இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஈட்டியால் குத்தி ஊடுருவப்பட்ட சேசுவின் திவ்விய இருதயம்!

சேசுவின் உடைந்த திரு இருதயம், ஒரு கொடிய மரணத்தால் உறைந்து போன பிறகும்கூட, இன்னமும் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறது. மனிதரின் நன்றியற்றதனத்தால் அது அடிக்கடி குத்தி ஊடுருவப்பட்டு வருகிறது. பாவம் நிறைந்த ஒரு மக்களினத்தின் நிந்தை அவமானச் செயல்களால் அது காயப்படுத்தப்பட்டும், உடைக்கப்பட்டும் இருந்தது. தன்னையே நசுக்கிய அதே மக்களுக்காக அது இரத்தம் சிந்தி, மரித்திருந்தது. அத்தகைய ஒரு இருதயம் இப்போது சமாதானத்தில் விடப்பட வேண்டும். ஆனால் இல்லை, மரணத்திற்குப் பிறகும் கூட, அது மோசமாக நடத்தப்படுகிறது. அது இரண்டு துண்டுகளாக வெட்டப்படுகிறது. தனக்காக மரித்த தன் கடவுளுக்கு எதிராக மனித இனத்தின் வாக்குக்கெட்டாத கொடூரம்!

ஆயினும் சேசுவின் திரு இருதயத்தின் மீது இன்னமும் கூட கட்டவிழ்த்து விடப் படுகிற இன்னும் மிக அதிகமான கொடிய நிந்தைகளின் ஒரு பலவீனமான சித்திரமாக மட்டுமே இது இருக்கிறது.

நானூறு வருடங்களுக்கு முன்பு, நம் தெயவீக இரட்சகர் அர்ச். மர்கரீத் மரியம்மாளுக்குத் தோன்றி, தம் தெய்வீக இருதயத்தை அவளுக்குக் காண்பித்தார். “மனிதர்களை இவ்வளவு அதிகமாக நேசித்த இருதயத்தைப் பார்” என்று அவர் கூறினார். அவருடைய இருதயம் எப்படிக் காட்சியளித்தது? இனிய ரோஜாக்களால் அது அலங்கரிக்கப்பட்டிருந்ததா? அவருடைய சிருஷ்டிகளின் நேசத்தால் அது அனலூட்டப் பட்டிருந்ததா? அது வணக்கம் செலுத்தப்பட்டிருந்ததா? ஆராதிக்கப்பட்டிருந்ததா? அவர் சிருஷ்டித்தவர்களும், மாபெரும் விலை கொடுத்து அவர் மீட்டுக் கொண்டவர்களுமான எல்லா சிருஷ்டிகளாலும் மிகப் பிரியமான விதத்தில் அது தியானிக்கப்பட்டதா? அது அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். அந்த முழுமையான நேசத்திற்கும், அக்கறைக்கும் அவர் தகுதியுள்ளவராக இருந்தார். இருந்தாலும் அர்ச். மர்கரீத் மரியம்மாள் கண்டதென்ன? அவள் முட்களால் முடிசூடப்பட்ட ஓர் இருதயத்தைக் கண்டாள் - நம் மறதியின் முட்கள். அது ஒரு சிலுவையைத் தன்மேல் சுமந்திருந்தது - நம் பாவங்களின் பாரத்தை அது தாங்கியிருந்தது - எல்லாவற்றிலும் அதிகத் துயரமான முறையில், அந்த இனிய, நேச இருதயத்தில் ஓர் ஆழமான, இரத்தம் கசிகிற பிளவு இருந்தது - நம் குளிர்ந்ததனத்தாலும், நன்றியற்றதனத்தாலும் நாமே ஏற்படுத்திய ஒரு ஈட்டி ஊடுருவிய காயம். ஓ சர்வேசுரா, எங்களைப் போன்ற இவ்வளவு அருவருப்புக்குரிய புழுக்களையும் தொடர்ந்து நேசிக்க உம்மால் எப்படி முடிகிறது? இவ்வளவு இரக்கமற்ற விதமாக உம்மை வேதனைப்படுத்துகிறவர்களை நேசிக்க உம்மால் எப்படி முடிகிறது? எத்தகைய அளவற்ற, எல்லையற்ற நேசம், ஓ நல்ல சர்வேசுரா! நாங்கள் எவ்வளவு கொடூரமானவர்கள் என்பதை நாங்கள் எப்போதுதான் உணர்ந்து கொள்வோம்? ஆயிரத்தில் ஒரு நிமிடமாவது உம்மை நாங்கள் நேசிக்கிறோமென்றால், ஓர் அர்ச்சிஷ்டவரின் ஒளிவட்டத்திற்கு நாங்கள் தகுதியுள்ளவர்களாக இருக்கிறோம் என்று நான் நினைக்கிறேன். மீதமுள்ள தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்பது நிமிடங்களிலும் நாங்கள் உமது நேச இருதயத்திற்கு ஆயிரம் வழிகளில் நிந்தை அவமானங்களைக் குவித்து வைக்கிறோம். எந்த அளவுக்கு தவறாக வழிநடத்தப்பட்டவர்கள், நாங்கள்! எவ்வளவு வீண் பெருமை யுள்ளவர்கள் நாங்கள்! ஆண்டவராகிய சேசுவே, எங்களை எழுப்பியருளும்! நாங்களே உம்மைச் சிலுவையில் அறைந்திருக்கிறோம் என்பதை நாங்கள் உணரச் செய்தருளும்! உம்மைச் சிலுவையில் அறைந்த காரியத்தில் எங்களுக்கு எந்தப் பங்குமில்லை என்று நினைப்பதை நாங்கள் நேசிக்கிறோம். என்ன ஒரு தவறான எண்ணம்! எங்கள் ஆங்காரம், பிறர்சிநேகமின்மை மற்றும் அசுத்த சிந்தனைகளால் நாங்கள் உமக்கு முண்முடி சூட்டினோம்; எங்கள் சோம்பல், புலனின்பம் மற்றும் மோக பாவங்களால் உம்மை நாங்கள் கசையால் அடித்தோம்; எங்கள் வீண் ஆடம்பரம், பெருமையடித்தல் மற்றும் புகழ்ச்சியின் மீதான ஆசை ஆகிய பாவங்களால் உமது தெய்வீகத் திருவதனத்தில் நாங்கள் அறைந்தோம்; நாங்கள் பரிகரிக்க மறுக்கிற பாவங்களின் சுமையாகிய பாரமான சிலுவையை நாங்களே உம்மீது சுமத்தினோம்; வழிதப்பிப் போன ஆடுகளாகிய எங்களைத் தேடிக் களைத்ததால் மிக அடிக்கடி சோர்ந்தும், கிழிபட்டும் போன உமது திருப்பாதங்களின் ஊடாக நாங்களே அந்த ஆணிகளைச் செலுத்தினோம்; எங்கள் நேசத்தின் ஒரு சில துளிகளாகிய ஒரு மடக்கு தண்ணீர் கூட தராமல், மூன்று நீண்ட மணித் தியாலங்கள் சிலுவையின் மீது பெரும் வாதையில் உம்மை நாங்கள் தொங்க விட்டோம். மதிப்பற்ற பொம்மைகள் மற்றும் அற்ப அணிகலன்களின் மீது எங்கள் அன்பை வாரியிறைக்கிறோம். ஆனால் எங்கள் சர்வேசுரனாகிய உமக்கு அதில் கொஞ்சம் தருவதற்கும் கூட எரிச்சலோடு முறுமுறுக்கிறோம். எல்லாவற்றிற்கும் கடைசியாக, மரணத்தில் உம் திருச்சிரசு கீழ்நோக்கி சாய்ந்தபோது, மரணத்தினால் உமது நேச இருதயம் குளிர்ந்து போனபோது, இன்னமும் கூட அந்த உடைந்த திரு இருதயத்தின் மீது நிந்தை அவமானங்களை நாங்கள் சுமத்துகிறோம். உம்பேரில் அவநம்பிக்கை கொள்கிறோம். உமது கரங்களில் எங்களை விட்டுவிட நாங்கள் பயப்படுகிறோம். நீர் ஒரு கொள்ளைக்காரர் அல்லது திருடர் என்பதைப் போல, எங்களை உம்மிடம் நாங்கள் ஒப்படைக்கும்போது அதைத் தமக்கு சாதகமாக்கிக் கொள்கிற ஒருவர் என்பதைப் போல, நாங்கள் செயல்படுகிறோம். இந்த நம்பிக்கைக் குறைவு உமது தெய்வீக இருதயத்திற்கு எத்தகைய கசப்பான வேதனையின் வாளாக இருக்கிறது! நாங்கள் சுயத்தை மறுதலித்து, கடவுளுக்கென வாழலாமா என்பது பற்றி சிந்திப்பதற்கு நாங்கள் தயங்குகிறோம், அதிகம் யோசிக்கிறோம், அதிக நேரம் தரும்படி கெஞ்சுகிறோம். இந்த நிலையில்லாமல் அசைவாடுகிற அதீத சிந்தனையிலேயே நாங்கள் வருடங்களைக் கடத்துகிறோம், விலையேறப் பெற்ற வரப்பிரசாதங்களை வீணாக்குகிறோம், இந்தக் காலம் முழுவதும் அவநம்பிக்கையின் அந்த ஈட்டியை உம்முடைய அந்த நேச இருதயத்திற்குள் இன்னும் ஆழமாகச் செலுத்துகிறோம். எங்கள் இருதயங்களின் சர்வேசுரனும், எஜமானருமாகிய சேசுவே, எங்களை எழுப்பியருளும்! வெளியே குளிரில் நீர் மிக நீண்ட காலம் காத்திருக்கும் படி உம்மைக் கட்டாயப்படுத்தியிருக்கிறோம் என்பதை நாங்கள் புரிந்து கொள்ளச் செய்தருளும். இந்தக் கொடுமை முடிந்து போவதை நாங்கள் காணும்படி செய்தருளும். நாங்கள் எங்கள் இருதயத்தின் கதவைத் திறந்து, உள்ளே உள்ளே வரச் செய்து, நேசத்தின் சிம்மாசனத்தில் உம்மை அமரச் செய்ய வேண்டும். எல்லா உலக நேசங்களையும், குறிப்பாக சுய நேசத்தையும் நாங்கள் விட்டொழிக்க வேண்டும். நீரே எங்கள் இருதயங்களின் உரிமையுள்ள அரசராக இருக்கிறீர். உமக்குரிய இடத்தை அபகரிக்கிறவர்களை நாங்கள் துரத்தியடிக்க வேண்டும். இப்போதிலிருந்து, “எல்லாம் உமக்காக, ஓ சேசுவின் திரு இருதயமே!” என்பதே எங்கள் விருதுவாக்கியமாக இருக்கும். நாங்கள் உமக்காக வாழ்வோம், உமக்காக உழைப்போம், உமக்காக அர்ச்சிஷ்டவர்களாவோம், உமக்காகவே மரிப்போம். இவ்வாறு அந்த ஈட்டியையும், அந்த முட்களையும் உமது தெய்வீக இருதயத்திலிருந்து நாங்களே அகற்றுவோம். விரிந்திருக்கிற காயங்களுக்குள், எங்கள் தேவபக்தியின் எண்ணெயை ஊற்றுவோம்.


ஈட்டியால் குத்தி ஊடுருவப்பட்ட சேசுவின் திவ்விய இருதயமே!
எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி!