இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அந்த அடையாளம்.

ஜூன் 3, 1943          முழுமையான உரை எ.பு. 43:21-23

சேசு கூறுகிறார்:

அநேகர் என்னிடம் ஓர் அடையாளம் கேட்கிறார்கள். என்ன அடையாளம்? அந்த நேரத்தின் அடையாளமா, அல்லது என் வல்லமையின் அடையாளமா?

அந்த நேரத்தின் அடையாளம் என்றால் அதை நீங்கள் ஏற்கெனவே கொண்டிருக்கிறீர்கள். திரும்பவும் சொல்கிறேன்: ''நான் வேதப் பிரமாணத்தை அழிக்க வரவில்லை '' (மத். 5:17). அதை மாற்றியவர்கள் நீங்கள்தான். நான் என்னுடைய வார்த்தையை மாற்றுவதில்லை. நான் சொன்னது, சொன்னதுதான். ஒரு மனிதனாக நான் மனிதரிடையே பேசின காலத்திலிருந்து, சர்வேசுரனுடைய திருச்சுதனாகிய சர்வேசுரனாக, மனுக்குலத்தை நடுத்தீர்க்க நான் வரும் வரைக்கும் நடக்க வேண்டியதாயிருந்த ஒவ்வொன்றும், என் சுவிசேஷத்தில் உள்ளது.

உங்கள் தலைகளில் ஓராயிரம் பயனற்ற வதந்திகளாலும், கெட்ட எண்ணங்களாலும் நிறைந்திருக்கிற மூடர்களே, நான் சொன்னதை இப்போது புரிந்து கொள்ளாதிருப்பவர்கள் நீங்கள்தான். என் எதிரிகளை என்றென்றும் உப்பிடப் போகிற அந்த நெருப்பால் நீங்கள் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் உப்பிடப்படாதிருக் கிறீர்களா? இப்போது உங்களை எரிக்கிறதும், உங்களை அழிக்கும்படி உங்கள் மேல் இறங்கி வருகிறதும், தேவ தூஷணத்திற்குள்ளும், தப்பறைக்குள்ளும் மேலும் மேலும் உங்களை நடத்திச் செல்கிறதும், இனி இருக்கப் போவதாக நான் சொல்கிற அந்த நெருப்பின் ஒரு முன் அச்சாரமேயாகும். மனந்திருப்பப்படாத துர்மாதிரிகைக்காரர்களுக்காக நியமிக்கப்பட்டுள்ள நெருப்பு அது. அவர்கள் மத்தியில் நீங்களும் இருக்கிறீர்கள். நீங்கள் உங்கள் சரீரத்தைப் பற்றியும், கெட்ட செல்வங்களைப் பற்றியும்தான் கவலையாயிருக்கிறீர்கள். மனச்சாட்சிகளையும், பலி பீடங்களையும் நீங்கள் காலால் மிதிக்கிறீர்கள். நீங்கள் தொடுகிற எதையும் தீட்டுப் படுத்துகிறீர்கள். உங்களுக்குள் நீங்கள் இரண்டாம் முறையாக என்னைக் கொல்லுகிறீர்கள்.

லூஸிபரின் அடையாளத்தின் கீழ் தங்களையே வைத்திருக் கிறவர்களாகிய உங்களுக்கு தர அவன் அறிந்திருக்கிற கொடைகள் அவைதான். அழுகலின் தீமைக்குள் உங்களை அமிழ்த்திய பின், அம்மிருகம் தன் வாயிலிருந்து நெருப்பைக் கக்குகிறது. அவனுடைய கொடைகள் இத்தகையவையே. வேறு எதையும் உங்களுக்குத் தர அவனால் இயலாது. ஆனால் நானோ என்னையே உங்களுக்குத் தந்ததோடு, என்னோடு சேர்த்து, வரப்பிரசாதத்தின் பொக்கிஷங்கள் அனைத்தையும் கொடுத்தேன்.

என் வல்லமையின் அடையாளம் ஒன்று உங்களுக்கு வேண்டுமா? ஏன், இருபது நூற்றாண்டுகளாக இந்த அடையாளத்தை நான் உங்களுக்குத் தந்து வருகிறேனே! அதனால் என்ன பயன்? உங்களுக்கு மேலாக என் வரப்பிரசாதங்களின் ஓடைகளை நான் திறந்திருக்கிறேன். மேலும் மோட்சத்திலிருந்து ஆயிரக்கணக்கான, இலட்சக்கணக்கான புதுமைகளாக அவற்றை இறங்கி வரச் செய்திருக்கிறேன். உங்கள் நோயாளிகளைக் குணமாக்கியிருக்கிறேன்; உங்கள் போர்களை அமைதிப்படுத்தியிருக் கிறேன்; உங்கள் வியாபாரங்களை வளங்கொழிக்கச் செய்திருக் கிறேன் ; காணாவிடில் விசுவசிக்காத உங்கள் பலவீனத்தை நான் அறிந்திருப்பதால், விசுவாச காரியங்களிலும் கூட உங்கள் சந்தேகங்களுக்குப் பதில் அளித்திருக்கிறேன், என் போதனைகளை மீண்டும் உங்களுக்குப் போதிக்க வந்தேன்; என் திவ்ய மாதா தனது மென்மையைக் கொண்டு, தவத்திற்கும் நேசிப்பதற்கும் உங்களைத் தூண்டும்படியாக அவர்களை அனுப்பினேன். என்ன பயன்?

நான் ஒரு புதுமையைச் செய்த பிறகு, அதை அதற்கு மேல் ஒருபோதும் நினைவுகூர மாட்டேன் என்று நம்பி , என் வல்லமையையும், என் பொறுமையையும் துர்ப்பிரயோகம் செய்து, என்னை நீங்கள் ஒரு முட்டாளைப் போல நடத்தியிருக்கிறீர்கள். இல்லை, என் துயரத்தின் பிள்ளைகளே. என் புத்தி கூர்மையின் பெரும் புத்தகத்தில் சகலமும் எழுதப்படுகிறது. அதில் எழுதுவதற்கு மை அல்ல, மாறாக, நேசத்தின் எரியும் தீக்கொள்ளியே பயன்படுத்தப்படுகிறது. சகலமும் நினைவுகூறப்படுகிறது.

என் தாயின் வருகையை மனித நோக்கங்களுக்காகத் தவறாகப் பயன்படுத்தியிருக்கிறீர்கள். அதை ஒரு கேலிப் பொருளாகவும், வியாபாரமாகவும் ஆக்கி விட்டீர்கள். மாமரி என் தேவாலயமாக இருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா? என் தேவாலயமானது ஒரு ஜெப இல்லம், கள்வர் குகையல்ல. எவ்வளவோ நேசப்பற்றுதல் உள்ளதும், மிக அதிகமாகக் கெஞ்சி மன்றாடுவதும், எவ்வளவோ துயரமுள்ளதுமாகிய அவர்களுடைய வார்த்தைகள் அவர்களுடைய திருச் சுதனைக் கொலை செய்த உங்களுக்காகவே - ஆனால் அத்தகைய ஒரு பலியிலிருந்து எப்படிப் பலன் அடைவது என்று கூட உங்களுக்குத் தெரியவில்லை. உங்களுக்கு அவர்களுடைய வார்த்தைகள் பொருளற்ற பழங்கதைகளைப் போல் ஒலித்தன. உங்கள் நித்திய சாபத்தின் பாதையிலேயே தொடர்ந்து போய்க் கொண்டிருந்திருக்கிறீர்கள்.

என் தூதர்களை, நீங்கள் எல்லோரும் சீவிக்கும்படியாகத் தாங்களும் சீவித்து, என் இருதயத்தின் வார்த்தைகளை மீண்டும் ஒரு தடவை உங்களுக்கு கூவி அறிவிக்கும் என் தூதர்களை பைத்தியக் காரர்கள் என்றும் பேய் பிடித்தவர்கள் என்றும் அழைத்தீர்கள். சில சமயங்களில் அவர்களைக் கொன்றீர்கள். எப்போதும் அவர்களை நீங்கள் அலைக்கழித்திருக்கிறீர்கள். பூமியில் என் காலத்தின்போது, நானும் கூட, அந்த விபச்சார, கொலைகார சந்ததியால் பைத்திய னென்றும், பேய்பிடித்தவன் என்றும் அழைக்கப்பட்டேன்.

அந்த அடையாளம்! அந்த அடையாளத்தை நீங்கள் கொண்டிருக்கிறீர்கள். ஆனாலும் என் பிதாத்துவத்தை உங்க ளுக்குத் திரும்பவும் தருவதற்கு அது பயன்படவில்லை . இதைத் தவிர வேறே அடையாளம் உங்களுக்குத் தரப்பட மாட்டாது. உங்கள் இச்சையுள்ள செயல்கள், விபச்சாரங்கள், முறையற்ற உறவுகள், திருட்டுகள், பொறாமையுள்ள சிந்தனைகள், தேவ தூஷணங்கள், அகங்காரம் ஆகியவை உங்களில் நிறைந்திருக்கின்றன. இவற்றைக் கொண்டு என் வார்த்தைகளையும், உங்கள் மனச் சான்றுகளையும் நீங்கள் கல்லால் எறிந்தீர்கள். அந்த என் வார்த்தைகளையும், உங்கள் மனச்சான்றுகளையும் இந்த உங்கள் தீமைகளின் குவியலுக்குக் கீழ் கண்டுபிடிக்க உங்களால் இன்னமும் முடிந்ததென்றால், அவற்றில் அந்த அடையாளத்தைத் தேடிப் பாருங்கள்.

இன்று என் பரலோக ஆரோகணத் திருநாள். மோட்சத் திற்கு எழுந்தருளிப் போவதற்கு முன் நான் என் திவ்ய மாதாவையும், என் சீடர்களையும் ஆசீர்வதித்தேன். " நான் ஆசீர்வதிப்பதற்கு வேறு யாரும் என்னோடு இல்லை. ஏனென்றால் மற்றவர்கள் என்னை மறுதலித்து, என்னை சபித்தார்கள். இப்போதும் கூட நான் என் சீடர்களை ஆசீர்வதிக்கிறேன். ஏனென்றால் மற்றவர்கள் என்னைத் தேடவில்லை. என் ஆசீர்வாதத்தை அவர்கள் தூஷணிக்கிறார்கள்.