பாத்திமா காட்சிகள் - லிஸ்பன் நகர ஆஸ்பத்திரியில் தான் சேர்க்கப்படப் போவதாக ஜஸிந்தா கூறியது

ஒருநாள் வியாகுல அன்னையின் சிறு படம் ஒன்றை லூஸியா ஜஸிந்தாவிடம் கொண்டு காட்டினாள். அதையே சிறிது நேரம் உற்றுப் பார்த்து விட்டு, ஜஸிந்தா திடீரென மிகவும் வேதனையோடு, “என் சிறிய மோட்ச அன்னையே! உண்மையாகவே நான் தனியே தான் இறக்க வேண்டுமா?” என்றாள்.  

என்னென்ன வேதனையும், பயமும் அப்பிஞ்சு மனதைக் கசக்கிப் பிழிந்திருக்க வேண்டும்!  “என் பிதாவே! இந்தப் பாத்திரத்தை நான் உட்கொண்டாலொழிய இது அகலக் கூடாதாகில்...” என்று சேசு ஒலிவத் தோட்டத்தில் மரண அவஸ்தைப்பட்டுக் கூறிய வார்த்தைகளே நம் நினைவுக்கு வருகின்றன.  

லூஸியாவும் அழுதாள்.  ஜஸிந்தாவின் கைகளைப் பற்றிக் கொண்டு அவளுக்கு என்ன ஆறுதல் கூறுவதென்று தெரியாமல்  தவித்தாள்.

“நம் அம்மா உன்னைக் கூட்டிக் கொண்டு போக வருவார்கள் தானே?  அப்போ நீ தனியே இறப்பதைப் பற்றி ஏன் கவலைப்படு கிறாய்?” என்றாள் லூஸியா.

“உண்மைதான். நான் கவலைப்படவில்லைதான்.  ஆனால் இது ஏனென்று தெரியவில்லை லூஸியா. நம் அம்மா வந்து என்னைக் கூட்டிக் கொண்டு போவார்கள் என்பதை நான் மறந்து விடுகிறேன்” என்று அச்சிறுமி பதிலளித்தாள்.

ஒலிம்பியா ஜஸிந்தாவைப் பற்றி அறிய வேண்டுமானால், லூஸியாவின் வழியாகத்தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டி யிருந்தது.

“லூஸியா!  ஜஸிந்தா இன்று உன்னிடம் என்ன கூறினாள்?” என்று லூஸியா திரும்பிச் செல்லும்போது மெதுவாகக் கேட்பாள் ஒலிம்பியா.

ஒருநாள் ஜஸிந்தா தன் கைகளால் முகத்தை வெகுநேரம் மூடிக் கொண்டிருந்தாள்.  ஏன் என்று ஒலிம்பியா கேட்டதற்கு ஜஸிந்தா ஒரு புன்னகை செய்தாள்.  பதில் சொல்லவில்லை.  இதைப் பற்றி ஜஸிந்தாவிடம் லூஸியா கேட்டதற்கு ஜஸிந்தா, “அப்போது நான் நம் ஆண்டவரையும், நம் அம்மாவையும் (அத்துடன் இரகசியத்தின் ஒரு பகுதியையும் குறிப்பிட்டு) நினைத்துக் கொண்டிருந்தேன்.  அப்படி நினைப்பது ரொம்பப் பிடிக்கும்” என்றாள்.

இரகசியத்தை லூஸியா கூறாததால் ஒலிம்பியாவுக்குத் திருப்தியில்லை. “இந்தப் பிள்ளைகளின் வாழ்வே ஒரு புதிராயிருக்கிறது” என்று மரிய ரோஸாவிடம் கூறினாள். “ஆம்! அவர்கள் தனியாயிருக்கும்போது ஒரு மூலையில் போயிருந்து கொண்டு பேசுகிறார்கள்.  அதில் ஒரு வார்த்தை கூட, நாம் எவ்வளவு கவனிக்க முயன்றாலும், நமக்கு விளங்குவதில்லை.  அப்போது யாராவது வந்து விட்டால், அவர்கள் தலை கவிழ்ந்துகொண்டு எதுவுமே பேசுவதில்லை.  இந்த மர்மத்தை என்னால் கண்டுபிடிக்கவே முடியவில்லை” என்று மரிய ரோஸா பதிலளித்தாள்.

லிஸ்பனிலுள்ள பெரிய ஆஸ்பத்திரியில் தான் சேர்க்கப்படப் போவதாக ஜஸிந்தா கூறியதை லூஸியாவைத் தவிர வேறு யாரும் ஒரு பொருட்டாய் நினைக்கவில்லை. 90 மைல்களுக்கப்பால் இருக்கும் தலைநகர்ப் பட்டணத்திற்கு ஒரு குக்கிராமத்திலுள்ள இச்சிறுமி கொண்டு செல்லப்படுவாள் என்பதை அங்கு யாருமே நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்.

1920, ஜனவரி மாதத்தில் ஒரு நாள் சங். மனுவேல் போர் மிகோவும், லிஸ்பனிலுள்ள அவர் நண்பர் டாக்டர் என்ரிகோவும் அவர் மனைவியும் திடீரென காரில் அல்யுஸ்திரலுக்கு வந்தார்கள். டாக்டர் என்ரிகோ ஜஸிந்தாவைப் பரிசோதித்து விட்டு, உடனே சிறுமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்காவிட்டால் அவள் உயிருக்கே ஆபத்து என்றார். 

ஜஸிந்தாவை லிஸ்பனுக்குக் கொண்டு சென்று மருத்துவம் செய்வதற்கான செலவை வந்திருந்த மூவரும் வேறு சில நண்பர்களுடன் பகிர்ந்து ஏற்றுக் கொள்வதாக முடிவாயிற்று.

மார்ட்டோவும் ஒலிம்பியாவும் இதை ஆதரிக்கவில்லை. ஏற்கெனவே ஒரு ஆஸ்பத்திரியில் கொண்டு வைத்துப் பார்த்தாகி விட்டது.  எவ்வித பயனும் ஏற்படவில்லை. மேலும் தேவ அன்னை இச்சிறுமியை அழைத்துச் செல்ல சீக்கிரம் வருவதாக இருந்தால், எந்த வைத்தியம் செய்தும் என்னத்திற்கு என்று அவர்கள் தடுத்தனர். 

ஆனால் டாக்டர் என்ரிகோ, “மனித தீர்மானத்திற்கெல்லாம் மேற் பட்டது தேவ அன்னையின் விருப்பம்.  ஆனால் உண்மையாகவே அவர்கள் இக்குழந்தையை எடுத்துக் கொள்ள விரும்புகிறார்கள் என்று அறிய நிச்சயமான ஒரே வழி, விஞ்ஞான முறைப்படி உள்ள சகல உபாயங்களையும் உபயோகித்து, இச்சிறுமியின் உயிரைக் காப்பாற்ற முயல்வதுதான்” என்றார்.

லிஸ்பன் நகர ஆஸ்பத்திரிக்கு ஜஸிந்தாவைக் கொண்டு செல்ல வேண்டும் என்று முடிவாயிற்று. ஜஸிந்தா ஆச்சரியப்படவில்லை.  இப்படி ஒன்றை அவள் எதிர்பார்த்தே இருந்தாள். சில நாட்களாக அவளுடைய உடல் நிலை தேறியும் வந்தது.

லிஸ்பனுக்குப் புறப்படுமுன் ஒருநாள் ஒலிம்பியா ஜஸிந்தாவைப் பொதி மிருகத்தில் ஏற்றி கோவா தா ஈரியாவுக்குக் கடைசி சந்திப்பிற்காகக் கொண்டு சென்றாள்.

அங்கு அவர்கள் ஒரு ஜெபமாலை சொல்லி ஜெபித்தனர். அதன்பின் ஜஸிந்தா சில காட்டு மலர்களை சேகரித்து, தேவ அன்னை காட்சி தந்த இடத்தில் கட்டப்பட்டிருந்த சிறிய கோவிலில் அன்னைக்கு அன்புக் காணிக்கையாக வைத்தாள். அம்மா தோன்றிய அஸின்ஹேரா மரத்தருகில் முழங்காலிட்டு சற்று நேரம் தன் இறுதி ஜெபத்தைச் சொன்னாள். பின் அவள் தன் தலையை உயர்த்தி வானத்தையும் பரந்த சுற்றுப்புறங்களையும் பார்த்தாள்.  தன் தாயிடம், 

“அம்மா, நம் அம்மா திரும்பிச் சென்ற போது, அதோ அந்த மரங்களின் மேலேதான் சென்றார்கள். அவர்கள் மோட்சத்திற்குள் எவ்வளவு துரிதமாய்ச் சென்றார்களென்றால், அந்த மரங்கள் அவர்கள் காலைக் குத்தியிருக்கும் போலும் என்று நான் நினைத்துக் கொள்வேன்” என்று கூறினாள்.

மறுநாள் காலையில் ஜஸிந்தா தன் தந்தை மார்ட்டோவிடம் விடைபெற்றுக் கொண்டாள். தன் உயிர்த் தோழி லூஸியாவிடமும் விடைபெற்றாள். “என் இருதயம் அறுக்கப்பட்டதைப் போல் நான் உணர்ந்தேன். ஜஸிந்தாவை என் கைகளில் வெகு நேரம் பிடித்திருந்தேன்.  

அவள் அழுதுகொண்டே என்னைப் பார்த்து, “லூஸியா, நாம் இனி சந்திக்கவே மாட்டோம்.  நான் மோட்சம் செல்லும் வரை எனக்காக நீ அதிகம் வேண்டிக் கொள்ள வேண்டும். அதன்பின் நான் உனக்காக அதிகம் மன்றாடுவேன். லூஸியா, அவர்கள் உன்னைக் கொன்று விட்டாலும் கூட, நீ யாரிடமும் அந்த இரகசியத்தைச் சொல்லாதே.  சேசுவையும், அம்மாவின் மாசற்ற இருதயத்தையும் மிகவும் நேசி. பாவிகளுக்காகப் பல பரித்தியாகங்கள் செய்” என்றாள்.” 

“போய் வருகிறேன் லூஸியா.” 

“போய் வா ஜஸிந்தா.” கண்ணீர் வழிய இருவரும் பிரிந்தனர்.

ஜஸிந்தாவுடன் அவள் தாய் ஒலிம்பியாவும், அவள் மூத்த அண்ணன் அந்தோனியும் ரயிலில் லிஸ்பன் நகருக்குச் சென்றனர். ரயில் பயணமே செய்தறியாத குக்கிராமவாசிகள் பல தொல்லைகள் பட்டு தலைநகர் வந்து சேர்ந்தனர். 

அங்கு மூன்று பெண்மணிகள் அவர்களைச் சந்தித்து, தங்குவதற்கு உதவி செய்தனர்.  ஆயினும் அன்று வெகு நேரம் வரை ஜஸிந்தா தங்கி சிகிச்சை பெறுவதற்குரிய இடம் கிடைக்கவில்லை.  இறுதியில் ஒரு பெண் அவர்களைத் தன் வீட்டில் ஏற்றுக் கொண்டாள். ஒரு வாரம் அங்கு தங்கியிருந்தார்கள் ஜஸிந்தாவும், அவள் தாயும்.

அந்நகரில் ஒரு சின்ன சிறுமியர் விடுதியைப் பராமரித்து வந்த கோடினோ என்ற ஒரு பிரான்சிஸ்கன் சகோதரி இருந்தார்கள்.  பாத்திமாவில் நடந்த காட்சிகளைக் கேள்விப்பட்டதிலிருந்து இச்சகோதரி கோவா தா ஈரியாவுக்குச் செல்ல வேண்டுமென்றும், காட்சி பெற்ற மூன்று குழந்தைகளையும் பார்க்க வேண்டுமென்றும் மிகவும் ஆவலாயிருந்தார்கள்.  

ஜஸிந்தா அதே நகரில் வந்திருப்பதாகக்  கேள்விப்பட்டதும், கோடினோ  சகோதரி  அவளைத்  தன் மாணவியர் இல்லத்தில் ஆவலுடன் ஏற்றுக் கொண்டார்கள்.  ஜஸிந்தா அவ்விடுதியில் தங்குவதற்கு எல்லா ஏற்பாடுகளையும் சிரத்தையயடுத்துச் செய்தார்கள்.

இம்மாணவியர் இல்லம் ஜஸிந்தாவுக்குப் பிடித்திருந்தது. மறைந்த சேசு அங்கு இருக்கிறார் என்ற நினைவே அவளை மிகவும் மகிழ்ச்சிப்படுத்தியது. அவரைத் தினமும் சென்று பார்க்க முடியும், தினமும் அவரை உட்கொள்ள முடியும் என்பதை பெரிய பாக்கியமாகவே அவள் கருதினாள்.  சேசு இருக்கும் கோவிலில் யாரும் அவசங்கையாக நடப்பதும், பேசுவதும் அவளுக்குச் சற்றும் பிடிக்கவில்லை.

ஜஸிந்தா மற்றப் பிள்ளைகளுடன் ஓடியாட இயலாதிருந்தாள். ஆயினும் அவர்களுக்கு நல்ல சிறு அறிவுரைகளைக் கூறி வந்தாள்.  ஜஸிந்தா பேசுவதை மிகவும் கவனமாகக் கேட்டார்கள் சகோதரி கோடினோ.  அவற்றை மறந்து விடக் கூடாதென பலவற்றை உடனுக்குடன் குறித்து வைத்துக் கொண்டும் வந்தார்கள்.