இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

பாஸ்கா இராப்போஜனம்.

பெரிய வியாழக்கிழமையின் துன்பங்கள் தொடங்குகின்றன.

பத்து அப்போஸ்தலர்களும் இராப்போஜனசாலையை ஆயத்தம் செய்வதில் பரபரப்பாயிருக்கிறார்கள்.

யூதாஸ் மேசை மேல் ஏறி பெரிய சரவிளக்குச் சட்டத்தின் எல்லா அகல்களிலும் எண்ணை இருக்கிறதா என்று கவனிக்கிறான். அந்தச் சரவிளக்கு இரட்டை ஃப்யூஷியா என்ற செடியின் பூவிதழ் போல் உள்ளது. அதன் அடித்தண்டைச் சுற்றிலும் ஐந்து இதழ் வடிவிலுள்ள விளக்குகள் உள்ளன. அவற்றிற்கடியில் இன்னொரு கிரீட வரிசையில் சிறிய சுடர்களும், மேலும் அதிலிருந்து சங்கிலி களில் தொங்கும் பூவிதழ்களின் அடிப்பாகம் போன்ற மூன்று விளக்குகளும் உள்ளன. அதன் பிறகு அவன் மேசையிலிருந்து கீழே குதித்து, மிக நல்ல துணி விரிக்கப்பட்டுள்ள மேசைமேல் கலையுணர்வுடன் வைக்க வேண்டிய பொருள்களை எடுத்து வைப்பதில் பிலவேந்திரருக்கு உதவி செய்கிறான்.

“என்ன அருமையான சணல் மேசை விரிப்பு இது!” என்று பிலவேந்திரர் சொல்வது எனக்குக் கேட்கிறது.

அதற்கு யூதாஸ்: “லாசருடைய மிகச் சிறந்த துணிகளுள் இதுவும் ஒன்று. இதைக் கொண்டு வரும்படி மார்த்தா மிகவும் வற்புறுத்தினாள்” என்கிறான்.

அப்போது தோமையார் சொல்கிறார்: “இந்தப் பான பாத்திரங்களும் ஜாடிகளும் எப்படி?” என்று. அவர் அந்த விலை உயர்ந்த ஜாடிகளில் கொஞ்சம் திராட்சை ரசம் ஊற்றுகிறார். அவற்றின் ஒடுங்கிய வயிற்றுப் பாகத்தில் தன்னையே பார்த்தபடி, செதுக்கப்பட்ட அவற்றின் கைப்பிடிகளை கலைத்திறமை கொண் டவனைப் போல் தொட்டுப் பார்க்கிறார்.

“பூ! இவை என்ன பெறும்!” என்கிறான் யூதாஸ்.

அதற்கு தோமையார்: “இது உளி வேலை. என் தகப்பனார் இதற்கு கொள்ளை ஆசைப்படுவார். தங்க, வெள்ளித் தகடுகளை சூடேற்றி எளிதாக வடிவங்கொடுத்து விட முடியும். ஆனால் இந்த முறைப்படி செய்வது... ஒரு விநாடியில் எல்லாம் சேதமாகி விடும். தவறான ஒரு அடி போதும். ஒரே சமயத்தில் பலமாகவும், மெல்லியதாகவும் அடிக்க வேண்டும். இக் கைப்பிடிகளைப் பாரும்! அவை முழுப் பாளத்திலிருந்து செதுக்கப் பட்டுள்ளன. அவை ஒட்டப்படவில்லை. பணம் படைத்தவர் களுக்குரியவை... செதுக்கப்பட்ட எல்லாத் துகள்களும், கழிவுகளும் இழக்கப்பட்டு விட்டால் எப்படியாகும் என்று நினைத்துப் பாரும். நான் சொல்வதைக் கண்டுபிடிக்கிறீரா என்று தெரியவில்லை.” 

“உம்மை நான் நன்றாகவே கண்டுபிடிக்கிறேன். சுருக்கத்தில், இது சிற்ப வேலை போன்றது.” 

“அப்படியேதான்.”

எல்லாரும் அதை வியந்து விட்டு தங்கள் தங்கள் வேலைக்குப் போகிறார்கள். சிலர் இருக்கைகளை ஒழுங்குபடுத்துகிறார்கள். சிலர் பக்கத்துப் பலகைகளைத் தயாரிக்கிறார்கள். 

அப்போது இராயப்பரும் சீமோனும் உள்ளே வருகிறார்கள்.

“ஆ! கடைசியில் வந்து சேர்ந்து விட்டீர்களா? மறுபடியும் எங்கே போயிருந்தீர்கள்? போதகரோடும், எங்களோடும் வந்தபின் மறுபடியும் ஓடிவிட்டீர்களே!” என்கிறான் யூதாஸ்.

“இராப் போஜனத்திற்கு முன் எங்களுக்கு இன்னொரு அலுவல் இருந்தது” என்கிறார் சீமோன் சுருக்கமாக.

“மன சஞ்சலத்தால் கஷ்டப்படுகிறீர்களா?” 

“அதற்குப் போதிய காரணம் இருக்கிறதென்றே நினைக் கிறேன். ஒருபோதும் பொய்க்காத உதடுகளிலிருந்து கடந்த நாட்களில் நாம் கேட்டுள்ளவற்றை வைத்துப் பார்த்தால் அது அப்படித்தான்.” 

“அதிலும் இந்த நாற்றத்தோடு...” என்று கூறிய இராயப்பர் உடனே தனக்குத்தானே: “அமைதி கொள் இராயப்பா” என்று உதட்டுக்கடியில் முணுமுணுக்கிறார்.

“நீரும் அப்படித்தான்... கொஞ்ச நாட்களாக உமக்குப் பைத்தியம் பிடித்த மாதிரி இருக்கிறீரே. உம்முடைய முகத்தைப் பார்த்தால் நரி துரத்துகிறதாக அறிந்து கொண்ட முயல் மாதிரி இருக்கிறீர் ” என்று பதிலளிக்கிறான் யூதாஸ்.

“உன் முகம் மரநாயின் மூஞ்சி மாதிரி, கடந்த சில நாட்களாக நீயும் அழகாகத்தான் இருக்கிறாய். உன் முழி அப்படி இருக்கிறது... பார்வையும் ஓரக் கண்ணாயிருக்கிறது... நீ என்ன எதிர்பார்க்கிறாய்? அல்லது என்னத்தைக் காணப்போகிறாய்? சுய நம்பிக்கை கொண்டவனாகக் காணப்படுகிறாய். அப்படிக் காணப்பட விரும்புகிறாய். ஆனால் பயந்தவனைப் போல் காட்சியளிக்கிறாய்” என்று பதிலுக்குக் கொடுக்கிறார் இராயப்பர்.

“ஓ! பயப்படுவது பற்றி!... நீரும் வீரனல்லவே!” 

அதற்கு அருளப்பர் பதிலளிக்கிறார்:

“யூதாஸ், நாம் யாருமே அப்படியல்ல. நீர் மக்கபேயரின் பெயரைக் கொண்டிருக்கிறீர். ஆனால் அவரைப் போல் நீர் இல்லை. “கடவுள் வரங்களை அருள்கிறார் ” என்ற பெயரை நான் வைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் சத்தியமாகச் சொல்கிறேன், நான் துரதிர்ஷ்டத்தைக் கொண்டு வருபவனாக இருப்பதை அறிந்திருக்கிற ஒரு மனிதனைப் போல் நடுங்குகிறேன். எதற்கும் மேலாக கடவுளின் கிருபையை இழந்து விட்டவனைப் போலிருக்கிறேன். “பாறை” என்று மறுபெயரிடப்பட்ட யோனாவின் சீமோன் இப்போது நெருப்புக்கருகேயுள்ள மெழுகைப் போல் மென்மையாகிவிட்டார். அவர் இப்பொழுது தன் சொந்த சுயாதீனத்தின் திசைதிரும்புதலைத் தன்னிடம் கொண்டிருக்க வில்லை. இவ்வளவிற்கும் மிகக் கடுமையான புயல்களிலும் அவர் பயப்பட்டதை நான் கண்டதில்லை. மத்தேயுவும், பர்தலோமேயுவும், பிலிப்புவும் உறக்கத்தில் நடக்கிறவர்களைப் போலிருக்கிறார்கள். என் சகோதரனும் பிலவேந்திரரும் பெருமூச்செறிவதை விட வேறெதுவும் செய்வதில்லை. ஒன்று விட்ட சகோதரர்கள் இருவரும் தங்கள் குடும்ப உறவாலும், ஆண்டவர் மேலுள்ள அன்பாலும் துயரப்படுகிறார்கள். அவர்களைப் பாருங்கள்! அவர்கள் ஏற்கெனவே வயது சென்றவர்களைப் போலாகி விட்டார்கள். தோமையார் தன் மகிழ்ச்சித்தன்மையை இழந்து விட்டார். சீமோன் மூன்றாண்டு களுக்கு முன் இருந்த களைப்புற்ற குஷ்டரோகியாக மறுபடி ஆகியுள்ளார். அவர் துயரத்தால் எவ்வளவு மெலிந்து விட்டா ரென்றால், மரண வெளிறுதலடைந்து சலிப்புற்றிருக்கிறார்.” 

“ஆமாம். போதகர் அவருடைய மனத்தளர்வினால் நம் எல்லாரையும் பாதித்து விட்டார் ” என்கிறான் யூதாஸ்.

அப்போது அல்பேயுஸின் யாகப்பர்: “என் சகோதரன் சேசு, என் போதகரும் ஆண்டவருமாயிருக்கிற அவர் தளர்வுற்றும், தளர்வுறாமலும் இருக்கிறார். அவர், நாம் அறிந்துள்ளது போல, அனைத்து இஸ்ராயேலினாலும் இன்னும் அவருக்கு மட்டுமே தெரிந்துள்ள மறைந்த துயரங்களினாலும் கவலையாயிருக்கிறதாக அந்த வார்த்தைக்கு அர்த்தம் கொண்டால் அப்போது “நீர் சொல்வது சரி” என்று நான் கூறுவேன். ஆனால் மனத்தளர்வு என்ற வார்த்தையை புத்திக் கோளாறு என்ற கருத்தில் நீர் சொன்னால் அப்படிச் சொல்லக் கூடாது என்று நான் தடுக்கிறேன்.” 

“ஒரு நிலைத்த மனத்தளர்வான சிந்தனை புத்திக்கோளாறு இல்லையா? நான் உலக சம்பந்தமான காரியங்களையும் கற்றிருக்கிறேன். எனக்குத் தெரியும். அவர் அதிக மிகுதியாகத் தம்மைக் கொடுத்து விட்டார். இப்போது மனத்தளர்வடைந்து விட்டார்.” 

“அதாவது பைத்தியம். அப்படியா?” என்று அடுத்த சகோதரர் யூதா ததேயுஸ் அமைதியாகக் காணப்பட்டபடியே கேட்கிறார்.

“அதேதான்! ஆசீர்வதிக்கப்பட்ட நினைவுகூருதலுக்குரிய உம்முடைய தந்தை எவ்வளவு சரியானவர்! நீதியிலும், நியாயத்திலும் அவரை நீர் அதிகம் ஒத்திருக்கிறீர். ஒரு புகழ்பெற்ற குடும்பத்தின் துயர முடிவுதான் சேசு. அவர் இப்போது அதிக முதுமையடைந்து மன மூப்படைந்து விட்டார். இந்த நோய்க்கு அவரிடம் எப்போதுமே ஒரு சார்புத்தன்மை இருந்தது. முதலில் அது இலேசாக இருந்தது. வர வர கூடிவிட்டது. அவர் பரிசேயர்களையும், வேதபாரகர்களையும், சதுசேயரையும், ஏரோதியரையும் எப்படித் தாக்கினார் என்று நீங்கள் பார்த்தீர்களே! கற்சல்லிகள் சிதறப்பட்ட ரோட்டைப் போல் அவர் தம் வாழ்க்கையை வாழக் கூடாததாக ஆக்கிக் கொண்டார். அவற்றை அவரே சிதறிக் கொண்டார். நாம்... அவரை எவ்வளவு நேசித்தோமென்றால் நம் அன்பு நம் கண்களை மறைத்துவிட்டது. ஆனால் அவரை விக்கிர ஆராதனை முறையில் நேசியாதவர்கள் - உம்முடைய தந்தை, உம் சகோதரர் ஜோசப், இன்னும் தொடக்க நாட்களில் சீமோன் - இவர்களெல்லாம் சரியாகக் கண்டுபிடித்தார்கள்... அவர்களுடைய வார்த்தையைக் கேட்ட நாம் நம் கண்களைத் திறந்திருக்க வேண்டும். மாறாக நாம் அனைவரும் ஒரு நோயாளியின் சாந்தமான கவர்ச்சியால் இழுபட்டுப் போனோம். இப்பொழுது... யார் அறிவார்கள்!” 

யூதா ததேயுஸ், யூதாஸின் முன்பாக நின்று கொண்டிருக்கிறார். யூதாஸின் அளவிற்கு உயரமாயிருக்கிறார். அவன் சொன்னதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருப்பவர் போல் காணப்படுகிறார். ஆனால் திடீரென அவர் கோபம் மூண்டு தம் புறங்கையால் யூதாசை ஓங்கி அறைந்து, அவனைப் பின்புறமாய் ஒரு இருக்கையில் வீழ்த்துகிறார். பின்னும் கோபத்தை அமுக்கிய குரலில் அவன் முகத்தின் பக்கமாய்க் குனிந்து: “ஈனப் பயலே! இது அவரின் பைத்தியத்திற்கு! அவர் அடுத்த அறையில் இருப்பதாலும், இது பாஸ்கா மாலையானதாலும் உன் கழுத்தை நெரிக்காமல் விடுகிறேன். ஆனால் இதை மட்டும் நன்றாக நினைவில் வைத்துக்கொள். அவருக்கு ஏதும் கேடு நேரிட்டு என் வலிமையைத் தடுக்க அவரும் அங்கே இல்லாவிட்டால் உன்னை யாரும் காப்பாற்ற மாட்டார்கள். உன் கழுத்தைக் கயிறு சுற்றியது போல்தான். மீதி வேலையை கலிலேய உழைப்பாளியும், கோலியாத்திற்குக் கவண் வீசியவனின் வாரிசில் வந்தவனுடையவும் கைகள் கவனித்துக் கொள்ளும். முதுகெலும்பில்லாத பரத்தையனே, கவனித்து நடந்து கொள்” என்று சொல்கிறார்.

யூதாஸ் எழுந்து நிற்கிறான். வெளிறிப் போனான். ஆனால் கொஞ்சமும் எதிர்ப்புக் காட்டவில்லை. எனக்கு எது ஆச்சரிய மளிக்கிறதென்றால் யூதா ததேயுவின் இந்த நூதன செயலுக்கு யாரும் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. மாறாக அவர்கள் எல்லாரும் அதை ஆமோதிக்கிறார்கள்.

இராப்போஜன சாலை மீண்டும் அமைதியடைந்த போது சேசு உள்ளே வருகிறார். அவருடைய உயர்ந்த உருவம் வரக் கூடிய அளவிற்குச் சரியாக இருக்கிற சிறிய கதவின் வழியாக, படிக்கட்டின் மேல் தளத்தில் வந்து நின்றபடி, தம் சாந்தமான துயரப் புன்முறுவலோடு கரங்களை விரித்துக் கொண்டு “உங்களுக்கு சமாதானம் வருவதாக!” என்று சொல்கிறார். உடலிலும் உள்ளத் திலும் நோயுற்றவரைப் போல் அவருடைய குரல் களைப்புற்றுக் காணப்படுகிறது.

சேசு கீழே இறங்கி வருகிறார். அவரிடம் ஓடி வந்துள்ள அருளப்பரின் தலையைத் தொடுகிறார். தம் சகோதரன் யூதா ததேயுஸைப் பார்த்து தமக்கு எதுவும் தெரியாதது போல் புன்னகை செய்கிறார். பின் தமது மற்ற சகோதரனைப் பார்த்து: “நீ உன் சகோதரன் ஜோசப்பிடம் அன்பாயிருக்க வேண்டுமென்று உன் தாய் கேட்டுக் கொள்கிறாள். அவன் ஸ்திரீகளிடம் உன்னைப் பற்றியும், என்னைப் பற்றியும் சற்று முன் விசாரித்திருக்கிறான். அவனுக்கு நான் உபசாரம் கூறவில்லையே என்று வருந்துகிறேன்” என்கிறார்.

“நாளை அதைச் செய்யலாம்.” 

“நாளை? ... அவனைக் காண எப்போதும் எனக்கு நேரம் இருக்கும்... ஓ! இராயப்பா! கடைசியாக சற்று நேரம் நாம் சேர்ந்திருக்கலாம். நேற்றிலிருந்து நீ நாடோடி போலிருக்கிறாயே. உன்னைக் கண்ட மாதிரி இருக்கும், அதற்குள் காணாமல் போய் விடுகிறாய். இன்றைக்கு உன்னை நான் இழந்து போனேன் என்றே சொல்ல வேண்டும். நீயும் சீமோன், அப்படித்தான்.” 

“கருமையைவிட அதிக வெண்மையாக இருக்கிற எங்கள் உரோமம், நாங்கள் மாம்சம் விரும்பி இங்கு இல்லாமல் போகவில்லை என்று உமக்கு உறுதி கூறுமே” என்று கணத்தோடு கூறுகிறார் சீமோன்.

“ஆயினும்... எந்த வயதிலும் அந்தப் பசி ஏற்படக்கூடும். இளைஞர்களை விட வயோதிகர்களுக்கு...” என்று யூதாஸ் குத்தலாகச் சொல்கிறான்.

சீமோன் அவனைப் பார்த்து அவனுக்குப் பதில் சொல்லப் போகையில் சேசுவும் அவனைப் பார்த்து: “உன் வலது கன்னம் வீங்கி சிவந்திருக்கிறதே, உனக்குப் பல்வலி இருக்கிறதா?” என்று கேட்கிறார்.

“ஆம். வலிக்கிறது. ஆனால் கவலைப்படத் தேவையில்லை.”

மற்றவர்கள் ஒன்றும் கூறவில்லை. விஷயம் அப்படியே ஓய்ந்து விடுகிறது. 

“செய்ய வேண்டியதையெல்லாம் நீங்கள் செய்து விட்டீர் களா? மத்தேயு? பிலவேந்திரா? யூதாஸ், தேவாலய காணிக்கைக்கு ஏற்பாடு செய்துவிட்டாயா?” 

அவர்கள் மூவரும்: “இன்று செய்து முடிக்கப்பட வேண்டுமென்று நீர் சொன்னவற்றையெல்லாம் செய்து முடித்து விட்டோம். கவலை வேண்டாம்” என்கிறார்கள்.

“சூசாவின் ஜோஹான்னாவுக்கு லாசரின் முந்திய பலன்களைக் கொண்டு சென்றேன். குழந்தைகளுக்குத்தான். அவர்கள் “இந்த ஆப்பிள் கனிகள் அதிக நன்றாக உள்ளன” என்றார்கள். அவர்களுக்குப் பசியின் ருசி இருந்தது. அவை உம்முடைய கனிகளே” என்று சொல்கிறார் அருளப்பர் சிரித்தபடி கனவு கண்டது போல்.

அந்த ஞாபகத்தில் சேசுவும் சிரித்துக் கொள்கிறார்...

“நான் நிக்கோதேமுசையும் சூசையையும் கண்டேன்” என்று தோமையார் சொல்கிறார்.

“அவர்களைப் பார்த்தீரா? அவர்களிடம் பேசினீரா?” என்று அதிகப்படியான ஆர்வத்துடன் கேட்கிறான் யூதாஸ்.

“ஆம். பேசினேன். அதிலென்ன விசேஷம் இருக்கிறது? என் தகப்பனாரின் ஒரு நல்ல வாடிக்கைக்காரர் அரிமத்தியா சூசை.”

“இதைப் பற்றி நீர் முன்பு ஒருபோதும் சொல்லவில்லையே, அதுதான் நான் ஆச்சரியப்பட்டேன்.” 

தோமையார் நிக்கோதேமுவையும் சூசையையும் சந்தித் ததைப் பற்றி யூதாஸ் கவலைப்பட்டதாக ஏற்படுத்திய அபிப் பிராயத்தை சமாளிப்பதற்கு முயற்சி செய்கிறான்.

அப்போது பர்தலோமேயு: “அவர்கள் உமக்கு மரியாதை செயெ வரவில்லையென்பது நூதனமாயிருக்கிறது. அவர்கள் வரவில்லை. சூசா வரவில்லை. மனேயனும் யாரும்...” என்று சொல்லும் போதே யூதாஸ் இடைமறித்து கேலியாய்ச் சிரிக்கிறான்: “முதலை சரியான நேரத்தில் மறைந்து கொள்கிறது” என்கிறான்.

அப்போது சீமோன் முன்பில்லாத கோபத்துடன்: “நீர் சொல்வதின் பொருளென்ன? எதைக் குத்திக் காட்டுகிறீர்?” என்று நெருக்கிக் கேட்கிறார்.

அதற்கு சேசு: “அமைதி! அமைதி! உங்கள் விஷயம் என்ன? இது பாஸ்காவின் மாலை. பாஸ்கா ஆட்டுக்குட்டியை உண்பதற்கு இந்த அளவு அலங்காரங்கள் இதுவரை நாம் செய்ததில்லை. ஆகவே நாம் சமாதான உள்ளத்தோடு இராப்போஜனத்தை உட்கொள் வோம். கடந்த நாட்களின் மாலைப் போதனைகளால் உங்களை சுமாரான அளவு நான் குழம்பச்செய்து விட்டேனென்று நினைக் கிறேன். ஆனால் அவை முடிந்து விட்டன. இதற்கு மேல் உங்களைக் குழம்பச் செய்யமாட்டேன். என்னைச் சம்பந்தப்பட்ட எல்லாம் சொல்லப்படவில்லை. முக்கியமானவைகள் மட்டுமே சொல்லப் பட்டன. மீதியை நீங்கள் பின்னால் கண்டுணர்வீர்கள். உங்களுக்குச் சொல்லப்படும். ஆம். உங்களுக்குச் சொல்கிறவர் வருவார். அருளப்பா, யூதாசுடனும், இன்னும் ஒருவருடனும் சென்று சுத்திகரத்திற்கு அகன்ற பாத்திரங்களைக் கொண்டு வாருங்கள். அதன்பின் நாம் பந்தியமர்வோம்.” இருதயத்தைத் தொடக்கூடிய அளவு கருணையோடு காணப்படுகிறார் சேசு.

அருளப்பர், பிலவேந்திரர், யூதா ததேயுஸ், யாகப்பர் ஆகியோர் பெரிய அகன்ற பாத்திரத்தைக் கொண்டு வருகிறார்கள். அதனுள் தண்ணீர் விடுகிறார்கள். சேசுவுக்கும் தங்கள் உடன் சீடர்களுக்கும் துண்டுகளைக் கொடுக்கிறார்கள். (அந்தப் பாத்திரம் சுத்திகரம் செய்வதற்கான உலோக பாத்திரம்). அதை ஒரு மூலையில் வைக்கிறார்கள்.

“இப்பொழுது உங்கள் இருக்கைகளுக்குப் போங்கள். நான் இங்கிருக்கிறேன். இங்கே (அவருடைய வலது புறம், அருளப்பன், அதற்கடுத்த பக்கம் என் பிரமாணிக்கமுள்ள யாகப்பன் - இவர்கள் முதல் இரு சீடர்கள். அருளப்பனுக்கு அடுத்து என் பலமுள்ள பாறை. அதற்கடுத்து காற்றைப் போலிருக்கிற யாகப்பனுக்கு அடுத்து, அவன் இருப்பது தெரியாது. ஆனால் எப்பொழுதும் ஆறுதலளித்துக் கொண்டிருப்பவன் - பிலவேந்திரன். அவனுக்குப் பக்கத்தில் என் சகோதரன் யாகப்பன், அன்புள்ள சகோதரா, முதலில் வந்தவர் களுக்கு முதலிடத்தைக் கொடுக்கிறேன் என்பதைப் பற்றி உனக்கு வருத்தம் இல்லையே! நீதிமானின் அண்ணன் மகன் நீ. அவருடைய ஆவி என்றுமில்லாதபடி இந்த மாலை வேளையில் என்மேல் அசைந்து துடித்துக் கொண்டிருக்கிறது. என் குழந்தைப் பருவத்தின் தந்தையாயிருந்தவரே! உமது நிழலில் தாயும் குமாரனும் ஆறுதல் பெற்றிருந்த ஓக் விருட்சமே! சமாதானங் கொண்டிருப்பீராக!... இராயப்பனுக்குப் பக்கத்தில் சீமோன்... சீமோனே, சற்று இங்கே வா. உன்னுடைய பிரமாணிக்கமுள்ள முகத்தில் என் பார்வையைப் பதிக்க விரும்புகிறேன். பின்னால் உன்னை நான் நன்கு பார்க்க மாட்டேன். ஏனென்றால் மற்றவர்கள் உன்னுடைய நேர்மையான வதனத்தை மூடி விடுவார்கள். சீமோனே, நீ செய்துள்ள அனைத்திற்கும் நன்றி.” இவ்வாறு கூறி சேசு சீமோனை முத்தமிடுகிறார்.

சீமோன் கலக்கத்தின் அடையாளமாக சற்று தன் முகத்தை மூடியபடி தன் இருக்கைக்குப் போகிறார்.

சேசு தொடர்ந்து: “சீமோனுக்கெதிரே என் பர்த்தலோமேயு. ஒருவரையொருவர் பிரதிபலிக்கும் இரு நேர்மையாளரான ஞானிகள். அவர்கள் நல்ல பொருத்தமாயிருக்கிறார்கள். பர்தலோமேயுவுக்குப் பக்கத்தில் யூதா ததேயுஸ். என் சகோதரா, நீ, உன்னை நான் பார்க்கும்படியாக இரு... நான் நாசரேத்தில் இருப்பது போலுள்ளது... திருநாள்களிலே நம்மெல்லாரையும் ஒரே மேசையைச் சுற்றிக் கூடி வர வைத்ததுபோல்... கானாவூரிலும் அவ்வாறே... ஞாபகமிருக்கிறதா? நாம் சேர்ந்திருந்தோமே. விருந்து... திருமண விருந்தில்... முதல் புதுமை... தண்ணீர் இரசமாக மாற்றப்பட்டது. இன்றும் ஒரு திருநாள்தான்... இன்றும் ஒரு புதுமை நிகழும்... திராட்சை இரசம் தன் இயல்பை மாற்றி அது...” 

சேசு தம் சிந்தனைகளிலே மூழ்கிப் போகிறார். அவர் தலை கவிழ்ந்து தம் இரகசிய உலகில் தனிப்படுகிறார். மற்றவர்கள் அவரை மவுனமாக நோக்குகின்றனர்.

பின் சேசு தம் சிரசை நிமிர்த்தி யூதாஸை உற்று நோக்கி: “நீ எனக்கு முன்பாக இருப்பாய்” என்கிறார்.

“என்மேல் இவ்வளவு அன்பா? சீமோனை விடவா? எப்போதும் என்னை உமக்கு முன்பாக வைக்கிறீரே?” 

“அவ்வளவு அன்புதான்: நீ கூறியபடிதான்.” 

“போதகரே, எதற்காக?” 

“ஏனென்றால் இந்நேரத்திற்கென மற்றெல்லாரையும் விட நீதான் அதிகம் செய்திருக்கிறாய் என்பதற்காக.” 

யூதாஸ் மாறிக் கொண்டேயிருக்கும் தன் பார்வையால் சேசுவையும் தன் உடன் சீடர்களையும் பார்க்கிறான். சேசுவை வஞ்சக பரிவிரக்கத்தோடு மற்றவர்களை ஒரு வெற்றிக் களிப்போடு பார்க்கிறான்.

சேசு தொடர்ந்து: “யூதாஸின் பக்கத்தில் ஒரு புறம் மத்தேயு. மறுபுறம் தோமை.” 

“அப்படியென்றால் மத்தேயு என் இடப்புறமும் தோமையார் என் வலப்புறமுமா?” என்கிறான் யூதாஸ்.

“உம் விருப்பப்படி. நீர் விரும்புகிறபடி - என் இரட்சகரை என் முன்பாகக் கொண்டிருப்பதே எனக்குப் போதும்” என்கிறார் மத்தேயு.

சேசு மேலும் தொடர்ந்து: “கடைசியாக பிலிப்பு. இப்பொழுது பாருங்கள். என் பக்கத்தில் மகிமையான இடத்தில் இல்லாதவன், எனக்கு முன்பாக இருக்கும் மகிமையைப் பெறுகிறான்.”