பிரமாண்டமான கட்டடம்!

நாங்கள் தொடர்ந்து கீழ்நோக்கி இறங்கினோம். சாலை இப்போது எந்த அளவுக்கு செங்குத்தாக மாறிவிட்டது என்றால், நேராக நிற்பதே கூட இயலாத காரியமாகி விட்டது. அப்போது, இந்த செங்குத்தான மலைச்சரிவின் அடியில், ஓர் இருண்ட பள்ளத் தாக்கின் நுழைவாயிலில், ஒரு மிகப் பிரமாண்டமான கட்டடம் பார்வையில் பட்டது. 

இறுக்கமாகப் பூட்டப்பட்டிருந்த அதன் நெடி துயர்ந்த வாசல்நிலை, எங்கள் சாலைக்கு எதிராக இருந்தது. நான் இறுதியாக அடிப்பகுதியை வந்து அடைந்ததும், அங்கே நிலவிய வெப்பத்தால் நான் மூச்சுத் திணறத் தொடங்கினேன். அதே நேரம், சிவந்த தீச்சுவாலைகளால் ஒளிர்விக்கப்படும் பிசுபிசுப்பான, பச்சை நிறமுள்ள புகை, மலைகளை விட உயரமாய் எழுந்து நின்ற அந்தப் பிரமாண்டமான சுவர்களுக்குப் பின்னாலிருந்து எழுந்தது.

“நாம் எங்கே இருக்கிறோம்? இது என்ன இடம்?” என்று நான் என் வழிகாட்டியிடம் கேட்டேன்.25

“அந்த வாயில்நிலை மீது எழுதப்பட்டுள்ளதை வாசித்துப் பாரும்.”

நான் ஏறிட்டுப் பார்த்து, இந்த வார்த்தைகளை வாசித்தேன்: “ஊபி நோன் எஸ்த் ரெதெம்ப்ஸியோ - மீண்டு வர முடியாத இடம்.” அப்போதுதான் நாங்கள் நரகத்தின் வாசலில் இருக்கிறோம் என்பதை நான் புரிந்து கொண்டேன். வழிகாட்டி இந்த கொடிய பயங்கர முள்ள இடத்தைச் சுற்றிலும் என்னை வழிநடத்திச் சென்றார். சீரான தொலைவுகளில், அந்த முதல் கதவைப் போன்ற வெண்கலக் கதவுகள் மிகப் பெரும் படுகுழிகளுக்கு எதிராக நிமிர்ந்து நின்றன; ஒவ்வொரு வாசலின்மீதும் பின்வருவன போன்ற ஒரு வாசகம் இருந்தது: “திஷெதித்தே, மாலேதிக்தி, இன் இஞ்ஞெம் ஏத்தெர்னும் குயி பாராத்துஸ் எஸ்த் தியாபோலோ எத் ஆஞ்ஜெலிஸ் எய்யுஸ் - சபிக்கப்பட்டவர்களே, என்னை விட்டு அகன்று, பசாசுக்கும், அதன் தூதர்களுக்கும் ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினிக்குள் போங்கள்” (மத்.25:41). “ஓம்னிஸ் ஆர்போர் குவே நோன் ஃபாச்சித் ஃப்ருக்தும் போனும் எக்ஸ்சிதேத்தூர் எத் இன் இஞ்ஞெம் மித்தேத்தூர் - நற்கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியில் போடப்படும்” (மத்.7:19).

நான் அவற்றை என் குறிப்புப் புத்தகத்தில் குறித்துக் கொள்ள முயன்றேன். ஆனால் என் வழிகாட்டி என்னைத் தடுத்தார்: “தேவை யில்லை. அவை எல்லாம் பரிசுத்த வேதாகமத்தில் இருக்கின்றன. உங்கள் முகப்பு மண்டபங்களிலும் கூட அவற்றில் சிலவற்றை நீர் பொறித்து வைத்திருக்கிறீர்” என்றார் அவர்.

அப்படிப்பட்ட ஒரு காட்சியைக் கண்டு, உடனே திரும்பிச் செல்லவும், ஆரட்டரிக்குத் திரும்பி வந்து விடவும் நான் விரும்பி னேன். உண்மையில் நான் புறப்பட்டும் விட்டேன். ஆனால் என் வழிகாட்டி என்னைக் கண்டுகொள்ளவே இல்லை. ஒரு செங்குத் தான, நீண்டு கொண்டே சென்ற ஒடுக்கமான மலையிடுக்கில் பெரும்பாடுபட்டு நடந்தபின், நாங்கள் மீண்டும் முதல் வாசலுக்கு எதிரேயுள்ள பெரும் பள்ளத்தாக்கின் அடிவாரத்தில் வந்து நின்றோம். திடீரென என் வழிகாட்டி என்னை நோக்கித் திரும்பினார். நிலைகுலைந்தவராகவும், திடுக்கிட்டுப் போனவராகவும் வழிவிட்டு விலகி நிற்கும்படி அவர் எனக்கு சைகை காட்டினார். “பாரும்” என்றார் அவர்.