இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

“சேசுவே, எமது அபயக் குரலொலியைக் கேட்டருளும்; நன்றாகக் கேட்டருளும்” என வேண்டினோம்; ஏனெனில் அவர்தான் நமது மீட்பர். நமக்காகத் தமது பரம பிதாவிடம் இடைவிடாது பரிந்து பேசுகிறவர். “உங்களுக்கு என்னென்ன வேண்டுமோ, அவைகளை எனது நாமத்தினால் பிதாவினிடம் கேளுங்கள், அவைகளை பிதா உங்களுக்கு நிச்சயம் கொடுப்பார்” என்று உரைத்தவர் நமது அன்புள்ள இரட்சகர். ஆதலின் நாம் அவருடன் ஒன்றித்து, நம்பிக்கையுடன் திரியேக தேவனிடம் நமது வேண்டுதல்களைச் சமர்ப்பிப்போம்.

நம் தாயாம் சத்திய திருச்சபையும், பரிசுத்த தமதிரித்துவத்தின் முதலாளாகிய பிதாவை நோக்கி பின்வருமாறு ஜெபிக்க நம்மைத் தூண்டுகிறது: “பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களைத் தயை செய்து இரட்சியும் சுவாமி.” பரலோகத்தில் தேவதூதர் இடைவிடாது “பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்” என்று ஆராதித்துத் துதிக்கும் ஏக சர்வேசுரனைத்தான், “பிதாவை, தகப்பனே, அப்பா” என்று அன்புடன் அழைக்கிறோம். 

ஆ, அச்சொற்களில்தான் எவ்வளவு அன்பு, கனிவு, இனிமை அடங்கியுள்ளது! ஆம். கடவுள்தான் அன்பு. அன்பே கடவுள். இவ்வடிப்படையான தத்துவத்தை மனதில் இருத்தித்தான், நாம் கடவுளை “பிதாவே” என்றழைக்கிறோம். ஒரு நல்ல தகப்பன் தன் பிள்ளையை அன்புடன் பேணி வளர்க்கிறான்; சிறு பிள்ளை தவறிழைக்கும்போது, தகப்பன் அதனைக் கடிந்துகொள்ளுவதும் அன்பினாலேதான். தந்தையின் உள்ளத்தில் பெருகியோடும் இவ்வன்பை அகற்றிவிடின் மகன் கண்களுக்கு தந்தை ஓர் அரக்கனைப் போன்று தோற்றமளிப்பான். 

மண்ணோடு மண்ணாய் மக்கி மறைந்து போகும், கேவலம் அற்பப் புழுவிற்குச் சமானமான நீசப் பாவிகளாகிய நாமும் திரியேக தேவனை, “எங்கள் தந்தையே, எங்கள் பிதாவே” என அழைக்கும்படி விரும்புகிறார் நமது ஆண்டவர்; பரலோக மந்திரத்திலும் இதையே நமக்குப் படிப்பிக்கிறார்.

சர்வேசுரன் அன்பு என்னும் பாசக் கயிற்றால் இவ்வுலக மக்களனைவரையும் இறுகக் கட்டி தம்மட்டில் இழுக்கிறார். இத்தெய்வீக அன்பில் அவரது பிரிய மக்களாக வளர்ந்து வரும் நாம், இவ்வுண்மையைச் சரிவர உணரும்போது, அன்பிற்குப் பிரதி அன்பு காட்டாமலிருக்க முடியுமா? தன் தந்தையின் நேசத்தை உணராமலிருக்கும் மகனைப் போன்று நாமும் நமது பரலோகத் தந்தை நம்மீது கொண்டிருக்கும் அணைகடந்த நேசத்தைச் சரிவர உணராதிருக்கிறோம். 

நேசத்துக்கு நேசம் காட்டாது, நம் இருதயம் உலகப் பொருள்களின் நேசத்தாலும், பாவத்தாலும் வறண்டு கல்லிலும் கடினமாக இறுகிவிட்டது. ஆனால் அதன் காரணமாக அதைரியப்படக் காரணமில்லை. இனி யாது செய்வோம் என்று கலங்காது திடவிசுவாசமுடன், அன்பர்களின் இருதயங்களில் தேவ சிநேக அக்கினியை மூட்டும் தேவ ஆவியை வேண்டுவோம். தூக்கமும் சோர்வும் நிறைந்து துன்புறும் நமது நெஞ்சங்களில் இத்தேவசிநேகத்தின் விதையை அவர் ஊன்றுவார்.

தகப்பன் எங்கோ, அங்குதான் பிள்ளையும்; தந்தையின் இல்லம் மகனின் இல்லமுமாம். இவ்வுலகில் நாம் எல்லோரும் வழிப்போக்கர். இவ்வுலகம் நிலையானதல்ல. நம் பரலோக பிதா வாசம் செய்யும் மோட்ச வீடே நமது நிலையான வீடு; அவ்வீட்டை நோக்கியே ஒவ்வொரு நாளும் நாம் விரைந்து செல்லுகிறோம். தந்தையின் இல்லத்தை வெறுக்கும் தறுதலைப் பிள்ளை தகப்பனையும் வெறுக்கிறான். நம்மைப் படைத்துக் கருணையுடன் காத்து நடத்திவரும் கடவுளின் இல்லமே நமது நிலையுள்ள இல்லமானதால், அவ்விடம் செல்ல விரும்பாதவன் கடவுளையும் அடைய விரும்புவதில்லையன்றோ?

இவ்வுலக வாழ்வில் பிரமாணிக்கமாய் நடக்கும் தமது மக்களுக்கு, மோட்சத்தில் எல்லையில்லா இன்பமும், சந்தோஷமும், சமாதானமும் அளித்து, பொன் மகுடம் சூட்டி மகிழ்விக்க ஆவலோடு காத்திருக்கிறார் நமது பரலோகப் பிதா. இம்முடிவிலா இன்பத்தைச் சுகித்தனுபவிக்கவே நம்மை சர்வேசுரன் உண்டாக்கினார். வான்வீடு அடைவதே நமது வாழ்க்கையின் ஏக குறிக்கோள்.

இங்கு ஒரு கேள்வி எழலாம். “சர்வேசுரன் மோட்சத்தில் மட்டும்தானா இருக்கிறார்? அவர்தான் எங்கும் நிறைந்திருக்கிறாரே; ஆதலால் நாம் ஏன் மோட்சத்திற்குப் போக ஆசிக்க வேண்டும்?” உண்மைதான்; சர்வேசுரன் எங்கும் வியாபித்திருக்கிறார்; பரலோகத்திலும், பூலோகத்திலும், நரகத்திலும், இருளிலும், ஒளியிலும் எங்குமிருக்கிறார். அவர் இல்லாத இடமே இல்லை. 

தங்குதடையின்றி சூரிய வெளிச்சம் கண்ணாடியினுள் புகுவதுபோல நம் வாழ்க்கையிலும் சர்வேசுரன் நம்முடன் சேர்ந்து ஜீவிக்கிறார். ஏன்! நம்முள்ளத்திலேயே வாசம் செய்கிறார். இவ்விதமே கடவுள் எங்கும் வியாபித்திருக்க, ஏன் “பரமண்டலங்களிலே இருக்கிற எங்கள் பிதாவே” என்று ஜெபிக்க வேண்டும்?

காரணம், நித்திய ஜீவியமடைந்து சர்வேசுரனை முகமுகமாய்த் தரிசித்து சதா காலமும் சந்தோஷமாக ஜீவிப்பதற்கு நம்மில் ஒவ்வொருவருக்கும் அவர் ஒரு தனியிடம் தயாரித்திருப்பது மோட்சத்தில்தான்.

நமது துன்ப துரிதங்களை அகற்றி, வாழ்வின் இறுதியில் மோட்சானந்தத்தை அவர் நமக்கு அருளுவார்; ஆதலால் “முதன்முதலாக சர்வேசுரனுடைய இராச்சியத்தைத் தேடுங்கள்” என்ற ஆண்டவரின் அன்பழைப்புக்குச் செவிசாய்ப்போம். மோட்சம் போய்ச் சேர்வதில்தான் நமது இரட்சணியம் அடங்கியிருக்கின்றது. “எங்களைத் தயை செய்து இரட்சியும் சுவாமி” என்று பன்முறை சொல்லும்போது, பரலோகத்தை அடைய நமக்கிருக்கும் தீரா ஆவலை வெளியிடுகிறோம் என்பதில் சந்தேகமில்லை. 

பரலோக இராச்சியம் தனிப்பட்ட ஒருவனுக்கு மட்டுமே சொந்தமல்ல. உலக மாந்தர் அனைவருக்குமே சொந்தம் என்பதைக் குறித்தே “என்னை இரட்சியும்” என்று சொல்லாது, “எங்களை இரட்சியும்,” அதாவது, எங்கள் எல்லோரையும் காப்பாற்றும் என்று வேண்டுகிறோம்.

“ஓ! பரலோக பிதாவே! எங்கள் நேசத் தகப்பனே! உம்மை நோக்கி எமது கண்களை உயர்த்தும் இவ்வேளையில் எங்களுடைய ஆத்துமக் கண்களைத் திறந்தருளும். நிலையற்ற இவ்வுலக ஆடம்பரங்களிலும், ஆனந்த அக்களிப்பிலும், ஆசாபாசங்களிலும், எங்கள் கவனத்தைச் செலுத்தாது, வரவிருக்கும் நித்திய ஜீவியத்தில் எங்கள் முழுக் கவனத்தையும் செலுத்தக் கிருபை புரியும். 

உமது கற்பனைகளிலிருந்து ஒருபோதும் பிறழாது உத்தம கத்தோலிக்கராக ஜீவிக்க எங்களுக்கு உதவி செய்தருளும். உம்மையறியாது அஞ்ஞான இருளில் ஜீவிக்கும் மக்களை, எங்கள் போதனையாலும், சாதனையாலும் வசீகரித்து அவர்களும் எங்களோடு மோட்ச சம்பாவனையடையச் செய்ய எங்களுக்கு வேண்டிய திடனைத் தந்தருளும்.

“ஓ! எம் நேசத்தாயே! பிதாவாகிய சர்வேசுரனின் பிரிய குமாரத்தியே! நீர் இவ்வுலகில் இருக்கும்போது இடைவிடாது பக்திப் பற்றுதலுடன் பரம பிதாவிடம் வேண்டியது போலவே இப்போதும் பாவிகள் எங்களுக்காக பரலோகப் பிதாவிடம் மன்றாடுவீராக!” 

பரமண்டலங்களிலேயிருக்கிற பிதாவாகிய சர்வேசுரா!
எங்களைத் தயை செய்து இரட்சியும் சுவாமி!.