இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

சுத்திகரிப்பு (பாதம் கழுவும்) சடங்கு.

சேசு எழுகிறார். தாம் எளிதாக வெளியே வரும்பொருட்டு அருளப்பரை எழுந்து நிற்கச் சொல்கிறார். பின் அவர் பெட்டியின் அருகே சென்று தம் சிவப்பு அங்கியைக் கழற்றி மடித்து, அங்கே ஏற்கெனவே மடித்து வைக்கப்பட்டிருக்கிற தம் மேல்வஸ்திரத்தின் மேல் வைக்கிறார். ஒரு பெரிய துண்டை எடுத்து இடுப்பில் கட்டுகிறார். சுத்தமாகவும், காலியாகவுமிருக்கிற ஒரு பெரிய வட்டப் பாத்திரத்தருகில் வந்து அதனுள் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அறையின் நடுவில் ஒரு மேசைக்கருகே கொண்டுவந்து அதை ஒரு இருக்கையின் மேல் வைக்கிறார். அப்போஸ்தலர்கள் வாயடைத்தவர்களாய் அவரையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

“நான் என்ன செய்கிறேன் என்று நீங்கள் யாரும் என்னைக் கேட்கவில்லையா?” என்று கேட்கிறார் சேசு.

“அது எங்களுக்குத் தெரியவில்லை. நாங்கள் எல்லாரும் ஏற்கெனவே சுத்திகரம் செய்துவிட்டோம்” என்று இராயப்பர் பதிலளிக்கிறார்.

“நான் மீண்டும் சொல்கிறேன். அது பரவாயில்லை. என்னுடைய சுத்திகரிப்பு ஏற்கெனவே சுத்தமாயிருக்கிறவனை மேலும் சுத்தமாக்கும்.” 

சேசு முழங்காலிட்டு யூதாஸின் காலணிகளை அவிழ்த்து அவனுடைய பாதங்களைக் கழுவுகிறார். ஒவ்வொரு பாதமாகக் கழுவுகிறார். அதைச் செய்ய வசதியாக இருக்கிறது. ஏனென்றால் அவர்கள் சாய்ந்திருக்கிற சாய்மணைகள் கால்கள் வெளியே இருக்கும்படியாக அமைந்துள்ளன. யூதாஸ் ஆச்சரியமடைகிறான். அவன் எதுவும் பேசவில்லை. சேசு அவன் இடது காலின் பாதரட்சையை அணிவித்து எழுந்திருக்குமுன் அவனுடைய காலணி கட்டிய வலது பாதத்தை முத்தமிடும் போது யூதாஸ், அப்படிச் செய்ய வேண்டுமென்று நினைக்காமல் காலை வேகமாக இழுத்துக் கொண்டதால் சேசுவின் தெய்வீகமான வாயைத் தன் குதிங் காலால் இடித்து விடுகிறான். அடி பலமாகப் படவில்லை. ஆயினும் எனக்கு அதனால் அதிக வருத்தம் ஏற்படுகிறது. சேசு புன்னகை செய்கிறார். “நான் இடித்து விட்டேனா? நான் நினைக்கவில்லை... மன்னித்துக் கொள்ளும்” என்கிறான் யூதாஸ். “இல்லை நண்பா, நீ வேண்டுமென்று செய்யவில்லை. அது பாதிக்கவில்லை” என்று சேசு சொல்கிறார். யூதாஸ் அவரைப் பார்க்கிறான்... ஒரு குழம்பிய தட்டிக் கழிக்கும் பார்வை...

சேசு அடுத்ததாக தோமையாரிடமும் பின் பிலிப்புவிடமும் வருகிறார். மேசையின் ஒடுங்கிய பக்கம் வழியாகச் சுற்றி வந்து தம் சகோதரர் யாகப்பரை அடைகிறார். அவருடைய பாதங்களைக் கழுவியபின் எழும்பும் போது அவருடைய நெற்றியில் முத்தமிடுகிறார். அதன்பின் பிலவேந்திரரிடம் வருகிறார். பிலவேந்திரர் கூச்சத்தால் சிவந்து தம் அழுகையை அடக்க முயல்கிறார். சேசு அவர் பாதங்களைக் கழுவி அவரை ஒரு குழந்தையைப் போல் முத்தஞ் செய்கிறார். அடுத்து செபெதேயுவின் யாகப்பர். அவர் சேசுவைப் பார்த்து: “ஆண்டவரே, ஆண்டவரே, ஓ ஆண்டவரே! நீர் உம்மையே கீழாக்குகிறீரே, என் உந்நத ஆண்டவரே!” என்று முணுமுணுக்கிறார். அருளப்பர் ஏற்கெனவே தன் காலணிகளை அவிழ்த்து விட்டிருக்கிறார். சேசு அவருடைய பாதங்களைக் குனிந்து துடைத்தபோது, அவர் சேசுவின் சிரசில் முத்தமிடுகிறார்.

ஆனால் இராயப்பரை இந்த சடங்கிற்குப் பணியும்படி செய்வது எளிதாயில்லை. “என் பாதங்களைக் கழுவ நீர் விரும்புகிறீரா? அதை நினைக்கக் கூட வேண்டாம். நான் உயிரோடிருக்கும் வரையிலும் நீர் அப்படிச் செய்ய நான் விட மாட்டேன். நான் ஒரு புழு. நீரோ கடவுள். அவரவர் ஸ்தானத்தில் அவரவர்.” 

“நான் செய்வதை இப்பொழுது உன்னால் கண்டுபிடிக்க முடியாது. பின்னால் கண்டுபிடிப்பாய். என்னைச் செய்யவிடு.” 

“ஆண்டவரே! நீர் விரும்புகிற எதையும் செய்து கொள்ளும். என் கழுத்தை வெட்ட வேண்டுமா, வெட்டும். ஆனால் என் பாதங்களை நீர் ஒருபோதும் கழுவக்கூடாது.” 

“ஓ என் சீமோனே! நான் உன் பாதங்களைக் கழுவாவிட்டால் என் இராச்சியத்தில் உனக்குப் பங்கு இராது என்பதை நீ அறியமாட்டாயா? சீமோனே! உன் ஆத்துமத்திற்கு இந்தத் தண்ணீர் தேவைப்படுகிறது. அதற்கும் நீ செய்ய வேண்டிய நெடும் பயணத்திற்கும் அது தேவைப்படுகிறது. என்னுடன் வர நீ விரும்பவில்லையா? நான் உன் பாதங்களைக் கழுவாவிட்டால் நீ என் இராச்சியத்திற்கு வர மாட்டாய்.” 

“ஓ! ஆசீர்வதிக்கப்பட்ட என் ஆண்டவரே, அப்படியென்றால் என் சரீரம் முழுவதையும் கழுவும்; கால்களையும், கைகளையும், தலையையும் கழுவும்.” 

“உன்னைப் போல் குளித்துள்ளவனுக்கு தன் பாதங்களைக் கழுவுவதே போதுமானது - அவன் முழுவதும் சுத்தமாயிருப்பான். பாதங்கள்... பாதங்களைக் கொண்டு மனிதன் அசுத்தத்தில் நடக்கிறான். அதுவும் அவ்வளவு பெரிதல்ல. ஏனென்றால் நான் சொல்லியுள்ளது போல் உணவுடன் உட்சென்று வெளியேறுவது அல்ல அசுத்தப்படுத்துவது. தெருக்களில் அவன் பாதங்களில் படிவது அவனுக்கு அசுத்தமானதல்ல. ஆனால் மனிதனுடைய இருதயத்திற்குள் புதைந்து விளைந்து அங்கிருந்து வெளிவருவது தான் அவன் செயல்களையும் அங்கங்களையும் அசுத்தப்படுத்துகின்றது. கெட்ட உள்ளமுடைய மனிதனின் பாதங்கள் அக்கிரமங்களுக்கும் ஆசாபாசங்களுக்கும் விலக்கப்பட்ட தொழில்களுக்கும் குற்றங் களுக்கும் நடந்து போகின்றன. ஆதலால் உடலின் பல அங்கங் களிலும் பாதங்களே கூடுதல் சுத்திகரம் பெற வேண்டியவை. மனிதனுடைய கண்களைக் கொண்டும், வாயைக் கொண்டும் - ஓ மனிதனே! மனிதனே! உத்தமமான ஒரு நாட் ஜீவன்: ஆதி மனிதன்! அதன்பின் வஞ்சிப்பவனால் இவ்வளவுக்குக் கெடுக்கப்பட்டவன்! அப்போது உன்னிடம் வஞ்சமில்லை. உன்னிடம் பாவமில்லை... ஆனால் இப்பொழுது? நீ முழுவதும் வஞ்சமும் பாவமுமாயிருக்கிறாய் - பாவஞ் செய்யாத பாகம் உன்னிடம் எதுவுமில்லை!” 

சேசு இராயப்பரின் பாதங்களைக் கழுவி அவற்றை முத்தமிடுகிறார். இராயப்பர் அழுகிறார். சேசுவின் இரு கரங்களையும் தன் பெரிய கரங்களில் எடுத்து தன் கண்களில் வைத்து ஒற்றி பின் அவைகளை முத்தமிடுகிறார்.

சீமோனும் தன் பாதரட்சைகளைக் கழற்றி, எந்த ஒரு வார்த்தையும் பேசாமல் தன் பாதங்களை சேசு கழுவ விடுகிறார். பின் சேசு பர்தலோமேயுவிடம் போகப் புறப்படுகையில் சீமோன் முழங்காலிட்டு சேசுவின் பாதங்களை முத்தஞ்செய்து: “என் இரட்சகரே! நான் தீர்வையின் நேரத்தில் குழப்பமடையாதபடி, என் சரீர குஷ்டத்திலிருந்து என்னைச் சுத்தமாக்கியது போல என் பாவக் குஷ்டத்திலிருந்தும் என்னைச் சுத்திகரித்தருளும்” என்று சொல்கிறார்.மீ மீ அப்போஸ்தலரான தீவிர சீமோன் குஷ்டரோகத்திலிருந்து சேசுவால் குணமாக்கப்பட்டவர்.

“பயப்படாதே சீமோன். நீ மலையின் உறைபனி போல் வெண்மையாக மோட்ச பட்டணத்திற்கு வருவாய்” என்கிறார் சேசு.

“ஆண்டவரே! என்னைப் பற்றி? உம்முடைய முதிய பர்தலோமேயுவுக்கு என்ன சொல்லப் போகிறீர்? அத்திமரத்தின் நிழலில் என்னைக் கண்டீர்; என் இருதயத்தை வாசித்தீர். இப்பொழுது என்ன காண்கிறீர்? எங்கே என்னைக் காண்கிறீர்? இந்த எளிய வயோதிபனுக்கு உறுதி கூறும். நீர் என்னை எப்படியிருக்க விரும்புகிறீரோ அப்படி நான் ஆவதற்கு வேண்டிய பலமும் காலமும் பற்றாதென்று பயப்படுகிறேன்” என்கிறார். மிகவும் உணர்வுடன் காணப்படுகிறார்.

“பர்தலோமே, நீயும் பயப்படக் கூடாது. “இதோ கபடமில்லாத, உண்மையான இஸ்ராயேலன்” என்று அன்று நான் கூறினேன். இப்பொழுது கூறுகிறேன்: “இதோ கிறீஸ்துவுக்குத் தகுதியான உண்மையான கிறீஸ்தவன்.” எங்கே உன்னைக் காண்கிறேன்? ஊதா உடையணிந்து நித்திய அரியாசனத்தில். எப்பொழுதும் உன்னுடன் நான் இருப்பேன்.” 

அடுத்து யூதா ததேயுஸ். அவர் சேசுவைத் தம் பாதத்தருகில் கண்டதும் தன்னை அடக்க முடியாமல் மேசை மேல் வைத்திருந்த தம் கரங்களில் தலையை சாய்த்தபடி அழுகிறார்.

“அழாதே, என் இனிய சகோதரா. இப்பொழுது ஒரு நரம்பு வெட்டியெடுக்கப்படுவதைத் தாங்க வேண்டியவனைப் போல் இருக்கிறாய். அதை உன்னால் பொறுக்க முடியாதென்று நினைக்கிறாய். ஆனால் இது கொஞ்ச நேர வேதனைதான். அதன்பின்... நீ சந்தோஷிப்பாய். ஏனென்றால் நீ என்னை நேசிக்கிறாய். உன் பெயர் யூதா. நீ நம் பெரிய யூதாவைப் போல்: ஒரு பேராற்றல் படைத்தவனாக இருக்கிறாய். பாதுகாப்போன் என்கிறவன் நீதான். உன்னுடைய செயல்கள் ஒரு சிங்கத்தைப் போல, கர்ச்சிக்கும் இளஞ்சிங்கத்தைப் போலிருக்கும். அவபக்தியுடையவர்களை நீ எழுப்புவாய். நீ அவர்களை எதிர்கொள்ளும்போது அவர்கள் பின்வாங்குவார்கள். தீயவர்கள் பயங்கரமடைவார்கள். எனக்குத் தெரிகிறது, வீரமுடனிரு. நம்முடைய உறவை மோட்சத்தில் ஒரு நித்திய ஒன்றிப்பு பலப்படுத்தி உத்தமமாக்கும்.” இவ்வாறு கூறி சேசு தன் மற்ற சகோதரனுக்குச் செய்தது போல இவர் நெற்றியிலும் முத்தமிடுகிறார்.

“ஆண்டவரே, நான் பாவி, எனக்கு வேண்டாம்” என்கிறார் மத்தேயு.

“மத்தேயு, நீ பாவியாக இருந்தாய். இப்பொழுது நீ அப்போஸ்தலன். என் ‘குரல்களுள்’ நீயும் ஒருவன். உன்னை ஆசீர்வதிக்கிறேன். கடவுளை நோக்கி மேலும் மேலும் முன்னால் வர எவ்வளவு தூரம் நடந்துள்ளன இப்பாதங்கள்!... உன் ஆன்மா அவற்றை ஏவித் தூண்டியது. அவை என் வழி அல்லாத எல்லா வழிகளையும் விட்டுவிட்டன. முன்னே செல். இப்பாதை எங்கே முடிவடைகிறதென அறிவாயா? உன்னுடையவும், என்னுடையவும் பிதாவின் நெஞ்சில்.”

சேசு முடித்து விட்டார். அவர் துண்டை எடுத்து விட்டு சுத்தமான நீரில் தம் கரங்களைக் கழுவி, தம் ஆடைகளை அணிந்து, தமதிடத்திற்குச் செல்கிறார். அவர் உட்காரும்போது: ‘நீங்கள் இப்பொழுது சுத்தமாயிருக்கிறீர்கள். ஆனால் எல்லாருமல்ல. அப்படி இருக்க விரும்பியவர்கள்தான்’ என்று சொல்கிறார்.

சேசு யூதாஸை உற்று நோக்குகிறார். யூதாஸ் இதைக் கேளாதவன் போல் நடிக்கிறான். மத்தேயுவிடம் எப்படி தன்னுடைய தகப்பன் தன்னை ஜெருசலேமுக்கு அனுப்புவதில் கருத்தா யிருந்தாரென்று விளக்கிச் சொல்வதில் முனைப்பாக இருக்கிறான். பிரயோஜனமற்ற பேச்சு. அவன் எவ்வளவு தைரியசாலியாக இருந்தாலும் நிச்சயம் அவன் கலங்காமலிருக்க முடியாது. தனக்கு ஒரு தோற்றம் கொடுக்கவே அந்தப் பேச்சு.

சேசு மூன்றாம் முறையாக பொதுப் பாத்திரத்தில் இரசம் ஊற்றுகிறார். தாமும் பருகி மற்றவர்களுக்கும் வழங்குகிறார். பின் 114-ம் சங்கீதம் என்று நினைக்கிறேன். அதை சேசு தொடங்க மற்றவர்கள் சேர்ந்து பாடுகிறார்கள். “ஆண்டவரை நேசிக்கிறேன். ஏனெனில் அவர் என் மன்றாட்டின் குரலைக் கேட்டார். அவர் எனக்குத் தமது செவியைச் சாய்த்தபடியால் என் வாழ்நாளளவும் நான் அவரை மன்றாடுவேன். மரணத்தின் சஞ்சலங்கள் என்னைச் சூழ்ந்து கொண்டன.” 

சற்று அமைதிக்குப் பின் அவர் மறுபடியும் பாடுகிறார்: (சங். 115) “நான் விசுவசித்தபடியால் பேசினேன். ஆனால் நான் மிகவும் சிறுமையடைந்து விட்டேன். என்னுடைய கலக்கத்தில் எல்லா மனிதனும் பொய்யன் என்று சொன்னேன்...” 

சேசு யூதாஸை உற்று நோக்கிப் பார்க்கிறார். இன்று மாலை என் சேசுவின் குரல் களைத்துப் போயிருக்கிறது. ஆனால் அது பின்வரும் வசனங்களைப் பாடும்போது அதன் வலிமையை மீண்டும் பெறுகிறது: “பரிசுத்தருடைய மரணம் ஆண்டவருடைய சமூகத்தில் விலைமதிப்பானது - என் கட்டுக்களை உடைத்தீர். உமக்குத் தோத்திரப் பலி செலுத்துவேன்; ஆண்டவருடைய திருநாமத்தைக் கூவி யழைப்பேன்...” 

மேலும் சற்று அமைதி. சேசு மறுபடியும் சங்கீதத்தைத் தொடங்கிப் பாடுகிறார்: “சகல ஜனங்களே, கர்த்தரைப் புகழுங்கள். சர்வ ஜனங்களே! அவரைத் துதியுங்கள். ஏனெனில் அவருடைய தயாளம் நமது மேல் ஸ்திரப்பட்டது. கர்த்தரின் உண்மை என்றும் நிலைத்திருக்கும் (சங். 116).

யூதாஸின் குரல் எவ்வளவு அபசுரமாக கேட்கிறதென்றால், தோமையார் தம் வலிமையான கீழ் ஸ்தாயிக் குரலால் அவன் குரலை நேராகக் கொண்டுவர வேண்டியிருந்தது. அவனை அவர் உற்றுப் பார்க்கிறார். மற்றவர்களும் அவனைப் பார்க்கிறார்கள். காரணம், பொதுவாக அவன் குரல் மற்றவர்களுடன் இசைந்தே இருக்கும். அவன் எல்லாக் காரியங்களிலும் செய்வது போல் இதிலும் தன் குரலைப் பற்றிப் பெருமை கொண்டிருப்பதாக நான் உணர்ந் திருக்கிறேன். ஆனால் இந்த மாலையில் சில பாடல் கருத்துகள் அவனை நிலையிழக்கச் செய்வதால் அவன் அபசுரங்களில் பாடுகிறான். அந்த வாக்கியங்களை அழுத்துவதாக அமைந்த சேசுவின் பார்வையும் அவனை அப்படி நிலைகுலையச் செய்கின்றது. அப்படிப்பட்ட வாக்கியங்களில் ஒன்று: “மனிதன் மீது நம்பிக்கை கொள்வதை விட ஆண்டவர் மேல் நம்பிக்கை கொள்வது நலமாமே.” இன்னொன்று: ‘நான் தள்ளிவிடப்பட்டபோது தள்ளாடினேன். கீழே விழப் போனேன். ஆனால் ஆண்டவர் என்னைத் தாங்கிக் கொண்டார்.’ இன்னொன்று: ‘நான் சாக மாட்டேன். நான் வாழ்ந்து ஆண்டவரின் செயல்களை எடுத்துரைப்பேன்.’ நான் சொல்லப் போகும் மேலும் இரு வாக்கியங்கள் அந்தத் துரோகியின் குரலை அவன் தொண்டை யிலேயே வைத்து நசுக்குகின்றன: “கட்டுகிறவர்களால் ஒதுக்கப்பட்ட கல்லே கட்டிடத்தின் மூலைக் கல்லாயிற்று - ஆண்டவர் பெயரால் வருபவர் ஆசீர்வதிக்கப் பெற்றவர்.” 

சங்கீதப் பாடல் முடிவடைய சேசு பாஸ்கா ஆட்டுக் குட்டியை மறுபடியும் வெட்டிப் பரிமாறுகிறார்.

அப்போது மத்தேயு யூதாஸிடம்: “உமக்கு உடம்புக்கு நன்றாயில்லையா?” என்று கேட்கிறார்.

அதற்கு யூதாஸ்: “இல்லை. என்னைச் சும்மா விடும். என்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்” என்று சொல்கிறான்.

மத்தேயு தோள்களை அசைக்கிறார்.

அதைச் செவியுற்ற அருளப்பர்: “ஆண்டவருக்கும் உடம்பு நன்றாயில்லை. என் சேசு, உமக்கு என்ன செய்கிறது? உம்முடைய குரல் உடல் நலமில்லாத, அல்லது அதிகமாக அழுதுள்ளவனின் குரலைப் போல் பலவீனமாய் இருக்கிறதே” என்று சேசுவைப் பிடித்துக் கொண்டு அவர் மார்பில் தலையைச் சாய்த்தபடி கேட்கிறார்.

“நான் அதிகமாக நடந்து எனக்கு ஜலதோஷம் கண்டுள்ளது. அவர் அதிகமாகப் பேசியுள்ளார். அவ்வளவுதான்” என்று அமைதி யிழந்து கூறுகிறான் யூதாஸ்.

சேசு யூதாஸுக்குப் பதில் கூறாமல் அருளப்பரிடம்: “இதற்குள் நீ என்னை அறிந்திருக்கிறாய்... எது என்னைக் களைப்படையச் செய்கிறது எனபதும் உனக்குத் தெரியும்” என்று கூறுகிறார்.

பாஸ்கா ஆட்டுக் குட்டி ஏறக்குறைய உட்கொள்ளப்பட்டு விட்டது. சேசு மிகக் கொஞ்சமே உட்கொண்டார். ஒவ்வொரு தடவை இரசம் பருகிய போதும் ஒரு சிறுவாயளவுதான் பருகினார். அதற்கீடாக நிறைய தண்ணீர் குடித்தார் - காய்ச்சலில் இருப்பது போல. அவர் மறுபடியும் பேசத் தொடங்குகிறார்.

“சற்று முன் நான் செய்ததை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டுமென விரும்புகிறேன். முதன்மையானவன் கடைசி யானவனைப் போலிருக்கிறான் என்றும் சரீரப் பிரகாரமாயில்லாத ஓர் உணவை உங்களுக்குக் கொடுக்கப் போகிறேன் என்றும் கூறினேன். உங்கள் உள்ளங்களுக்கு தாழ்ச்சியென்னும் ஊட்ட உணவைக் கொடுத்திருக்கிறேன். நீங்கள் என்னை போதகரென்றும் ஆண்டவரென்றும் அழைக்கிறீர்கள். அது சரியே. நான் அவர்தான். அப்படிப்பட்ட நான் உங்கள் பாதங்களைக் கழுவினேனாகில், நீங்கள் ஒருவர் ஒருவரின் பாதங்களைக் கழுவ வேண்டும். நான் செய்ததை நீங்களும் செய்யும்படி உங்களுக்கு முன்மாதிரிகை காண்பித்தேன். இதோ நான் உங்களுக்குச் சொல்கிறேன்: எந்த ஊழியனும் தன் எஜமானுக்கு மேற்பட்டவனல்ல. எந்த அப்போஸ்தலனும் தன்னை ஏற்படுத்தியவருக்கு மேலானவனல்ல. இந்த விஷயங்களைக் கண்டுபிடிக்க முயலுங்கள். இவற்றைக் கண்டுபிடித்து நடைமுறையில் அனுசரிப்பீர்களாகில் நீங்கள் ஆசீர்வதிக்கப் படுவீர்கள். ஆனால் உங்களில் எல்லாரும் ஆசீர்வதிக்கப்பட மாட்டீர்கள். உங்களை நான் அறிவேன். நான் யாரைத் தெரிந்து கொள்கிறேன் என்றும் அறிவேன். நான் எல்லாரைப் பற்றியும் ஒரே விதமாகப் பேசவில்லை. ஆனால் உண்மை எதுவோ, அதைச் சொல்லுகிறேன். ஆனால் என்னைப் பற்றி எழுதப்பட்டவை நிறைவேற வேண்டும். “என்னுடன் அப்பம் உண்பவனே எனக்கெதிராக எழும்புகிறான்.” என்னைப் பற்றி நீங்கள் எந்த சந்தேகமும் கொள்ளாதபடி நான் எல்லாவற்றையும் அவை நடைபெறுவதற்கு முன்பே உங்களுக்குச் சொல்லுகிறேன். எல்லாம் நிறைவேற்றம் அடைந்தபின் நான் நான்தான் என்று இன்னுமதிகமாக விசுவசிப்பீர்கள். என்னை ஏற்றுக் கொள்கிறவன் என்னை அனுப்பிய பரலோகத்திலிருக்கிற பிதாவை ஏற்றுக் கொள்கிறான். நான் அனுப்புகிறவர்களை ஏற்றுக் கொள்கிறவன் என்னை ஏற்றுக் கொள்கிறான். ஏனென்றால் நான் பிதாவுடன் இருக்கிறேன். நீங்கள் என்னுடன் இருக்கிறீர்கள்... இப்பொழுது நாம் சடங்கை முடிப்போம்.”

சேசு பொதுப் பான பாத்திரத்தில் மேலும் இரசத்தை ஊற்றுகிறார். ஆனால் தாமும் பருகி மற்றவர்களுக்கும் கொடுப்பதற்கு முன் அவர் எழுகிறார். எல்லாரும் அவருடன் எழுந்து நிற்கிறார்கள். முந்திப் பாடிய ஒரு சங்கீதத்தையே அவர் திரும்பவும் பாடுகிறார்: “நான் விசுவசித்தபடியால் பேசினேன்...” (சங். 115). இதன் பிறகு அவர் முடிவுக்கு வராத ஒரு சங்கீதத்தைப் பாடுகிறார். அது அழகானது. ஆனால் நித்தியமானது. அதன் தொடக்க வார்த்தை களிலிருந்தும் அதன் நீளத்திலிருந்தும் அதைக் கண்டுபிடித்து விட்டேன் என நினைக்கிறேன்... சங். 118. அதை அவர்கள் இப்படிப் பாடுகிறார்கள்: ஒரு பாகத்தைப் பல்லவி போல் சேர்ந்து பாடியபின், தனிக்குரலில் சில வரிகளையும், அடுத்த சில வரிகளைச் சேர்ந்தும் இபபடியே முடிவு வரையிலும் பாடுகிறார்கள். பாடி முடியவும் அவர்களுக்குத் தாகம் ஏற்பட்டது ஆச்சரியமல்ல.

சேசு அமர்கிறார். அவர் சாய்மணையில் சாயவில்லை. நாம் உட்காருவது போல அமர்ந்திருக்கிறார். அவர் கூறுகிறார்: “பழைய சடங்கு நடந்து முடிந்து விட்டதால் இனி நான் புதிய திருச்சடங்கை நிறைவேற்றுகிறேன். ஒரு அன்பின் புதுமையை உங்களுக்கு வாக்களித்திருக்கிறேன். அதைச் செய்யும் தருணம் இதுவே. அதன் காரணமாகவே இந்தப் பாஸ்காவை நான் ஆவலாய்த் தேடினேன். இது முதல் நிரந்தரமான அன்பின் திருச்சடங்கில் உட்கொள்ளப்படும் பலிப்பொருள் இதுவாக இருக்கும். என் பிரியமுள்ள நண்பர்களே, பூமியின் முழு வாழ்நாளெல்லாம் நான் உங்களை நேசித்திருக்கிறேன். என் பிள்ளைகளே, நித்தியம் முழுவதும் நான் உங்களை நேசித்தேன். முடிவு பரியந்தம் உங்களை நேசிக்க விரும்புகிறேன். இதைவிடப் பெரிய காரியம் வேறெதுவுமில்லை. இதை மனதில் வைத்திருங்கள். நான் போகிறேன். ஆனால் நான் இப்பொழுது ஆற்றப் போகிற புதுமையின் வழியாக நாம் எக்காலத்திற்கும் ஐக்கியப் பட்டிருப்போம்.” 

சேசு ஒரு முழு அப்பத்தை எடுத்து இரசம் நிரம்பிய பாத்திரத்தின் மேல் வைக்கிறார். அவற்றை ஆசீர்வதித்து ஒப்புக் கொடுக்கிறார். பின் அந்த அப்பத்தைப் பிட்டு பதின்மூன்று வாயளவு துண்டுகளை எடுத்து ஒவ்வொரு அப்போஸ்தலருக்கும் ஒன்று கொடுக்கும் போது சொல்கிறார்: “இதை வாங்கி உண்ணுங்கள். இது என் சரீரமாயிருக்கிறது. செல்லவிருக்கிற என் ஞாபகமாக இதைச் செய்யுங்கள.” பின்னும், பான பாத்திரத்தைக் கொடுத்துச் சொல்கிறார்: “இதை வாங்கிப் பருகுங்கள். இது என் இரத்தமா யிருக்கிறது. என் இரத்தத்திலும், என் இரத்தத்தின் வழியாகவும் செய்யப்படும் புதிய உடன்படிக்கையின் பாத்திரம் இதுவே. இது உங்களுக்காக உங்கள் பாவங்களை மன்னிக்கவும், உங்களுக்கு ஜீவியம் கொடுப்பதற்காகவும் சிந்தப்படும். இதை என் ஞாபகமாகச் செய்யுங்கள்.” 

சேசு மிகவும் துயரமாயிருக்கிறார். அவர் முகத்தில் புன்னகையோ, ஒளியின் ஓர் அடையாளமோ, நிறமோ காணப் படவில்லை. ஏற்கெனவே மரண அவஸ்தைப்படும் முகமாயிருக்கிறது. முழுக் கவலையோடு அப்போஸ்தலர்கள் அவரை நோக்கிப் பார்க்கிறார்கள்.

சேசு எழுந்து சொல்கிறார்: “நீங்கள் எழ வேண்டாம். நான் உடனே திரும்பி வருவேன்.” அப்போது அவர் பதின்மூன்றாம் அப்பத்துண்டையும் பாத்திரத்தையும் எடுத்துக்கொண்டு இராப் போஜன சாலையை விட்டு வெளியே வருகிறார்.

“அவர் தம் தாயிடம் போகிறார்” என்று அருளப்பர் மெல்லச் சொல்கிறார்.

யூதா ததேயுஸ் ஒரு பெருமூச்சுடன்: “அவர்கள் பாவம்!” என்கிறார்.

“அவர்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறீரா?” என்று இராயப்பர் கேட்கிறார்.

“அவர்களுக்கு எல்லாம் தெரியும். எப்போதும் அவர்கள் எல்லாவற்றையும் அறிந்தேயிருக்கிறார்கள்.” 

எல்லாரும் மிகத் தாழ்ந்த குரலில் பேசுகிறார்கள் - ஒரு சடலம் இருக்கிற இடத்தில் பேசுவதுபோல.

தோமையார் கேட்கிறார்: “உண்மையாகவே நீங்கள் அப்படி நினைக்கிறீர்களா?...” என்று. அவருக்கு இன்னும் நம்புவதற்கு மனம் வரவில்லை.

அதற்கு செபதேயுவின் யாகப்பர்: “உமக்கு அதில் சந்தேகமா? இது அவருடைய நேரம்” என்கிறார்.

“நாம் பிரமாணிக்கமாக இருப்பதற்கு கடவுள் நமக்குத் திடமளிப்பாராக!” என்கிறார் தீவிர சீமோன்.

“ஓ! நான்...” என்று இராயப்பர் பேசத் தொடங்கவும் கவனத்தோடிருக்கிற அருளப்பர்: “அமைதி! அவர் வருகிறார்” என்கிறார்.

சேசு திரும்ப உள்ளே வருகிறார். அவருடைய கரத்தில் வெறும் பாத்திரம் உள்ளது. அதன் அடியில் மாத்திரம் இரசத்தின் அடையாளம் இருக்கிறது. சர விளக்கின் வெளிச்சத்தில் அது இரத்தம் போலவே காணப்படுகிறது. யூதாஸ் இஸ்காரியோத் தன் முன்னால் இருக்கிற அந்தப் பாத்திரத்தால் கவரப்பட்டவனைப் போல் பார்க்கிறான். பின் கண்களைத் திருப்பிக் கொள்கிறான். சேசு அவனைக் கவனிக்கிறார். நடுக்கம் கொள்கிறார். அப்போது அவர் மார்பில் சாய்ந்துள்ள அருளப்பர் அதை உணருகிறார். “நீர் நடுங்குகிறீரே! சொல்லக் கூடாதா?” என்கிறார்.

“இல்லை. நான் காய்ச்சலால் நடுங்கவில்லை... நான் எல்லா வற்றையும் உங்களுக்குச் சொல்லி விட்டேன். எல்லாவற்றையும் உங்களுக்குத் தந்து விட்டேன். இதற்குமேல் வேறு எதையும் என்னால் கொடுக்க முடியாது. என்னையே உங்களுக்குக் கொடுத்து விட்டேன்.”

அவர் வழக்கமாகச் செய்யும் கையசைவைச் செய்கிறார். குவிந்திருந்த தம் கரங்களை இப்பொழுது அவர் விரித்து, அன்போடு நீட்டி, தலையைத் தாழ்த்தியிருக்கிறார். அது அவர் இப்படிச் சொல்வது போலிருக்கிறது: “இதற்கு மேல் என்னால் கொடுக்க முடியாமைக்கு மன்னித்துக் கொள்ளுங்கள். அது அப்படித்தான்.”