இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச். தோமையார் வரலாறு - வேதசாட்சி முடி

சேவகர் அவரைக் கொலைக்களத்திற்குக் கூட்டிச் சென்றனர். விஜயனும் சீத்தாராமனும் கூடப்போயினர். வழியில் சின்னமலை ஒன்றிருந்தது. அதில் ஒரு குகை இருந்தது. அங்கு அப்போஸ்தலர் சென்று தியானம் செய்வது வழக்கம் கடைசியாக ஒருமுறை அங்குச் சென்று கடவுளைத் தியானிக்க விரும்பித் தோமையார் தன் விருப்பத்தை வெளியிட்டார். சேவகர் உத்தரவு அளித்தனர். 

ஆகவே குகைக்குள் சென்று செபித்தபின், சென்ற வழியே திரும்பாது சிறு துவாரத்தின் வழியே அற்புதமாக வெளியே வந்தார் சேவகர் பின்பற்றினர். அங்கிருந்து பெரியமலைக்கு வந்தனர். அதுவே குறிக்கப்பட்ட கொலைக்களம். அந்த இடமும் அப்போஸ்தலருக்குப் புதிதல்ல. அதற்கு முன் பல முறை அங்குச் சென்று திருப்பலி நிறைவேற்றியுள்ளார். அதற்காக ஒரு பெருங் கல்லில் திருச்சிலுவை தீட்டி அதை அங்கு நாட்டியிருந்தார்.

அங்குச் சென்றதும், விஜயன் சேவகர் தலைவன் கையில் சில நாணயங்கள் வைத்து, மாலை வரையில் அவர்கள் வேலையைத் தாமதிக்க வேண்டினான், அதற்குச் சம்மதித்தான் சேவகர் தலைவனும். தோமையார் விஜயனையும் பாவுலையும் தனியே கொண்டு போய்ச் சிலுவை செதுக்கப்பட்டுள்ள கல்முன் கடைசித் தடவை திருப்பலி நிறைவேற்றினார். பாவுல் சீத்தாராமனை மறை ஆயராகவும், விஜயனை டீக்கனாகவும் திரு நிலைப்படுத்தினார். 

நாள் முழுதும் செபத்திலிருந்தனர், கதிரவன் மறையும்போது அப்போஸ்தலரின் ஆவி ஆண்டவர் திருவடி செல்லத் தயாராய் இருந்தது. தோமையார் சேவகரிடம் போய், "உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள ஆணையின்படி உங்களது வேலையை நடத்தலாம்” என்று சொல்லி விட்டுச் சிலுவையின் முன் முழந் தாட்படியிட்டார்: தம் உயிரைக் கர்த்தருக்குக் காணிக்கையாக்கிச் செபித்த வண்ணம் இருந்தார். சேவகர்கள் ஈட்டியால் குத்தினார்கள். அப்போது அவர் உடல் சிலுவைக் கல்லின்மேல் விழ, அது அப்போஸ்தலரது இரத்தத்தால் நனைந்து போயிற்று. 

சேவகர் அவரது உடலை அங்கேயே விட்டுவிட்டுப் போயினர். டீக்கன் விஜயனும், பாவுல் மறை ஆயரும் அருகில் போய் அவர் குற்றுயிராயிருக்கக் கண்டனர். தோமையார் முன்னொருமுறை கைவிட்டுப் பார்த்த இயேசுவின் திருவிலாக் காயம் இருந்த இடத்திலேயே அவருக்கும் ஓர் ஈட்டி பாய்ந்திருந்தது. அதை உருவி எடுத்தனர். இரத்தம் பீறிட்டுப் பாய்ந்தது. உடனே விஜயன் அவரைத் தனது வீட்டுக்குக் கொண்டுபோய் மருந்து கொடுத்துக் குணப்படுத்தப் பாவுல் ஆயரைக் கேட்டான். அதை அறிந்த அப்போஸ்தலர் ஈட்டியின் காயங்களால் கொடூர வாதைப்பட்டு, இறக்கும் நிலையில் இருந்தாலும், மெல்ல வாய்திறந்து, "மருந்தால் பலனில்லை. கிறிஸ்து என்னை அழைக்கின்றார்" என்றார்.

இத்துயரச் செய்தி பட்டணத்திற்கு எட்டவே அப்போஸ்தலரால் ஞான தீட்சை பெற்றவர்களும், ஞானோபதேசம் ஊட்டப்பட்டவர்களும், அவருடைய அரிய புண்ணியங்களையும் அற்புதங்களையும் பார்த்தவர்களும் கேட்டவர்களுமாகிய திரளான மக்கள் பெரிய மலைக்கு வந்து கூடினர். அவர்கள் எல்லாருக்கும், தமது மெல்லிய குரலால் விசுவாசத்தில் திடனாயிருக்கும்படி அறிவுரை கூறி முடித்தவுடன், அவரது ஆத்துமம் இறைவனடி சேர்ந்தது.