எத்தகைய மாபெரும் நேசத்தோடு அவர் துன்பப்பட்டார் என்பது பற்றி!

163. இந்த எல்லா உண்மைகளின் அடிப்படையில், நம் நல்ல சேசு கடந்த காலங்களையும், உலகம் முடிவு வரையுள்ள எதிர்காலத்தையும் சேர்ந்த எல்லா வேதசாட்சிகளையும் விட அதிகமாகத் துன்புற்றார் என்று அர்ச். தாமஸ் அக்குயினாஸ் மற்றும் அநேக திருச்சபைத் தந்தையரோடு சேர்ந்து நாமும் தீர்மானிக்கிறோம். இனி, கடவுளின் திருச்சுதனின் மிகச் சிறிய தொரு வேதனை கூட அதிக மதிப்புள்ளதாகவும், சகல சம்மனசுக்கள் மற்றும் மனிதர்களின் ஒட்டுமொத்த துன்பங்கள் அனைத்தையும் விட அதிகமாக நம் இருதயங்களைத் தூண்ட வல்லவை என்றால், நம் பொருட்டு, சுய விருப்பத்தோடும், அளவுகடந்த நேசத்தோடும் ஒரு மனிதன் துன்புறக்கூடிய அனைத்து துன்பங்களையும் ஏற்று அனுபவித்த நம் ஆண்டவரைப் பற்றி நாம் எவ்வளவு ஆழமான துக்கமும், அவர் மீது எவ்வளவு ஆழமான அன்பும், நன்றியறிதலும் கொண்டிருக்க வேண்டும். "அவர் சந்தோஷ ஜீவியம் தமக்கு முன் வைக்கப்பட்டிருக்க, அவமானத்துக்குக் கூச்சப்படாமல் சிலுவையை ஏற்றுக்கொண்டார்" (எபி. 12:2). திருச்சபைத் தந்தையரின் கூற்றுப்படி, நித்திய ஞானமாகிய சேசுக்கிறீஸ்துநாதர் நம் நிர்ப்பாக்கியங்களிலிருந்து அளவற்ற விதத்தில் மிகத் தொலைவாக, தமது பரலோக மகிமை யிலேயே இருந்திருக்க முடியும், ஆனால் அவர் நம் பொருட்டு பூமிக்கு இறங்கி வந்து, மனித சுபாவத்தை ஏற்றுக் கொண்டு சிலுவையில் அறையப்படுவதைத் தேர்ந்து கொண்டார் என்பது தான் மேற்கூறிய வேத வாக்கியத்தின் அர்த்தமாக இருக்கிறது. மனிதனான பிறகும் கூட அவர் தம் திருச்சரீரத்திற்கு இப்போது தாம் அனுபவிக்கிற அதே மகிழ்ச்சியையும், அதே அழியாமை யையும், அதே பாக்கியங்களையும் தந்திருக்க முடியும். ஆனால் அவர் இதைத் தேர்ந்து கொள்ளவில்லை. ஏனெனில் துன்புறுவதில் தாம் சுதந்திரமாக இருக்க வேண்டுமென அவர் விரும்பினார். 

164. இத்துடன் ரூப்பெர்ட் என்பவர் பின்வரும் கருத்தையும் சேர்க்கிறார். மனித அவதாரத்தின் போது, நித்திய பிதா தம் திருச் சுதனுக்கு முன்பாக இரண்டு எதிரெதிரான திட்டங்களை முன்வைத்தார். அதாவது அவர் மகிழ்ச்சியான தொரு வழியில் அல்லது துன்புறுவதன் மூலம், மகிமைகளைத் தேடிக் கொள்வது அல்லது அவமானங்களை ஏற்றுக்கொள்வதன் மூலம், செல்வச் செழிப்பு அல்லது தரித்திரத்தின் மூலம், ஜீவிப்பது அல்லது மரிப்பதன் மூலம், உலகத்தை மீட்டு இரட்சிக்கலாம் என்று அவர் தம் திருச்சுதனுக்குப் பரிந்துரைத்தார். இவ்வாறு, அவர் விரும்பி யிருந்தால், மகிமையுள்ளவராகவும் வெற்றி வீரராகவும் இருந்து கொண்டே அவர் மனிதர்களை மீட்டு இரட்சித்து, சந்தோஷங் களும், இன்பங்களும், மகத்துவங்களும், செல்வங்களும் நிறைந்த ஒரு பாதையில் அவர்களைத் தம்மோடு அழைத்துச் சென்றிருக்க முடியும். ஆனால் தமது பிதாவாகிய சர்வேசுரனுக்கு அதிமிக மகிமையையும், மனிதர்களுக்குத் தமது மேலதிக நேசத்தின் இன்னும் மேலான ஒரு சாட்சியத்தையும் தருமாறு அவர் சிலுவை மற்றும் துன்பங்களின் பாதையைத் தேர்ந்து கொண்டார். 

165. மேலும், அவர் எவ்வளவு அதிகமாக நம்மை நேசித்தார் என்றால், தமது துன்பங்களைக் குறைத்துக் கொள்வதற்குப் பதிலாக, அவற்றை நீட்டிப்பதையும், இன்னும் அதிகமாகத் துன்புறுவதையும் அவர் தேர்ந்து கொண்டார். அதனால் தான் சிலுவையில், சகல விதமான அவமானங்களாலும் மூடப்பட்டவ ராகவும், துயரத்தில் ஆழமான மூழ்கடிக்கப்பட்டவராகவும், சிலுவையின் மீது தொங்கிக் கொண்டிருக்கையில், இந்தத் துன்ப மெல்லாம் போதாது என்பது போல, "நான் தாகமாயிருக்கிறேன்" என்று அவர் உரக்கக் கூறினார். எதன் மீது அவர் தாகமாயிருந்தார் ? அர்ச் லாரன்ஸ் யுஸ்தீனியன் இதற்குப் பதில் தருகிறார். "அவரது தாகம் அவரது அன்பின் வேகத்திலிருந்தும், அவரது அன்பின் ஆழத்திலிருந்தும், அபரிமிதத்திலிருந்தும் எழுந்து வந்தது. அவர் நமக்காகத் தாகமாயிருந்தார். நமக்குத் தம்மைத் தரவும். நமக்காகத் துன்புறவும் அவர் தாகமாயிருந்தார்.''


முடிவு

166. இதெல்லாவற்றையும் அறிந்தவர்களாக அர்ச். பவுலா பிரான்சிஸோடு சேர்ந்து நாமும் வியப்போடு : "ஓ அன்பாகவே இருக்கிற என் தேவனே, துன்புறுவதிலும், மரிப்பதிலும் எப்பேர்ப் பட்ட அன்பின் மிகுதிகளை எனக்குக் காண்பித்திருக்கிறீர்!" என்று சொல்லக் கடவோம். அல்லது அர்ச். பாட்ஸி மரிய மதலேனம் மாளோடு சேர்ந்து, பாடுபட்ட சுரூபத்தை முத்தமிட்டபடி, "ஓ அன்பானவரே, நீர் எவ்வளவு குறைவாக அறியப்பட்டிருக்கிறீர்!" என்று சொல்வோம். அல்லது அர்ச். பிரான்சிஸ் அசிசியாரோடு சேர்ந்து. புழுதி நிறைந்த தெருக்களில் சுற்றி வந்தபடி, "சிலுவை யில் அறையுண்ட என் அன்பாகிய சேசுநாதர் நேசிக்கப்பட வில்லையே!" என்று புலம்பக் கடவோம்.

அவதரித்த ஞானமாகிய "சேசுக்கிறீஸ்துநாதரை உலகம் அறியவில்லை '' (அரு.1:10) என்று நாம் ஒவ்வொரு நாளும் சொல்லும்படி திருச்சபை தூண்டுகிறது. உண்மையில், நம் ஆண்டவர் நமக்காக எதையெல்லாம் அனுபவித்தார் என்று அறிந் திருப்பதும், ஆனால் உலகத்தைப் போல, அவரை ஆசைப்பற்றுத லோடு நேசியாமலிருப்பதும் சாத்தியமேயில்லை.