இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஜெபமாலை ஒரு வெண் ரோஜா - குருக்களுக்கு

கடவுளின் உண்மையைப் போதித்து எல்லா மக்களுக்கும் சுவிசேஷத்தைப் படிப்பிக்கிற உன்னதரின் ஊழியரான என் சகோதர குருக்களே! இச்சிறு நூலை ஒரு வெண் ரோஜா மலராக உங்களுக்கு கொடுக்கிறேன். இதை நீங்கள் வைத்துக் கொள்ள விரும்புகிறேன். இதில் பொதிந்துள்ள உண்மைகள் மிக எளிமையுடனும். நேர்முகமாகவும் தரப்பட்டுள்ளன என்று நீங்களே புரிந்து கொள்வீர்கள். இவைகளை தயவு கூர்ந்து உங்கள் இருதயத்தில் வைத்துக் கொள்ளுங்கள். வைத்துக் கொண்டு, நீங்களே ஜெபமாலைப் பழக்கத்தைக் கடைப்பிடித்து அதன் பலனைச் சுவையுங்கள். இது மட்டுமல்ல. இவ்வுண்மைகள் எப்போதும் உங்கள் வாயிலும் இருக்கட்டும். காரணம், நீங்கள் எப்போதும் ஜெபமாலையைப் பற்றி பிரசங்கித்து, இந்தப் புனித பக்தி முயற்சியின் உயர்வை மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதால் அவர்களை மனந்திருப்புவீர்கள்.

அறியாமையிலிருப்பவர்களும் பெரும் அறிவு இருந்தும் தற்பெருமை கொண்டவர்களும் செய்வது போல், ஜெபமாலையில் ஒரு முக்கியமும் இல்லை என்று நீங்கள் நினைத்து விடாதபடி கவனமாயிருங்கள் என உங்களிடம் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். ஜெபமாலை முக்கியமற்ற ஒன்றல்ல. மாறாக, அது கடவுளின் ஏவுதல் பெற்ற விலை மதிப்பிடற்கரிய திரவியம் ஆகும்.

எல்லாம் வல்ல கடவுள் இதை ஏன் உங்களுக்குக் கொடுத்தாரென்றால், மிகக் கடினமான பாவிகளை நீங்கள் மனந்திருப்பவும், விடாப்பிடியாய் பதிதத்தில் இருப்பவர் களை மனந்திரும்பச் செய்யவும் நீங்கள் ஜெபமாலையை ஒரு துணையாகக் கொள்ள வேண்டுமென்று அவர் விரும்புகிறார். இவ்வுலகில் தம் வரப்பிரசாதத்தையும் மறு உலகில் தம் மகிமையையும் ஜெபமாலையுடன் இணைத்துள்ளார். அர்ச்சிஷ்டவர்கள் ஜெபமாலையைத் தவறாமல் செய்து வந்துள்ளார்கள். பாப்புமார்கள் ஜெபமாலைப் பக்திக்கு ஆதரவு அளித்துள்ளார்கள்.

ஆன்மாக்களை வழிநடத்தும் ஒரு குருவுக்கு பரிசுத்த ஆவியானவர் இந்த இரகசியத்தை வெளிப்படுத்தும் போது, அந்தக் குரு எவ்வளவு ஆசி பெற்றவராகிறார்! காரணம், மிகப்பெருந் தொகையான மக்கள் இந்த இரகசியத்தை அறியத் தவறி விடுகிறார்கள்; அல்லது மிக மேலெழுந்த வாரியாகவே அறிந்து வருகிறார்கள். ஒரு குரு இந்த இரகசியத்தை உண்மையிலேயே அறிவாரானால் அவர் தினமும் ஜெபமாலை ஜெபிப்பார். மற்றவர்களும் அவ்வாறு செய்யும்படி ஊக்கமளிப்பார். கடவுளும் அவர் திரு மாதாவும் அவருடைய ஆன்மாவில் நிரம்ப வரப்பிரசாதங்களைப் பொழிவார்கள். அதனால் கடவுளுடைய மகிமையின் கருவியாக அவர் விளங்குவார். அவருடைய வார்த்தைகள் எளியனவாயிருந்தாலும், மற்ற போதகர்கள் பல ஆண்டுகளாக பிரசங்கிப்பதால் விளையும் நன்மையைவிட ஒரே மாதத்தில் இவருடைய வார்த்தைகள் அதிக நன்மையை விளைவிக்கும்.

எனவே, என் சகோதரரே, என் உடன் குருக்களே, ஜெபமாலைப் பக்தியை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வது மட்டும் பற்றாது, நாமும் அதை கடைபிடிக்க வேண்டும். ஜெபமாலையின் முக்கியத்துவம் பற்றி நாம் உறுதியான எண்ணம் கொண்டிருந்தாலும் அதை நாம் ஜெபிக்காமல் இருந்தால் நம் ஆலோசனையை மக்கள் கேட்டு நடப்பார்கள் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால் யாரும் தன்னிடம் இல்லாத ஒன்றை பிறருக்கு கொடுக்க இயலாது. 'செய்யவும் போதிக்கவும் . தொடங்கினர். (அப். 1:1) தாம் போதித்தவற்றை முதலில் தாமே செய்து காட்டிய நமதாண்டவருடைய மாதிரிகைப்படி நாமும் ஒழுக வேண்டும். சிலுவையில் அறையுண்ட கிறிஸ்துவையன்றி வேறு ஒன்றையும் சின்னப்பர் அறிந்ததில்லை. அவரை நாம் பின்பற்ற வேண்டும். நீங்கள் ஜெபமாலையைப் போதித்தால் உண்மையாகவே இங்ஙனமே செய்வீர்கள். ஜெபமாலை என்பது பரலோக மந்திரம் அருள் நிறை மந்திரம் இவற்றின் குவியலா? இல்லை . சேசுவினுடையவும் மரியாயினுடையவும், வாழ்வு, பாடுகள், மரணம், மகிமை ஆகிய திரு நிகழ்ச்சிகளின் சுருக்கமே ஜெபமாலை.

ஜெபமாலையைப் பிரசங்கிப்பது எவ்வளவு ஞான ஆற்றலுள்ளது என்பதை ஆண்டவர் அருளால் அனுபவத்தில் நான் கண்டேன். இதை மிக விரிவாக என்னால் கூற முடியும். மிக ஆச்சரியமான மனமாற்றங்களை அது செய்துள்ளதை என் கண்ணாலேயே நான் கண்டிருக்கிறேன். ஜெபமாலையைப் பிரசங்கிப்பதை குருக்கள் ஒரு பழக்கமாக இக்காலத்தில் கொண்டிராமலிருந்தாலும் இவ்வழகிய பக்தி முயற்சியை நீங்கள் எடுத்துக்கூற என் அனுபவங்கள் உங்களைத் தூண்டுமானால் அவற்றை மகிழ்ச்சியுடன் இங்கு விவரிப்பேன். ஆனால், இப்போது எழுதுகிற இந்தச் சிறு நூலில் ஜெபமாலையைப் பற்றி சான்றுடன் கூடிய ஒரு சில தொன்மை நிகழ்ச்சிகளைக் கூறுவதே போதும் எனக் கருதுகிறேன்.