இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

கடவுள் இரக்கமுள்ளவர், இருந்தும் பலர் ஒவ்வொரு நாளும் இழக்கப்படுகிறார்கள்!

ஆனால் கடவுள் இரக்கமுள்ளவராக இருக்கிறாரே என்று பாவி சொல்கிறான். நான் அவனுக்குப் பதில் சொல்கிறேன்: அதை யார் மறுக்கிறார்கள்? உண்மைதான், கடவுளின் இரக்கம் அளவற்றதுதான். ஆயினும் ஒவ்வொரு நாளும் பலர் இழக்கப்படுகிறார்களே! "(மனஸ்தாபத்தால்) நொறுங்கிய இருதயமுள்ளவர்களைக் குணமாக்க ... அவர் என்னை அனுப்பினார்'' (இசை.61:1). நல்ல மனமுள்ளவர்களைக் கடவுள் குணப்படுத்துகிறார். அவர் பாவத்தை மன்னிக்கிறார்; ஆனால் பாவத்தில் பிடிவாதமாக நிலைத்திருப்பவனை அவர் மன்னிக்க இயலாது. "நான் இன்னும் இளைஞன்தான்'' என்று பாவி பதில் கூறலாம். உண்மை! நீ இளைஞன்தான்; ஆனால் கடவுள் வருடங்களையல்ல, பாவங்களையே கணக்கிடுகிறார். இது அனைவருக்கும் ஒரே விதமாக இருப்பதில்லை. ஒருவனுக்குக் கடவுள் நூறு பாவங்களையும், மற்றொருவனுக்கு ஆயிரம் பாவங்களையும் மன்னிக்கிறார், இன்னொருவனையோ, அவன் இரண்டாவது பாவம் கட்டிக் கொண்ட உடனேயே நரகத்தில் தள்ளுகிறார். எத்தனை பேரை அவர்களுடைய முதல் பாவத்திலேயே அவர் அங்கே அனுப்பியிருக்கிறார்! ஐந்து வயதுக் குழந்தை ஒன்று ஒரு தேவதூஷணம் கூறியதற்காக, அடுத்த கணம் நரகத்தில் தள்ளப்பட்டதாக அர்ச். கிரகோரியார் கூறுகிறார்! பன்னிரண்டு வயதுச் சிறுமி ஒருத்தி தனது முதல்பாவத்திற்காக நரகத்திற்குத் தீர்ப்பிடப்பட்டதாக திவ்விய கன்னிகை ஃப்ளாரன்ஸின் பெனடிக்டா என்னும் தேவ பணிப்பெண்ணுக்கு வெளிப்படுத்தினார்கள். எட்டு வயதேயான மற்றொரு சிறுவன் தன முதல் பாவம் செய்தவுடனே இறந்து, தன் ஆன்மாவை இழந்து போனான். அத்திமரத்தில் தாம் கனி எதையும் காணாத முதல் தடவையே நமதாண்டவர் அதைச் சபித்தார் என்றும், அது பட்டுப் போயிற்றென்றும் அர்ச். மத்தேயு சுவிசேஷத்தில் நாம் வாசிக்கிறோம்: "இனி ஒருக்காலும் உன்னிடத்தில் காய் காய்க்காமல் போகட்டும்''  (மத்.21:19). மற்றொரு முறை சர்வேசுரன்: "தமாஸ்குவின் மூன்று பாதகங்களை மன்னிப்போம், நான்காவதிலோ அதை நாம் மனந்திருப்ப மாட்டோம்'' என்றார் (ஆமோஸ்.1:3). மித மிஞ்சின நம்பிக்கையுள்ள மனிதன் யாராவது கடவுளிடம் அவர் ஏன் மூன்று பாவங்களை மன்னித்தாலும், நான்காவதை மன்னிக்க மாட்டார் என்று கேட்கலாம். அதில், நாம் கடவுளின் தெய்வீகத் தீர்ப்புகளை ஆராதித்து, அப்போஸ்தலரோடு சேர்ந்து: ""ஆ, தெய்வ ஞானம், அறிவு இவைகளின் திரவிய பொக்கிஷம் எவ்வளவோ ஆழமானது! அவருடைய நியாயத் தீர்ப்புகள் எவ்வளவோ புத்திக் கெட்டாதவைகளுமாய், அவருடைய வழிகள் எவ்வளவோ ஆராய்ந்தறியக் கூடாதவைகளுமா யிருக்கின்றன'' (உரோ.11:33) என்று சொல்ல வேண்டும். "தாம் யாரை மன்னிக்கிறார் என்றும், யாரை மன்னிப்பதில்லை என்றும் அவர் நன்றாக அறிந்திருக்கிறார்; அவர் யாருக்காவது இரக்கம் காட்டுகிறார் என்றால், அதை அவர் இலவசமாகவே தருகிறார்; அவர் அதை மறுக்கும்போதோ, நீதியுடன் அதைத் தர மறுக்கிறார்'' என்று அர்ச். அகுஸ்தினார் கூறுகிறார்.

பிடிவாதமுள்ள பாவி, "ஆனால் நான் மிக அடிக்கடி கடவுளை நோகச் செய்திருக்கிறேன், அவரும் என்னை மன்னித்திருக்கிறாரே; ஆகவே, இந்த இன்னொரு பாவத்தையும் அவர் மன்னிப்பார் என்று நான் நம்புகிறேன்'' என்று பதில் சொல்வான். ஆனால் நான் சொல்கிறேன்: கடவுள் இது வரை உன்னைத் தண்டிக்கவில்லை என்பதால், இனியும் அது அப்படித்தான் இருக்குமா? (பாவத்தின்) அளவு நிரம்பி விடும், அப்போது தண்டனை வரும். சம்சோன் தாலிலாவோடு தன் அசுத்த நடத்தையைத் தொடர்ந்து கொண்டே, முன்பு போல பிலிஸ்தியர்களின் கரங்களிலிருந்து தான் தப்பி விட முடியும் என்று நம்பினான்: ""முன்பு போல் என் சங்கிலிகளை உடைத்து நான் புறப்பட்டுப் போவேன்'' (நியா.16:20). ஆனால் அந்தக் கடைசி முறை அவன் பிடிபட்டான், இறுதியில் தன் உயிரையும் இழந்தான். ""பாவம் செய்தேன், அதனால் எனக்கு என்ன தீங்கு வந்தது? என்று சொல்லாதே. ""நான் மிக அநேகப் பாவங்களைக் கட்டிக் கொண்டேன், கடவுள் என்னை ஒருபோதும் தண்டிக்க வில்லை என்று சொல்லாதே'' என்கிறார் ஆண்டவர்: ""ஏனெனில் உன்னதக் கடவுள் பொறுமையாயிருந்தபின் தண்டிப்பார்'' (சர்வப் (சீராக்)5:4). அதாவது, காலம் வரும், அப்போது அவர் அனைத்திற்கும் சன்மானமோ, தண்டனையோ தருவார். அவரது இரக்கம் எவ்வளவு பெரிதாயிருந்ததோ, அந்த அளவுக்கு தண்டனையும் பெரிதாயிருக்கும்.

நான் சோதிக்கப்படும்போது, ஓ இரக்கமுள்ள தேவனே, நான் எப்போதும் உடனே ஓடி வந்து உம்மிடம் தஞ்சம் புகுவேன். இது வரை என் வாக்குறுதிகளிலும், என் தீர்மானங்களிலும் நான் நம்பிக்கை வைத்திருந்தேன், என் சோதனைகளில் உம்மிடம் என்னை ஒப்புவிப்பதில் நான் அசட்டையாயிருந்தேன். இதுவே என் அழிவாக இருந்து வந்திருக்கிறது. இல்லை; இந்நாள் முதல் நீரே என் நம்பிக்கையாகவும் பலமாகவும் இருப்பீர். இவ்வாறு எல்லாவற்றையும் செய்து முடிக்க வல்லவனாக நான் இருப்பேன். ஆகையால், ஓ என் சேசுவே, எப்போதும் உம்மிடம் என்னைக் கையளித்து, என் எல்லாத் தேவைகளிலும் உமது உதவியை மன்றாடும்படியாக, உமது பேறுபலன்களின் வழியாக, எனக்கு அருள் தாரும். ஓ என் இராஜரீக நன்மைத்தனமே, நேசிக்கப்படத் தக்க அனைத்திற்கும் மேலாக நேசிக்கப்படத் தக்கவரே, நம்மை நான் நேசிக்கிறேன், உம்மை மாத்திரமே நான் நேசிப்¼ன். ஆயினும் நீர் எனக்கு உதவி செய்ய வேண்டும். ஓ மரியாயே, என் மாதாவே, நீரும் உமது மன்றாட்டால் எனக்கு உதவி செய்ய வேண்டும்; உமது பாதுகாவலின் மேற்போர்வைக்குள் என்னை மறைத்து வைத்துக் கொளளும், நான் சோதிக்கப்படும்போதெல்லாம் உம்மைக் கூவி யழைக்க எனக்கு வரமருளும்; உமது திருப்பெயர் எனக்குக் காவல் அரணாயிருக்கும்.

மனந்திரும்ப மறுக்கும் பாவியைக் கடவுள் தண்டிக்கும் நேரத்தை விட அவர் அவனிடம் பொறுமையோடு இருக்கும்போது தான் நாம் அதிகமாக பயப்பட வேண்டுமென்று அர்ச். கிறிசோஸ்தோம் கூறுகிறார்: ""உடனே தண்டிப்பதற்குப் பதிலாக, அவர் பொறுமையோடு இருக்கும்போதுதான் நாம் அஞ்சுவதற்கு அதிகக் காரணம் உள்ளது.'' ஏனெனில், அர்ச். கிரகோரியார் கூறுகிறபடி, கடவுள் யாருக்காக எல்லாவற்றிலும் அதிகப் பொறுமையுடன் காத்திருக்கிறாரோ, அவர்கள் நன்றியற்றவர்களாகவே நிலைத்திருந்தால், அவர்களை அவர் அதிக உக்கிரமாகத் தண்டிக்கிறார்: ""யாருக்காக அதிகக் காலம் காத்திருக்கிறாரோ, அவர்கள் அதிகக் கடுமையாகத் தண்டிக்கிறார்.'' அவர் யாரை மிக நீண்ட காலம் பொறுமையோடு சகித்துக் கொள்கிறாரோ, அவர்கள் இறுதியில், பெரும்பாலும் மனந்திரும்ப நேரமின்றி, அகால மரணமடைகிறார்கள்: ""யார் நீண்ட காலம் பொறுமையோடு தாங்கிக் கொள்ளப்படுகிறார்களோ, அவர்கள் தாங்கள் இறக்குமுன் ஒரு துளி கண்ணீர் கூட சிந்தப்பட அனுமதிக்கப்படாமல், திடீர் மரணத்தால் பிடுங்கிக் கொள்ளப் படுகிறார்கள்.'' குறிப்பாக, கடவுள் உனக்குத் தந்திருக்கும் ஒளி எவ்வளவு பெரிதாயிருக்கிறதோ, அந்த அளவுக்குப் பாவத்தில் உன் குருட்டுத்தனமும், பிடிவாதமும் அதிகமாயிருக்கும். ""அவர்கள் நீதியின் மார்க்கத்தை அறிந்தபின்பு தங்களுக்கு ஒப்பிக்கப்பட்ட பரிசுத்த கற்பனையை விட்டு விலகுவதைப் பார்க்கிலும், அதை அவர்கள் அறியாதிருந்தால், அவர்களுக்கு நலமாயிருக்கும்'' என்று அர்ச். இராயப்பர் கூறுகிறார் (2 இரா.2:21). அர்ச். சின்னப்பரும் (தார்மீக முறைப்படி பேசும்போது) ஞான ஒளியைப் பெற்ற பின்பு பாவம் செய்யும் ஓர் ஆத்துமம் மீண்டும் மனந்திரும்புவது இயலாத காரியம் என்று கூறுகிறார்: "ஒரு முறை ஞான ஒளியடைந்தும், பரம கொடையை சுவை பார்த்தும், இஸ்பிரீத்துசாந்துவின் வரங்களைப் பெற்றும்... தவறினவர்கள் மனந்திரும்பிப் புதுப்பிக்கப்படுவது கூடாத காரியம்'' (எபி.6:4,6).

தமது அழைப்புகளுக்குச் செவிடர்களாய் இருப்பவர்களுக்கு எதிராக ஆண்டவர் கூறுவது, உண்மையாகவே பயங்கரமானதாக இருக்கிறது: "நான் கூப்பிட்டேன், நீங்கள் கேட்கமாட்டோமென மறுத்தீர்கள்; நான் என் கரத்தை நீட்டினேன், அதை உற்றுப் பார்த்தவனுமில்லை. நீங்கள் மரணத் தருவாயிருக்கிறபோது நானும் நகைப்பேன்; நீங்கள் எதற்குப் பயந்திருக்கிறீர்களோ, அது உங்களுக்கு நேரிடுகையில் உங்களைக் கேலிசெய்வேன்'' (பழமொழி. 1:24,26). "நானும்'' என்ற வார்த்தைகளை மனதில் குறித்துக் கொள்ளுங்கள்; பாவி பாவசங்கீர்த்தனம் செய்து, வாக்குறுதிகள் தந்து, ஆனால் எப்போதுமே அவருக்குத் துரோகம் செய்து, அவரை ஏளனம் செய்து நகைத்தது போலவே, அவரும் அவனது மரண வேளையில் அவனைக் கேலி செய்வார். மேலும், ""மதியீனத்தை மீண்டும் செய்யும் அவிவேகி (விவேகமற்றவன்), தான் கக்கினதுக்கு மீண்டும் வரும் நாய்க்கு ஒப்பானவன்'' என்று ஞானியானவர் கூறுகிறார் (பழமொழி.26 :11). ஆகவே, பாவசங்கீர்த்தனத்தில் தான் வெறுத்துப் பகைப்பதாகக் கூறிய பாவங்களை மீண்டும் செய்பவன், கடவுளுக்கு அருவருப்புக்குரியவனாக ஆகிறான்!

ஓ என் சர்வேசுரா, உமது திருப்பாதங்களில் விழுந்துகிடக்கும் அடியேனைப் பாரும். முன்பு அருவருத்துத் தள்ளிய விலக்கப்பட்ட கனியைத் தின்னும்படி மிக அடிக்கடி திரும்பி வந்த அந்த அருவருப்புக்குரிய பாவி நானே. என் மீட்பரே, உமது இரக்கத்தைப் பெற நான் தகுதியற்றவன்; ஆனால் தேவரீர் எனக்காகச் சிந்திய திரு இரத்தம், அடியேன் உமது இரக்கத்தைப் பெறுவேன் என்று உறுதியாக நம்பும்படி என்னைத் தூண்டி வற்புறுத்துகிறது. எவ்வளவு அடிக்கடி நான் உம்மை நோகச் செய்து, நீரும் என்னை மன்னித்திருக்கிறீர்! உம்மை இனி ஒருபோதும் மனநோகச் செய்வதில்லை என்று நான் வாக்களித்திருக்கிறேன்; இருந்தும் கக்கினதைத் தேடி நான் திரும்பிச் சென்றேன். நீரோ மீண்டும் என்னை மன்னித்தீர். ஆகவே, தேவரீர் நேரடியாக என்னை நரகத்திற்கு அனுப்பும்படி, அல்லது நரகத்தை விடப் பெரிய தண்டனையாக, நீர் பாவங்களுக்கே என்னைக் கையளித்து விடும்படி நான் உமக்காகக் காத்திருப்பேனா? ஓ, என் தேவனே, நான் மனந்திரும்பி தவம் செய்வேன்; உமக்கு அடியேன் பிரமாணிக்கமாக இருக்கும்படியாக, என் நம்பிக்கையயல்லாம் உம்மில் வைப்பேன்.