திருத்தலமும், திருவிழாவும்

உந்தன் பாதாரம் புவிக் காதாரம் கன்னி மாதாவே சரணம்.
- ஆலய கீதம்.

17-ஆம் நூற்றாண்டின் இறுதியில் வங்கக் கடலில் புயலில் சிக்கித் தவித்த போர்த்துக்கீசிய வணிகர்கள் விண்ணக அன்னையின் அருளால் செப்டம்பர்த் திங்கள் 8-ஆம் நாள் நலமே வேளாங்கண்ணி கரையை அடைந்தார்கள். அந்நினைவு நாளை ஒட்டித்தான் ஆண்டு தோறும் வேளாங்கண்ணித் திருநகரில் அருள்மிகு ஆரோக்கிய அன்னைக்கு விழா எடுக்கப்படுகிறது. விழா பத்து நாட்கள் நடைபெறுகிறது. ஆகஸ்ட் திங்கள் 29-ஆம் நாள் கொடியேற்றப்பட்டு செப்டம்பர்த் திங்கள் 8-ஆம் நாள் விழா நிறைவடைகிறது. அப் பத்து நாட்களிலும் தாயகத்தின் பல பகுதிகளிலிருந்தும், பிற நாடுகளிலிருந்தும் ஏறத்தாழ பத்து இலட்சம் திருப்பயணிகள் வரை விழாவில் பங்கு கொண்டு அன்னையின் அருள் பெற்றுச் செல்கிறார்கள். அவர்களுள் சிலர் பத்து நாட்களும் வேளை நகரில் தங்கு கிறார்கள். மற்றவர்கள் இடை இடையே வந்து செல்கிறார்கள்.

மரியாளின் பக்தி மரியாளோடு முற்றுப்பெறுவதில்லை. அது அவளது மலர்க்கரங்களிலே தவழ்ந்திடும் குழந்தை இயேசுவைச் சென்றடைகிறது. அதனால் விழாவின் மையமாய் திருப்பலியிருப்பதைக் காண முடியும். நம் பெருமான் இயேசு கல்வாரிக்குன்றிலே குருதிசிந்திக் குவலயத்தை மீட்டார். தன்னையே பலிப் பொருளாகக் கையளித்தார். அக் கல்வாரிப்பலி நாள்தோறும் கிறிஸ்தவ பீடங்களில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது திருப்பலி அள்ள, அள்ளக்குறையாத அமுத சுரபியாக, தோண்டத் தோண்டச் சுரந்திடும் ஊற்றாக, வெட்ட வெட்ட நலம் தரும் சுரங்கமாகத் திகழ்கிறது. 

அந்தத் திருப்பலி தான் விழாவின் மைய நிகழ்ச்சியாக அமைந்திருக்கிறது. திருப்பயணிகளின் நலத்தை முன்னிட்டு நாள்தோறும் காலையிலிருந்து மாலைவரை திருப்பலி பலமுறை நிறைவேற்றப்படுகின்றது. திருப்பலியின் போது பல மொழிகளில் ஒப்புரவு அருட்சாதனம் நல்கப்படுகிறது. 

எனவே கத்தோலிக்க திருப்பயணிகள் ஒப்புரவு அருட்சாதனம் பெற்று திருப்பலியில் பங்கு கொண்டு நற்கருணை அருந்தி ஆன்ம ஊட்டம் அடைகின்றனர். பாவசங்கீர்த்தனம் என்பது பாவ மன்னிப்புப் பெறுவதற்கென கிறிஸ்து வகுத்திருக்கும் ஓர் அருட்சாதனம். கடவுளின் பிரதிநிதியாயிருக்கும் குருவிடம் பாவங்களை அறிக்கையிடும்பொழுது அவர், கிறிஸ்து வின் பெயரால் மன்னிக்கிறார். பாவியும் மன்னிப்பு பெறுகிறான். நற்கருணை என்பது ஆன்ம உணவாகும். கிறிஸ்து மன்னுயிர்க்காகத் தம்முயிரைத் தந்ததோடு தம் உடலை மனிதனின் ஆன்ம உணவாகவும், குருதியை ஆன்மப் பானமாகவும் வழங்கியுள்ளார். அந்நற்கருணை ஊட்டந்தரும் உணவாகவும், குருதி தேட்டம் நல்கும் அமுதமாகவும், நாட்டங்களை வெல்ல 'உதவிடும் சாதனமாகவும் திகழ்கின்றன. 

கிறிஸ்தவர்கள் அதனை உண்டு ஆன்ம உரம் பெறுகின்றனர். இதனைப் பெற வேண்டுமானால் ஒருவர் திருமுழுக்குப் பெற்றிருக்க வேண்டும். அதுவே அவரைக் கிறிஸ்துவோடும், அவர் நிறுவிய திருச் சபையோடும் இணைக்கிறது. எனவே தான் திரு முழுக்கால் கிறிஸ்துவோடு இணைக்கப்படாதவர்களுக்கு அந் நற் கருணை உணவு வழங்கப்படுவதில்லை. இவ்வாறு திருப்பலியில் பங்கு பற்றி நற்கருணை உட்கொண்டு தூய்மை பெறல் திருப்பயணம் மேற்கொள்வதின் முதல் முக்கிய நோக்கமாக கத்தோலிக்கர்களுக்கு அமைந்திருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். மக்களின் ஆன்ம நலனையும் இன்ன பிற தேவைகளையும், கவனிப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட குருக்கள் விழாக் காலத்தில் பணியாற்றுவது சிறப்புக்குரியது .

மாசணுகாச் செபமாலை மரியே
மைந்தரைக் காரம் மா!

அன்னைக்கு வாடும் மலர் மாலை சூட்டி மகிழ்ந்தால் போதாது. வாடாமலராகிய செபமாலை செய்து அன்னைக்கு அகமகிழ்வுடன் அணிவிக்க வேண்டும். இச்செபமாலையே அன்னை உலகுக்குக் கொடுத்த அரும் பெருங் கொடையாகும். 14-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பா எங்கும் ஆல்பிஜன்ஸ் என்னும் பதிதக் கொள்கை பரவி வருவதைக் கண்ட புனித சாமி நாதர் கலங்கினார். பல வழி முறைகளைக் கையாண்டும், வெற்றி கிட்டவில்லை. அன்னையை நாடினார். நூற்றைம்பத்து மூன்று மணி செபம் செய்யுமாறு கூறினாள். சாமிநாதர் அச்செபமாலையால் பதிதர்களை வென்றார். அச்செபமாலையைத் தான் அன்னை பெரிதும் விரும்புகிறாள் என்பதைக் காட்ட காலை 9-00 மணியில் இருந்து மாலை 6-00 மணி வரை பல மொழிகளில் இங்கு செபமாலை சொல்லப்படுகிறது.

பேராலயப் பெரிய பீடத்தில் காலை முதல் திருப்பலி நிறைவேற்றப்பட்டதிலிருந்து, இரவு வரை திருப்பயணிகள் காணிக்கை செலுத்திய வண்ணமிருப்பார்கள். உள்ள, உடல் தூய்மையோடு, கையில் எரியும் திரியைப் பிடித்துக் கொண்டு, மலர் மாலையைத் தாங்கிக் கொண்டு தென்னம்பிள்ளைகளை ஏந்திக்கொண்டு அன்னையின் அளப்பரும் புகழை இசைத்துக் கொண்டு, திருப்பயணிகள் கூட்டம் கூட்டமாக அன்னையின் ஆலயத்தினுள் நுழைந்திடும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

நவ நாட்களில் காலை நடைபெறும் திருப்பலியில் ஆங்கிலத்தில் மறையுரையும், மாலை வழிபாட்டில் தமிழில் மறையுரையும் நிகழ்த்தப்படுகின்றன. நாள்தோறும் பகல் 12 மணிக்கு உபயம் செய்பவர்களால் கொடியேற்றப்படுகிறது. கொடியேற்றும் நேரம் வந்ததுமே பயணிகள் வீட்டு வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு ஓடிவந்து அன்னையின் பேராலயத்திற்கு முன் கூடி நிற்பார்கள். அன்னையின் திருக்கொடி விண்ணை நோக்கிப் பறக்கப் பறக்கத் திருப்பயணிகள் உளமுருகி நிற்கும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கும்.

விழா நாட்களில் இன்னொரு முக்கிய நிகழ்ச்சியாக அமைந்திருப்பது நாள்தோறும் நடைபெறுகின்ற தேர்ப்பவனி ஆகும். மாலை வழிபாடு முடிந்ததும் தேர்ப்பவனி தொடங்கும். நாளும் இரு சிறு சப்பரங்களும், ஒரு பெருந் தேரும் பவனியில் பங்கு கொள்கின்றன. வேளாங்கண்ணி கடற்கரைப் பகுதி ஆன தால் மணலில் தேரை இழுத்துச் செல்ல முடியாது. தேரைத் தோளில் சுமந்து தான் செல்ல வேண்டும். எனவே திருப்பயணிகள் பேராவலுடன் தேர்களைச் சுமக்க முன் வருவார்கள். 

சில சப்பரங்களைப் பெரும்பாலும் பெண்களே சுமந்து செல்வர். பெரிய தேர் ஆலயத்திற்கு முன்னே வந்ததும் எங்கும் பேரமைதி நிலவும். அடியவர்களின் கண் களெல்லாம் அன்னையின் திருஉருவை உற்று நோக்கிய வண்ணமாயிருக்கும். அப்பொழுது அன்னையை நோக்கி வேண்டுதல் சொல்லப்படும். வண்ண வண்ண மலர்களாலும், எண்ண ற்ற மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கும் திருத்தேரில் அன்னை அமர்ந்திருக்கும் காட்சி காண்போரின் உள்ளங்களை உருக்கும்; பக்திப் பெருக்கில் ஆழ்த்தும். திருப்பயணிகள் மன்றாடிக்கொண்டும், அன்னையின் அளப்பரும் புகழைப் பாடிக்கொண்டும் தேர்ப்பவனியில் பங்கு கொள்வர். அடியவர்கள் எழுப்பிடும் 'மரியே வாழ்க' என்னும் வாழ்த்தொலி விண்ணில் எதிரொலிக்கும்.

உண்மையில் தேரிலே அன்னை அமர்ந்து வரும் காட்சியைக் காண ஆயிரமாயிரம் கண்கள் வேண்டும். அழகு நடைபயிலும் மடப்பிடியோ? இருளில் மின்னிப் படரும் சுடர்க் கொடியோ? அலகையை அச்சுறுத்தும் பேரிடியோ? இறைவனின் புகழ் பாடிடும் பேரிகையோ? கருணை மாமுகிலெனத் துலங்கிடும் காரிகையோ? இறைவனின் எழில் ஓவியத்தை எழுதிப்பார்க்கும் தூரிகையோ? இறைஞானம் உணர்ந்த வானமாமலையோ? கலையுணர்வோடு வார்க்கப்பெற்ற பொற்சிலையோ? அடியவர் அரைத்து உண்டிடும் அருட்கனியோ? அகவிருள் அகற்றிடும் தூமணியோ? இறையமுதை வழங்கிடும் நல்விருந்தோ? பிணி தீர்க்கும் வல்மருந்தோ? என்று காண்போர் வியக்கும் வண்ணம் அன்னையின் எழிலார்ந்த தோற்றம் அமைந்திருக்கும்.

ஒளி சிந்தும் முத்துக்களால் கோர்க்கப்பட்ட நீண்ட வடமோ? விண்ணக வீட்டிற்கு இட்டுச் செல்லும் தடமோ? விண்ணில் விரைந்து செல்லும் சுடர்கள் தவழ்ந்து செல்வதற்குரிய இடமோ? விண்ணையும், மண்ணையும் இணைக்கும் ஏணியோ? முத்துச்சரம் அசைந்தாடும் சந்தன மேனியோ? என்று காண்போர் வியந்திடும் வகையில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட விண்ணை எட்டும் கோபுரங்கள் தோன்றும்.

செப்டம்பர் 6, 7-ஆம் நாட்களில் மாபெருந்தேர் ஒன்று புறப்படும். அத்தேர் அசைந்து வருவதைக் காண்பதே கண்கொள்ளாக் காட்சியாயிருக்கும். ஊர்ந்து வரும் தேர் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சிற்றாலயமோ, கற்றளியோ, மாமலையோ என்று எண்ணத் தோன்றும்.

தேர்ப்பவனி முடிந்ததும் குருக்கள் இல்லத்தின் முன் பாங்குற அமைக்கப்பட்டிருக்கும் மேடையில் இசைக் கச்சேரியும், பிற கலை நிகழ்ச்சிகளும் நாள்தோறும் நடத்தப்படும். தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து கலைஞர் பலர் வந்து அன்னையின் அரும் பெரும் புகழினைப் பாடுவர். அன்னையின் புகழ் பாடப்பாட வாய் மணக்கும். அன்னையின் புகழ் கேட்கக் கேட்கச் செவி இனிக்கும். அவர்கள் இசைத்திடும் தேமதுரத் தமிழோசை தவழ்ந்து வரும் தென்றலில் கலந்து வந்து எத்திக்கும் பரவும். பத்தி வெள்ளம் கரை புரண்டோடச் செய்யும்.

செப்டம்பர் 7-ஆம் நாள் மாலை தஞ்சை ஆயர் அவர்களால் சிறப்பு வழிபாடு நடத்தப்படும். விண்ணக அன்னையின் பிறந்த நாட் பெரு விழாவாம். செப்டம்பர் திங்கள் 8-ஆம் நாளன்று காலை மேதகு ஆயர் அவர்கள் ஆடம்பரப் பாடற்பலி நிறைவேற்று வார்கள். மாலையில் கொடி இறக்கப்பட்டு விழா இனிதே முற்றுப்பெறும்.

தேவ தாயாரின் மாதமான மே முழுவதும் வேளாங்கண்ணியில் திருவிழாக்கோலம் தான். மாதம் முழுவதும் பக்தர்கள் அணி திரண்டு வருகின்றனர். கிறிஸ்துமஸ், ஈஸ்டர் பெருவிழாச் சமயங்களில் வேளாங்கண்ணித் திருத்தலத்தில் திருப்பலி காண விழைந்து ஆண்டு தோறும் வந்து போகும் அன்பர்கள் தொகையும் பெருகி வருகிறது. இவ்வாறு வேளாங்கண்ணியில் “நாளாம், நாளாம் திரு நாளாம்" என்பது ஒவ்வொரு நாளுக்கும் உரிய தாகப் பொலிகின்றது. 

விண்ணின் அரசி நீயே - வேத உருவே தாயே
விமல அமலத் தூயே 
எண்ணில்லா வரம் பெற்றாய் - எங்கட்கினிய நற்றாய்
மண்ணில் பவம் நீ அற்றாய் - மகிமை பெருமை உற்றாய்

மரியே யென்றழைப்பனர் தம் மன மணக்கும்
வாய் மணக்கும், வறுமை நீங்கும்; 
மரியே யென் றழைப்பனர் தம் வல்வினைபோம்
தொல்வினைபோம், மகப் பேறுண்டாம். 
மரியே யென்றழைப்பனர் தம் மதிபெருகும்
கலை பெருகும், வயமே வாய்க்கும்; 
மரியே யென் றழைப்பனர் தம் பிணி தவிர்த்து 
அகமிருந்து மகிழ்ந்தே வாழ்வார்...
- புலவர் யம். பி. மஸ்கரேனஸ்.