இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

இறுதிக்கால யுகம் - துன்பப் பிரச்சினைகள் நிறைந்த வருங்காலம்!

எதார்த்தமாகப் பேசுவதென்றால், நம்மை அடுத்திருக்கும் எதிர்காலம் நல்லதாகத் தோன்றவில்லை. ஐக்கிய அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர், சோவியத் ரஷ்யாவின் தாக்கும் வலிமை உயர்ந்து கொண்டே வருவதாக மீண்டும் மீண்டும் அமெரிக்கர்களை எச்சரித்துள்ளார். அணு ஆயுதத் தாக்குதல்களால் அமெரிக்காவைப் பலமிழந்து போகச் செய்யக் கூடியனவாக அவை அமையும் என்கிறார் இவர். இதே சமயத்தில் எந்தக் கட்டுக்கும் அடங்காத, போர் வெறி கொண்ட சீனாவிடமிருந்தும் ஆபத்து எந்நேரமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

நிதான அறிவுள்ள நிபுணர்களின் கருத்துப்படி சோவியத் ரஷ்யா சமாதானத்தைக் கடைப்பிடிக்கும்; ஏனென்றால் அதற்கு சமாதானம் அதன் சுயநலத்திற்குத் தேவையாயுள்ளது என்கிறார்கள். இந்தக் கருத்து ஆறுதலளிப்பதாக இருந்தாலும், சரித்திரக் கண்கொண்டு பார்க்கும் போது உண்மையானதாகத் தோன்றவில்லை. 1939-ம் ஆண்டில் ஜெர்மனி நாட்டுக்கு இதே போல் சமாதானம் அதன் சுய தேவைக் காகவே அவசியமாக இருந்தது... ஆயினும் ஹிட்லர் அதை யுத்தத்துக்குள் இழுத்துச் சென்றார். இந்தோ-சீனாவில் மக்கள் தங்கள் கெரில்லா யுத்தங்களைக் கைவிட்டு விட்டு, தங்கள் விவசாயத்தில் ஈடுபடுவதே அவர்கள் நாட்டுக்கு அவசியமாயிருந்தும், அவர்கள் அப்படிச் செய்யவில்லை.

 சோவியத் ரஷ்யாவின் கருத்துத்தான் என்ன? 1965-ம் ஆண்டு சோவியத் யுத்தக் கப்பல் தளபதி ஒருவர் அமெரிக்காவில் சரணடைந்தார். அவர் பெயர் நிக்கோலாஸ் ஆர்ட்டமொனோ. இவர் அமெரிக்கப் பார்லிமெண்ட் துணைக்குழு ஒன்றின் முன்னிலையில் கொடுத்த வாக்குமூலப்படி, “சோவியத் ரஷ்யாவின் திட்டம், சுதந்திர உலகுக்கு எதிராக ஒரு அணுத் தாக்குதல் நடத்துவதே என்றும், குறிப்பாக அத்தாக்குதல் அமெரிக்காவையே குறியாகக் கொண்டிருக்கும்; அதற்குரிய நேரம் நிர்ணயிக்கப்பட இருக்கிறது” என்பதாகும். இத்தலைவர் கூறிய இவ்வுரை உண்மை என்று அமெரிக்க ஒற்றர் படை சேகரித்த தகவல்கள் இதற்கு சாட்சியம் பகர்ந்தன.

இது நடந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின் ஓலக் பென்கெளஸ்கி என்ற உயர்தர சோவியத் பார்வையாளர் இதே போன்ற தகவலை பிரிட்டிஷ் தற்காப்பு இலாகாவிடம் தெரிவித்தார்.

ஐக்கிய அமெரிக்கா எவ்வளவோ சுத்தக் கருத்துடன் தன்னுடைய சமாதான எண்ணங்களை வெளிப்படக் கூறி வந்தும், சோவியத் ரஷ்யா தன் அணு ஆயுத பலத்தை இவ்வளவு விஸ்தரிப்புச் செய்து வருவது கண்டு அமெரிக்க அதிபர் நிக்ஸனே கலக்கமும் ஆச்சரியமும் அடைந்தார்.

அமெரிக்க ஜனநாயகக் கட்சியைச் சார்ந்த பார்லிமெண்ட் உறுப்பினர் யஹன்றி ஜாக்ஸன் என்பவர் 1971 மார்ச் 7-ம் தேதி அளித்த ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில், சோவியத் ரஷ்யா மிக வலிமை வாய்ந்த, கண்டம் விட்டுக் கண்டம் பாயும் அணு ராக்கெட் ஆயுதங் களை முன்பு இருந்ததையெல்லாம் விட முன்னேறிய முறையில் தாக்குதல் ஆயுதங்களாகத் தயாரித்து வருகிறது என்று கூறியுள்ளார்.

யஹன்றி ஜாக்ஸனின் இக்கூற்றைப் பற்றி அமெரிக்க ஆட்சி பீடம் எந்த விமர்சனமும் செய்ய மறுத்து விட்டது. ஆயினும் அமெரிக்கப் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த ஜெர்ரி பிரய்டிம் என்பவர், “இக்கூற்று சரிதான்; புதிய ரக கண்டம் விட்டுக் கண்டம் பாயும் அணு ராக்கெட் ஆயுதங்கள் ரஷ்யாவில் தயாரிக்கப்படுவதை நாங்கள் அறிய வந்துள்ளோம். ஆனால் அவை எத்தன்மையன என்றோ, ரஷ்யாவின் திட்டம் என்ன என்றோ தெரியவில்லை” என்று கூறி யுள்ளார்.

ஹென்றி ஜாக்ஸன் அமெரிக்க ஆயுதப் பிரிவின் ஒரு தலைமை உறுப்பினர். நாம் கொடுத்த தகவல் எப்படி நமக்குக் கிடைத்தது என்று கூற அவர் மறுத்து விட்டார். ரஷ்யாவின் இந்த ராக்கெட் விஸ்தரிப்பு அமெரிக்காவுக்கு அரசியல் நிலையில்தான் அதிக பாதிப்பைக் கொடுக்கும் என்று அவர் மேலும் கூறியுள்ளார். “தன்னிடம் வளர்ந்து வரும் இந்த ஆயுத படை பலத்தைப் பயன்படுத்தி ரஷ்யா அரசியல் தரப்பில் அதிக துணிச்சலுடன் செயல்படும்” என்றும் கூறினார்.

இதே செனட் உறுப்பினர் யஹன்றி ஜாக்ஸன் இன்னும் ஒரு தகவலையும் தந்துள்ளார். அதாவது எகிப்தில் மூன்று இடங்களில் இருந்து எஜிப்தியர் யாருக்குமே தெரியாத அளவில் வேவு பார்க்கும் அலுவலை ரஷ்யா இயக்கி வருகிறது என்றார்.

இந்தோ-சீன, வியட்நாம் பிரதேசத்தில், வட வியட்னாம், தென் வியட்னாம் மீது தொடுக்கும் யுத்த வெறித் தாக்குதல்களுக்கு சோவியத் ரஷ்யா முழு ஆதரவளிப்பது, ரஷ்யா சமாதானத்தை விரும்பவில்லை என்பதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது.

பாத்திமாவில் கிடைத்த ஒளியில் நாம் உண்மைகளை ஆய்ந்து பார்த்தால், மூன்றாம் உலகப் போர் வருவதாயிருந்தால், அது இந்தக் காலத்தில் கட்டிக் கொள்ளப்படும் பாவங்களின் பயனாகவே வரும் என்று தெரிகிறது. மனம்பொருந்திச் செய்யப்படும் ஒவ்வொரு பாவமும், கடவுளின் கட்டளையை மீறுதல் ஒவ்வொன்றும், கடவுள் சட்டத்தை நம் உள்ளத்தில் எழுதியுள்ள இயற்கை விதியைப் புறக்கணித்தல் ஒவ்வொன்றும், நம்மை யுத்தங்களுக்கு அருகே கொண்டு செல்கின்றன என்பதும், மானிட குலத்தில் சமாதானத்தையும், நலனையும் பாதிக்கிறதென்பதும், தேவ அன்னை பாத்திமாவில் கூறிய செய்திகளிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டிய உண்மைகள் என்பது நிச்சயமாயிருக்கிறது.

திருச்சபை இதை எப்போதும் போதித்தே வந்துள்ளது. ஆனால் மனிதகுலம் பாவ உணர்வையே இழந்து, சீரழிவும், ஒழுக்கக் கேடும் சாதாரண நடைமுறையாக மதிக்கப்படும் இக்காலத்தில் தேவ அன்னை மிக அழுத்தமாக இதை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்கள்.

கம்யூனிசம் முதன்முதலில் நமது அழியாத ஆன்மாக்களுக்குப் பெரும் ஆபத்தாக உள்ளது. நகரங்களை அழிப்பதில் பசாசுக்கு அவ்வளவு அக்கறை கிடையாது. ஏனென்றால் அதனால் அதற்கு லாபமில்லை. சாத்தானின் ஆவல் நித்தியத்திற்கும் அழியாத நம் ஆன்மாக்களைக் கெடுப்பதே. கம்யூனிஸம் என்றால் என்ன என்று அறிய வேண்டுமானால், இந்தக் கண்ணோட்டத்தில் நாம் அதைக் காண வேண்டும். அரசியல் தலைவர்கள் இந்த நோக்கம் கொண்டு பார்ப்பது அரிது. ஆகவே மூன்றாம் உலக யுத்தம் ஒன்று இல்லாமல் உலகின் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ள முடியுமானால், கம்யூனிஸ்ட்கள் அதை விரும்புவார்கள்.

ரஷ்யாவின் ராக்கெட் அணு ஆயுதங்கள் ஒரு அச்சுறுத்தும் எச்சரிப்புக்காகவே முக்கியமாக வைக்கப்பட்டுள்ளன.

நீரோ, தியோக்கிளேஷியன் போன்றவர்களை விட அதிகக் கொடியவர்களான சோவியத் தலைவர்கள் நம் உயிருக்குப் பதிலாக நம் ஆன்மாக்களை வாங்கும் ஒரு சந்தர்ப்பத்திற்கு முயன்று வருகிறார்கள்.

மண்ணுலகையே நாடித் திரியும் இவ்வுலகம் இந்த உண்மை யைக் கண்டுபிடிக்காது. ஆனால் அதற்காக அதன் உண்மை குன்றிப் போகாது.

சோவியத் ரஷ்யாவின் இந்த யுக்திகளுக்கு எதிராக அமெரிக்கத் தலைவர்கள் புதிய எதிர் ராக்கெட் முறைகளையும், மற்றும் யுத்த அரசியல் தந்திரங்களையும் விரிவுபடுத்துகிறார்கள். வேறு என்னதான் செய்வார்கள்?

அமெரிக்க மக்களின் ஒழுக்கக் கட்டுப்பாடு அவர்கள் கண்முன் னாலேயே தகர்ந்து விழுந்து கொண்டிருக்கிறதைக் கண்ணாரக் கண்டும் இப்படிச் செய்கிறார்கள். அக்கிரமங்கள், மது, புரட்சிகள், ஒழுங்கு மீறல்கள், இனப் பாகுபாடு, இவைகளால் நாடே பிய்ந்து சரிந்து விழும் அளவிற்கு வந்து கொண்டிருக்கிறது. இந்த ஒழுக்கக் கேட்டினால் எதிரி எப்பக்கமும் வெற்றி பெறுகின்றான்.

எப்படிப் பார்த்தாலும் ரஷ்யா முதல் தாக்குதல் செய்து வெற்றி கண்டபின் அவர்களுடைய நகரங்களைத் தாக்குவதால் என்ன பயன்? நாம் ரஷ்ய மக்களைத்தான் கொன்று குவிப்போம். அவர்களுள் 90 சதவீதம் கம்யூனிசத்தை விரும்பாதவர்கள் (நம்பகமான தகவல்களின்படி) --ஆகவே உள்ளத்தில் நம்முடன் உறவாயிருக்கும் ரஷ்ய மக்களைத்தான் நாம் கொல்லுவோம்.

கம்யூனிஸ ஆபத்து, கருத்து சம்பந்தப்பட்ட ஒன்று. இது தெளிவு. இதை மறுக்கவும் இயலாது. அரசியல்வாதிகளும், தேசத் தலைவர்களும் இதை எதிர்த்துப் போராட இயலாது.

இந்த முறையில் பார்க்கும்போது, முந்திய ஜனாதிபதி ஜான்ஸன், நிக்ஸன் போன்ற எவ்வளவோ சிறந்த அரசியல் நிபுணர்களும்கூட, கம்யூனிஸத்திற்கெதிராக வெற்றி காண இயலாதது போலவே, தற்போதைய அதிபராகிய நிக்ஸனும் இதில் தோல்வியைத்தான் காண முடியும்.

இந்தத் தலைவர்களிடம் உள்ள அரசியல் சக்திகளும் போர்ச் சக்திகளும் கம்யூனிஸத்தை முறியடிக்க சக்தியற்றவை. இந்த சக்தி களைத் தாண்டிய வேறொரு சக்தி தேவைப்படுகிறது.

மனித முறைப்படி பேசினால், உலகம் தற்போதைய நிலையில் இந்த ஆபத்திலிருந்து மீட்படைய வழியே இல்லை. சுத்தமான உண்மை என்னவென்றால், படுகொலைக்காரர்களும், குரூரத்தில் ஆனந்தம் கொள்பவர்களும் நாகரீக உலகை அழித்து நாசமாக்கிவிடக் கூடிய எல்லா ஆயுதங்களையும் தங்கள் வசம் கொண்டிருக்கிறார்கள்.

“சே, அவர்கள் அப்படிச் செய்யவா போகிறார்கள்?” என்று கூறுகிறான் சாதாரண நிலையிலுள்ள மனிதன்.

அவர்கள் அப்படிச் செய்ய மாட்டார்களா? முழுவதும் மார்க்ஸிஸ்ட் மயமான உலகத்தை உருவாக்குவதே நோக்கமாக கம்யூனிஸ்ட்கள் உழைக்கிறார்கள். இதை அவர்கள் அடிக்கடி நமக்குக் கூறி வந்துள்ளார்கள். அவர்களுடைய பிரச்சாரம் முழுவதிலும் இந்தக் கருத்து திரும்பத் திரும்ப வந்து கொண்டுதானிருக்கிறது. இதன் உண்மையான பொருள் என்ன? கடவுள் மீதள்ள எல்லா விதமான நம்பிக்கைகளையும் ஒழித்து விடுவதும், எவ்வித மதமும் பூமியில் இல்லாதவாறு அழித்து விடுவதுமேயாகும்.

இதை மூன்றாம் உலக யுத்தம் ஒன்று இல்லாமல் சாதித்துவிட முடியுமானால், அவர்கள் தங்கள் ஆயுதங்களைப் பிரயோகிக்காமல் நிறுத்திக் கொள்வார்கள். ஆனால் போரிடுவது இதற்குத் தேவை என்று தெரிந்தால், அவர்கள் தங்கள் ராக்கெட் அணு ஆயுதங்களை முதலில் உபயோகித்து, மிகுந்த அழிவை ஏற்படுத்தவே செய்வார்கள்.

ஆனால்,

அவர்கள் உலக ஆதிக்கத்தை அடைய முடியாது. ஏனெனில் தமது திருச்சபை எந்நாளும் உலகம் முடியும் வரை நீடித்திருக்கும் என்று கிறீஸ்து கூறியுள்ளார். இவ்வாறு ஆன்மீக சக்திகள் போராடும் சந்தர்ப்பம் வந்தே தீரும். எல்லா தீர்க்கதரிசன வசனங்களும் இதையே அறிவிக்கின்றன.

இந்தக் கருத்துப் போராட்டம் என்ன உருவத்தில் வரும்? அது நமக்குத் தெரியாது. இது ஓர் இரகசியம் என்று ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும். ஆனால் இக்கட்டான அச்சந்தர்ப்பத்தில் தெய்வ கரம் ஒன்று வெளிப்பட்டே தீரும்.

நாம்--பாத்திமாவில் தேவதாய் உரைத்த செய்திகளைப் பின் செல்லும் நாம்--ஆற்ற வேண்டியதென்ன? நம் ஒவ்வொருவரின் ஆன்மீக புதுப்பித்தல்தான். நம் சகோதர கத்தோலிக்கர்களின் ஆன்மீக புது வாழ்வுதான். இந்த இக்கட்டான சந்தர்ப்பத்துக்கு ஏற்ற பதில் இதுதான் என்பதை உணரச் செய்ய வேண்டும். நாம் மட்டுமல்ல, லெளகீக மயமா யிருக்கும் மக்கள் கூட உலக கம்யூனிஸத்துடன் கடுமையாகப் போரிட நேரிடும் என்று உணர்ந்து வருகிறார்கள்.

ஆனால் கத்தோலிக்கர் இப்பிரச்சினையைக் காண்பது போல் உலகில் வேறு யாரும் காண முடியாது. கத்தோலிக்கத் திருச்சபை மட்டுமே உலகை இந்தக் கேட்டுக்குள்ளிருந்து வெளியே கொண்டு வர இயலும். வேறு எந்த ஸ்தாபனத்தாலும் அப்படிச் செய்ய இயலாது. இதற்குரிய திறவுகோல் நம்மிடம் உள்ளது. தவறு எங்கே என்று திட்டவட்டமாக நாம் அறிவோம். நாடுகள் எல்லாம் தங்கள் எதிரியை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்ற பதிலை நாம் அவைகளுக்கும் கூற முடியும். உலகம் இதுவரை கண்டிராத நல்ல நாகரீகத்தை நாம் அதற்குக் கொடுக்க முடியும்.

சாத்தானை முறியடிக்கத் தேவையான யாவும் நம்மிடம் உள்ளன. புதிய உலக சமுதாயத் திட்டம் நம் கண்முன்னே வைக்கப் பட்டுள்ளது.

அப்படியானால் இந்த நற்காலம் இந்த மரண அவஸ்தையில் இருக்கும் உலகத்துக்கு ஏன் இன்னும் கொடுக்கப்படவில்லை? அதைத் தடை செய்து கொண்டிருப்பது எது? இந்தக் கேள்விக்குப் பதிலே அவசியமில்லை. சமாதானத் திட்டமும் கத்தோலிக்கர்களின் ஆன்மீகப் புது வாழ்வுத் திட்டமும் 1917-ம் ஆண்டிலேயே நமக்குப் பாத்திமா பதியில் கொடுக்கப்பட்டு விட்டனவே! இத்திட்டம் திருச்சபையால் ஆசீர்வதிக்கப்பட்டு விட்டது. பல பாப்புமார்களால் அங்கீகரிக்கப் பட்டுள்ளது. இத்திட்டமே சரியான திட்டம் என்று அதற்குப் பின் நிகழ்ந்த நிகழ்ச்சிகளாலும் தீர்க்க வசனங்களின் நிறைவேற்றத்தாலும் எண்பிக்கப்பட்டும் விட்டது.

இந்தத் திட்டமே நரக சர்ப்பத்தின் தலையை நசுக்கும் திட்டம் சேசுக்கிறீஸ்துவின் வெற்றியைக் கொண்டு வரும் நிச்சயமான திட்டம்.

இத்திட்டம் நரக சக்திகள் எல்லாவற்றாலும் எதிர்த்துத் தாக்கப் பட்டே ஆக வேண்டும். பசாசின் ஏமாற்றுத் தந்திரங்களால் எதிர்க்கப் பட வேண்டிய திட்டம் இது. இத்திட்டத்திற்கு பசாசு பயப்படுவது போல் வேறு எதற்கும் அது பயப்படுவதில்லை. ஆகவேதான் இத்திட்டம் மறைக்கப்பட்டும், பரிகசிக்கப்பட்டும், கடவுளின் மக்க ளால் கூட உதறித் தள்ளப்பட்டும் வருகிறது. கடவுளின் மெசையாவே இவ்வாறுதானே உதறித் தள்ளப்பட்டார்!

ஆனால் தேவ அன்னையே இத்திட்டத்தின் தோற்றத்தையும் அதன் வெற்றியையும் முன்னறிவித்துள்ளார்கள். கத்தோலிக்கர்கள் பொதுவாக இதை ஏற்பார்கள். கத்தோலிக்கர் அல்லாதாரும் பொதுவில் இதை ஏற்கும் காலம் வரும். அது மரியாயின் மாசற்ற இருதயத்தின் வெற்றியைக் கொண்டு வரும். வரவிருக்கும் சமாதான காலத்தையும் நமக்குத் தரும்.