய்யும் பாக்கியமும் அடைகிறார்கள் இந்தத் திருப்பொருளை - அருளிக்கத்தை - முத்தி செய்வதற்காகச் சென்னை நகரத்தின் பல பாகங்களினின்று பெருந்திரள் வருகிறதை இக்காலமும் காணலாம். 

இந்தத் திருநாளை "தோமையார் அருளிக்க முத்தத் திரு நாள்'' என்று மக்கள் சாதாரணமாய் அழைப்பார்கள்.