அர்ச். தோமையார் வரலாறு - தோமையாருக்கு இழைத்த வாதனைகள்

மேற்கண்டவாறு தோமையார் சொன்ன மறுமொழியைக் கேட்ட அரசன் கடுங்கோபங்கொண்டு, இரண்டு இருப்புத் தகடுகளைக் காய்ச்சி, அவற்றின் மேல் அப்போஸ்தலரை நிற்கச் செய்யும்படி கட்டளையிட்டான். சற்று நேரத்துக்குள் செக்கச் சிவக்கக் காய்ச்சப்பட்ட இரு தகடுகள் கொண்டு வரப்பட்டன. தோமையாரைப் பிடித்து அவற்றின் மேல் நிற்கச் செய்தார்கள். 

அவருடைய பாதங்கள் அவற்றின் மேல் பட்டன. என்ன வியப்பு! தரையினின்று தண்ணீர் சுரந்து பொங்கி எழும்பியது. காய்ச்சிய தகடுகள் குளிர்ந்தன. தண்ணீரோ சுனை போல் பொங்கி எழும்பிப் பெருகிக் கொண்டிருந்தது. சேவகர் தோமையாரை விட்டுவிட்டு ஓட்டம் பிடித்தார்கள். அரசவை மண்டபம் முழுதும் வெள்ளப் பெருக்காயிற்று. அரசன் திடுக்கிட்டுப் பயந்து, அப்போஸ்தலரைப் பார்த்து, "எங்களுக்கு ஆபத்து வரும் போலிருக்கின்றது. நாங்கள் அகால மரணத்துக்கு உள்ளாகாத படி, உன் கடவுளைப் பிரார்த்திப்பாயாக. அவர் எங்களைக் காப்பாற்றட்டும்'' என்று சொன்னான். 

உடனே தோமையார் தம் விழிகளை மேல்நோக்கி, ''என் நேச இறைவா, ஐம் பெரும் பூதங்களில் ஒன்றாகிய தண்ணீரை அடக்கும். இந் நீர்ப் பெருக்கை நீக்கும். இம் மனிதரின் பயத்தைப் போக்கும். இவர்களில் சிலராவது உம்மை விசுவசிப்பதால் இரட்சிக்கப் படுவார்களாக'' என்று மன்றாடினார். மரியாதையுடன் மெளனமாயிருந்தனர் எல்லாரும். தண்ணீரும் கொஞ்சங் கொஞ்சமாக வற்றிப்போகத் தரை உலர்ந்து காணப்பட்டது. இதைப் பார்த்தோர் வியப்படைந்தனர். 

தோமையார் அரசன் பக்கம் திரும்பி, ''அண்ணலே! இப் போது கடவுள் இயற்றிய புதுமை என்னைக் காப்பாற்றும் பொருட்டல்ல. ஏனெனில், நான் அவருக்காக வாதனைப்பட மகிழ்ச்சியுடன் தயாராய் இருக்கிறேன். அதைச் சகிக்க வேண்டிய பலத்தையும் அவர் எனக்கு அளித்திருப்பார். ஆனால் இவ்வற்புதம் உமக்காகவே நடந்தது. நீர் கடவுளின் வல்லமையைக் கண்கூடாகக் கண்டு, அவரை நம்பி அவர் ஒருவரையே ஆராதிக்கும்படிக்கு இது நேர்ந்தது என்று அறிவீராக'' என்றார்.

இந் நிகழ்ச்சியைக் கண்ட அரசன் திகிலடைந்து திகைத்து நின்றான். கிருஷ்ணன் சற்றேனும் மனம் மாற வில்லை; அப்போஸ்தலரை அடியோடு தொலைத்துவிடவே அவன் கங்கணங் கட்டிக்கொண்டிருந்தான். குழப்பமடைந்திருந்த மஹாதேவனைத் தேற்றி, "அரசே! நாம் சிறு பிள்ளைகளல்லர். பயப்படுவது நம் குலத்திற்கு ஏற்றதன்று. நம் தேவர்கள் நம்மைச் சோதிப்பார்கள். ஆதாலால் இம்மந்திரவாதியைச் சும்மா விடலாகாது. உடனே மரண வாதனை செய்தல் வேண்டும். இல்லா விடில் நம்மையும் பாதாளத்தில் இழுத்துப் போடுவான்" என்றான். 

இவ்வார்த்தை களால் சிறிது தைரியம் பெற்ற அரசன், பெரும் நெருப்பு மூட்டி அதில் இவனைப்போட்டுச் சுட்டெரித்து விடுங்கள்'' என்றான். கிருஷ்ணனோ வேறொரு யோசனை சொன்னான். "அரசே! அவனை நெருப்பில் இட்டால் திரும்பவும் தண்ணீர் சுரக்கச் செய்து, கொழுந்து விட்டெரியும் தீயையும் அணைத்து விடுவான். அவன் நம் தேவதைக்குப் பலியிடட்டும். அப்போது அவன் நம்பும் கடவுள் அவன் மீது கோபங் கொண்டு அவனுக்குத் துணை செய்யமாட்டார்'' என்றான். 

இதைக்கேட்ட தோமையார் கிருஷ்ணனைப் பார்த்து நகைத்து ''நீ சொல்வது சரி! நீ வணங்கும் தேவர்களுக்கு நான் பலி யிடுவேனானால், நான் வணங்கும் மெய்யங் சுடவுள் என்னைக் கை விட்டு விடுவார் அது உண்மையே!'' என்று சொன்னார். அரசன் கிருஷ்ணன் சொல்லியதற்கிணங்கி, "சரி! சரி! அவன் கட்டாயம் காளி தேவிக்கே பலியிட்டுத் தீரவேண்டும்" என்று கட்டளையிட்டான்.