பரிசுத்த கன்னிகைக்கும், அர்ச். சூசையப்பருக்கும் மெய்விவாகம்.

5 செப்டம்பர்  1944.
மணப் பெண்ணாக எவ்வளவு அழகாய் மரியா உடுத்தப்பட்டிருக்கிறார்கள்!  மகிழும் அவர்களின் தோழியர், ஆசிரியைகள் நடுவில் அவர்கள் இருக்கிறார்கள்.  எலிசபெத்தம்மாளும் அதில் இருக்கிறாள்.

மரியா வெண்பனி போன்ற லினன் ஆடை அணிந் திருக்கிறார்கள்.  அது எவ்வளவு மெல்லியாகவும், நுண்ணியதாகவும் இருக்கிறதென்றால், அது சிறந்த  பட்டுப் போலிருக்கிறது.  அவர்களின் ஒல்லி இடையைச் சுற்றிலும் பொன்னிலும், வெள்ளியிலும் செதுக்கு வேலை செய்த வார் கட்டியுள்ளது.   அது சிறு சங்கிலிகளால் இணைத்துக் கட்டப்பட்ட பதக்கங்களால் ஆக்கப்பட்டது.  ஒவ்வொரு பதக்கமும் கனத்த, வெள்ளியில் பொன் சரடுகளால்  பூவேலையாகப் பின்னப்பட்டு, நாள்பட்டதால் மெருகூட்டப்பட்டிருக்கிறது.  அந்த இடைவார் அவர்களுக்கு அதிக பெரிதாயிருக்க வேண்டும்.  ஏனென்றால் கடைசி மூன்று பதக்கங்களும் முன்புறமாய் மிக அகன்ற முன் ஆடையின் மடிப்புக்குள் தொங்குகின்றன.  அந்த மடிப்புகள் மிக நீளமாய் ஒரு பின்தொங்கல் போல் உள்ளன.  அவர்கள் பாதங்களில் வெள்ளி கொளுக்கிகள் உள்ள வெள்ளைத் தோல் காலணிகள் உள்ளன.  

அவர்களின் ஆடை, கழுத்தில் தங்க ரோஜாக்களால் ஆன சங்கிலியாலும், வெள்ளிச் சரிகையாலும் கட்டப்பட்டிருக்கிறது.  அந்தச் சங்கிலியில் இடைக்கச்சையின் உருவங்கள் சிறியதாகக் காட்டப்பட்டுள்ளன.  ஆடையின் அகலமாய் வெட்டப்பட்ட கழுத்தின் பெரிய துவாரங்கள் வழியாக சங்கிலி ஓடி ஆடையை பூச்சுருக்கங்களாக ஒன்று சேர்க்கிறது.  வெள்ளை மடிப்புகளின் நடுவிலிருந்து அவர்களின் கழுத்து மேலே எழுந்து காணப்பட்டு, விலையுயர்ந்த நெய் துணி பொதிந்த செடியின் தண்டுபோல் அழகாயிருக்கிறது.  அது மேலும் மெல்லியதாய், மிக வெண்மையாய், லீலி மலரின் காம்பிலிருந்து, லீலி மலர் போன்ற அவர்களின் முகத்தைத் தாங்கி நிற்கிறது.  அம்முகமும் பரபரப்பினால் அதிக வெண்மையுற்று அதிக தூய்மை பெற்று மிகப் புனிதமான பலிப்பொருளின் முகமாய்க் காணப்படுகிறது.

அவர்களின் முடி தோள்கள் மேல் படியவில்லை.  பின்னல்கள் சுருட்டி கூந்தல் போல் அழகுற முடிக்கப்பட்டுள்ளன.  உச்சியில் பூ வேலை செய்யப்பட்ட விலையுயர்ந்த மெருகேறிய வெள்ளிக் கொண்டை ஊசிகளால் அது இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.  அந்தப் பின்னல் கொண்டைக்கு மேலே அவர்களுடைய தாயின் முக்காடு இடப்பட்டு அது அழகிய மடிப்புகளாக, அவர்களின் வெண்பனி நெற்றியைச் சுற்றியிருக்கிற விலையுயர்ந்த மெல்லிய பட்டைக்கடியில் தொங்குகின்றது.  பக்கங்களில் படிகிற அந்த முக்காடு அவர்களின் இடுப்பிற்குக் கீழே நீண்டு தொங்குகிறது.  மரியா தன் தாயைப் போல் அவ்வளவு உயரமில்லை.  அன்னாளின் இடுப்பு வரை மட்டுமே அது தொங்கியது.  அவர்களின் கைகளில் எதுவுமில்லை.  மணிக்கட்டில் காப்புகள் அணிந்துள்ளார்கள். மணிக்கட்டுகள் எவ்வளவு சிறியவையென்றால் அவர்கள் தாயின் பாரமான இக்காப்புகள் அவர்களின் புறங்கைகளை மூடிக் கொள்கின்றன.  கைகளை உதறினால் அவை கழன்று விழுந்துவிடும்.

மரியாயின் சிநேகிதிகள் அவர்களைப் பார்த்து வியக்கிறார்கள்.  அவர்கள் தத்தும் குருவிகளைப் போல் அங்குமிங்கும் திரிந்து கேள்விகள் கேட்டு தங்கள் வியப்பை வெளியிடுகின்றார்கள்.

“இவை உன் தாயினுடையவா?” 

“பழங்காழ நகைகள் இல்லையா?” 

“சாரா, இந்த ஒட்டியாணம் எவ்வளவு அழகாயிருக்கிறது!  எவ்வளவு நுட்ப வேலைகள்!  அதிலே நெய்யப்பட்டுள்ள லீலிகளைப் பாருங்களேன்!” 

“மரியா, உன் கைவளைகளை நான் பார்க்கட்டும்.  அவை உன் அம்மாவுடையவையா?” 

“ஆம்.  இவற்றை அவர்கள் அணிந்திருந்தார்கள்.  ஆனால் இவை என் தந்தையின் அம்மாவுடையவை.” 

“ஓ!  பாருங்கள்!  அவற்றிலே சாலமோனின் முத்திரை பின்னப்பட்டிருக்கிறது.  சிறிய பனைவகை சிறு கிளைகளும் ஒலிவ மரங்களும் பூ வேலையாகச் செய்யப்பட்டுள்ளன.  அவற்றின் நடுவில் லீலிகளும், ரோஜாக்களும் உள்ளன.  ஓ! இந்த சிறந்த நுண்ணிய வேலையை யார் செய்தார்களோ!” 

“அவை தாவீதின் வீட்டைச் சேர்ந்தவை.  அக்குடும்பத்தின் ஸ்திரீகள் திருமணத்தில் நூற்றாண்டுக் காலமாக அவற்றை அணிந்துள்ளார்கள்.  பின் அவை வாரிசுகளுக்கு விடப்பட்டன” என்று மரியா விளக்கிச் சொல்கிறார்கள்.

“மிகவும் சரி!  நீதான் வாரிசு!” 

“நாசரேத்திலிருந்து எல்லாவற்றையும் கொண்டு வந்தார்களா?” 

“இல்லை.  என் தாய் இறந்த போது என் மைத்துனி என் திரவியப் பேழையை பத்திரப்படுத்தும்படி தன் வீட்டிற்குக் கொண்டு போனாள்.  இப்பொழுது அதைத் திரும்ப என்னிடம் கொண்டு வந்திருக்கிறாள்.” 

“அதை எங்கே?  அதை எங்கே?  உன் நண்பர்களுக்கு அதைக் காட்டு.” 

மரியா என்ன செய்வதெனத் தெரியாமலிருக்கிறார்கள். அவர்கள் பரிவு காட்டவே விரும்புகிறார்கள்.  ஆனால் மூன்று பாரமான பெட்டிகளில் நன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறவற்றை வெளியே எடுக்க அவ்வளவு          விருப்பம் கொள்ளவுமில்லை.  அப்போது ஆசிரியைகள் வந்து உதவுகிறார்கள்.

அவர்கள்: “மணமகன் வரும் நேரமாயிற்று.  இதுவல்ல சந்தடி ஏற்படுத்தும் சமயம்.  மரியாயை அமைதியாக              விடுங்கள்.  அவளைக் களைப்படையச் செய்கிறீர்கள்.  நீங்கள்  போய் ஆயத்தமாகுங்கள்” என்று கூறுகிறார்கள.  அவ்வாயாடிக் கூட்டம் சற்று எரிச்சலுடன் செல்கிறது.  இப்போது அமைதியாக தன் ஆசிரியைகளுடன் மரியா இருக்கிறார்கள்.  ஆசிரியைகள் மரியாவுக்கு ஆசியுரைகளைக் கூறி  வாழ்த்துகிறார்கள்.

எலிபெத்தம்மாளும் அவர்கள் பக்கத்திற்கு வருகிறாள்... அப்போது பானுவேலின் அன்னா வந்து:  “என் மகளே!”                என்று அழைத்து உண்மையான தாய்ப் பாசத்துடன்                  மரியாயை முத்தமிட்டதால் மனம் நெகிழ்ந்து அழுகிறார்கள்.  அப்போது எலிசபெத்தம்மாள் மரியாயைப் பார்த்து:  “மரியா,             உன் தாய் இங்கு இல்லைதான்.  ஆயினும் அவள் இங்கு இருக்கிறாள்.  அவளுடைய ஆன்மா உன் ஆன்மாவுடன் மகிழ்ச்சியடைகிறது.  பார், நீ அணிந்துள்ள அணிகலன்கள் உன் தாயின் அரவணைப்பை உனக்கு  மீண்டும் தருகின்றன.  அவளுடைய முத்தத்தின் மணத்தை இவ்வணிகலன்களில் நீ இன்னும்  பல காலத்துக்கு  முன் ஒருநாள் நீ தேவாலயத்திற்கு வந்த அன்று, உன் தாய் என்னிடம் கூறினாள்: “மரியாயுடைய ஆடைகளையும், திருமண அணிகலன்களையும் நான் தயாரித்திருக்கிறேன்.  அவளுடைய ஆடைகளை நெய்து அவளுடைய திருமண உடைகளையும் நானே செய்ய ஆசைப்படுகிறேன்.  அவ்வாறு அவளுடைய மகிழ்வின் நாளில்  நான் அங்கு இல்லாதிருக்க மாட்டேன்” என்று.  மேலும் உன் தாயின் இறுதி நாட்களில் நான் அவளுக்கு உதவி புரிந்தபோது, ஒவ்வொரு நாள் மாலையிலும், நீ முதன் முதலாக அணிந்த சின்ன ஆடைகளையும், இப்பொழுது நீ அணிந்திருக்கிற உடைகளையும் அவள் அன்பு பாராட்ட விரும்புவாள்.  அப்போது சொல்வாள்:  “நான் என் சிறுமியின் மல்லிகை மணத்தை இதிலே நுகர முடிகிறது.  என் முத்தத்தை அவள் இவற்றில் காண விரும்புகிறேன்” என்பாள்.  உன் நெற்றியில் கவிந்துள்ள இந்த முக்காட்டில்தான் அன்னாளின் எத்தனை முத்தங்கள் பதிந்துள்ளன!  அதன் நூல்களை விட உன் அன்னையின் முத்தங்கள்தான் அதிகம் இருக்கும்... அவள் நெய்த ஆடையை அணியும்போது, தறியின் ஓடத்தை விட அவளுடைய தாயன்பினால்தான் அது கூடுதல் நெய்யப்பட்டது  என எண்ணிப்பார்.  இந்த ஆபரணங்களும்... மிகக் கஷ்டமான சூழ்நிலைகளில்தான் உனக்காக, நீ இந்நேரத்தில் தாவீதின்            கோத்திர இளவரசிக்குரிய அழகுடன் விளங்க வேண்டுமென்றே உன் தந்தையால் அவை காப்பாற்றப்பட்டன.  மரியா!  மகிழ்ச்சி கொண்டு சந்தோஷமாயிரு.  நீ அனாதையல்ல.  ஏனென்றால் உன் பெற்றோர் உன்னுடன் இருக்கிறார்கள்.  உன் மணவாளனும் உனக்குத் தகப்பனும், தாயுமாயிருக்கிறார்.  அப்படிப்பட்ட உத்தமர் அவர்...” என்கிறாள் எலிசபெத்தம்மாள்.

அதற்கு மரியா பதிலாக:  “ஆம்.  அது உண்மையே.  நிச்சயமாக நான் குறை கூற முடியாது.  இரண்டு மாதங்களில்        அவர் இருமுறை இங்கு வந்துள்ளார்.  இன்று மூன்றாம் முறை.  மழையும் புயலும் இருந்தாலும் என்னிடம் உத்தரவு பெற        வருகிறார்.  நினைத்துப் பார்த்தால் ஓர் எளிய பெண்ணிடமிருந்து, அவரை விட மிக இளையவளான என்னிடமிருந்து உத்தரவு பெற்றுக் கொள்வதற்கு வருவதென்றால்... அவர் எனக்கு எதையும் மறுத்ததில்லை.  நான் கேட்பதற்குக் கூட காத்திருப்பதில்லை.  ஒரு சம்மனசுதான் என் விருப்பத்தை அவரிடம் தெரிவிக்கிறார் போலும்.  ஏனென்றால் நான் பேசுமுன்பே அவர் அதைச் சொல்லி விடுகிறார்.  போன தடவை என்னிடம் அவர்: “மரியா, நீங்கள் உங்கள்  தந்தையின் வீட்டில் வசிக்கவே விரும்புகிறீர்கள் என  நினைக்கிறேன்.  நீங்கள் தான் அவருடைய வாரிசு என்பதால்  நீங்கள் விரும்பினால் அவ்வாறே செய்யலாம்.  நான் உங்கள்  இல்லம் வருகிறேன்.  ஆயினும் ஆசாரச் சடங்கை நிறைவேற்றுவதற்காக ஒரு வாரத்திற்கு என் சகோதரன் அல்பேயுஸின் வீட்டில் இருங்கள்.  மேரியும் உங்களை அதிகம் நேசிக்கிறாள்.  அங்கிருந்து ஊர்வலம் புறப்பட்டு திருமண நாள் மாலையில் உங்கள் வீட்டிற்கு வரட்டும்” என்றார்.   இது அவருடைய நல்ல அன்பல்லவா?  நான் விரும்பக் கூடிய ஒரு                வீடு கூட தம்மிடம் இல்லையென்று மக்கள் பேசக் கூடுமே என்பது கூட அவருக்கு ஒரு பொருட்டாக இல்லை... அவர் வீட்டையே நான் விரும்பியிருப்பேன். அவர் அங்கு இருக்கிறார்தானே, இவ்வளவு நல்லவராக... என் வீட்டை நான் தெரிந்து கொள்கிறேன் என்பது உண்மையே...  அங்குள்ள நினைவுகளுக்காகவே... ஓ சூசை மிக நல்லவர்.” 

“சூசை உன் வாக்குத்தத்தம் பற்றி என்ன சொன்னார்?  அதைப் பற்றி நீ என்னிடம் இன்னும் கூறவில்லையே!” 

“அவர் அதற்கு மறுப்பே சொல்லவில்லை.  மாறாக நான் என் காரணங்களை அவரிடம் கூறிய போது அவர்: “நான் என்னுடைய தியாகத்தையும் உன்னுடைய தியாகத்துடன் இணைப்பேன்” என்று கூறினார்.” 

“சூசை ஒரு புனிதமான இளைஞன்” என்கிறாள் அன்னாள்.

அப்போது சூசையப்பர் சக்கரியாசுடன் வந்து கொண்டிருக்கிறார்.  உண்மையிலேயே பிரமாதமாக இருக்கிறது அவர் தோற்றம்.  தங்கம் போன்ற மஞ்சள் துகிலால் உடுத்தப்பட்டிருக்கிற அவர் ஒரு கீழ்த்திசை அரசன் போல் காட்சியளிக்கிறார்.  அவருடைய மிக அழகிய இடைவாரிலிருந்து அவருடைய பையும் உடைவாளும் தொங்குகின்றன.  வெள்ளாட்டுத் தோலினால் செய்யப்பட்ட பையில் தங்கப் பூ வேலை காணப்படுகிறது.  அதே தோலில் செய்யப்பட்ட உடைவாள் உறையில், தங்க அலங்காரங்கள் செய்யப் பட்டிருக்கின்றன.  அவர் தலையில் பாகை  காணப்படுகிறது.  வழக்கமாக தலையை மூடும் துகில்  கவிகையாக அணியப்பட்டுள்ளது.   இது ஆப்பிரிக்கா நாடுகளில் பழக்கமான ஒன்று, பெட்டுவின் என்ற இனத்தவர் அணிவது போன்றது.    அது ஒரு தங்கக் கம்பியால் கட்டப்பட்டுள்ளது.  அதில் பசுமை மாறா நறுமணச் செடிக் கொத்து இணைக்கப் பட்டுள்ளது.  அர்ச். சூசையப்பர் தொங்கல்களுள்ள புது மேல் வஸ்திரத்தை மகத்வமாக அணிந்திருக்கிறார்.  மிக்க மகிழ்ச்சியாகக் காணப்படுகிறார்.  பசுமைச் செடி பூத்த கிளைகளை சிறு செண்டுகளாக கையில் பிடித்திருக்கிறார்.

“மரியா! சமாதானம்!  அனைவருக்கும் சமாதானம்!”               என்று சூசையப்பர் வாழ்த்துகிறார். எல்லாரும் பதிலுக்கு வாழ்த்துகிறார்கள்.  பின் அவர்: “மரியா  உங்கள் தோட்டத் திலிருந்து அந்தக் கிளையை அன்று  நான் கொண்டு கொடுத்தபோது உங்கள் மகிழ்ச்சியை நான் கண்டேன்.  உங்களுக்கு மிக விருப்பமான கெபியின் பக்கம் வளரும் பசுமை மாறா நறுமணச் செடியில் கொஞ்சம் எடுத்து வர   எண்ணி கொண்டு வந்திருக்கிறேன்.  உங்கள் வீட்டருகில் மலர்ந்துள்ள சில ரோஜாக்களையும் கொண்டு வர நினைத்தேன்.  ஆனால் ரோஜாக்கள் நீடிப்பதில்லை.  பல நாள் பயணத்திற்குப் பிறகு இங்கு அவற்றின் முட்களைத்தான் கொண்டு வந்திருப்பேன்.  உங்களுக்கு ரோஜாக்களையே தரவும், உங்கள் பாதம்               அழுக்கான அல்லது கரடான எதிலும் படாமல் மணமுள்ள மலர்களில் படியும் வண்ணம் அவற்றை உங்கள் பாதங்களில் பரப்பவும் ஆசிக்கிறேன்” என்கிறார் சூசையப்பர்.

“மிக்க நன்றி!  நீங்கள் மிக நல்லவர்கள்.  இவற்றை வாடாமல் வைத்திருக்க என்ன உபாயம் செய்தீர்கள்?” 

“சேணத்தில் ஒரு பூச்சாடியைக் கட்டி, மொட்டுகளை தாங்கியிருந்த கிளைகளை அதில் வைத்துக் கொண்டு வந்தேன்.  பயண நாட்களில் அவை மலர்ந்துள்ளன.  இதோ அவை.  எங்கள் நெற்றி மணமகளின சின்னமாகிய தூய்மையின் ஆரமிடப் படட்டும்.  ஆயினும் உங்கள் இருதயத் தூய்மைக்கு முன் அது தாழ்ந்ததே.”

எலிசபெத்தும் ஆசிரியைகளும் ஒரு சிறு மலர் ஆரம் செய்து, பசும் நறுமணச் செடி மலர்களுடன் இணைத்து, ஒரு பெட்டியில் வைக்கப்பட்ட ஜாடியிலிருந்து சிறு வெள்ளை ரோஜாக்களை எடுத்துச் செருகுகிறார்கள்.

இப்போது மரியா தன் பெரிய மேல் வஸ்திரத்தை எடுத்து அணிய... ஆசிரியைகள் அதை மடிப்புகளாக அமைத்து அன்பாக உதவி செய்கிறார்கள்.

எல்லாம் ஆயத்தமாயிற்று.  அவர்கள் காத்து நிற்கையில், சூசையப்பர் மரியாவை மற்றவர்களை விட்டு சற்று ஓரமாய் அழைத்துப் போய் கூறுகிறார்:

“மரியா, உங்களுடைய வார்த்தைப்பாட்டைப் பற்றி கடந்த நாட்களில் நான் நிறைய சிந்தித்தேன்.  உங்களுடைய விரதத்தில் நானும் பங்கெடுப்பதாகக் கூறினேன்.  நான் எவ்வளவு அதிகம் சிந்திக்கிறேனோ, அவ்வளவுக்கு அதிகமாய் தற்காலிகமான நசரேனுவாயிருப்பது போதாது,  அப்படிப் பல தடவைகளில் அவ்விரதம் புதுப்பிக்கப்பட்டாலும் பற்றாது என்று தெரிந்து கொண்டேன்.  மரியா உங்களை நான் கண்டுபிடிக்கிறேன்.   நான் ஒளியின் வார்த்தையைப் பெற்றுக்கொள்ள இன்னும் தகுதி பெறவில்லை.  ஆயினும் அதன் முன் ஓசை என்னை எட்டியுள்ளது.  அது உங்களின் இரகசியத்தை, அதன் முக்கியமான வரிகளையாவது, என்னை வாசிக்கச் செய்கிறது.  நானோ எளியவன், கல்வியில்லாதவன், ஒரு சாதாரண  உழைப்பாளி.  எனக்கு இலக்கியங்கள் தெரியாது.  என்னிடம் திரவியம் எதுவும் இல்லை.  என்னிடம் இருக்கிற  திரவியமாகிய என் முழுக் கற்பை உங்கள் காலடியில் எப்போதைக்கும் வைத்து, அதனால் கடவுளின் கன்னிகையாயிருக்கிற, “என் சகோதரி, மணவாளி, அடைக்கப்பட்ட தோட்டம், முத்திரையிடப்பட்ட நீர்ச்சுனை” என்று நம் முன்னவர் கூறியுள்ள உங்களின் பக்கத்தில் இருப்பதற்கு நான்           தகுதி பெற்றவனாகும்படி அப்படிச் செய்வேன்.  உந்நத சங்கீத ஆகமத்தை அவர் உங்களைப் பார்த்தே எழுதினார் போலும்...          இந்த வாசனைத் திரவியங்களின் தோட்டத்திற்கு நான் காப்பாளனாக இருப்பேன்.  அதிலே மிக விலைமதிப்புள்ள கனிகள் உள்ளன.  அதிலிருந்து ஜீவிய தண்ணீரின் ஊற்று அமைதியான வேகத்துடன் பாய்கின்றது.  உங்களின் மாசின்மையால் உங்களின் அன்பு என் ஆத்துமத்தை மேற்கொண்டது.  உதய வேளையிலும் அதிக அழகுடையவர்கள் நீங்கள்.  உங்கள் இருதயம் பிரகாசிப்பதால் நீங்கள் ஒளிரும் சூரினொக விளங்குகிறீர்கள்.  உங்கள் தேவன் மீதும் உலகின்மீதும் அன்பால் நிரம்பியிருக்கிறீர்கள்.  உங்கள் பெண்மையின் பலியினால் உலகிற்கு ஒரு இரட்சகரைக் கொடுக்க ஆசிக்கிறீர்கள்.  வாருங்கள் நேச மணவாளியே” என்று கூறி, மரியாயை கரத்தால் அழைத்துக் கொண்டு வாசல் நோக்கி வருகிறார்.  மற்ற  அனைவரும் அவர்களைப் பின் தொடருகிறார்கள்.  வெளியில் நிற்கும் மற்றவர்களும் மகிழ்ச்சியுடன் வெண்ணுடை தரித்து வெள்ளை முக்காடிட்டவர்களாய் பின்செல்கின்றனர்.

அவர்கள் முற்றங்கள், மண்டபங்கள் வழியாக, பார்த்துக் கொண்டு நிற்கிற ஜனக் கூட்டங்களூடே செல்கிறார்கள்.  அப்படியே ஜெபக் கூடங்களிலிருப்பது போல் புத்தகச் சுருள்களும், விளக்குகளும் உள்ள ஒரு விசாலமானதும், சடங்குகள் நடைபெறுவதுமான அறைக்கு வந்து சேருகிறார்கள்.  அது தேவாலயமல்ல.  அங்கு இருந்த ஓர் உயரமான வாசிப்பு மேடை வரையிலும் வந்து நிற்கிறார்கள்.  கூட வந்த அனைவரும் ஒரு ஒழுங்காக அவர்களின் பின்னால் நின்று கொள்கிறார்கள்.  அவ்வறையின் கடைசியில் மற்றக் குருக்களும் பார்க்க வந்தவர்களும் உள்ளனர்.

பெரிய குரு ஆடம்பரத்தோடு வருகிறார்.

“அவர்களைத் திருமணம் முடித்து வைக்கப் போகிறாரோ?”

“ஆம். அரச, குருத்துவ குடும்பத்தைச் சார்ந்தவள் பெண்.  தாவீதினுடையவும், ஆரோனுடையவும் வம்ச மலர்.  ஆலயக் கன்னிகைகளில் ஒருத்தி.  மணமகன் தாவீதின் குலத்தவர்” என்று கூட்டத்தில் மெல்ல பேசப்படுகிறது.

பெரிய குரு திருமணப் பெண்ணின் வலது கரத்தையும் மணவாளனின் வலது கரத்தையும் இணைத்து ஆடம்பரமாக ஆசீரளிக்கிறார்:  “ஆபிரகாம், ஈசாக், யாக்கோபின் தேவன் உங்களோடிருப்பாராக.  அவர் உங்களை இணைத்து தம்முடைய ஆசீரை உங்களிடம் நிறைவேற்றுவாராக.  தம்முடைய சமாதானத்தையும் அநேக சந்ததிகளையும் நீடிய ஆயுளையும் ஆபிரகாமின் மடியில் பாக்கியமான மரணத்தையும் அருள்வாராக!” பின்னர் பெரிய குரு தாம் வந்தது போலவே ஆடம்பரமாய்த் திரும்பிச் செல்கிறார்.

மெய்விவாக ஒப்பந்தம் நடந்து முடிந்தது.  மரியம்மாள் சூசையப்பரின் திருமணவாளி ஆனார்கள். (குறிப்பு:  இஸ்ராயேலில், மாதாவின் காலத்திலும் கூட மெய்விவாகம் இரண்டு கட்டங்களில் நிறைவேறியது.  முதல் கட்டம் விவாக ஒப்பந்தம்.  அதில் தம்பதிகள் வலது கரங்களைப் பிடித்திருக்க குருவின் ஆசீர் அளிக்கப்படும்.  அதோடு சொத்து, உரிமைகளைப் பற்றி சட்டப்படியான உறுதிகள் செய்யப்படும்.  ஆயினும் தம்பதிகள் சேர்ந்து வாழ்வதில்லை.  குறிப்பிட்ட காலம் கடந்தபின் நடந்த ஒப்பந்தத்தின் நிறைவேற்றமாக மெய் விவாகம் நடைபெறும்.  அதிலிருந்து அவர்கள் கூடி வாழ்வது இரண்டாம் கட்டமாகும்.)

இப்பொழுது எல்லாரும் வெளியே வந்து இன்னொரு விசாலமான அறைக்குச் சென்று அங்கே திருமண ஒப்பந்த உரிமை சாசனத்தை எழுதுகிறார்கள்.  சுவக்கீனுடையவும், தாவீதி னுடையவும் குமாரத்தி, ஆரோன் கோத்திர அன்னம்மாளின் மகளான மரியம்மாள், சூசை என்பவருக்கு திருமணவாளியானதின் சீதனமாக தன் வீடு, அதையடுத்த தோட்டம், தனக்குச் சொந்தமான உடைமைகள், தன் தந்தையிடமிருந்து வாரிசாகப் பெற்ற சொத்துக்கள் ஆகியவற்றை கொடுக்கிறதாக அதில் எழுதப்பட்டது.  இவ்வாறு எல்லாம் நிறைவு பெற்றன.

தம்பதிகள் வெளி முற்றத்திற்கு வந்து தேவாலயத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட பெண்கள் தங்குமிடத்திற்கருகிலுள்ள வாசலுக்கு வருகிறார்கள்.  அங்கே தயாராக           நிற்கிறது ஒரு வசதியான கனத்த பயண வண்டி.  பெரிய        பெட்டிகள் எல்லாம் ஏற்றப்பட்டு விட்டன.  நிழலுக்காக வண்டியின்மேல்         ஒரு கூடாரம்போல் அமைக்கப்பட்டுள்ளது.  வழியனுப்புதல்கள், பிரியாவிடை முத்தங்கள், கண்ணீர்கள், ஆசீர்வாதங்கள், புத்திமதிகளுக்குப் பின் மரியம்மாள் எலிசபெத்தம்மாளுடனும், சூசையப்பரும் சக்கரியாசும் வண்டியின் முன் இருக்கைகளிலும் அமர்கிறார்கள்.  நல்ல மேல் வஸ்திரங்களை எடுத்து விட்டு இருண்ட நிற வஸ்திரங்களை அணிந்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரு பெரிய கருங்குதிரையின் கனத்த நடையுடன் வண்டி புறப்படுகிறது.  தேவாலய மதில்களும் பட்டணத்தின் சுவர்களும் பின்னோக்கிச் செல்கின்றன.  இளந்தளிர் கால சூரிய ஒளியில் நாட்டுப்புறம் புதிதாக புதுமையாக பூ மலர்ந்து காணப்படுகிறது.  தானியப் பயிர் தரையிலிருந்து சில அங்குலம் வளர்ந்து மரகதப் பச்சையான அதன் இலைகள் மெல்லிய காற்றில் அசைகின்றன.  அந்த இளம் காற்று பீச், ஆப்பிள், மணப்புல், புதினா ஆகியவற்றின் வாசனையைச் சுமந்து வருகிறது.

மரியா மவுனமாக முக்காட்டிற்குள்ளே அழுகிறார்கள்.  இடைக்கிடையே வண்டியின் கூடாரத்தை ஒதுக்கி தூரத்திலிருக்கிற தேவாலயத்தையும் தான் விட்டுச் செல்கிற பட்டணத்தையும் பார்க்கிறார்கள்.

காட்சி முடிகிறது.