இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

பாவப் பழக்கத்தால் வருகிற மயக்கம்.

கருத்த மனிதன் ஒருவன் தன் உடம்பின் தோல் நிறத்தை வெள்ளையாக்குவானென்றால், பாவத்திலே பழகினவன் எளிதாய்ப் புண்ணியவாளன் ஆவான் என்று எரேமியாஸ் என்ற தீர்க்கதரிசி வசனித்தார். கறுப்பானவனுக்கு அந்த நிறம் இயல்பாயிருப்பதால் அது மாறி விடாது. அதுபோல, பாவ நடக்கையில் பழகின வனுக்கு அந்தப் பாவக் கறுப்பு அவன் மனதிலே ஊன்றிப்போய் இருக்கிறதினாலே மாற்றுகிறது மிகவும் கஷ்டமென்று அந்த மகாத்துமா சொன்னார். பாவிகளான மனிதர் இதை அறியாமல் மயங்கி, தாங்கள் அனுபவிக்கிற பாவமே ருசி என்று, விடாதபடிக்கு அதைக் கொஞ்ச நாள் சுகித்து, பிறகு எளிதாய் விட்டுவிடலாமென்று நினைத்து, பாவத்திலே நடந்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நினைவினாலே கொடிய விலங்கையும், தொழுவையும் எடுத்து வலிய மாட்டிக் கொள்ளுகிறார்கள்.

அதெப்படியென்றால், ஒரு மரக்கட்டையின் மேல் ஒரு ஆணியை வைத்து, சுத்தியால் அடிக்க ஆணி உள்ளுக்கு இறங்கிப் போகும். முழுதும் இறங்கின பின்பு, அந்தக் கட்டை உடைந்தால் அல்லாமல் ஆணி எடுபடாது. வீட்டிலே பற்றின கொஞ்ச நெருப்பை அணைக்க மாட்டாதவன், ஏகமாய்ப் பற்றிக் கொண்டு கலந்து வேகிற நெருப்பை எப்படி அணைப்பான்? கொஞ்சம் தண்ணீருள்ள ஆற்றைக் கடக்க மாட்டாதவன், இருகரையும் வெள்ளம் புரண்டு ஓடுகிற ஆற்றை எப்படிக் கடப்பான்? ஒரு மடிப்புச் சீலையாலே மறைத்த கண் ஒன்றும் தெரியாதிருக்க, பத்து மடிப்புச் சீலையால் கட்டின கண் தெரியுமென்று சொல்லுகிறது புத்தி ஈனமல்லவா? மரமானது வேர் ஊன்று முன்னே, இளம் கன்றாயிருக்கிற போது எளிதாய்ப் பிடுங்கி எறிந்து போடலாம். பெரிதாய் வளர்ந்து வேர் ஊன்றிப் போனால் வெட்டுக் கத்தி, கோடரிகளைக் கொண்டு வெட்டித் தள்ளப் பிரயாசைப் பட வேண்டும். அப்படியே பாவப் பழக்கமுள்ளவன் அதை விட்டு நன்னெறியில் திரும்புகிறதற்கு அநேக தடையும் உண்டாம்.

முதல் தடையாவது: பாவத்தில் பழகினவனைப் பசாசு தன்னுடைய அடிமையாக்கிக் கொண்டு, தன்னை விட்டுப் பிரிந்துபோகாதபடிக்கு சிறைக்கூடத்திலே போட்டு, மூன்று கதவுகள் இட்டுப் பத்திரமாய் அடைத்தது போல், அவன் மனந்திரும்பாதபடிக்கு நெஞ்சில் ஒரு கதவும், பாவ சங்கீர்த்தனம் செய்யாதபடிக்கு வாயில் ஒரு கதவும், பாவ நடக்கையை விடாதபடிக்குக் கை கால்களில் ஒரு தளைக் கதவும் இட்டுப் பூட்டி வைக்கும். ஆனபடி யினாலே அர்ச்சிஷ்ட இராயப்பர் தன்னை யூதர் சிறைச்சாலையில் போட்டுப் பூட்டி வைத்த மூன்று கதவையும் தேவதூதன் பலத்தால் திறந்து புறப்பட்டாரே, அதேபோல், பாவத்திலே பழகினவன் விசேஷ தேவ உதவியால் மாத்திரம் பசாசின் சிறையை விட்டுப் புறப்படலாமே யொழிய மற்றப்படியல்ல.

இரண்டாம் தடையாவது: பாவம் கசப்பானாலும், பழக்கத்தினாலே கசப்பாய்த் தோன்றாமல், இனிப்பாய்த் தோன்றுகிறபடியினாலே அதை விட மாட்டான். கசப்பா யிருக்கிற இலை, காய், கனிகளைத் தின்று பழகினவனுக்கு அவைகளின் மேலேதான் விருப்பம் உண்டாயிருக்குமேயல்லாமல், நல்ல ருசிகரமுள்ள பதார்த்தத்தின் பேரிலே பிரியம் இராது. அதுபோலத் தான் செய்கிற பாவத்தில் எத்தனை பொல்லாப்பு உண்டாயிருந்தாலும், அது பொல்லாப் பென்று எண்ணாமல், இன்ப மென்று எண்ணுவான். களவு, கள்குடி , சூது, வேசித்தனம் முதலான பாவங்களிலே பழகினவன் அவைகளுக்காக எத்தனை அடி , நிந்தை, அவமானப்பட்டாலும், அவைகளை விடமுடியாமலிருப்பான். மனதுக்குள்ளே இருக்கிற பாவப் பழக்கமானது, மனிதரைத் தன்மையில் அத்தனை பலப்படுத்துகிற படியால், அப்படித் துணிகிறார்கள்.

மூன்றாம் தடையாவது: பழக்கமாய் வருகிற துர்நடக்கையிலே பாவத்துக்குள்ள பயமும், கூச்சமும் அற்றுப் போகிறபடியினாலே அதை விடுகிறதற்கு மனம் வராது. அதெப்படியென்றால், சத்தம் கேளாத இடத்திலே நித்திரை கொள்ளுகிறவன், ஓர் உரத்த சத்தம் கேட்டால் திடுக்கென்று விழித்துக் கொள்வான். தினமும் இரைகிற கடற்கரையிலே நித்திரை கொள்ளுகிறவன், என்ன பெரிய சத்தங் கேட்டாலும் எழுந்திருக்க மாட்டான். கொல்லன் உலைக்களத்து அண்டையிலே நித்திரை செய்கிற நாய், எத்தனை பெரிய சத்தம் கேட்டாலும் எழுந்திருக்க மாட்டாது. அதேபோல், துர்நடக்கையிலே பழகினவன், எத்தனை பயங்கரமான சத்தியங்களைக் கேட்டாலும், எத்தனை நல்ல புத்தி சொல்லப்பட்டாலும் சற்றும் அசையாமல் கேளாதவனைப் போலிருப்பான்.

கடைசித் தடையாவது: இப்படிப்பட்டவன் தன் பாவத்தை விட்டுத் திரும்ப வேண்டுமென்று நல்ல நினைவு வந்தாலும், அந்த நினைவு உறுதி கொள்ளாது. அவன் கெட்ட பழக்கத்திலே அமிழ்ந்து கிடக்கிறதால் பாவத்தை விடமாட்டாமலிருப்பான். சேற்றிலே புதைந்து கிடப்பவன் இப்புறம் வர வேண்டுமென்று, ஒரு காலைத் தூக்கி உயர வைக்க, மற்றக் கால் அதிக ஆழமாகப் புதைக்கப்படுகிறது போல், நல்ல நினைவு வந்து ஒருவேளை மனந்திரும்ப மனது வந்தாலும், கெட்ட சுகத்திலே ஊன்றியிருக்கிற ஆசை, அதைத் தள்ளிப் போட்டு மறுபடி பாவச் சேற்றில்தான் விழச் செய்யும். ஆகையால் அப்படிப்பட்டவன் எத்தனை முறை பிரதிக்கினை செய்தாலும், சாகுமளவும் மறுபடியும் மறுபடியும் அதிலேதான் விழுந்து கனமான சேதப்படுவான்.

டொலேடோ என்கிற இராச்சியத்திலே பேர்போன ஒரு மனிதன் தன் உறவினர்களில் ஒரு ஸ்திரீயை வைப்பாட்டியாக வைத்து, எத்தனை பேர் புத்தி சொன்னாலும் கேளாமல், பாவத்திலே அழுந்திக் கிடந்தான். சர்வேசுரன் அவனுக்குப் பயங்கரம் வருவிக்க வேண்டுமென்று கன்னியாஸ்திரீயாகிய ஒரு புண்ணியவதிக்குத் தரிசனையாகி, நடுத்தீர்க்கிற விதமாய் அந்த மோக பாவிக்குத் தீர்ப்பிட்டு நரகத்திலே தள்ளு கிறதாகவும், அதற்குத் தேவமாதா மன்றாடி முப்பது நாள் கெடு பேசினதாகவும் கண்டான். இதை அந்தக் கன்னியாஸ்திரீ தனக்குப் பாவசங்கீர்த்தனம் கொடுக்கிற குருவுக்கு அறிவிக்க ஆண்டவர் கட்டளையிட்டார். அப்படியே தான் கண்ட தரிசனத்தை அந்தக் குருவுக்குச் சொல்லி, அவரைக் கொண்டு அந்தப் பாவிக்கு அறிவித்தவுடனே அவன் பயப்பட்டுப் பாவ சங்கீர்த்தனம் செய்து தன் வைப்பாட்டி வீட்டை விட்டு, வேறே ஒரு வீட்டிலே போயிருந்தான். அந்த வைப்பாட்டி அவன் இருக்கிற மறு வீட்டிலேயும் போய், அவனோடே வெகுவாய் முறையிட்டு மனது இளகச் செய்யவே, மறுபடியும் பாவத்திலே விழுந்தான். இப்படி மூன்று முறை பிரதிக்கினை செய்து, மறுபடி அவளைக் கண்ட நேரமெல்லாம் பாவத்திலே விழுவான்.

முப்பதாம் நாள் குரு அவனைப் பார்க்க வந்த இடத்திலே பேச்சுக்கு இடம் கொடாமல் இருந்தான். அன்று இராத்திரி நடுச்சாமத்திலே இவன் அவஸ்தையாயிருக்கிறதை அந்த வீட்டுக்காரர் கண்டு, குருவை அழைத்து வந்தார்கள். ஆனால் அந்தப் பாவி மனந்திரும்பாமல், பேய் விழி விழித்துக் கொண்டு ஐயையோ! என் இருதயத்தைப் பிடித்துப் பிடுங்குகிறார்கள் என்று அலறி, பசாசின் கையிலே தன் ஆத்துமத்தைக் கையளித்தான். இப்படிப் பட்ட பாவப் பழக்கத்தின் கட்டுக்களை அவிழ்க்கிறது எவ்வளவு கஷ்டமாயிருக்கிறது என்று பார். மனந்திரும்ப வேண்டுமென்று ஒரு அடி எடுத்து முன்னுக்கு வைத்தால், பாவச் சறுக்கு நரக பாதையிலே இரண்டு அடி பின்னுக்கு இழுத்துவிடுகின்றது. ஐயையோ பாவீ! ஏன் இப்படிப்பட்ட விலங்குகளை உன் காலிலே மாட்டிக் கொள்ளுகிறாய்? பாவப் பழக்கம் என்கிற கடலில் ஏன் மூழ்கிப் போகின்றாய்?

பாவப் பழக்கத்தினாலே வருகிற மட்டில்லாத கேடுகளையும், நித்திய நிர்ப்பந்த வேதனைகளையும் யோசித்துப் பார்க்கிற போது அஞ்சாதிருக்கக் கூடுமோ? ஆகையால் எதிரி கையில் அகப்பட்டுச் சிறையாகாத படிக்குத் தங்களை எத்தனை எச்சரிக்கையோடு காத்துக் கொள்வார்களோ, எத்தனை தைரியத்தோடு போராடி எதிரியைத் துரத்துவார்களோ, அத்தனை எச்சரிக்கை யோடும், தைரிய விசுவாசத்தோடும், கெட்ட பழக்கம் என்கிற விலங்கிலே அகப்படாதபடிக்குத் தந்திரங் களையெல்லாம் விலக்கி, சகல பாவச் சமயங்களுக்கும் நீங்கி, உலகம், பசாசு, சரீரம் என்கிற சத்து ராதிகளைச் ஜெயிக்கிறதற்காகச் சர்வ பிரயாசைப்படக் கடவோம். மேலும் சத்துருக்களால் சிறைப்பட்டு, விலங்கிலே கிடக்கிறவன், அவர்கள் தனக்குக் கடின நிர்ப்பந்தங்களும், அவலமான சாவும் நியமித்திருக்கிறதை அறிந்தால், சும்மா இருப்பானா? தன்னை மீட்க எத்தனை கஷ்டமாயிருந்தாலும், தன் விலங்கை உடைத்துப் போடவும், சாவுக்குத் தப்பித்துக் கொள்ளவும் தன்னால் இயன்ற மட்டும் பிரயாசைப் படுவானல்லோ ? பசாசின் அடிமைத்தனத்தில் அகப்பட்டு, கெட்ட பழக்கம் என்ற விலங்கில் கிடக்கிறவனே! நீ செய்ய வேண்டியது அதுதான்.

உன் தலைமேல் சாவும், உன் காலின் கீழ் நித்திய நரகமும், கடின நிர்ப்பந்தங்களும் இருக்கிறதை அறிந்திருக்கிற நீ, பயமில்லாமல் இருக்கிறதென்ன? உன் விலங்கை உடைக்க எத்தனை வருத்தமாயிருக்கிறதோ அத்தனைக்கும் அதற்குப் பிரயாசைப் படக்கடவாய். அது உன் சொந்தப் பலத்தினால் கூடாது போனாலும், தேவ அநுக்கிரகத்தைக் கொண்டு கூடும். ஆகையால் உன் நிர்ப்பாக்கியமான கேட்டின் மேல் கண்ணீர்விட்டு, சர்வேசுரனிடத்தில் கிருபை பெறத்தக்கதாக, மிகவும் வேண்டிக் கொள்வாயாக. ஒரே மனதோடே சகல பாவங் களையும் வெறுத்து விட்டுப் பாவத்துக்கு ஏதுவாயிருக்கிற தெல்லாம் எப்போதைக்கும் மறுத்து அகற்றக் கடவாய். உன்னால் ஆனமட்டும் பிரயாசைப்படுவாயாகில், தேவ உதவியினாலே வருத்தமெல்லாம் நீங்கும். உன் விலங்கெல்லாம் உடைந்து விடும், மீட்பையும் அளவற்ற ஆனந்தத்தையும் அடைவாய்.

ஆகையால் பாவ மயக்கம் என்கிற படலங்களை ஞான வாளால் அறுத்து, செய்த பாவத்துக்காக விசனப்பட்டுப் பிரார்த்தித்துக் கொள்.