ஒருவருக்கு அர்ச்சியசிஷ்ட பட்டம் கொடுப்பதற்கு முன் உரோமை திருச்சடங்குகளின் திருச்சங்கம் நீண்ட முழு விசாரணை நடத்தும். அன்னாருடைய வாழ்க்கை, வார்த்தைகள், எழுத்துக்கள் யாவும் கண்டிப்பான பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். அவற்றில் விசுவாசத்திற்கும், நல்லொழுக்கத்திற்கும் எந்த விதமான பழுதும் இருந்தால், அர்ச். பட்டம் கொடுக்கப் படமாட்டாது. அப்படிப் பழுதில்லை என்று எண்பிக்கப் பட்டபின், அன்னாரின் மன்றாட்டால் நடைபெற்ற புதுமைகள் ஆராயப்படும். முத்திப்பேறு பட்டத்திற்கு இரண்டும் அர்ச்சியசிஷ்ட பட்டத்திற்கு இரண்டும் ஆக 4 எண்பிக்கப்பட்ட புதுமைகள் வேண்டும். இப்புதுமைகள் இல்லாமல் அர்ச். பட்டம் வழங்கப்படுவதில்லை.
அர்ச். பிலோமினம்மாளுக்கு அர்ச்சியசிஷ்ட பட்டம் கொடுக்கப்பட்டதே ஒரு தனிச் சிறப்பான முறையில்தான்! அவளுடைய அடக்கப் பெட்டிக்கு வெளியே காணப்பட்ட அவளுடைய பெயர், குருத்து, அம்புகள், நங்கூரம், லீலிமலர் ஆகிய சின்னங்களும் பெட்டிக்குள் காணப்பட்ட இரத்தச் சிமிழும் தந்த விவரங்கள் மட்டுமே அவளுடைய வேதசாட்சியத்தின் குறிப்புகளாயிருந்தன. மற்றப்படி அவளுடைய பிறப்பு, வளர்ப்பு, குடும்பம், நாடு எதைப் பற்றியும் எந்த வரலாற்றுக் குறிப்பும் கிடைக்கவில்லை. தன் வரலாற்றை அவளே லூயிஸா சகோதரிக்கு வெளிப்படுத்தியதிலிருந்துதான் அவள் ஒரு கிரேக்க நாட்டு இளவரசி என்றும், தியோக்ளேஷியன் நடத்திய வேத கலாபனையில் அவள் 3-ம் நூற்றாண்டில் தன் கன்னிமைக்காக உயிரைக் கொடுத்தாள் என்றும் அறிய வருகிறோம். ஆகவே அவளுக்கு அர்ச்சியசிஷ்ட பட்டம் வழங்கப்பட்ட காரணம் அவள் வழியாக ஆண்டவர் செய்த எண்ணற்ற பெரும் புதுமைகளேயாகும். இச்சிறப்பு வேறு எந்த அர்ச்சியசிஷ்டவர்களுக்கும் இல்லை. திருச்சடங்குகளின் திருச்சங்கம் ஆராய்வதற்கு வேறு எந்த வரலாற்று ஏடுகளும் அவளைப் பற்றிக் கிடைக்காத நிலையில், அவளுக்கு அர்ச்சியசிஷ்ட பட்டம் வழங்கப்பட்டது - அத்தனை புதுமைகள்!
அர்ச். பிலோமினம்மாளுக்கு அர்ச். பட்டம் வழங்கு வதற்கு மற்றொரு முக்கிய காரணம், பாப்புமார்கள் அவள் அர்ச். பட்டத்திற்குத் தகுதி பெற்றவள் என்று ஐயத்திற்கிடமில்லாமல் நிச்சயித்திருந்ததாகும். 12-ம் சிங்கராயர், 16-ம் கிரகோரியர் ஆகியவர்கள் இதில் குறிப்பிடத்தக்கவர்கள்.