வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னையின் திருத்தலப் பேராலய வரலாறு - ஆலயமும் அதன் சிறப்பும்

வேளாங்கண்ணியின் ,மக்கள் தொகை 5000 தான். ஆனால் அங்கு அன்றாடம் வந்து போவோரின் தொகை ஆயிரமாயிரமாகப் பெருகி வருகிறது. அங்கே அஞ்சலகம், காவல் நிலையம், மருந் தகங்கள், சிறுவர் இல்லங்கள், முதியோர் இல்லம், உயர் நிலைக் கல்விக்கூடம், பேருந்து நிலையம், குடிநீர்க் குழாய், தொலைபேசி இணைப்பகம், வங்கி முதலிய வசதிகள் எல்லாம் உண்டு. 

நாள்தோறும் சந்தை கூடுகிறது. அருகில் உள்ள சிற்றூர்களில் விளைவனவும், வகை வகையான கடல் மீன்களும் இந்தச் சந்தை யில் விற்பனைக்குக் கொணரப்படுகின்றன. இவையெல்லாம் வளர்ந்து வரும் ஒவ்வொரு ஊரிலும் இருப்பவைதாம்..... ஆனால் வேளாங்கண்ணிக்கே உரிய ஒரு சிறப்பம்சம் உண்டு. அது தான் விண்ணையும் மண்ணையும் உய்வித்த இறைமகன் இயேசுவின் தாய் கன்னி மரியாள் இங்கே கோயில் கொண்டு அருள்பொழியும் காட்சி ;

அன்னையின் பேராலயம் கடலை நோக்கி எழுந்து 
உயர்ந்து நிற்கும் மாட்சி; அதனுள் -
விண்ணக மண்ணக அரசி மரியாள் 
இரக்கத்தின் அரியணையில் வீற்றிருக்கும் தோற்றம் 
உள்ளத்தை அள்ளும் கண்கொள்ளாக் காட்சி.

“அம்மா” என்றழைத்து, அபயம் தேடி வருவோர்க்கெல்லாம் ஆறுதல் அளிக்கும் அடைக்கலமாக விளங்குகிறாள் அன்னை ; தன்னை நாடி வரும் எல்லா இனத்தவர்க்கும், எல்லா சமயத்தவர்க்கும், எல்லாக் குலத்தவர்க்கும் அருள் மழை பொழியும் முகிலாக விளங்குகிறாள். கடலோரப் பாறைகளில் மழைத் துளிகள் பட்டு, அவை சிதறுவதைப் போல, தன்னை அண்டி வருவோரின் துன்ப துயரப் பேரலைகள் எல்லாம் பேராலயப் படிகளிலேயே பனிபோல மறைந்து போகச் செய்கிறாள் மாதா. நலம் கொடுக்கும் நம்பிக்கையின் பேரொளியாக ஆரோக்கிய அன்னை விளங்குகிறாள்.

ஆம்! ஆரோக்கிய அன்னை வீற்றிருக்கும் வேளாங்கண்ணி, கீழை நாட்டு மக்களுக்கெல்லாம் ஒரு கலங்கரை விளக்கமாக ஒளிவீசி, வழிகாட்டுகிறது. மக்களது மனம் என்னும் மரக்கலங்கள் தம் நன்றிக் காணிக்கைகளைச் சுமந்தபடி அன்னையின் ஒளி காட்டும் அந்த வழியிலே அணிவகுத்து வந்தவண்ணம் உள்ளன.

'வேளாளன் காணி' - வேளாள மரபினர் வாழ்ந்த இடமாகையால் இது வேளாங்கண்ணி என அழைக்கப்படுவதாக அறிஞர்கள் விளக்கம் தருவர். வேளாங்கண்ணி என்பது காரணப் பெயர். வேளாளர் என்பார் விருந்திருக்க உண்ணாதார் என்பது போல (வேளாண்மை என்றால் உபகாரம் என்பது உரிய பொருள்.) உபகாரமாம் கன்னி மரியன்னை கோவில்கொண்டு வரங்களை வாரி வழங்கும் ஊர் வேளாங்கண்ணி என்றும் நாம் கொள்ளலாம்.

"வேளை நகரென்று சொன்னாலே - துன்ப 
வேதனை நீங்கிடும் தன்னாலே 
நாளும் அருள் கன்னித் தாயாலே - எய்தும் 
நன்மை சொலப்போமோ வாயாலே.” - புலவர் தாமஸ்