பரிசுத்த திருச்சபைத் தந்தையர்கள் இதுபற்றிக் கூறியவை!

அர்ச். பெசில் இது பற்றிப் பின்வருமாறு எழுதுகிறார்: ''கடவுளின் பரம இரகசியங்களைப் பகிர்ந்தளிக்க நியமிக்கப் பட்டுள்ளவர்களிடம் நாம் பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டும் என்பது அவசியமானது.''

அர்ச். அமிர்தநாதர் : ''பாவம் விஷமாயிருக்கிறது. பாவசங்கீர்த்தனமோ, ஒருவன் தன் பாவங்களைப் பற்றித் தன்னையே குற்றஞ்சாட்டிக் கொள்வதாக இருக்கிறது. அக்கிரமம் விஷமாயிருக்கிறது, பாவசங்கீர்த்தனமோ பாவத்தில் மீண்டும் விழாதிருக்கத் தேவையான மருந்தா யிருக்கிறது. ஆனால் பாவசங்கீர்த்தனம் செய்ய நீ வெட்கப் படுகிறாயா? இந்த வெட்கம் சர்வேசுரனுடைய நீதியாசனத் திற்கு முன்பாக உனக்கு எந்த விதத்திலும் உதவாது. உடனே இந்த வெட்கத்தின் மீது வெற்றிகொண்டு உடனே பாவசங் கீர்த்தனம் செய்யப் போ.''

அர்ச். அகுஸ்தீனார்: "நாம் மறுவுலகில் குழப்பத்திற்கு ஆளாகாதபடி, இந்த உலகில் நாம் பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டுமென்று நம் இரக்கமுள்ள ஆண்டவர் விரும்பு கிறார்.''

அர்ச். க்றீசோஸ்தோம் அருளப்பர் : ''தபசு காலத்தின் முடிவை அடைந்துள்ளோம். இப்போது நம் பாவங்களை முழுமையாகவும், துல்லியமாகவும் நாம் சங்கீர்த்தனம் செய்ய வேண்டும்.'' “தேவதூதர்களுக்கும், அதிதூதர்களுக்கும் கூட கொடுக்கப்படாத ஒரு வல்லமை கத்தோலிக்கக் குருக் களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. ஏனெனில், "எவர்களுடைய பாவங்களை மன்னிப்பீர்களோ, அவர்களுக்கு அவை மன்னிக்கப் படும்; எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவர்களுக்கு அவை மன்னியாது விடப்படும்" என்று சேசுநாதர் அப்போஸ்தலர்கள் வழியாகத் தம் குருக்கள் அனைவரிடமும் சொல்கிறார்."

அர்ச். எரோணிமுஸ்: ''மேற்றிராணியாரோ, அல்லது குருவோ நமது பல வகையான பாவங்களைக் கேட்டபின், தமது கடமைப்படி கட்டுகிறார், அல்லது கட்டவிழ்க்கிறார்; யார் கட்டப்பட வேண்டும், யார் கட்டவிழ்க்கப்பட வேண்டும் என்பதை அவர் புரிந்து வைத்திருக்கிறார். ''

இந்தத் திருச்சபைத் தந்தையரின் கருத்துக்களை வாசிக்கும்போது, அவர்கள் பாவசங்கீர்த்தனம் கேட்கும் குருவிடம் தனிமையில் இரகசியத்தில் செய்யப்படுகிற பாவசங்கீர்த்தனத்தைப் பற்றியே பேசுகிறார்கள் என்பது முற்றிலும் தெளிவாகிறது.

இவ்வாறு பாவசங்கீர்த்தனம் என்னும் சத்தியத்தைப் பற்றிய எந்த விதமான சர்ச்சையும் ஒரு காலத்திலும் எழுந்ததில்லை. அப்படிப்பட்ட வாக்குவாதங்களைப் பற்றி திருச்சபையின் சரித்திரம் முழுவதிலும் எந்த விதமான குறிப்பையும், அல்லது அது தொடர்பாக நூலகங்களில், அல்லது ஆவணக் காப்பகங்களில் பாதுகாத்து வைக்கப் பட்டுள்ள ஆவணங்கள் எதையும் நாம் காணவில்லை. குருவானவரிடம் தனிமையில், இரகசியத்தில் செய்யப்படும் பாவசங்கீர்த்தனம் தொடர்பாக எந்த சந்தேகமும் எந்தக் காலத்திலும் கத்தோலிக்கர்களுக்கு இருந்ததில்லை என்பது தான் இதற்கான எளிய காரணமாகும்.