இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

சர்வ ஆறுதலின் ஊற்றாகிய சேசுவின் திவ்விய இருதயம்!

இரண்டு விதமான ஆறுதல்கள் உண்டு. ஒன்று சுபாவமானது, இன்னொன்று சுபாவத்திற்கு மேற்பட்டது. சேசு இந்த இருவித ஆறுதல்களையும் தருகிறார்.

எல்லாமே தவறாகப் போகும்போது, வார்த்தைகள் இருபுறமும் கருக்குள்ள வாள்களாக ஆகும்போது, இருதயம் பாரமாயிருக்கும்போது, எல்லா சிருஷ்டிகளையும் விட்டு விலகி, ஏதாவது ஒரு சந்துக்குள் அல்லது ஒரு மூலையில் போய்நின்று கதறியழ வேண்டுமென்று உணரும்போது, இருதயம் உடைந்து போகத் தயாராகும்போது, சேசுவிடம் போ. அவரில் ஒரு பரிவிரக்கமுள்ள நண்பதை நீ கண்டுகொள்வாய். வேறு யாரும் உன்மேல் அக்கறை கொள்ளவில்லை என்றாலும், அவர் உன்மேல் அக்கறையாயிருப்பார். ஓ! எவ்வளவு மென்மையாக அவர் நேசிக்கிறார்! உன் துயரங்களை எப்படிப் பகிர்ந்து கொள்கிறார்! தமது தயாளமுள்ள திருமுகத்தை நீ காணத் தக்கதாக, தொங்கிப் போயிருக்கிற உன் முகத்தை அவர் எப்படி உயர்த்துகிறார்! இனிமையாக, தயவோடு புன்னகை புரிகிறார், உன் இருதய வேதனைகள் மறைகின்றன, மீண்டும் சூரிய ஒளி உன் ஆத்துமத்திற்குள் வருகிறது. “வா என் குழந்தாய்! அந்தத் துன்பங்களை எனக்கு ஒப்புக்கொடு. அவற்றை நான் உனக்கு விலைமதிப்புள்ளவைகளாக மாற்றுவேன். ஒரு கூர்மையான வார்த்தை உன் இருதயத்தை உடைக்க அனுமதிக்காதே. அவற்றை எனக்கு ஒப்புக்கொடு. நான் உன்னை நேசிக்கிறேன். உன் நண்பர்கள் எல்லோரும் உன்னைக் கைவிட்டாலும், நான் உன்னைக் கைவிட மாட்டேன். நீ எப்போதும் என்னிடம் வரலாம். நான் உன்னை நேசிக்கும் வரையிலும், வேறு யாராவது உன்னை நேசிக்கிறார்களா என்பது பற்றி நீ ஏன் கவலைப்பட வேண்டும்? என் நேசம் உனக்குப் போதுமானதாக இல்லையா? நான் உன்னை அறிந்திருப்பது போல, அல்லது புரிந்து கொண்டுள்ளது போல, வேறு யாரும் செய்வதில்லை. ஆகவே, பயப்படாதே! நான் உன்னோடு இருக்கும் வரையிலும் எதுவும் உன்னைக் கவலைப்படுத்த வேண்டிய தேவையில்லை.” 

தெய்வீக ஆறுதல் தருகிறவராகிய சேசுநாதர் கடவுளாக இருக்கிறார்; அவருடைய நேசமும், ஆறுதல்களும் வெறும் வார்த்தைகளாக மட்டும் இருக்காது என்பதுதான் இதன் பொருள். செயல்களின் மூலம் ஆறுதல் தர அவர் வல்லவராயிருக்கிறார். அதாவது இருதயத்தைப் பற்றிப் பிடித்து, எல்லாக் கசப்பும் ஓடிப்போகும்படியாக, அதை இன்பங்களின் ஒரு பெருங்கடலுக்குள் மூழ்கச் செய்ய அவர் வல்லவராயிருக்கிறார். இது நம்மை சுபாவத்திற்கு மேற்பட்ட ஆறுதல்களுக்குக் கொண்டு வருகிறது. சேசு இருதயத்தின் கடவுளாக இருக்கிறார். உன் அனுமதியின்றி யாரும் உன் இருதயத்திற்குள் வரவோ, அல்லது வெளியே போகவோ முடியாது. கடவுளுக்கு அனுமதி தேவையில்லை. அவரால் உள்ளே வர முடியும், மெழுகைப் போல இருதயத்தை உருக்க முடியும், இருதயம் நேசத்தில் சோர்ந்து போகச் செய்ய முடியும். அடுத்த ஒரு மாதத்திற்கு ஆத்துமத்திற்கு இத்தகைய நேச உணர்வு இனிமையூட்ட முடியும். இத்தகைய பலமுள்ள நேச உணர்வைக் கொண்டு சேசு உயிரற்ற களிமண்ணாலான இருதயத்தை, பற்றியெரிகிற நெருப்பாக மாற்றுகிறார். ஆ! அந்த நெருப்பு எத்தகைய பரலோகத் தன்மையுள்ளது! அந்த நெருப்பு உஷ்ணமாயிருக்கும்போது, கசப்பான வார்த்தைகள் காயப்படுத்தாது - கவலைகள் தாங்கள் பதுங்கியிருக்கத் தக்க ஒரு மூலையை அங்கு கண்டுபிடிக்க இயலாது - பயம் எரிக்கப்பட்டு விடுகிறது - சோதனைகள் சக்தியற்றுப் போகின்றன - பசியின் வேதனைகள் கூட உணரப்படுவதில்லை. தன்னையே தம்மிடம் ஒப்படைத்துவிட்ட ஆத்துமத்திற்கு கடவுள் நல்லவராயிருக்கிறார். ஓ, நல்ல சர்வேசுரனுக்கு முழு இருதயத்தோடு செய்யும் ஊழியத்தோடு எத்தகைய பரலோக மகிழ்ச்சி இணைக்கப்பட்டிருக்கிறது என்பதை மட்டும் எல்லா மனிதர்களும் அறிவார்களென்றால்! இனி பாவிகளே இருக்க மாட்டார்கள். ஆனாலும் ஒருவேளை அவர்கள் அதை அறிந்தாலும் அதை அவர்கள் தேடிக் கொண்டிருப்பார்கள் என்பதால் அதை அடைய மாட்டார்கள். நீ ஆறுதல்களைத் தேடினால், அவற்றை அடைய மாட்டாய். மாறாக, நீ கசப்பான பரித்தியாகத்தில் சேசுவைப் பிரியப்படுத்தத் தேடினால், அவர் தாராளமாக ஆறுதல் தருகிறார்! அவர் ஓர் அற்புதமான நேசராகவும், அதிசயத்திற்குரிய தேற்றுகிறவராகவும் இருக்கிறார்.


சர்வ ஆறுதலின் ஊற்றாகிய சேசுவின் திவ்விய இருதயமே!
எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி!