இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஞான பாத்திரமே!

பாத்திரமென்றால் என்ன என்பது நம்மனை வருக்கும் தெரியும்; திடப்பொருட்கள் (உ-ம்: உப்பு, சர்க்கரை போன்றவைகள்) அல்லது திரவ பதார்த்தங்கள் (உ-ம்: தண்ணீர், எண்ணெய் முதலியன) சிந்திச் சீரழியா வண்ணம் அவைகளைப் பத்திரப்படுத்தி வைக்க உதவும் உபகரணமே பாத்திரம் என்பது. எப்பாத்திரத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் உட்குழிந்த பாகமொன்று இருத்தல் அவசியம்; அல்லாவிடில் அது எவ்வளவு தான் விலை யுயர்ந்த பொருளால் செய்யப்பட்டிருப்பினும், பாத்திரம் என்னும் பெயர் அதற்கு எள்ளளவும் செல்லாது; ஏனெனில் தன்னகத்தே இடப்பெற்ற பொருளைத் தாங்குவதற்கு இவ்வெறுமை அவசியம்.

இவ்வாறே, ஏதாவதொரு இருதயம் சர்வேசுர னுடைய வரப்பிரசாதக் கொடைகளால் பூரணமாய் நிரப்பப்பட வேண்டுமானால், அவ்விருதயம் வெறுமையாயிருத்தல் வேண்டும்-- அதாவது சுயநலப் பற்றுதலும், அழிந்தொழியும் சிருஷ்டிகள் மீது உண்டாகும் கிரமந் தப்பிய பற்றுதல்களும், அவ்விருதயத்திலிருந்து அடியோடு நீக்கப்பட வேண்டும். அப்போதுதான் அவ்விருதயம் வெறுமையாயிருக்கும்; சர்வேசுரனுடைய வரப்பிரசாதக் கொடைகளும் அபரிமிதமாய் அதை நிரப்பும்.

மாமரியன்னையின் மாசற்ற இருதயம் இத்தகைய தாகவே இருந்தது. சுயநலப் பற்றும், கிரமந்தப்பிய நாட்டங்களும் மாதாவின் இருதயத்தில் ஒருபோதும் குடியிருந்ததில்லை. சிருஷ்டிகரையன்றி சிருஷ்டிகளை அவ்விருதயம் நாடவில்லை. ஆகவே, கடவுளின் வரப்பிரசாதக் கொடைகளால் அவ்விருதயம் சம்பூரணமாய் நிறைவுற்றிருந்ததில் ஆச்சரியமில்லை. “வரப்பிரசாதங்களாலே பூரணமானவளே, வாழ்க!” என்று மாதாவை வாழ்த்துகிறார் வானுலக தூதன் கபிரியேல். 

பலவகைப் பொருட்கள் நிரம்பிய ஒரு பாத்திரம் ஒரு குறிப்பிட்ட பொருளால் மாத்திரம் முற்றிலும் நிரம்பியிருக்கிறது என்று சொல்ல முடியாது. உதாரணமாக பலவகைத் தானியங் கள் ஒன்றாகக் கலந்த ஒரு பாத்திரம் இருக்கிறதென வைத்துக் கொள்ளுவோம். இப்பாத்திரம் ஒரே ஒரு வகைத் தானியத்தால் மாத்திரம் நிரம்பியிருக்கிறது என்று சொல்ல முடியுமா? முடியாது. பலவகைத் தானியங்களும் அப்பாத்திரத்தில் இடம் பெற்றுள்ளன. இவ்வாறே பிற பொருட்கள் அவ்விருதயத்தில் இடம் பெற்றிருப்பின், வரப்பிரசாதத்தால் பூரணமானவர்கள் என்று சொல்வதில் ஒரு அர்த்தமுமிராது. எனவே வரப்பிரசாதம் ஒன்றால் மாத்திரமே மாதாவின் இருதயம் முற்றிலும் நிரம்பியிருந்தது.

தேவ வரப்பிரசாதங்களும் தேவ அருட்கொடை களும் அழியாத ஞானத் திரவியங்களானபடியால், இத்திரவியங்களைத் தாங்கியுள்ள பாத்திரத்தை ஞானப் பாத்திரம் என்று அழைக்கிறோம். தேவதாயே இப்பாத்திரம்; எனவே அவர்களே ஞானப் பாத்திரம்.

மனிதனுடைய இருதயங்கள் இவ்விதமில்லை என் பதை நாம் விசனத்துடன் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். சுயநலப் பற்று நம்மில் அநேகருடைய உள்ளங்களில் வரப்பிரசாத வெள்ளம் பாய வழியின்றி தனியாட்சி புரிகிறது. சிருஷ்டிகள் மீது கொண்டுள்ள கிரமந்தப்பிய பற்றுதல்களினால் நிரம்பியிருக்கும் இருதயங்கள் இக்காலத் தில் இல்லையா? ஐம்புலன்களின் இச்சைகளைத் திருப்தி செய்வது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டுள்ளோர் இக்காலத்தில் இல்லையென்று யாராவது கூறமுடியுமா? மண்ணோடு மண்ணாகி மக்கி மறையும் சரீரத்தைக் கண்ணும் கருத்துமாய்ப் பேணிப் பாதுகாத்து, என்றும் அழியாததும், சர்வேசுரனுக்கென உண்டாக்கப் பட்டதுமான ஆன்மாவின் நலத்தை அசட்டை செய்து வாழ்வோர் நம்மில் இல்லையா? உலக ஆசாபாசங் களையே, தங்கள் உணவாகவும் சுவாசிக்கும் காற்றாகவும் கருதிக் காலங் கடத்துவோரின் தொகை இன்று அதிகரித்து விட்டது என்றால் தவறாகாது.

“ஓ! எங்கள் நேச அன்னையே! ஞானப் பாத்திரமே! உமது இருதயத்தில் இறைப்பற்றில்லாது வேறு பற்று குடிகொண்டிருக்கவில்லையே! அந்தோ! எமது இருதயங்கள் இதற்கு நேர்மாறாக இருக்கின்றன. இறைப் பற்றைத் தவிர மற்றெல்லாவித பற்றுதல்களும் அங்கு குடிகொண்டிருக்கின்றன. மாதாவே! நாங்களும் உம்மைக் கண்டு பாவித்து எங்கள் இருதயங்களை வெறுமையாக்கக் கிருபை புரிந்தருளும்; சுயநலப் பற்றையும் சிருஷ்டிகள் மீது எமக்குள்ள பற்றையும் வேரோடறுக்க உதவி புரியும்! உம்மைப் போல் கடவுளுக்காகவே வாழ எமக்கு வேண்டிய வரப்பிரசாதங்களைப் பெற்றுத் தாரும். நாங்களும் “ஞானப் பாத்திரங்கள்” என்னும் பெயருக்கு அருகதை உடையவர்களாயிருக்கச் செய்யும்.” 


ஞானப் பாத்திரமே!
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!