இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

நம் விசுவாசமே உலகத்தை மேற்கொள்ளும் வெற்றியாக இருக்கிறது

 உலகத்தின் வீண்பெருமையும், உலகம் உயர்வாக மதிக்கிற சகல காரியங்களின் ஒன்றுமில்லாமையும் வெறும் பொய்மையும் வஞ்சகமுமாகவே இருக்கின்றன என்ற எண்ணம், பல ஆன்மாக்கள் கடவுளுக்குத் தங்களை முழுமையாகக் கையளிக்கச் செய்தது. ""மெய்யாகவே மனிதன் உலகமெல்லாம் ஆதாயமாக்கிக் கொண்டாலும், தன் ஆத்துமம் சேதப்பட்டால், அவனுக்கு வரும் பயன் என்ன?'' (மத்.16:26). எத்தனை இளம் பருவத்தினர் சுவிசேஷத்தின் இந்த மேலான போதனையின் காரணமாக, கடவுளை மட்டுமே தியானித்து, அவரை மட்டுமே நேசிக்கும்படியாக, தங்கள் உறவினர்களையும், நாட்டையும், உடைமைகளையும், பட்டம் பதவிகளையும், அரச மகுடங்களையுமே கூடத் துறந்து, அடைபட்ட மடங்களில், அல்லது வனாந்தரங்களில் தங்களை அடைத்துக் கொண்டார்கள்! மரண நாள் அழிவின் நாள் என்று வேதாகமத்தால் அழைக்கப்படுகிறது: ""அவர்களுடைய அழிவு நாள் இதோ சமீபித்திருக்கிறது'' (உபா.32:35). பூமியின் மீது நாம் சம்பாதித்த உடைமைகள் அனைத்தையும் நம் மரண நாளில் நாம் விட்டுச் செல்ல வேண்டும் என்பதால், அது அழிவின் நாளாக இருக்கிறது. ஆகவேதான் அர்ச். அம்புரோஸ் ஞானத்தோடு, ""இந்த உடைமைகளை நம் நல்ல பொருட்கள் என்று நாம் தவறாக அழைக்கிறோம். ஏனெனில் இவற்றை நாம் என்றென்றும் வாழ இருக்கும் மறு உலகிற்குத் தூக்கிச் செல்ல நம்மால் முடியாது. நம் பரிசுத்த செயல்கள் மட்டுமே நம்முடன் வருகின்றன. அவை மட்டுமே நித்தியத்தில் நம்மைத் தேற்ற முடியும்'' என்கிறார்.

உலக செல்வங்கள், அனைத்திலும் உயர்ந்த பெரும் பதவிகள், பொன், வெள்ளி, மிக விலையேறப்பெற்ற ஆபரணங்கள் ஆகிய அனைத்தும், மரணப் படுக்கையில் இருந்து சிந்திக்கப்படும்போது, அவை தங்கள் மகத்துவத்தை இழந்து விடுகின்றன. மரணத்தின் இருண்ட நிழல் செங்கோல்களையும், அரச மகுடங்களையும் கூட திரையிட்டு மறைக்கிறது, உலகத்தால் மதிக்கப்படுவது எதுவாயினும், அது வெறும் புகையும், தூசியும், வீணும், நிர்ப்பாக்கியமுமே என்று நாம் காணச் செய்கிறது. உண்மையில், மரண சமயத்தில், மரித்துக் கொண்டிருக்கும் மனிதனுக்கு, அவனது மரணத்திற்குப் பின் அவன் அழுகிப் போகும்படி வைத்து மண்ணால் மூடப்படுகிற ஒரு மரப் பெட்டியைத் தவிர வேறு ஒன்றும் சொந்தமில்லை என்றால், அவன் சம்பாதித்த செல்வங்களால் அவனுக்கு என்ன பயன்? முன்பு மிக அழகாயிருந்த உடலில், இப்போது கெட்டுப் போன கொஞ்சம் தூசியும், தசையற்ற கை கால்களும் மட்டுமே இருக்கும் என்றால், அது அழகாயிருந்ததால் இப்போது என்ன பயன்?

பூமியின் மீது மனிதனின் ஜீவியம்தான் என்ன? அர்ச். யாகப்பர் விளக்குகிறபடி அதைப் பார்: ""மெய்யாகவே உங்கள் ஜீவியம் எப்படிப்பட்டது? கொஞ்ச நேரம் தோன்றி, பின்பு ஒழிந்து போகும் புகைதான் அல்லவோ?'' (யாக.4:15). இன்று இந்தப் பெரிய மனிதன் மதிக்கப்படுகிறான், அஞ்சப்படுகிறான், போற்றப்படுகிறான். நாளை அவன் நிந்திக்கப்படுவான், இழிவுபடுத்தப்படுவான், துர்ப்பிரயோகம் செய்யப்படுவான். ""தீயவன் வெகுவாய்ப் பெருமை யடைந்து லீபானின் கேதுரு மரத்துக்கு ஒப்பாக உயர்த்தப்பட்டதைக் கண்டேன். நான் கடந்து போவதற்குள் அவன் ஒழிந்து போனான்'' (சங்.36:35,36). தனது அழகிய வீட்டில், அவன் கட்டிய இந்தப் பெரும் அரண்மனையில் அவனை இப்போது காணவில்லை. அவன் எங்கே இருக்கிறான்? தன் கல்லறையில் தூசியாக ஆகியிருக்கிறான்!

"அவன் கையில் வஞ்சகத் தராசு இருக்கிறது'' (ஓசே.12:7). இவ்வார்த்தைகளின் மூலம் உலகத்தால் ஏமாற்றப்படாமல் இருக்க பரிசுத்த ஆவியானவர் நம்மை எச்சரிக்கிறார். ஏனெனில் உலகம் தனது பொருட்களை ஒரு கள்ளத் தராசு கொண்டு எடைபோடுகிறது. விசுவாசத்தின் உண்மையான தராசில் நாம் அவற்றை எடைபோட வேண்டும். ஒருபோதும் முடியாத உண்மையான பொருட்களை அது நமக்குக் காட்டும். மரணத்தோடு முடிந்து போகும் எதையும் நாம் ஒருபோதும் பொருட்படுத்தவே கூடாது என்று அர்ச். தெரேசம்மாள் கூறுகிறாள். சர்வேசுரா, முன்பு அரசு அமைச்சர்களாகவும், படைத் தளபதிகளாகவும், அரசர்களாகவும், உரோமைப் பேரரசர்களாகவும் இருந்தவர்கள் இப்போது காட்சி மாறி, நித்தியத்தில் தாங்கள் இருக்கக் காணும்போது, அவர்களிடம் என்ன மேன்மை இன்னும் எஞ்சியிருக்கிறது! ""அவர்களுடைய கீர்த்தி ஓர் அமளியோடு அழிந்து போயிற்று'' (சங்.9:7). அவர்கள் உலகத்தில் பிரசித்தி பெற்றிருந்தார்கள். அவர்களுடைய பெயர்கள் எங்கும் ஒலித்தன. ஆனால் அவர்கள் இறந்த பின், அவர்களது பதவி, பெயர் மற்றும் அனைத்துமே மாறிப் போயிற்று. பல பெரிய மனிதர்களும், சீமாட்டிகளும் அடக்கம் பண்ணப்பட்டிருக்கும் ஒரு கல்லறையின் மீது எழுதப்பட்டிருக்கும் ஒரு வாசகத்தை இங்கு நாம் கவனிப்பது பயனுள்ளதாக இருக்கும்: ""எல்லா மேன்மையும், எல்லா உலக ஆடம்பரமும், எல்லா அழகும் முடிந்து போகும் இடத்தைப் பார். புழுக்களும், தூசும், மதிப்பற்ற ஒரு கல்லும், கொஞ்சம் மணலும், அனைத்திற்கும் இறுதியில் அந்தக் குறுகிய காட்சியை முடித்து வைக்கின்றன!''

ஓ ஆண்டவரே, உலகின் வெறுமைக்குப் பின்னால் இவ்வளவு அதிகமாக ஓடி, இராஜரீக நன்மையாகிய உம்மை விட்டுப் பிரிந்திருந்ததில் நான் எவ்வளவு ஈனமுள்ளவனாக இருந்திருக்கிறேன்!

"இவ்வுலகத்தின் கோலம் மாயமாய்ப் போகிறது'' (1கொரி.7:31). நம் வாழ்வு வேகமாகக் கடந்து போய் முடிகிற ஒரு காட்சி மட்டுமே. உயர்குடியினரும், சாமானியரும், அரசர்களும், குடிகளும், செல்வந்தவர்களும், ஏழைகளுமான அனைவரின் வாழ்வும் ஒரு நாள் முடிந்து போகிறது. இதில், கடவுளுக்கு முன்பாகத் தன் பாத்திரத்தை நல்ல முறையில் நடித்து முடித்தவன் பேறுபெற்றவன். ஸ்பெயின் அரசரான மூன்றாம் பிலிப் தமது 42ம் வயதில் இறந்தார்; தாம் சாவதற்கு முன் அவர் தம் அருகில் நின்றவர்களிடம்: ""நான் இறந்தவுடன், இப்போது நீங்கள் காணும் காட்சியை மக்களுக்கு அறிவியுங்கள்; ஓர் அரசனாய் இருந்திருப்பது, மரணத்தில், தான் இரு வரை அரசாண்டது பற்றிய வேதனையை உணரச் செய்வதற்கு மட்டுமே பயன்படுகிறது என்று அறிவியுங்கள்'' என்றார். அதன்பின் அவர், ""ஓ, நான் இவ்வளவு காலமும் ஒரு வனாந்தரத்தில் இருந்து, ஒரு புனிதனாகியிருந்தால், இப்போது சேசுநாதரின் நீதியாசனத்திற்கு முன்பாக அதிக நம்பிக்கையோடு தோன்றுவேனே!'' என்று சொல்லிப் புலம்பினார்.

பேரரசி இசபெல்லாவின் பிணத்தின் காட்சி அர்ச். பிரான்சிஸ் போர்ஜியாவின் வாழ்வில் ஏற்படுத்திய மாற்றத்தை நாம் அறிவோம். அவள் உயிரோடு இருந்தபோது, மிகச் சிறந்த அழகியாயிருந்தாள். ஆனால் மரணத்திற்குப் பிறகு, தன்னைக் கண்டவர்கள் அனைவருக்கும் அவள் கடும் அச்சத்தை வருவித்தாள். அவளது பிணத்தைக் கண்டதும் போர்ஜியா அதிசயித்தபடி: ""இவ்வுலகின் நற்காரியங்களின் முடிவு இதுதானா!'' என்றார். அதன்பின் அவர் தம்மை முழுமையாகக் கடவுளுக்கு அர்ப்பணித்தார். ஓ, மரணம் வருமுன் நாம் அனைவரும் அவரைக் கண்டுபாவிக்க முடிந்தால் எவ்வளவு நல்லது! ஆயினும் நாம் இதில் அவசரப்படுவது அவசியம். ஏனெனில் மரணம் நம்மை நோக்கி ஓடி வந்து கொண்டிருக்கிறது. அது எப்போது வந்து சேரும் என்று நமக்குத் தெரியாது. நம் கரங்களில் மரணத்தின் மெழுகுவர்த்தியை நாம் பிடித்திருக்கும் போது, கடவுள் நமக்குத் தரும் ஒளி, நம் மனவுறுத்தலை அதிகரிப்பதற்கே தவிர வேறு ஒன்றுக்கும் உதவாது. ஆகவே, மரண நேரத்தில் நம்மால் எதுவும் செய்ய முடியாது என்பதால், அப்போது நாம் எதையெல்லாம் செய்து முடித்திருக்க வேண்டும் என்று விரும்புவோமோ, அதையெல்லாம் இப்போதே செய்யப் பிரதிக்கினை செய்வோமாக.

இல்லை, என் தேவனே, இது வரை என்னைப் பொறுத்துக் கொண்டது போதாது; நான் என்னை முழுமையாக உமக்கு அர்ப்பணிப்பதைக் காண நீர் இனியும் காத்திருப்பதை நான் விரும்பவில்லை. இந்த உலகை விட்டு விலகி, என்னை முழுவதும் உமது அன்புக்குக் கையளிக்கும்படி நீர் என்னைப் பல முறை எச்சரித்திருக்கிறீர். இப்போது உம்மிடம் திரும்புமாறு நீர் என்னை அழைக்கிறீர்; இதோ நான் வருகிறேன். உமது கரங்களில் என்னை ஏற்றுக் கொள்ளும். நான் என்னை முழுமையாக உமக்கு அர்ப்பணிக்கிறேன். ஓ, எனக்காகச் சிலுவையில் பலியான மாசற்ற செம்மறிப்புருவையே, உமது திரு இரத்தத்தால் முதலில் என்னைக் கழுவி, என்னிடமிருந்து நீர் பெற்றுக்கொண்ட எல்லாக் காயங்களையும் மன்னித்தருளும். அதன்பின் உமது பரிசுத்த அன்பால் நான் பற்றியெரியச் செய்தருளும். எல்லாற்றிற்கும் மேலாக நான் உம்மை நேசிக்கிறேன். என் முழு இருதயத்தோடு நான் உம்மை நேசிக்கிறேன். உம்மை விட என் அன்புக்கு அதிகத் தகுதியானதும், என்னை அதிகமாக நேசித்துள்ளதுமான எதை இவ்வுலகில் நான் காணப் போகிறேன்? ஓ மரியாயே, சர்வேசுரனுடைய மாதாவே, எனக்காகப் பரிந்துபேசுபவர்களே, எனக்காக ஜெபியுங்கள்; ஓர் உண்மையான, நீடித்த வாழ்க்கை மாற்றத்தை எனக்குப் பெற்றுத் தாருங்கள். உங்களில் நான் என் நம்பிக்கையை வைக்கிறேன்.