கத்திகள்!

பல வலைகளை நான் கவனமாக ஆராய்ந்த போது, ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வாசகம் பொறிக்கப்பட்டிருந்ததை நான் கண்டேன். அவை: அகங்காரம், கீழ்ப்படியாமை, ஆறாம் கற்பனைக்கு எதிரான பாவங்கள், திருட்டு, போசனப்பிரியம், சோம்பல், கோபம் இன்னும் பல வகைப் பாவங்கள். சற்றுப் பின் வாங்கி, எந்தப் பெயருள்ள கண்ணிகளில் அதிக எண்ணிக்கையில் சிறுவர்கள் விழுகிறார்கள் என்று நான் பார்த்தபோது, சரீரப் பாவங்கள், கீழ்ப்படியாமை, அகங்காரம் ஆகிய கண்ணிகள்தான் மற்றவற்றை விட அதிக ஆபத்தானவை என்பதை நான் கண்டுபிடித் தேன். உண்மையில் இந்த மூன்று கண்ணிகளும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருந்தன. வேறு பல வலைகளும் நிறைய தீங்கு விளைவித்தன. என்றாலும் முதல் இரண்டு வலைகளைப் போல் அல்ல. இன்னும் கூர்ந்து கவனித்தபோது, பல சிறுவர்கள் மற்றவர் களை விட அதிக வேகமாக ஓடிக் கொண்டிருந்ததை நான் கண்டேன். “ஏன் இந்த அவசரம்?” என்று நான் கேட்டேன்.

“ஏனெனில் அவர்கள் முகத்தாட்சணியம் என்னும் கண்ணியால் இழுக்கப்படுகிறார்கள்.”

இன்னும் நன்றாகக் கூர்ந்து கவனித்தபோது, வலைகளின் இடையே கத்திகள் வைக்கப்பட்டிருந்ததை நான் கவனித்தேன். ஒரு தேவபராமரிப்பின் கரம் ஒருவன் தன்னை விடுவித்துக் கொள்வதற் காக அவற்றை அங்கே வைத்திருந்தது. தியானத்தைக் குறிக்கும் பெரிய கத்திகள் அகங்காரம் என்னும் கண்ணிக்கு எதிராக வைக்கப் பட்டிருந்தன. அவற்றின் அளவுக்குப் பெரியவையாக இராத கத்திகள் நன்றாகச் செய்யப்பட்ட ஞான வாசகத்தைக் குறித்தது. அங்கே இரண்டு வாள்களும் வைக்கப்பட்டிருந்தன. அவை, குறிப்பாக அடிக்கடி நன்மை வாங்குவதன் மூலம் தேவ நற்கருணை மீது கொள்ளும் பக்தி, மற்றும் திவ்விய கன்னிகையின் மீதான பக்தி ஆகியவற்றைக் குறித்தன. அங்கே ஒரு சுத்தியலும் இருந்தது. பாவசங்கீர்த்தனத்தை அது குறித்தது. புனித சூசையப்பர் பக்தி, புனித ஞானப்பிரகாசியார் பக்தி, இன்னும் பல புனிதர்களின் பக்திகளைக் குறிக்கும் வேறு பல கத்திகளும் இருந்தன. இவற்றைக் கொண்டு, மிகச் சில சிறுவர்கள் தங்களை விடுவித்துக் கொண்டார்கள், அல்லது கண்ணிகளில் சிக்காமல் தப்பித்துக் கொண்டார்கள்.

உண்மையில், வலை தங்களைப் பற்றிப் பிடிப்பதற்கு முன்பாக சரியான நேரத்தில் அதைத் தாண்டுவதன் மூலம், அல்லது தாங்கள் அவற்றில் சிக்கிக் கொண்டால், அவை தங்களிடமிருந்து நழுவி விழச் செய்வதன் மூலம், அவற்றின் வழியாகப் பாதுகாப்பாக நடந்து சென்ற சில சிறுவர்களை நான் பார்த்தேன்.