துன்ப சோதனையின் நிலம்

1875 ஏப்ரல் 30 “நல்லிரவு” உரையில், மே மாத பக்திமுயற்சி களை பக்தியோடு அனுசரிக்கும்படி டொன் போஸ்கோ சிறுவர் களுக்கு அறிவுறுத்தினார். ஆகவே, தங்கள் கடமையை நிறைவேற்றுவதிலும், மாமரிக்குத் தோத்திரமாக ஏதாவது ஒரு விசேஷ பக்தி முயற்சியைத் தேர்வு செய்வதிலும் இன்னும் அதிக விழிப்பாயிருக்கும்படி அவர்களை வற்புறுத்திய பிறகு, தாம் அவர்களுக்குச் சொல்ல வேண்டிய கனவு ஒன்று உள்ளது என்றும், ஆனால் ஏற்கனவே தாமதமாகி விட்டதால், அதை மறுநாள், ஞாயிற்றுக்கிழமை சொல்வதாகவும் அவர் கூறினார்.

சிறுவர்களோ பொறுமையற்றவர்களாகத் தனியே விடப் பட்டனர். டொன் போஸ்கோவுக்கு வேலை அதிகமிருந்ததால், மேலும் இரண்டு நாட்களுக்கு அந்தக் கனவைப் பற்றிய விவரிப்பு தள்ளிப் போன போது, சிறுவர்களின் வினோதப் பிரியம் இன்னும் அதிகமாகத் தூண்டப்பட்டது. இறுதியாக, மே 4 அன்று இரவில் அவர்களுடைய வினோதப் பிரியம் திருப்திப்படுத்தப்பட்டது. ஜெபங்களுக்குப் பிறகு, டொன் போஸ்கோ வழக்கம் போல, சிறிய போதக மேடையில் ஏறி அவர்களுக்கு உரையாற்றினார்:

இதோ என் வாக்குறுதியை நிறைவேற்ற வந்திருக்கிறேன். கனவுகள் உறக்கத்தில்தான் வரும் என்று உங்களுக்குத் தெரியும். தியான நாள் நெருங்கி வந்த போது, என் சிறுவர்கள் அதை எப்படிச் செய்யப் போகிறார்கள், அது பயனுள்ளதாக இருக்க நான் அவர்களுக்கு என்ன ஆலோசனை தரப் போகிறேன் என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன் ஏப்ரல் 25, ஞாயிறு இரவில், அதாவது தியானத்திற்கு முந்திய நாளில், நான் என் மனதில் இந்த எண்ணத்தோடு படுக்கச் சென்றேன். உடனே அயர்ந்து உறங்கியும் விட்டேன். அப்போது நான் ஒரு மிகப் பரந்த பள்ளத்தாக்கில் தன்னந் தனியாக நின்று கொண்டிருப்பதாகத் தோன்றியது. அதன் இரு பக்கங்களிலும் உயர்ந்த குன்றுகள் இருந்தன. பள்ளத்தாக்கின் தொலைவான மறு மூலையில், நிலம் செங்குத்தாக எழுந்து நின்ற ஒரு பக்கம் நெடுக, ஒரு மாசற்ற, பிரகாசமான ஒளி இருந்தது. மறு பக்கமோ அரையிருளில் இருந்தது. நான் சமவெளியை உற்று நோக்கியபடி நின்று கொண்டிருக்கையில், புஸ்ஸெட்டியும், காஸ்டினியும் என்னிடம் ஏறி வந்து, “டொன் போஸ்கோ , நீர் ஒரு குதிரையில் ஏறிக் கொள்ள வேண்டும். சீக்கிரம்! சீக்கிரம்!” என்று என்னை அவசரப்படுத்தினார்கள்.

“கேலி செய்கிறீர்களா?” என்று நான் கேட்டேன். “நான் குதிரை ஒன்றில் கடைசியாக சவாரி செய்து எவ்வளவு காலமாகிறது என்று உங்களுக்குத் தெரியுமே.” அவர்கள் என்னை வற்புறுத் தினார்கள். ஆனால் நான் சாக்குப்போக்குச் சொல்லும் முயற்சியில் தொடர்ந்து, “நான் குதிரை சவாரி செய்ய விரும்பவில்லை. ஒரு முறை அதற்கு முயற்சி செய்தபோது, கீழே விழுந்து விட்டேன்” என்று சொல்லிக் கொண்டேயிருந்தேன்.

காஸ்டினியும், புஸ்ஸெட்டியும் மேலும் அதிகமாக என்னை வற்புறுத்திக் கொண்டேயிருந்தனர். “குதிரையில் ஏறுங்கள், சீக்கிரமாக. இழப்பதற்கு நமக்கு நேரமில்லை” என்று அவர்கள் சொன்னார்கள்.

“நான் குதிரையில் ஏறுவதாகவே வைத்துக் கொள்வோம். என்னை எங்கே கூட்டிச்செல்லப் போகிறீர்கள்?"

“நீங்களே பார்ப்பீர்கள். இப்போது, விரைந்து குதிரை மீது ஏறுங்கள்.”

“ஆனால் குதிரை எங்கே? நான் அப்படி எதையும் காண வில்லையே!”

“அதோ அங்கே இருக்கிறது” என்று கத்தினார் காஸ்டினி, பள்ளத்தாக்கின் ஒரு பக்கத்தைச் சுட்டிக் காட்டியபடி. நான் அந்தத் திசையில் பார்த்தபோது, அழகும், துடிப்பும் நிறைந்த ஒரு குதிரையை அங்கே கண்டேன். அதன் கால்கள் நீளமாகவும், பலமாகவும் இருந்தன, பிடரிமயிர் அடர்த்தியாக இருந்தது, அந்தக் குதிரை மிகப் பளபளப்பாக இருந்தது.

“சரி. நீங்கள் விரும்புவதால், நான் அதில் ஏறுகிறேன். ஆனால் நான் விழுந்து விட்டால், உங்களுக்குத்தான் கேடு” என்று நான் சொன்னேன்.

“கவலைப்படாதீர்கள். அவசரத்திற்கு நாங்கள் உங்களோடு இங்கே இருப்போம்” என்று அவர்கள் பதில் கூறினார்கள்.

“நான் என் கழுத்தை முறித்துக் கொண்டால், நீங்கள்தான் அதை ஒட்ட வைக்க வேண்டும்” என்று நான் புஸ்ஸெட்டியிடம் கூறினேன்.

புஸ்ஸெட்டி பலமாய் சிரிக்கத் தொடங்கினார். “இது சிரிப் பதற்கான நேரம் அல்ல” என்று காஸ்டினி முணுமுணுத்தார்.

நாங்கள் அந்தக் குதிரையை நோக்கி நடந்தோம். அவர்கள் எனக்கு உதவி செய்தும் கூட, அதன்மீது ஏறுவது எனக்கு மிகவும் சிரமமாக இருந்தது. ஆனால் இறுதியாக நான் சேணத்தின் மீது ஏறி அமர்ந்து விட்டேன். அப்போது அந்தக் குதிரை எவ்வளவு உயரமானதாகத் தோன்றியது. பள்ளத்தாக்கின் ஒரு முனை முதல் மறு முனை வரை ஆய்வு செய்யக் கூடிய ஓர் உயர்ந்த பீடத்தின்மீது நான் ஏறியிருந்தது போலத் தோன்றியது.

அதன்பின் குதிரை நகரத் தொடங்கியது. விசித்திரமாக, இது நிகழ்ந்து கொண்டிருந்த போது, நான் என் அறையில் இருப்பது போலத் தோன்றியது. “நாம் எங்கே இருக்கிறோம்?” என்று நான் என்னையே கேட்டுக் கொண்டேன். அப்போது குருக்களும், துறவியரும், மற்றவர்களும் என்னை நோக்கி வருவதை நான் பார்த்தேன். எல்லோரும் அச்சமடைந்தவர்களாகவும், மூச்சுக்குத் தவிப்பவர்களைப் போலவும் தோன்றினார்கள்.

ஒரு நீண்ட சவாரிக்குப் பிறகு, குதிரை நின்றது. அப்போது ஆரட்டரியின் எல்லா குருக்களும், பல துறவிகளோடு ஒன்றாக என்னை நெருங்கி வருவதை நான் கண்டேன். அவர்கள் குதிரையைச் சூழ்ந்து ஒன்றுகூடினர். அவர்களில் சுவாமி ருவாவையும், சுவாமி காலியேரோவையும், சுவாமி பொலோஞ்ஞாவையும் நான் அடையாளம் கண்டு கொண்டேன். அவர்கள் என்னை வந்தடைந்த போது, அவர்கள் நின்று, மௌனமாக என் குதிரையை உற்றுப் பார்த்தார்கள். எல்லோருமே கவலையாகத் தோற்றமளித்ததை நான் கவனித்தேன். அவர்களுடைய அமைதியின்மை இதற்கு முன் நான் ஒருபோதும் காணாததாயிருந்தது. நான் சுவாமி பொலோஞ்ஞாவை சைகை செய்து அழைத்தேன். “சுவாமி பொலோஞ்ஞா, முக்கிய நுழைவாயிலுக்குப் பொறுப்பானவர் நீங்கள்தான்; என்ன நடந்தது என்று சொல்ல முடியுமா? நீங்கள் ஏன் இவ்வளவு நிலைகுலைந் தவர்களாகத் தோன்றுகிறீர்கள்?” என்று நான் கேட்டேன்.

“நான் எங்கே இருக்கிறேன் என்றோ, என்ன செய்து கொண் டிருக்கிறேன் என்றோ எனக்குத் தெரியவில்லை . நான் முழுவதும் குழம்பிப் போயிருக்கிறேன். . . சிலர் உள்ளே வந்தார்கள். . . பேசினார்கள், அதன்பின் போய்விட்டார்கள் . . . என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று எனக்குத் தெரியாத அளவுக்கு முக்கிய நுழைவாயிலில் உள்ளே வந்து போய்க் கொண்டிருப்பவர்களின் பெரும் அமளி நிலவுகிறது” என்று அவர் பதிலளித்தார்.

“மிகவும் அசாதாரணமான ஒன்று இன்று நிகழ வாய்ப்பிருக் கிறதா?” என்று நான் கேட்டேன்.

சரியாக அந்நேரத்தில் ஒருவர் என்னிடம் வந்து ஓர் எக்காளத்தை என்னிடம் தந்தார். எனக்கு அது தேவைப்படும் என்பதால், அதைக் கையில் வைத்துக் கொள்ளும்படி அவர் என்னிடம் கூறினார்.

“நாம் இப்போது எங்கே இருக்கிறோம்?” என்று நான் கேட்டேன்.

“எக்காளத்தை ஊதுங்கள்!”

நானும் அப்படியே செய்த போது, 'நாம் துன்ப சோதனையின் நாட்டில் இருக்கிறோம்” என்ற வார்த்தைகளைக் கேட்டேன். 

அதன்பின் பெருந்திரளான சிறுவர்கள் - அவர்கள் ஒரு இலட்சம் பேர் இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன் - குன்றுகளிலிருந்து இறங்கி வருவதை நான் கண்டேன். அங்கே முழு நிசப்தம் நிலவியது. களைவாரிகளைச் சுமந்தவர்களாக அவர்கள் பள்ளத் தாக்கை நோக்கி விரைந்து சென்றார்கள். அவர்களில் ஆரட்டரியைச் சேர்ந்த எல்லாச் சிறுவர்களையும் நம் மற்ற பள்ளிகளைச் சேர்ந்த சிறுவர்களையும் நான் அடையாளம் கண்டுகொண்டேன். ஆனால் எனக்குத் தெரியாத இன்னும் பல சிறுவர்கள் இருந்தார்கள். சரியாக இந்நேரத்தில் பள்ளத்தாக்கின் ஒரு பக்கத்தில் வானம் இருண்டது. சிங்கங்களையும், புலிகளையும் போன்ற மிருகங்களின் கூட்டங்கள் தோன்றின. இந்த வெறிபிடித்த மிருகங்கள் பெரிய உடல்களையும் பலமான கால்களையும், நீண்ட கழுத்துகளையும் கொண்டிருந்தன. ஆனால் அவற்றின் தலைகள் மிகவும் சிறியதாக இருந்தன. அவை அச்சமூட்டுபவையாக இருந்தன. தங்கள் கண்குழிகளில் துருத்திக் கொண்டிருந்த இரத்தச் சிவப்பான கண்களோடு அவை சிறுவர்கள் மீது பாய்ந்தன. அவர்கள் உடனே தங்களைக் காத்துக் கொள்ளத் தயாராக நின்றார்கள். மிருகங்கள் தாக்கிய போது, சிறுவர்கள் உறுதியாக நின்று, தங்கள் நீண்ட கம்பிகள் உள்ள களைவாரிகளால் அவற்றை அடித்தார்கள். தேவைப்பட்ட போதெல்லாம் அவர்கள் அவற்றை மேலும் கீழுமாக நகர்த்திக் கொண்டிருந்தனர்.

இந்த முதல் தாக்குதலால் அவர்கள்மீது வெற்றி கொள்ள முடியாத இந்த மிருகங்கள் களைவாரிகளின் கம்பிகளைக் கடிக்க முயன்றன, ஆனால் அவற்றின் பற்கள் உடைந்து அவை மறைந்து போனதுதான் நடந்தது. ஆயினும் சில சிறுவர்கள் ஒரே ஒரு கம்பி உள்ள களைவாரிகளை வைத்திருந்தார்கள். இந்தச் சிறுவர்கள் காயப் படுத்தப்பட்டார்கள். மற்றவர்கள் உடைந்த, அல்லது புழு அரித்த கைப்பிடிகள் உள்ள களைவாரிகளை வைத்திருந்தார்கள். இன்னும் பலர் வெறுங்கைகளோடு அந்த மிருகங்களை எதிர்கொண்டு, அவற்றின் தாக்குதலுக்கு ஆளானார்கள்; இவர்களில் மிகச் சிலர் மட்டுமே கொல்லப்பட்டார்கள். பலர் இரண்டு கம்பிகளும், புதிய கைப்பிடிகளும் உள்ள களைவாரிகளை வைத்திருந்தார்கள்.

இது நடந்து கொண்டிருந்த போது, தொடக்கத்திலிருந்தே பாம்புகளின் கூட்டங்கள் என் குதிரையைச் சுற்றி ஊர்ந்து கொண்டிருந்தன. என் குதிரை அவற்றை உதைத்தும், மிதித்தும், அவற்றை நசுக்கித் துரத்திக் கொண்டிருந்தது. அதே வேளையில் அது மேலும் மேலும் உயரமாக வளர்ந்து கொண்டேயிருந்தது.

இரண்டு கம்பிப்பட்டைகள் உள்ள களைவாரிகள் எதைக் குறிக்கின்றன என்று நான் ஒருவரிடம் கேட்டேன். என்னிடம் ஒரு களைவாரி தரப்பட்டது. அதன் கம்பிகளில் ஒன்றில் பாவசங்கீர்த் தனம் என்றும், மற்றொன்றில் திவ்விய நன்மை என்றும் எழுதப் பட்டிருந்ததை நான் வாசித்தேன்.

“ஆனால் கம்பிப்பட்டைகள் எதைக் குறிக்கின்றன?”

“எக்காளத்தை ஊதுங்கள்!”

நானும் அப்படியே செய்ய, அப்போது, “நல்ல பாவசங்கீர்த் தனம் மற்றும் நல்ல திவ்விய நன்மை” என்ற வார்த்தைகளைக் கேட்டேன். நான் மறுபடியும் எக்காளத்தை ஊதியபோது, “உடைந்த கைப்பி: தேவத்துரோகமான பாவசங்கீர்த்தனங்களும், நன்மைகளும். புழு அரித்த கைப்பிடி: தவறான பாவசங்கீர்த்தனம்” என்ற வார்த்தைகளைக் கேட்டேன்.