ஒரு பேய்த்தனமுள்ள படுகுழி

நவம்பர் 13, 1863, தமது “நல்லிரவு” வாழ்த்துரையில் டொன் போஸ்கோ கூறியதாவது:

நேற்று காலையில் நல்மரணத்திற்கான ஞானப் பயிற்சியை நாம் செய்தோம். இப்போது உங்களில் சிலர் அதை நன்றாகச் செய்ய வில்லையோ என்று நான் பயப்படுகிறேன். நேற்றிரவு நான் கண்ட ஒரு கனவை இப்போது நான் உங்களுக்குச் சொல்லப் போகிறேன்.

நான் உங்களோடு மைதானத்தில் இருக்கிறேன். நீங்கள் எல்லோரும் விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள். அதன்பின் நாம் எல்லோரும் காலாற நடப்பதற்காக ஒரு புல்வெளிக்குச் சென்றோம். அங்கே நீங்கள் உங்கள் பொழுதுபோக்குகளை, பெரும்பாலும் குதித்து விளையாடும் விளையாட்டுக்களை மீண்டும் தொடங்கினீர்கள். திடீரென பாதுகாக்கப்படாத ஒரு படுகுழி அந்தப் புல்வெளியின் மத்தியில் இருந்ததை நான் கண்டு, அந்த இடம் பாதுகாப்பானதுதானா என்று பார்ப்பதற்காக அங்கு விரைந்தோடினேன். நான் அதனுள் பார்த்தபோது, ஒரு குறுகிய, மஞ்சள் புள்ளிகள் உள்ள, இழிந்ததாகத் தோன்றிய ஒரு பாம்பு, அந்தக் குழியின் அடியில் சுருண்டு படுத்திருந்ததை நான் கண்டேன். அது ஒரு குதிரை, ஏன் ஒரு யானையின் அளவுக்குக் கூட மிகப் பெரிதாக இருந்தது. நான் பயந்து போய் பின்பக்கமாகத்துள்ளிக் குதித்தேன்.

இதற்கிடையே உங்களில் பலர் அந்தக் குழியின் பக்கத்தில் வந்து குதித்து விளையாடத் தொடங்கினீர்கள். விசித்திரமான முறையில் உங்களைத் தடுக்க வேண்டும் என்றோ, அந்த ஆபத்தைப் பற்றி உங்களை எச்சரிக்க வேண்டும் என்றோ எனக்குத் தோன்றவே இல்லை. வயது குறைவான சிறுவர்கள் மிக எளிதாக அந்தப் பள்ளத்தைத் தாண்டிக் குதித்துக் கொண்டிருக்க, வயதானவர்கள், பாரம் அதிகமாக இருந்ததால், அடிக்கடி அந்தப் பள்ளத்தில் விளிம்பிலேயே அலங்கோலமாக விழுந்தார்கள். இது நடந்த ஒவ்வொரு தடவையும் அந்தப் பாம்பு தாக்கியது, அவர்களுடைய பாதத்திலோ, காலிலோ, அல்லது உடலின் வேறு பாகத்திலோ கொத்தி விட்டு, விரைவாக பார்வையிலிருந்து ஒளிந்து கொண்டது. ஆனால் இதைப் பற்றிக் கவலைப்படாமல் அந்த மூடத்தனமுள்ள சிறுவர்கள் காயம் படாதவர்களைப் போல தொடர்ந்து குதித்து விளையாடிக் கொண்டிருந்தனர். இது நடந்து கொண்டிருக்கையில், ஒரு சிறுவன் தன் தோழன் ஒருவனைச் சுட்டிக் காட்டி, “அவன் ஒரு முறை அந்தக் குழியைத் தாண்ட முயற்சிப்பான். ஆனால் அது அவனுக்குக் கடினமாக இருக்கும். மறு முறையும் தாண்டுவான், ஆனால் அதுவே அவனுடைய முடிவாக இருக்கும்” என்று கூறினான்.