இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

கன்னியர்களுடைய இராக்கினியே!

மெய்விவாக அந்தஸ்திலிருந்து கொண்டு, சரீர இன்பங்களை அனுபவிக்க ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. ஆனால் கடவுள்பால் வைத்த நேசத்தால் இவ்வுரிமையை உதறித் தள்ளிவிட்டு தனிவாழ்க்கை நடத்துபவர்கள் “கன்னியர்” எனப்படுவர். கன்னியர் என்னும் சொல், மடங்களில் வாழும் துறவறப் பெண்களை முக்கியமாகக் குறிப்பிட்டாலும், துறவற அந்தஸ்திலுள்ள குருக்களையும், சந்நியாசிகளையும் குறிக்குமென்றறிக.

திருச்சபையில் எத்தனையோ ஆண்களும், பெண்களும் உலகையும், சரீர இன்பங்களையும் துறந்து கன்னியர்களாய் தங்கள் கற்பைப் பழுதறக் காத்து வருகின்றனர். இதைக் கண்டு புற மதத்தினர் வியப்படைகின்றனர். மனித சுபாவத்திற்குக் கடினமான இவ்வந்தஸ்தைத் தெரிந்து கொள்ளுமாறு அவர்களைத் தூண்டுவது, தேவசிநேகமும், மாமரி காட்டிய நன் முன்மாதிரிகையுமேயாகும். கன்னிமையைப் பற்றியும் அதன்மீது மாமரிக்கு இருந்த பற்றுதலைக் குறித்தும் முன்னர் அடிக்கடி, விசேஷமாக 12-வது, 17-வது புகழைப் பற்றிக் கூறியபோது எடுத்துரைத்துள்ளோம். அவற்றை இப்பொழுது வாசித்தல் நலம்.

கன்னியாஸ்திரீகளுடைய இராக்கினியே!
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!