சுவிசேஷத்திற்கு முந்திய நிகழ்ச்சிகளின் முடிவு.

சேசு கூறுகிறார்:

காலவட்டம் முடிகிறது. அது மிக இனியதும் மென்மையுமாயிருந்தது.  இந்நாட்களில் குழப்பங்களிலிருந்து உன் சேசு உன்னை அதிர்ச்சியல்லாமல் வெளியே கொண்டு வந்திருக்கிறார்.  மெல்லிய கம்பளிக் கட்டுத் துணிகளால் சுற்றப்பட்டு மிருதுவான மெத்தைகளில் கிடத்தப்பட்டுள்ள குழந்தையைப் போல் நீயும் இந்த இன்பமூட்டும் காட்சிகளில் மூழ்க வைக்கப்பட்டாய்.  இதனால், நேசிப்பதற்குப் பதில் பகைக்கிற மனிதர்களின் கொடுமையை நீ காணாமலும், அப்படிப்பட்ட கோபக் கொடுமைகளால் பயங்கொள்ளாதபடியும் காப்பாற்றப் பட்டாய்.  சில சூழ்நிலைகளை உன்னால் தாங்கக் கூடவில்லை.  நீ அவற்றின் காரணமாக இறந்து போக நான் விரும்பவில்லை.  ஏனென்றால் என் “வாய்மொழியாகிய” உன்னை நான் கவனித்து வருகிறேன்.

உலகத்தின் பலிப்பொருளாயிருக்கிறவர்கள் முழுமையான அவநம்பிக்கையினால் வதைக்கப்பட்ட காரணம் உலகத்தில் முடிவடையப் போகிறது.  ஆகவே மேரி, உன் உணர்வுகளுக்கு இவ்வளவு நேர் எதிராக இருக்கின்ற மிகக் கூடுதலான காரணங்களால் நேரிடும் பயங்கர துன்பங்களின் நேரமும் முடிவுக்கு வரும்.  ஆயினும் உன் வேதனை முடிவடையாது.  நீ ஒரு பலிப்பொருள்.  ஆனால் அதில் ஒரு பாகம், அதன்  பிந்திய பாகம் முடிவடையும்.  அப்போது மரணத் தறுவாயிலிருந்த மரிய மதலேனம்மாளிடம் நான் கூறியது போல், உன்னிடமும் கூறும் நாள் வரும்.  அவளிடம் நான் கூறினேன்:  “ஓய்வு கொள்.  இப்பொழுது நீ இளைப்பாறும் நேரம்.  உன் முட்களை என்னிடம் கொடு.  ரோஜா மலர்களின் நேரம் வந்தது.  இளைப்பாறி காத்திரு.  ஓ பாக்கியம் பெற்ற ஆன்மாவே!  உன்னை ஆசீர்வதிக்கிறேன்.”

இதையே உன்னிடமும் நான் கூறினேன்.  அது நீ கண்டுபிடிக்காத ஒரு வாக்குறுதியாயிருந்தது.  காரணம் நீ மிக இருளில், முட்களுக்குள் அமுக்கப்பட்டு, உருட்டப்பட்டு, கட்டப்பட்டு, நிரப்பப்படப் போகிற நேரம் வந்து கொண்டிருந்தது... இப்பொழுது அவ்வார்த்தைகளை நான் உனக்கு மீண்டும் கூறுகிறேன்.  சிநேகமாகிய நான், தான் நேசிக்கிறவர்களில் ஒருவருடைய வேதனையை நிறுத்தக் கூடும்போது உணரக் கூடிய மகிழ்ச்சியோடு இப்பொழுது உன்னிடம் கூறுகிறேன்: உன் பலியின் நேரம் முடிவடைகிறது.  அறியாத உலகத்தின் சார்பாக, அறிந்திருக்கிற நான் சொல்கிறேன்:  இத்தாலியாவின் சார்பாகவும், நீ என்னைக் கொண்டு வந்துள்ள விய்யாரேஜியா என்ற இச்சிற்றூரின் சார்பாகவும் சொல்கிறேன்.  இந்த வார்த்தைகளின் பொருளைத் தியானி.  பலிப் பொருள்களுக்கு அப்பலியின் சார்பாக உரியதாயிருக்கிற “நன்றியை” நான் உனக்குத் தெரிவிக்கிறேன்.

கன்னிகையும், மணவாளியுமான செசிலியம்மாளை உனக்கு நான் காண்பித்தபோது,  நான் கூறினேன்: அவள் என்னுடைய நறுமணங்களால் நிரம்பியிருந்து தன் பின்னால் தன் கணவனையும், அவனுடைய தம்பியையும், ஊழியரையும், உறவினரையும், நண்பர்களையும் இழுத்து வந்தாள்.  இந்தப் பைத்தியமான உலகத்தில் நீயும் செசிலியம்மாளின் பாகத்தையே செய்தாய்.  இது உனக்குத் தெரியாது.  ஆனால் தெரிந்துள்ள நான் கூறுகிறேன்.  நீ என்னால், என் வார்த்தையினால் நிரம்பியிருந்தாய்.  என் விருப்பங்களை மக்களுக்கு அறிவித்தாய்.  அவர்களுள் மிக நல்லவர்கள் அதைக் கண்டுபிடித்தார்கள்.  பலிப் பொருளான உன்னைப் பின்சென்றார்கள்.  மேலும் பலர் எழுந்துள்ளார்கள்.  உன் தாய்நாடும், உனக்கு அருமையுள்ள இடங்களும் முழுவதும் நாசமடையாமல் உள்ளனவென்றால் உன் முன்மாதிரிகை யையும், ஊழியத்தையும் பின்பற்றி பல பலியாகும் மக்கள் தகனமாக்கப்பட்டுள்ளதே அதன் காரணம்.  ஆசீர்வதிக்கப் பெற்றவளே உனக்கு நன்றி!  ஆனால் தொடர்ந்து செய்.  உலகத்தை நான் காப்பாற்றுவது மிகவும் தேவையாயிருக்கிறது.  பூமியை மீண்டும் விலைகொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது.  பலியாகும் நீங்களே அதற்குரிய கிரயப் பணம்.

அர்ச்சிஷ்டவர்களுக்குப் போதித்ததும், உனக்கு  நேரடியாகப் போதிக்கிறதுமான (தேவ) ஞானம், வாழ்வின் கல்வியையும், அதன் நடைமுறைகளையும் கண்டுபிடிப்பதில் உன்னை மேலும் மேலும் உயர்த்துவதாக!  உன்னுடைய சிறிய கூடாரத்தை ஆண்டவரின் இல்லத்தின் அருகில் அமைத்துக் கொள்.  ஏன், உன் கூடாரத்தின் கயிற்றுப் பிடிப்புக்களை ஞானம் தங்குமிடத்தில் அடித்துக் கொள்.  வெளியில் வராமல் அங்கேயே வாழ்ந்திரு.  பூக்கள் நிறைந்த கிளைகளுக்கு நடுவிலிருக்கும் பறவையைப் போல் உன்னை நேசிக்கிற ஆண்டவருடைய பாதுகாப்பில் நீ இளைப்பாறுவாய்.  அவர் எல்லா ஞானப் புயல்களிலிருந்தும் உன்னைப் பாதுகாப்பார்.  நீ கடவுளின் மகிமையின் பிரகாசத்தில் இருப்பாய்.  அவரிடமிருந்து, சமாதான, சத்திய வார்த்தைகள் உனக்கு இறங்கும். 

சமாதானமாய்ப் போ.  பாக்கியமான ஆன்மாவே, உன்னை ஆசீர்வதிக்கிறேன்.

இது முடிந்த உடனே -


மாதா கூறுகிறார்கள்:           

மேரியின் திருநாளுக்கு தாயிடமிருந்து ஒரு பரிசு.  தொடர்ந்து பரிசுகள்.  அவற்றுள்ளே சில முட்கள் இருந்தால் அதைப்பற்றி ஆண்டவரிடம் முறையிடாதே.  வெகு சொற்பப் பேரையே அவர் உன்னை நேசிப்பதுபோல நேசிக்கிறார்.

தொடக்கத்திலே உன்னிடம் நான் கூறினேன்:  “என்னைப் பற்றி எழுது, உன் எல்லாத் துயரங்களும் ஆறுதலடையும்” என்று.  அது உண்மையென்று இப்போது நீ காணலாம்.  இந்த பரபரப்பான சமயத்திற்கென அந்தக் கொடை ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தது.  ஏனென்றால் நாங்கள் ஞானப் பொருளை மட்டுமல்ல, சடப் பொருளையும் பாதுகாக்கிறோம்.  சடப்பொருள் அரசி அல்ல, ஆனால் ஞானப் பொருள் தன் அலுவலைச் செய்து முடிக்க அது பயனுள்ள ஊழினொக இருக்கின்றது.

மிக உந்நதருக்கு நன்றியுடனிரு.  அவர் பாசமுள்ள மனித முறையிலும் உனக்கு உண்மையான தந்தையாயிருக்கிறார்.  உன்னைப் பயன்படுத்தக் கூடியவற்றை மறைப்பதற்காக இனிய பரவசங்களால் உன்னை அயர வைக்கிறார்.  என்னை மேலும் மேலும் நேசி.  என் இளம் பிராயத்தின் இரகசியங்களுக்குள் உன்னைக் கொண்டு சென்றேன்.  தாயைப் பற்றி இப்பொழுது எல்லாம் உனக்குத் தெரியும்.  பலிப் பொருள்கள் என்னும் நம் கதியில், மகளைப் போலும், சகோதரியைப் போலும் என்னை நேசிப்பாயாக.  பிதாவாகிய கடவுளையும் சுதனாகிய கடவுளையும் இஸ்பிரீத்து சாந்துவாகிய கடவுளையும் உத்தமமான அன்போடு நேசி.  பிதாவுடையவும் சுதனுடையவும் இஸ்பிரீத்து சாந்துவுடையவும் ஆசீர்வாதம் என் கரங்கள் வழியாக வருகின்றது.  உன் மீதுள்ள என் தாயன்பின் வாசனையால் அது மணமூட்டப்பட்டு இறங்கி உன்மேல் தங்குகிறது.  நீ சுபாவத்துக்கு மேலாக மகிழ்ச்சி கொண்டிரு.