இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மாமரி நம் இரட்சணியத்துக்காகத் துன்பப்படுகிறார்கள்

அர்ச். பொனவெந்தூர், திவ்விய கன்னிகையிடம் பேசும் விதமாக, "ஓ இராக்கினியே, உங்களையும் பலியாக்கும்படி ஏன் கல்வாரிக்குச் சென்றீர்கள்? சிலுவையில் அறையுண்ட ஒரு சர்வேசுரன் எங்களை மீட்டு இரட்சிக்கப் போதாது என்றா, அவருடைய தாயாராகிய நீங்களும் அவரோடு சிலுவையில் அறையப்படும்படி சென்றீர்கள்?'' என்று கேட்கிறார். உண்மையில், சேசுநாதரின் மரணம் உலகையும், எண்ணற்ற உலகங்களையும் மீட்டு இரட்சிக்கப் போதுமானதாக இருந்தது. ஆனால் இந்த நல்ல தாயார், நம்மீது தனக்குள்ள அன்பிற்காக, கல்வாரியின் மீதுதான் ஒப்புக்கொடுத்த தன் துன்பங்களின் பேறுபலன்களால் நம் இரட்சணியத்திற்குத் தானும் உதவ விரும்பினார்கள். ஆகவே, நம் அன்பிற்காக சேசுநாதர் அனுபவித்த திருப்பாடுகளுக்காக அவருக்கு நாம் பெரும் கடமைப்பட்டவர்களாக இருப்பது போலவே, தனது திருமகனின் மரணத்தில், நம் இரட்சணியத்திற்காகத் தானே முன்வந்து மாமரி அனுபவித்த வேதசாட்சியத்திற்காக, அவர்களுக்கும் நாம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம். தானே முன்வந்து என்று நான் சொல்கிறேன், ஏனெனில், அர்ச். ஆக்னஸ் அர்ச். பிரிஜித்தம்மாளுக்கு வெளிப்படுத்தியது போல, ""தயாளமும், கருணையுமுள்ள நமது திவ்ய அன்னை, நம் ஆத்துமங்கள் மீட்கப்படாமல் இருப்பதையும், அவை தங்கள் முந்தின அழிவின் நிலையில் கைவிடப்படுவதையும் காண்பதை விட, நமக்காக எந்த ஒரு வாதைக்கும் தன்னைக் கையளிக்க ஆர்வமாக இருந்தார்கள்.'' உண்மையில், தனது திருமகனின் திருப்பாடுகளில் மாமரியின் மாபெரும் வியாகுலத்தின் மத்தியில் அவர்களுக்கு இருந்த ஒரே ஒரு ஆறுதல், இழக்கப்பட்ட உலகம் அவரது மரணத்தால் மீட்டு இரட்சிக்கப்படுவதையும், கடவுளின் எதிரிகளாக இருந்த மனிதர்கள் அவரோடு மீண்டும் ஒப்புறவாவதையும் காண்பது மட்டுமே. ""அனைவரின் மீட்பிற்காகவும் ஒரு பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது, அதன் மூலமாகக் கடுங்கோபத்தில் இருந்தவர் சாந்தப்படுத்தப் பட்டார் என்பதைப் பற்றி, தான் வேதனைப்பட்டுக் கொண்டிருந்த அதே வேளையில், அகமகிழ்ந்து களிகூர்ந்து கொண்டும் இருந்தார்கள்'' என்கிறார் காஸியாவின் சீமோன் என்பவர்.

ஆகவே, மாமரியின் மிகப் பெரிதான நேசம் நம் நன்றியறிதலுக்கு தகுதியுள்ளதாக இருக்கிறது. குறைந்த பட்சம் மாமரியின் வியாகுலங்களில் அவர்களைத் தியானித்து, அவர்கள்மீது பரிதாபப் படுவதன் மூலம் இந்த நன்றியறிதல் அவர்களுக்குக் காட்டப்பட வேண்டும். ஆனால் மிகச் சிலர் மட்டுமே இப்படிச் செய்கிறார்கள் என்றும், உலகின் பெரும் பகுதி அவற்றை மறந்தே வாழ்ந்து கொண்டிருக்கிறது என்றும் மாமரி அர்ச். பிரிஜித்தம்மாளிடம் முறையிட்டார்கள்: ""என் மீது இரங்குபவர்களும், என் வியாகுலங்களை தியானிப்பவர்களும் யாராவது இருக்கிறார்களா என்று பூமி முழுவதிலும் தேடிப் பார்க்கிறேன்; மிக மிகச் சிலரே அப்படிச் செய்வதை நான் காண்கிறேன். ஆகவே, என் மகளே, அநேகரால் நான் மறக்கப்படுகிறேன் என்றாலும், நீயாவது என்னை மறக்காமல் இரு; என் கடும் வேதனையை தியானி, உன்னால் முடிந்த வரை என் துயரத்தைக் கண்டுபாவி.'' மாமரியின் வியாகுலங்களை நாம் தியானிப்பது அவர்களுக்கு எவ்வளவு பிரியமான செயலாக இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டுமானால், அவர்களது ஒரு காட்சியை நாம் அறிந்திருப்பது போதுமானது. 1239ம் ஆண்டில் மாமரி தனது பக்தர்களாகிய ஏழு பேருக்குத் தோன்றினார்கள். (இந்த ஏழு பேரும் பிற்காலத்தில் செர்வைட்ஸ் துறவற சபையை ஸ்தாபித்தார்கள்.) மாமரியின் கரங்களில் ஒரு கருப்பு நிற உடை இருந்தது. தன்னை மகிழ்விக்க அவர்கள் விரும்பினால், அவர்கள் அடிக்கடி தனது வியாகுலங்களை தியானிக்க வேண்டும் என்று மாமரி ஆசையோடு கேட்டுக் கொண்டார்கள்; இந்த நோக்கத்திற்காகவும், தனது துயரங்களை அவர்களுக்கு நினைவுபடுத்துவதற்காகவும், எதிர்காலத்தில் இந்தத் துக்க ஆடையை அவர்கள் அணிந்திருக்க வேண்டும் என்ற தனது ஆசையை மாமரி வெளிப்படுத்தினார்கள். தம்மை விடத் தம் தாயைக் கண்டு ஆத்துமங்கள் பரிதாபப்படுவதைக் காண்பதில் தாம் அதிக மகிழ்ச்சியடைவதாக கிறீஸ்துநாதர் தாமே முத். பினாஸ்கோ வெரோணிக்கம்மாளுக்கு அறிவித்தார்: ""என் மகளே, என் திருப்பாடுகளை தியானித்து சிந்தப்படும் கண்ணீர்த் துளிகள் எனக்குப் பிரியமானவை. ஆனால் என் தாய் மாமரியை ஒரு மிகப் பெரும் நேசத்தைக் கொண்டு நான் நேசித்தேன் என்பதால், என் மரணத்தின்போது அவர்கள் தாங்கிய வாதைகளைப் பற்றிய தியானம் எனக்கு இன்னும் அதிகம் உகந்ததாக இருக்கிறது'' என்று அவர் வெளிப்படுத்தினார்.மரணத்தின்போது அவர்கள் தாங்கிய வாதைகளைப் பற்றிய தியானம் எனக்கு இன்னும் அதிகம் உகந்ததாக இருக்கிறது'' என்று அவர் வெளிப்படுத்தினார்.

இதன் காரணமாக, மாமரியின் வியாகுலங்களில் பக்தி கொண்டிருப்பவர்களுக்கு சேசுநாதர் வாக்களித்துள்ள வரப்பிரசாதங்கள் மிகப் பெரியவையாக இருக்கின்றன.