இலைகளை மட்டுமே கொண்டிருந்த திராட்சைச் செடி!

“பாரும்!” என்றார் அந்த வழிகாட்டி, திராட்சைச் செடியை எனக்குச் சுட்டிக் காட்டியபடி.

நான் இன்னும் பக்கத்தில் நெருங்கிச் சென்றேன். அழகிய திராட்சைக் குலைகள் நிறைந்திருந்த அந்தச் செடியில் இப்போது இலைகளைத் தவிர வேறு எதுவும் இருக்கவில்லை . “நிக்கில் இன்வெந்த் ஏயா! - அவர் அதிலே இலைகளைத் தவிர வேறொன் றையும் காணவில்லை ” (மத்.21:19) என்ற வேதவாக்கியத்தை அது தாங்கியிருந்தது. அதன் முக்கியத்துவத்தைக் கண்டு மலைத்துப் பானவனாக, நான் என் வழிகாட்டியிடம், “நீர் யார்? இந்தத் திராட்சைச் செடி எதைக் குறிக்கிறது?” என்று கேட்டேன்.

பதிலுக்கு அவர் திரையை விலக்கினார். முன்பு நான் அங்கே கண்டிருந்த மிக ஏராளமான சிறுவர்களில் ஒரு பகுதியினர் மட்டுமே இப்போது அங்கே இருந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் நான் அறியாதவர்கள்.

அவர் விளக்கினார்: “இந்தச் சிறுவர்களுக்கு நன்மை செய்ய ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் கடவுளை மகிழ் விப்பதை அவர்கள் தங்கள் நோக்கமாகக் கொள்வதில்லை. வெளித் தோற்றங்களைப் பாதுகாத்துக் கொள்ளும்படி, தாங்கள் நன்மை செய்து கொண்டிருப்பதாக மற்றவர்கள் நம்பும்படி அவர்கள் செய்கிறார்கள். கண்டிப்புகளைத் தவிர்ப்பதற்காக, அல்லது தங்கள் மதிப்பை இழக்காமல் இருப்பதற்காக, இல்லத்து விதிகளுக்குக் கீழ்ப் படிய அவர்கள் பெருமுயற்சிகள் எடுத்துக் கொள்கிறார்கள், தங்கள் மேலதிகாரிகளிடம் மரியாதையோடு நடந்து கொள்கிறார்கள்.

ஆனால் அவர்களுடைய போதனைகள், அறிவுரைகள் அல்லது முயற்சிகளால் இந்தச் சிறுவர்கள் எந்தப் பயனும் அடைவதில்லை . அவர்கள், தாங்கள் அடைந்து கொள்ளப் பாடுபடுவதெல்லாம் இந்த உலகத்தில் ஒரு போற்றுதலுக்குரிய, நிறைய பணம் சம்பாதிக்கக் கூடிய அந்தஸ்து மட்டும்தான். தங்கள் தேவ அழைத்தலைக் கண்டு பிடிப்பதில் அவர்களுக்கு எந்தக் கவலையுமில்லை . எந்தத் தயக்கமு மின்றி ஆண்டவருடைய அழைப்பை அவர்கள் நிராகரிக்கிறார்கள், ஆனால் அதே வேளையில் எந்த ஒரு அனுகூலத்தையும் இழந்து விடாதபடி, தங்கள் உண்மையான நோக்கங்களைத் திரையிட்டு மறைக்கிறார்கள். சுருக்கத்தில், அவர்கள் தங்கள் உலகத் தேவைக்காக மட்டுமே காரியங்களைச் செய்கிறார்கள், நித்தியத்திற்கான நன்மை எதையும் அவர்கள் பெற்றுக் கொள்வதில்லை.”

மிக நல்லவர்கள், பாசமுள்ளவர்கள், நேர்மையுள்ளவர்கள் என்று நான் நம்பியிருந்த பல சிறுவர்களை அந்தக் கூட்டத்தில் கண்டது எனக்கு எவ்வளவு ஏமாற்றமாக இருந்தது! அழுகிய திராட்சைகள் இருந்த திராட்சைச் செடி

“துரதிருஷ்டவசமாக, இத்துடன் எல்லாம் முடிந்து விட வில்லை” என்றார் என் வழிகாட்டி, திரையைத் தளர விட்டபடி “இப்போது அங்கே பாருங்கள்” என்றார் அவர், அந்தக் கொடிப் பந்தலின் மேற்பகுதியைச் சுட்டிக் காட்டியபடி.

இலைகளுக்கு மத்தியில் மிகச் சுவையானவையாகத் தோன்றிய திராட்சைக் குலைகளை என்னால் காண முடிந்தது. ஆகவே நான் மகிழ்ச்சியோடு நெருங்கிச் சென்று கவனித்தபோது, திராட்சைகள் புள்ளிகள் விழுந்திருப்பதையும், அதிகம் கனிந்து விட்டதையும், பூஞ்சை பிடித்திருப்பதையும், புழுக்கள் அரித்திருப்பதையும், பறவைகளால் கொத்தப்பட்டிருப்பதையும், அழுகி, அல்லது காய்ந்து சுருங்கியிருப்பதையும் கண்டேன். மொத்தத்தில் அது ஒரு பேரிழப்பாக இருந்தது. அவற்றின் அசுத்த நாற்றம் காற்றை நிரப்பியது.

மீண்டும் அந்த அந்நியர் திரையை உயர்த்தினார். “பாருங்கள்” என்று அவர் சொன்னார். நான் சிறுவர்களின் மற்றொரு பெருங்கூட்டத்தைப் பார்த்தேன். ஆனால் இந்தக் கனவின் தொடக்கத்தில் நான் கண்டது போல அவர்கள் எண்ணிலடங்கா தவர்களாக இருக்கவில்லை. முன்பு மிக அழகானவர்களாக இருந்த அவர்கள் இப்போது அசிங்கமாகவும், கோபமும் முரட்டுத்தனமும் உள்ளவர்களாகவும், அருவருப்பான புண்களால் மூடப்பட்டவர் களாகவும் இருந்தனர். முதுமையால் கூன் போட்டவர்களைப் போல அல்லது சோர்ந்து மெலிந்து போனவர்களைப் போல, அவர்கள் ஒரு பெரும் மனச் சோர்வுடன் அங்குமிங்கும் நடமாடினர். யாரும் பேச வில்லை . எல்லாருமே நம் கடந்த கால, நிகழ்கால மற்றும் எதிர்கால மாணவர்கள்தான். இவர்களில் எதிர்கால மாணவர்கள்தான் அதிக எண்ணிக்கையில் இருந்தார்கள். அவர்கள் எல்லோரும் மனச் சோர் வுற்றவர்களாகத் தோன்றினர், தங்கள் கண்களை ஏறெடுத்துப் பார்க்க அவர்கள் துணியவில்லை .

என் தோழர்களும், நானும் மலைத்துப் போனவர்களாகவும், பேச்சற்றவர்களாகவும் இருந்தோம். “என்ன நடந்தது?” என்று நான் கடைசியாக என் வழிகாட்டியிடம் கேட்டேன். “முன்பு எவ்வளவோ அழகாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்த இந்தச் சிறுவர்கள் - ஏன் அவர்கள் இப்போது இவ்வளவு அசிங்கமாகவும், மனச்சோர்வடைந் தவர்களாகவும் இருக்கிறார்கள்?”

“அவர்களுடைய பாவங்களின் காரணமாக” என்று பதில் வந்தது. இந்தச் சிறுவர்கள் அனைவரும் என்னைக் கடந்து நடந்து போன போது, அவர் தொடர்ந்து, “அவர்களைக் கூர்ந்து கவனி யுங்கள்” என்றார். அப்போது அவர்களுடைய நெற்றிகளிலும், கரங் களிலும் ஒவ்வொரு சிறுவனின் பாவத்தின் பெயரும் எழுதப் பட்டிருந்ததைக் கண்டேன். நான் மிகவும் ஆச்சரியப்படும்படியாக, நான் பல சிறுவர்களை அடையாளம் கண்டுகொண்டேன். அவர்கள் நல்ல புண்ணிய வாழ்வு வாழ்பவர்கள் என்று நான் எப்போதும் நம்பி யிருந்தேன்; இப்போது அந்த அருவருப்பான புண்கள் அவர் களுடைய ஆத்துமங்களை சீழ்பிடிக்கச் செய்துள்ளன என்று நான் கண்டுபிடித்தேன்.

அவர்கள் என்னைக் கடந்து சென்ற போது, அவர்களுடைய நெற்றியில்: மட்டுமிதமின்மை , இடறல், பிறருக்குத் தீங்கு செய்யும் விருப்பம், அகங்காரம், செயலற்றிருத்தல், போஜனப் பிரியம், பொறாமை, கோபம், பழிவாங்கும் குணம், தேவ நிந்தை, அவபக்தி, கீழ்ப்படியாமை, தேவ துரோகம், திருட்டு என்ற வார்த்தைகளை என்னால் வாசிக்க முடிந்தது.

“எல்லாச் சிறுவர்களும் இப்போது நீங்கள் காண்பது போல் இருக்கவில்லை” என்று என் வழிகாட்டி குறித்துக் காட்டினார். “ஆனாலும் அவர்கள் தங்கள் வழிகளை மாற்றிக் கொள்ளவில்லை என்றால், அவர்கள் இப்படி ஆகிவிடுவார்கள். இவற்றில் பல பாவங்கள் தங்களிலேயே கனமான பாவங்கள் இல்லைதான். என்றாலும் அவை கடுமையான வீழ்ச்சிகளுக்கும், நித்திய அழிவிற்கும் இட்டுச் சென்று விடும். “குயி ஸ்பேர்னித் மோதிக்கா, பாவ்லாத்திம் தெச்சிதெத் - அற்பக் காரியங்களை அலட்சியம் செய்பவன் மெல்ல மெல்ல விழுவான்” (சர்வப். (சீராக்). 19:1). போஜனப் பிரியம் சரீர அசுத்ததனத்தைப் பெற்றெடுக்கிறது; மேலதிகாரிகளை இழிவாக மதித்தல், குருக்களையும் திருச்சபை யையும் இழிவாக மதிக்கும் நிலைக்கு இட்டுச் செல்கிறது... இவை போன்ற பல பாவங்கள்!”

இத்தகைய ஒரு காட்சியால் மன தைரியத்தை இழந்தவனாக நான் என் குறிப்புப் புத்தகத்தையும், பென்சிலையும் எடுத்து, எனக்குத் தெரிந்த சிறுவர்களின் பெயர்களையும், அவர்களுடைய பாவங்களையும், அல்லது குறைந்தபட்சம் அவர்களுடைய முக்கியப் பாவங்களையும் குறித்துக் கொள்ளத் தொடங்கினேன். இவ்வாறு அவர்களை எச்சரித்துத் திருத்தலாம் என்று நான் எண்ணினேன். ஆனால் என் வழிகாட்டி என் கரத்தைப் பற்றித் தடுத்தார். “என்ன செய்ய முயற்சி செய்கிறீர்கள்?” என்று அவர் கேட்டார்.

“அவர்கள் தங்கள் வாழ்வுகளைத் திருத்தும்படி அவர்களை எச்சரிப்பதற்காக, அவர்களுடைய நெற்றிகளில் எழுதப்பட்டுள்ள பாவங்களைக் குறித்துக் கொள்ள விரும்புகிறேன்.”

“நீர் அதைச் செய்யத் தேவையில்லை .”

“ஏன் இல்லை ?"

"காயப்படாதவர்களாகத் தங்கள் வாழ்வுகளைக் கடந்து செல்ல அவர்களுக்குத் தேவையான எல்லாம் அவர்களிடம் உள்ளது. அவர்களுக்கு இல்ல விதிகள் உள்ளன. அவற்றை அவர்கள் கடைப் பிடிக்கட்டும். அவர்களுக்கு மேலதிகாரிகள் இருக்கிறார்கள்; அவர்களுக்கு அவர்கள் கீழ்ப்படியட்டும். அவர்களுக்கு திருவருட் சாதனங்கள் இருக்கின்றன; அவற்றை அவர்கள் பெறட்டும். அவர்களுக்குப் பாவசங்கீர்த்தனம் இருக்கிறது; பாவங்களை மறைப் பதன் மூலம் அவற்றை அவர்கள் நிந்திக்காமல் இருக்கட்டும். அவர்களுக்கு திவ்விய நற்கருணை இருக்கிறது; சாவான பாவ நிலையில் அவர்கள் அதை உட்கொள்ளாதிருக்கட்டும். அவர்கள் தங்கள் கண்களை அடக்கவும், கெட்ட நண்பர்களையும், கெட்ட புத்தகங்களையும், அசுத்த உரையாடல்களையும், இன்னும் பல தீய காரியங்களையும் விலக்க வேண்டும். இல்லத்தின் விதிகளை அனுசரிப்பது அவர்களைக் காப்பாற்றும். அவர்கள் விரைந்து கீழ்ப் படிவார்களாக; வீணாக நேரத்தைப் போக்குவதற்காகத் தங்கள் ஆசிரியர்களை ஏமாற்றுவதை அவர்கள் நிறுத்துவார்களாக. அவர்கள் தங்கள் மேலதிகாரிகளை அலுப்பூட்டுகிற காவல் நாய்களாகவும், சுய ஆர்வமுள்ள ஆலோசகர்களாகவும், அல்லது எதிரிகளாகவும் கூட பார்ப்பதை விட்டு விட்டு, அவர்களுக்கு மனமுவந்து கீழ்ப்படிவார் களாக. தங்கள் தவறான செயல்களை மறைப்பதிலும், தண்டனை களுக்குத் தப்பிப்பதிலும் வெற்றி பெறும்போது, அது ஒரு பெரிய வெற்றி என்று அவர்கள் எண்ணாதிருக்கட்டும். ஆலயத்தில் பக்தி வணக்கமுள்ளவர்களாக அவர்கள் இருக்க வேண்டும், விருப்பத் தோடும், பக்தியோடும் ஜெபிக்க வேண்டும், பிறரைத் தொந்தரவு செய்யாமலும், அல்லது பேசிக் கொண்டிராமலும் இருக்க வேண்டும். படிக்க வேண்டிய நேரத்தில் படிக்க வேண்டும், வேலை செய்ய வேண்டிய நேரத்தில் வேலை செய்ய வேண்டும், எல்லா நேரங்களிலும் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும். படிப்பு, வேலை, ஜெபம் ஆகியவை அவர்களை நல்லவர்களாக வைத்திருக்கும் காரியங்களாகும்.”

அவருடைய மறுப்பையும் மீறி நான் என் வழிகாட்டியிடம் சிறுவர்களின் பெயரை எழுதிக் கொள்ள என்னை அனுமதிக்கும்படி நான் நச்சரித்துக் கொண்டேயிருந்தேன். இதைக் கண்டு, அவர் என் குறிப்புப் புத்தகத்தைப் பிடுங்கி, தரையில் வீசியெறிந்து விட்டு, “கடைசித் தடவையாக நான் சொல்கிறேன்: நீங்கள் அவர்களுடைய பெயர்களை எழுத வேண்டிய தேவையில்லை. கடவுளின் வரப்பிர சாதமும், மனச்சான்றின் குரலும் எதைச் செய்யக் கூடாதென்று உங்கள் சிறுவர்களுக்குச் சொல்லும்” என்று என்னிடம் சொன்னார்.

“நான் என் அன்புச் சிறுவர்களிடம் நான் கண்டவற்றுள் எதையும் சொல்ல முடியாது என்பது இதன் அர்த்தமா? அவர்களுக் காக ஏதாவது ஆலோசனை உம்மிடம் இருக்கிறதா?” என்று நான் கேட்டேன்.

“உங்களுக்கு நினைவில் இருக்கிற எல்லாவற்றையும் நீங்கள் சொல்லலாம்” என்று அவர் பதிலளித்தார். 

அவர் மீண்டும் திரையை விழவிட்டார். மீண்டும் நாங்கள் அந்தத் திராட்சைச் செடியைக் கண்டோம். அது கிட்டத்தட்ட இலைகளே இல்லாமலிருந்தது. கிளைகளில் அழகிய, சிவந்த, முழு வளர்ச்சி பெற்ற திராட்சைக் குலைகள் நிறைந்திருந்தன. நான் நெருங்கிச் சென்று பார்த்தபோது, அவை தங்கள் தோற்றத்தின் படியே நல்லவையாக இருப்பதைக் கண்டேன். அவற்றின் இன்பமான காட்சியும், இனிய நறுமணமும் என் வாயில் நீரூறச் செய்தன.

மீண்டும் என் வழிகாட்டி திரையை உயர்த்தினார். அந்தப் பசுமைப் பந்தலின் கீழ் நான் மீண்டும் பல சிறுவர்களை - நம் நிகழ்கால, கடந்தகால, மற்றும் எதிர்கால மாணவர்களாகிய சிறுவர்களைக் - கண்டேன். அவர்கள் ஒப்பிட முடியாத அளவுக்கு அழகுள்ளவர்களாகவும், மகிழ்ச்சியால் ஒளிவீசுபவர்களாகவும் இருந்தார்கள்.

“இவர்கள்தான் உங்கள் பராமரிப்பின் காரணமாக நற்கனி தந்து கொண்டிருப்பவர்களும், இனி தர இருப்பவர்களுமான சிறுவர்கள் ஆவர். இவர்கள்தான் புண்ணியங்களை அனுசரிப் பவர்கள், உங்களுக்கு மிகுந்த ஆறுதல் அளிப்பவர்கள்” என்று அந்த அந்நியர் விளக்கினார்.

நான் மகிழ்ச்சியடைந்தேன் என்றாலும், அவர்களுடைய எண்ணிக்கை நான் நம்பியிருந்த அளவுக்கு பெரிதாக இல்லை என்பதால் ஒரு வித துக்கத்தையும் நான் உணர்ந்தேன்.

நான் அவர்களைக் கவனித்தபடி நின்று கொண்டிருக்கையில், மணி அடித்தது, சிறுவர்கள் போய்விட்டார்கள். என்னோடு இருந்த துறவியரும் தங்கள் வேலைகளைப் பார்க்கப் போய்விட்டார்கள். நான் என்னைச் சுற்றிலும் பார்த்து, நான் தனியாக இருப்பதைக் கண்டு கொண்டேன். திராட்சைச் செடி போய் விட்டது. என் வழிகாட்டி மறைந்து போயிருந்தார். இந்த இடத்தில் நான் விழித்துக் கொண் டேன். அதன்பின் சற்று ஓய்வெடுக்கவும் என்னால் முடிந்தது.

மே 1, வெள்ளியன்று, டொன் போஸ்கோ தொடர்ந்து விளக்கினார்:

நேற்றிரவு நான் சொன்னது போல, மணி அடிப்பதைக் கேட்பதாக நினைத்தபடி நான் கண்விழித்தேன். ஆனால் அதன்பின் நான் மீண்டும் உறங்கி விட்டேன். திடீரென, யாரோ என்னை அசைத்து எழுப்பினார்கள். நான் என் அறையில், வந்த கடிதங் களுக்குப் பதில் எழுதிக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். பிற்பாடு, நான் முகப்பு மாடிக்கு நடந்த சென்று, ஒரு கணம் எங்கள் புதிய ஆலயத்தின் கம்பீரமான மேற்கவிகை மாடத்தை ஒரு கணம் உற்று நோக்கினேன். அதன்பின் படிக்கட்டுகளில் இறங்கி, முகப்பு மண்டபங்களுக்குள் நுழைந்தேன். சிறு இடைவெளிகளில் குருக் களும், துறவிகளும் தங்கள் பல்வேறான அலுவல்களிலிருந்து திரும்பி வந்து, என்னைச் சுற்றி ஒன்று கூடினார்கள். அவர்களில் சுவாமி ருவாவும், சுவாமி காலியேரோவும், சுவாமி பிரான்செஸியாவும், சுவாமி சாவியோவும் அடங்குவர்.