இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

இறுதிக்கால யுகம் - தப்பறை வளர்வது எதன் அடையாளம்

நாம் மேலே காட்டியுள்ள மூன்று தீர்க்கதரிசன வாக்கியங்களுள் இரண்டு வாக்கியங்களில், “தப்பறை” என்பது குறிப்பிடப் படுகிறது. காலம் நிறைவேறும்போது, அந்திக் கிறீஸ்து “வல்லபத்தோடும் அடையாளங்களோடும் வஞ்சகமான அதிசயங்களோடும்” (2தெச. 2:9) வருவான் என்று அர்ச். சின்னப்பர் உரைக்கிறார். 

இந்த அந்திக் கிறீஸ்து ஏமாற்றுவதில் முதல்வனாயிருப்பான் என்பது தெளிவு. அவனுடைய இந்தச் செயல் மிக எளிதாக்கப்படும். காரணம், வெட்ட வெளிச்சமான உண்மைகளையும் மனிதர்கள் வெறுப்பார்கள். உதாரணமாக, பரம்பொருள் ஒன்று உண்டென்ற உண்மையை (இதற்குச் சான்று எங்கும் நிறைந்திருக்கிறது - அப்படி இருந்தாலும்) வெறுப்பார்கள். ஒவ்வொரு காலத்திலும் நடைபெற்று வரும் அற்புதங்களை வெறுப்பார்கள். 

லூர்துபதி, பாத்திமாபதி இங்கெல்லாம் நடந்து வரும் புதுமைகள், ஐந்து காய வரம் பெற்றவர்களிடம் விளங்கும் அதிசயங்கள், பேய்பிடித்தவர்கள் உண்டென்று நிரூபிக்கப்பட்ட சந்தர்ப்பங்கள், புத்தியால் விவரிக்கப்பட முடியாதபடி, அர்ச்சியசிஷ்டவர்களின் மரித்த சரீரங்கள் அழியாமல் காப்பாற்றப்படும் உண்மைகள் இவை போன்ற அதிசய அற்புதங்களை மனிதர்கள் வெறுப்பார்கள்.

நவீன கால மனிதன், பொதுவாகப் பார்த்தால், மேற்கூறிய ஆச்சரிய அற்புதங்களிலிருந்து தன் முகத்தை வேறு பக்கமாய்த் திருப்பிக் கொள்கிறான். இவற்றிலிருந்து சரியான முடிவுகளைக் கண்டுணர மறுக்கிறான்.

இதன் விளைவாக, எப்பக்கத்திலும் நாம் என்ன கேட்கிறோம்: “கடவுள் இல்லை,” அல்லது, “கடவுள் இறந்து விட்டார்” என்ற அறிவற்ற கூச்சலைத்தான் கேட்கிறோம்.

இவ்விதம் மூர்க்கமாக உண்மையை விட்டு விலகுவதற்காக கடவுள் மனிதனைத் தண்டிக்கிறார். எப்படி? அவர்கள் தப்பறை களுக்குள் விழும்படி அவர்களைக் குருடாக்கி விடுகிறார். மிகத் தெளிவாக தப்பறை என்று அறியக் கூடியவற்றுள் விழும்படி விட்டு விடுகிறார்.

தப்பறையைப் பற்றி தேவதாயும் பாத்திமாவில் கூறியுள்ளார்கள். ரஷ்யாவிலிருந்து தப்பறைக் கொள்கைகள் உலகமெங்கும் பரவும் என்றார்கள். அவை யுத்தங்களையும், திருச்சபைக்குப் பெரிய ஆக்கினைகளையும் விளைவிக்கும் என்றார்கள்.

இரண்டு வழிகளில் தப்பறைகள் உலகில் பரவியுள்ளன. முன்னறிவிக்கப்பட்டபடியே, தப்பறை என்ற விஷமானது துளித்துளி யாய் ரஷ்யாவிலிருந்து ஐரோப்பாவின் அறிவு ஓட்டத்தினுள் பரவி நிரம்பியது. தற்கால எழுத்தாளர்கள் ஏறக்குறைய எல்லோருமே கம்யூனிஸ்ட் பிரச்சார தந்திரங்களை இவ்விஷயத்தில் புகழ்ந்துள் ளார்கள்.

இரண்டாவது, கம்யூனிஸம் தன் தப்பறைகளைத் திருச்சபை யினுள்ளும் தந்திரமாய்ப் பரப்பி விட்டுள்ளது. மேற்கத்திய நாகரீகம் இவ்வாறு நயவஞ்சகமாகத் தாக்கப்பட்டு விட்டது.

இருளின் தூதனின் துணை கொண்டு கம்யூனிஸம் உலகத்தையே கவ்விப் பிடித்து வெற்றி கொள்ள முனைந்து நிற்கிறது. உலகத்தை அது வெல்ல வேண்டுமானால், பாவத்தின் வழியாகவே அப்படிச் செய்யக் கூடும். ஏனென்றால் பாவம் மனிதனைக் குருடனாக்கி, பலவீனப் படுத்துகிறது. மக்களை நாஸ்தீகர்களின் வலையுள் சிக்க வைப்பதற்கு, பாவம் பெரிய துணையாக வந்து நிற்கின்றது.

இந்தப் பாவ ஆட்சியை அழிப்பதற்காகவே கிறீஸ்து சிலுவையில் மரித்தார். சிலுவையும், சிலுவையிலிருந்து புறப்படும் ஒளியும்தான் மனித குலத்தை ஒளிர்வித்து விடுதலையளிக்கும். “நானே உலகத்தின் ஒளி. என்னைப் பின்செல்கிறவன் இருளில் நடவான்” அரு.8:12) என்று கிறீஸ்து கூறுகிறார்.

ஒவ்வொரு யுகத்திலும், திருச்சபையின் முதன்மையான பொறுப்பு என்ன? இந்த ஒளியைச் சுத்தமாக, மங்குதல் எதுவும் இல்லாமல் காப்பாற்றுவதேயாகும்.

“நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்” (அரு. 14:6) என்று கிறீஸ்து மேலும் கூறுகிறார். எனவே இந்த ஒளியானது, உண்மையின் ஒளியாயிருக்கிறது. இவ்வொளி தப்பறையின் இருட்டால் எதிர்க்கப்படுகிறது.

இதிலிருந்து புலப்படுவதென்ன? மானிட வர்க்கத்தின் உண்மையான பகைவனாயிருப்பது தப்பறையே. ஏனென்றால் உண்மை மனிதனை விடுதலையாக்குகிறது. தப்பறை மனிதனை அடிமை யாக்குகிறது. கிறீஸ்து எவ்வாறு சத்தியமாய் இருக்கிறாரோ அவ்வாறே சாத்தான் தப்பறையாக இருக்கின்றான்.

“சத்தியத்தை அறிந்து கொள்ளுங்கள். சத்தியம் உங்களைச் சுயாதீனராக்கும்” (அரு. 8:32) என்று உரைத்தார் கிறீஸ்து பரிசேயரிடம். இவ்விடத்தில் நம் இரட்சகர் அரசியல் விடுதலையைப் பற்றிப் பேசவில்லை. ஆனால் அதை விட எவ்வளவோ முக்கியத்துவம் வாய்ந்த ஆன்ம விடுதலை பற்றியே பேசினார்--கடவுளின் பிள்ளைகளுக்குரிய விடுதலை பற்றிக் கூறினார். காரணம், எல்லாப் பாவிகளும் அடிமை களாயிருக்கிறார்கள் என்றும், தங்கள் பாவங்களுக்கு அவர்கள் அடிமை களாகிவிட்டார்கள் என்றும் அவர் கூறினார்.

இவற்றைக் கிறீஸ்து கூறுகையில், நாம் இவ்வுலகிலும், மறு உலகிலும் அடையக்கூடிய மிக உயர்ந்த வாழ்க்கைத் தரத்தைக் காட்டி யுள்ளார். ஏனென்றால் இந்த ஆன்ம சுதந்திரத்தோடு நெருங்கிய உறவுடையதாக இருக்கிறது நம் உள்ளத்தின் மகிழ்ச்சி. இந்த சுதந்திரத்தை அவர் தமது கல்வாரிப் பலியினால் நமக்கு அடைந்து கொடுத்தார்.

இக்காரணங்களுக்காகத்தான் தப்பறை அல்லது பதிதம் என்பவை இறுதி அழிவு என்று எப்போதும் கருதப்பட்டு வந்துள்ளது. நிஷ்டூர அக்கிரமங்கள் புறத்தில் எவ்வளவு வந்தாலும் அவற்றை யெல்லாம் விட தப்பறையே அதிக கேடு செய்வதாயுள்ளது என்று கருதுகிறது திருச்சபை.

நாம் முன்பு கூறியதுபோல் தப்பறை என்பது ஒருவகை இருட்டு. திருச்சபையின் போதக அதிகாரத்தை அது செயலற்றதாக்கி விடும். கிறீஸ்தவர்களின் உன்னதமான குறிக்கோளாகிய கிறீஸ்துவுடன் ஒன்றிக்கச் செல்லும் பாதையை அது தடுத்து விடுகிறது. கிறீஸ்துவை நோக்கி நாம் செல்லும்போது, நித்திய ஞானமாகிய வெளிச்சத்தை நோக்கிச் செல்கிறோம். தப்பறையை நாம் கைக்கொள்ளும்போது, பசாசின் தந்திர நுட்பங்களில் சிக்குண்டு நம் ஆன்ம இரட்சணியத் தையே ஆபத்துக்கு உட்படுத்துகிறோம்.

தப்பறையின் பயங்கரம் திருச்சபையில் மிகப் புராதன காலத்திலிருந்தே நம்மிடையே இருந்து வந்துள்ளது. புனித இரெனேயுஸ் என்பவர் ஒரு சம்பவம் கூறுகிறார். அப்போஸ்தலரான அர்ச். அருளப்பர் தம் சீடரான அர்ச். போலிக்கார்ப் என்பவருடன் குளிப்பறைகளை விட்டு வெளியேறிய போது, செரிந்துஸ் என்ற பதிதன் அங்கிருக்கக் கண்டார். உடனே அவர் என்ன கூறினார்: “நாம் இங்கிருந்து ஓடி விடுவோம். இந்தத் தண்ணீர்கள் நம்மை நனைத்து மூழ்க்கி விடாதபடி ஓடுவோம். ஏனெனில் பதிதம் பேசும் செரிந்துஸ் இங்கு இருக்கிறான். அவன் உண்மையின் விரோதியல்லவா?” என்று கூறினார். அர்ச். அருளப்பர், சேசுவால் நேசிக்கப்பட்ட இந்தச் சீடர், புற மதத்தாரோடு பழகுவதில் திருப்தியோடிருந்தார். ஆனால் பதிதம் பேசுகிறவர்களோடு தங்க மாட்டார். இங்கு பதிதர் என்று கூறும் போது ஒரு கருத்தை நாம் மனதில் கொள்ள வேண்டும். அதாவது, கத்தோலிக் கர்களாயிருந்தும் மனதார தப்பறைகளை ஏற்கிறவர்கள் ஒரு வகை. தப்பறையிலேயே பிறந்து வளர்ந்து வருகிற மெத்தோடிஸ்ட், பாப்திஸ்தர் போன்றோர் ஒரு வகை. இவர்களில் பலர் மிகவும் நேர்மை யுடையவர்கள்; தங்களுக்குக் கிடைத்த ஒளியின்படி உண்மையோடு நடப்பவர்கள். இவர்கள் கத்தோலிக்கர்களால் மதிக்கப்பட்டு அன்பு பாராட்டப்படுகிறார்கள். காரணம் இவர்கள் தங்கள் மனச்சாட்சியின் படி நடப்பதே.

கி.பி. 680-ம் ஆண்டு கான்ஸ்டான்டிநோப்பிள் என்ற நகரில் கூடிய ஆறாவது பொதுச் சங்கத்தில், 40 ஆண்டுகளுக்கு முன் பதிதத் தைப் பின்பற்றியதாக ஒனேரியுஸ் என்ற பாப்பு குற்றஞ் சாட்டப்பட்டு சபை நீக்கம் செய்யபபட்டார். அச்சமயத்தில் பாப்பரசராக இருந்த இரண்டாம் லியோ என்ற பாப்பானவர் ஒனோரியுஸ் பாப்புவை சபை நீககம்செய்யும் கொடும் செயலுக்கு மறுப்புத் தெரிவித்து, அப்பாப்பு தாம் கண்டித்திருக்க வேண்டிய ஒரு பதிதத்தைக் கண்டிக்காமல் விட்டது தவறு என்று கூறும்படிச் செய்தார்.

றூ. லு. செஸ்டர்டன் தம் கட்டுரை ஒன்றில், “ஒரு பழிச் செயலை விட தப்பறை என்பது அதிக கொடியது. ஏனென்றால் தப்பறை பல பழிச் செயல்களுக்குக் காரணமாயிருக்கிறது” என்று குறிப்பிடுகிறார்.

பாத்திமாவில் தேவதாய் கூறியதும் இதுவே: “தப்பறைகள் யுத்தங்களையும், கொடுமைகளையும் விளைவிக்கும்... நாடுகள் நிர்மூலமாக்கப் படும்...” 

1930-லும் அதற்குப் பிந்திய சில ஆண்டுகளிலும் நடைபெற்ற பாவங்களுக்கு, 1940-லும் அதற்குப் பிந்திய ஆண்டுகளிலும் உலகம் இரத்தத்தால் பரிகாரம் செய்தது. இரண்டாம் உலக மகா யுத்தத்தில் ஐந்து கோடியே நாற்பது இலட்சம்பேர் கொல்லப்பட்டதாகக் கணக் கிடப்பட்டுள்ளது!

ஆக்கிரமித்து எழுந்து வருகின்ற நாஸ்தீகம் இழைத்து வரும் தீமைகளிலிருந்து உலகம் விடுபடுமுன், உந்நதமான உண்மைகளால் திருச்சபை பலப்படுத்தப்பட வேண்டும். நாஸ்தீகம்தான் மிக அருவருப்பான பெரும் தப்பறை. இதிலிருந்து விடுபட, திருச்சபை யானது வரப்பிரசாதத்தால் வழிநடத்தப்படும் ஒரு புதிய மார்க்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

இப்படிப்பட்ட புதிய மார்க்கம் திருச்சபைக்கு பாத்திமா நகரில் கொடுக்கப்பட்டுள்ளது.