இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

கொலைத் தண்டனை மன்னிக்கப்படல்

அவெல்லினோ தனி நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக அப்பீல் கிடையாது. நேப்பிள்ஸ் அரசர்தான் எதும் செய்ய முடியும். அங்கே பெல்லகிரீனோ ரூயெக்கோ என்பவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அது நிறைவேற்றப்பட வேண்டிய நாள் 1832, ஆகஸ்ட் 19ம் தேதி. பெல்லேகிரினோ மேல் மிகவும் பாசம் கொண்ட அத்தை இச்செய்தியை அறிந்து பரிதவித்தாள். நேரே சில நண்பருடன் அர்ச். பிலோமினம்மாள் பீடத்தின் முன் மூன்று நாள் தவவிரதம் ஜெபமெல்லாம் செய்து அவன் மன்னிக்கப் பட வேண்டும் என மன்றாடினாள். கோவிலில் வேண்டுதல் செய்த மற்றவர்கள் எல்லாம் “தீர்ப்பாகி விட்ட பின் கூடாத காரியத்துக்கு ஏன் மன்றாட வேண்டும்? முன்பே வேண்டுதல் செய்திருக்கக்கூடாதா?'' என்று பேசினார்கள். அத்தை, கடவுளாலும் சின்னக் கன்னி வேதசாட்சியாலும் கூடாதது ஒன்றுமில்லை என்ற திடத்தோடு ஜெபித்தாள். 

நாளை மாலை தண்டனை நிறைவேற்றப்படும். இன்று அவள் தரையில் விழுந்து பிலோமினாளைப் பார்த்து ஜெபிக்கும்போது ஒரு உள்ளக் குரல் “நேப்பிள்ஸ்க்குப் போ. அரசனைச் சந்தித்தால் மன்னிப்புக் கிடைக்கும்'' என்று ஒலித்தது. அத்தைக்கு இக்குரல் எங்கிருந்து வருகிறது என நிச்சயிக்கக் கூடவில்லை. மேலும் அதிகமாக ஜெபித்தாள். அந்தக் குரல் மேலும் தெளிவாக ஒலித்தது. இதற்கிடையில் தீர்ப்பிட்டவனும் அர்ச். பிலோமினம்மாளைப் பார்த்து நடுக்கத்தோடு நம்பிக்கையோடு மன்றாடினான். சற்று போராட்டத்திற்குப் பின் அத்தை அவெல்லினோவிலிருந்து 30 மைல் தூரத்திலிருக்கிற நேப்பிள்ஸ் பட்டணம் புறப் பட்டாள். ஓட்டமும் நடையுமாக இரவு போய்ச் சேர்ந் தாள். அங்கே அரசருக்கு மனு தயாரித்தாள். அவரைப் பார்க்க உத்தரவு கேட்டாள். மறுநாள் பிற்பகல் 2 மணிக்கு மேல்தான் அரசரைப் பார்க்க முடியும் என்று கூறப்பட்டது. 

அவள் அர்ச். பிலோமினம்மாளின் தைரியத்தில் அப்படியே சென்று அரசரைப் பார்க்க முயன்றாள். 4 மணி வரை பார்க்க முடியவில்லை. 5 மணிக்கு கொலைத் தண்டனையை நிறை வேற்ற எல்லாம் ஆயத்தமாக்கப்பட்டன. எல்லாருடைய எதிர்பார்ப்பையும் மீறி, அதிசயமாக பெல்லேகிரீனோவுக்கு மன்னிப்புக் கிடைத்தது. ஆனால் செய்தி சிறை அதிகாரிக்கு எட்ட வேண்டுமே. அரசர் நிறுத்தவும் என்று தந்திச் செய்தி அனுப்பினார். இது அரச ஆணையாயிற்றே - நேரமும் இல்லையே, ஒரு மனிதனின் உயிரல்லவா என்று தூண்டப் பட்ட தந்தி நிலைய அதிகாரி, தாமே அச்செய்தியை எடுத்துக் கொண்டு சென்றார். கொலையிடத்தில் எல்லாம் ஆயத்தமாயிருக்க, தண்டனையை அரச ஆணைப்படி சற்று நிறுத்தி வைக்கும்படி அதிகாரியிடம் கூறினார். ஜெயில் அதிகாரிகளுக்கும் அவருக்கும் வாக்குவாதம் மூண்டது. நேரம் நெருங்கிக் கொண்டிருக்க மறு தந்தி வந்தது. பெல்லே கிரீனோவுக்கு விடுதலை என்று அது தெளிவாகக் கூறியது. அவன் உயிர் காப்பாற்றப்பட்டது.

இதில் நடந்த புதுமைகளைக் கண்டு ஆச்சரியப்படாத வர்கள் இல்லை. பெல்லேகிரீனும் அவன் அத்தையும் சொல்ல முடியாத மகிழ்ச்சியோடும் நன்றியோடும் அர்ச். பிலோமினம்மாளைப் போற்றிப் பாராட்டினர்.