அர்ச். ஜான் போஸ்கோவின் கனவுகள் - ஜான் போஸ்கோ மாதாந்திரத் தேர்வு பற்றிக் கனவு காண்கிறார்

தமது உயர்நிலைப் பள்ளி ஆண்டுகளின் போது, ஜான் போஸ்கோ புத்திக்கூர்மையும், நினைவாற்றலும் உள்ளவராக இருந்தது மட்டுமின்றி, மேலும் ஒரு திறமையையும் கொண்டிருந்தார். அது அசாதாரணமானது, மிகுந்த மதிப்புள்ளது. இது தொடர்பான பல நிகழ்ச்சிகளில் ஒன்று இதோ:

ஒரு நாளிரவில் தமது ஆசிரியர் வகுப்புத் தர நிலையை முடிவு செய்யும்படி ஒரு மாதாந்திரத் தேர்வு நடத்துவதாகவும், அந்தத் தேர்வில் தாம் பங்குபெறுவதாகவும் ஜான் போஸ்கோ கனவு கண்டார். 

அவர் கண்விழித்த அதே கணத்தில், படுக்கையிலிருந்து துள்ளியெழுந்து, கனவில் கண்ட வினாத்தாளுக்கான விடையை உடனே எழுதத் தொடங்கி விட்டார். அது ஒரு இலத்தின் பாடப் பகுதி. அவர் தமது நண்பரான ஒரு குருவானவரின் உதவியோடு அதை மொழி பெயர்க்கத் தொடங்கினார். 

நீங்கள் நம்புகிறீர்களோ, இல்லையோ, அதே நாள் காலையில் ஆசிரியர் ஒரு பரீட்சை வைத்தார். கேள்வி ஜான் போஸ்கோ தம் கனவில் கண்ட அதே இலத்தின் பாடப் பகுதிதான்! இதன் காரணமாக, மிக விரைவாகவும், ஒரு அகராதியின் உதவியின்றியும், தமது கனவிலிருந்து விழித்தெழுந்தவுடன் செய்தது போலவே, இப்போதும் அவர் அதை மொழிபெயர்த்தார். 

எதிர்பார்த்தபடியே, தேர்வு முடிவும் மிகச் சிறப்பாக இருந்தது. ஆசிரியர் அவரிடம் கேள்வி கேட்ட போது, என்ன நடந்தது என்று அவர் வெளிப்படையாக ஆசிரியரிடம் சொல்லி விட்டார். ஆசிரியர் அதிசயித்துப் போனார்.

இன்னொரு முறை, ஜான் போஸ்கோ எவ்வளவு விரைவாகப் பரீட்சை எழுதி முடித்து, தம் விடைத்தாளை ஆசிரியரிடம் தந்தார் என்றால், சிறுவன் இவ்வளவு குறுகிய நேரத்திற்குள் அந்த வினாத்தாளில் உள்ள இலக்கணப் பிரச்சினைகளை யெல்லாம் சமாளித்து விடை எழுதியிருக்க முடியுமா என்ற ஒரு தீவிரமான சந்தேகம் ஆசிரியருக்கு வந்தது. ஆகவே அவர் ஜான் போஸ்கோவின்

விடைத்தாளை வெகு கவனமாகத் திருத்தினார். முந்தின இரவுதான் அவர் அந்தக் கேள்வித்தாளைத் தயாரித்திருந்தார். அது மிக நீண்டதொரு கேள்வித்தாளாக ஆகியிருந்ததால், ஆசிரியர் அதில் பாதியை மட்டும்தான் பரீட்சையில் கேட்டிருந்தார். 

ஆனால் ஜான் போஸ்கோவின் கட்டுரை நோட்டுப் புத்தகத்தில் இந்தப் பரீட்சை முழுவதுமாக எழுதப்பட்டிருந்தது. பரீட்சையில் கேட்காத மீதிப் பாதிக் கேள்விக்கும் சேர்த்து ஜான் போஸ்கோ பதில் எழுதி யிருந்தார்! இதை எப்படி விளக்க முடியும்? ஜான் போஸ்கோ அதை இரவோடு இரவாக நகலெடுத்திருக்க வழியேயில்லை. 

ஆசிரியர் வீட்டிற்குள் ஜான் போஸ்கோ கள்ளத்தனமாக நுழைந்திருக்கவும் வாய்ப்பேயில்லை, ஏனெனில் அது ஜான் போஸ்கோ வசித்த இடத்திலிருந்து வெகு தொலைவில் இருந்தது. அப்படியானால் என்னதான் நடந்தது? ஜான் போஸ்கோ ஒத்துக் கொண்டார்: “நான் கனவு கண்டேன்!” என்று. இதன் காரணமாக அவருடைய பள்ளி நண்பர்கள் அவருக்கு, “கனவு காண்கிறவன்” என்று புனைபெயர் வைத்தார்கள்.

குறிப்பு: இந்த முதல் இரண்டு கனவுகளும் புனித டொன் போஸ்கோ தமது சிறு வயதில் கண்டவை என்பதால், அவற்றில் அவர் ஜான் போஸ்கோ என்னும் தமது இயற்பெயராலேயே குறிப்பிடப்படுகிறார். பின்வரும் அத்தியாயங்களில் ஏற்கனவே குருப்பட்டம் பெற்ற அவர் சுவாமி போஸ்கோ என்னும் பொருள்படும் விதமாக டொன் போஸ்கோ என்று குறிப்பிடப்படுகிறார்.