இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய சேசுவே!

மாமரி அன்னையின் “புகழ்மாலை” முடிந்து விட்டது. மாதாவைப் புகழுமுன் சர்வேசுரனை நோக்கி அபயமிடுமாறு நம் தாயாகிய சத்திய திருச்சபை நம்மைத் தூண்டியது. அவ்வாறே, அவர்களைப் புகழ்ந்த பின்னும், சர்வேசுரனும் நம் இரட்சகருமான சேசுவை நோக்கி மும்முறை அபயமிட்டு, “எங்கள் பாவங்களைப் போக்கி யருளும் சுவாமி,” “எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி,” “எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி” என்று வேண்டுமாறு மீண்டும் நம்மை ஏவுகின்றது. கிறீஸ்துநாதர் கடவுளானதால் அவரே சகலத்திற்கும் ஆதியும் அந்தமுமாவார். எனவே திருச்சபையில் வழங்கிவரும் எல்லாப் பிரார்த்தனைகளின் ஆரம்பத்திலும் முடிவிலும் அவரை நோக்கி மன்றாடுதல் சரியே. 

“உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுர னுடைய செம்மறிப் புருவை” என நமதாண்டவரைத் திருச்சபை அழைக்கின்றது. இதே வார்த்தைகளால் முதன்முதல் நமதாண்டவரைக் குறித்துக் காட்டியவர் அர்ச். ஸ்நாபக அருளப்பர். “சேசுநாதரைக் கண்ட ஸ்நாபக அருளப்பர், “இதோ உலகத்தினுடைய பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவை” என்று கூறினார்” (அரு. 1:29). திவ்விய சேசுவை “செம்மறிப் புருவை” என்று ஸ்நாபக அருளப்பர் கூறிய போது, பல நூற்றாண்டுகளுக்கு முன் இசையாஸ் தீர்க்கதரிசி கூறிய தீர்க்கதரிசனத்தைச் சுட்டிக் காட்டினார் எனச் சொல்லத் தகும். “ஆடானது தன்னைக் கழுத்தறுப்பவன் முன்னும், செம்மறிக் குட்டி தன் மயிர் அறுப்பவன் முன்னும் வாய்திறவாதிருப்பது போல் அவர் தம் கொலைஞர் முன் மெளனங் காத்தார்” (இசை. 53:7).

அர்ச். இராயப்பர் நமது இரட்சணியத்தைப் பற்றித் தமது நிரூபத்தில் கூறுவதாவது: “மாசு மறுவற்ற ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாகிய கிறீஸ்துநாதருடைய விலையேறப்பெற்ற இரத்தத்தால் இரட்சிக்கப்பட்டிருக் கிறீர்கள் என்று அறிந்திருக்கிறீர்கள்” (1 இரா. 1:19). சுவிசேஷக அருளப்பரும் தாம் எழுதிய காட்சியாகமத்தில் முப்பது தடவைக்கு மேல் நமதாண்டவரை “செம்மறிப் புருவை” என்ற பெயரால் குறிப்பிடுகிறார். உதாரணமாக, 5-ம் அதிகாரம், 12-ம் வசனத்தில் அவர் கூறுவதாவது: “அவர்கள் மிகுந்த சத்தமிட்டு: “கொலையுண்ட செம்மறிப் புருவையானவர் வல்லமையையும், தெய்வத்துவத்தையும், ஞானத்தையும்... ஸ்தோத்திரத் தையும் பெற்றுக் கொள்ளப் பாத்திரமாயிருக்கிறார்” என்றார்கள்.” 

இவர்களது முன்மாதிரிகையைப் பின்பற்றி, கிறீஸ்து நாதரின் பத்தினியான திருச்சபையும் நமதாண்டவரைப் பன்முறை, “உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவை” என அழைக் கின்றது. முன்பே நாம் கூறியதுபோல், சகல பிரார்த்தனை களின் முடிவிலும் அவ்விதம் அவரை அழைக்கின்றது. மேலும் திவ்விய பலிபூசையில் எழுந்தேற்றத்தின்பின் திவ்விய நற்கருணையில் எழுந்துள்ள ஆண்டவரை இதே வார்த்தைகளைக் கூறி குருவானவர் மன்றாடுகிறார். விசுவாசிகளுக்கு திவ்விய நற்கருணை கொடுக்கும் முன்பும், திவ்விய அப்பத்தை ஜனங்கள் பார்க்கும்படி கையிலேந்தி: “இதோ சர்வேசுரனுடைய செம்மறிப் புருவை, இதோ உலகின் பாவங்களைப் போக்குகிறவர்” என்று சொல்லுகிறார்.

ஏன் இவ்விதம் நமதாண்டவரை அழைக்க வேண்டு மெனச் சிலர் வியப்படையலாம். அவ்விதம் அழைக்க தக்க காரணங்கள் உண்டு. இவ்வார்த்தைகள் அர்த்தபுஷ்டி நிறைந்த வார்த்தைகள். நமதாண்டவர் சொல்லொண்ணா வாதைகள் அனுபவித்து, தமது திரு இரத்தமெல்லாம் சிந்தி அன்று கல்வாரி மலையில் தம்மைத் தாமே பலியாக ஒப்புக் கொடுத்ததையும், அதன் பயனாக நம்மைப் பாவத்தின் அடிமைத்தனத்தினின்று மீட்டதையும் இவ்வார்த்தைகள் நமது கண்முன் கொண்டு வருகின்றன என்றால் அது மிகைப்படக் கூறியதாகாது. இது எவ்விதமென சற்று ஆராய்வோம்.

இவ்வுலகில் ஒவ்வொரு மனிதனுக்கும் சிநேகிதர் உண்டு. சிநேகிதர்கள் தங்கள் நேசத்தை வெளிப்படை யாகக் காண்பிக்க அநேக முறை ஒருவருக்கொருவர் வெகுமதிகள் பரிமாறல் சகஜம். இதைப் போன்றே ஊழியர்கள் தாங்கள் நேசிக்கும் எஜமானர்களுக்குத் தங்கள் நன்றியையும், அவர்கள் மேல் தங்களுக்குள்ள பற்றுதலையும் காட்ட, அவர்கள் பிறந்த தினத்திலோ, அல்லது மற்ற பெரும் சுப நாட்களிலோ சில பொருட் களைக் காணிக்கையாகக் கொடுக்கின்றனர். தங்கள் எஜமானருக்குத் தங்களது பிரமாணிக்கத்தையும் இவ்வித மாக வெளிப்படுத்துகின்றனர். வெகுமதிகளின் காரண மாகவும், காணிக்கைகளின் காரணமாகவும் சிநேகிதர் களிடையேயுள்ள அன்பும், எஜமானர்கள் ஊழியர் களிடையேயுள்ள சம்பந்தமும் ஸ்திரப்படுத்தப் படுகின்றன.

நம்மைப் படைத்துக் காத்து வருபவர் கடவுள்; நாம் அவரது ஊழியர்கள்; நாம் முழுவதும் அவருக்குச் சொந்தம். நம் வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் அவருடைய பராமரிப்பு நமக்கு அவசியம். கடவுள் நமது எஜமான், நமது பெரும் பேருபகாரி. இப்பெரும் எஜமானரும், பேருபகாரியுமான கடவுளுக்கு தன் நன்றியையும், அன்பையும், கீழ்ப்படிதலையும் காட்டி மென்மேலும் அவருடைய ஆதரவைப் பெற ஆவலுறு கிறான் மனிதன். இந்த ஆவலைத் தன் காணிக்கைகளின் மூலம் தெரிவிக்க முயலுகின்றான். தான் கடவுளுக்கு விரோதமாய்க் கட்டிக் கொண்ட பாவங்களுக்குப் பரிகாரம் செய்து தேவனுடைய கோபத்தை அமர்த்தவும் இக்காணிக்கைகளை ஒப்புக் கொடுக்கிறான். இவ்வுணர்ச்சி இன்று நேற்று ஏற்பட்டதன்று. வேதாகமமும், சரித்திரமும் சாட்சி பகருவது போல், நம் ஆதித்தாய் தந்தையரின் புதல்வரான ஆபேல், காயின் என்பவர்கள் கடவுளுக்குக் காணிக்கைகள் செலுத்தினர். ஜலப் பிரளயத்தினின்று காப்பாற்றப்பட்ட நோவா, பேழையினின்று வெளி வந்தவுடன் தம் நன்றியைக் கடவுளுக்குக் காண்பிக்க ஒரு பீடம் எழுப்பி, அதன்மேல் சில மிருகங்களை தகனப் பலியாக ஒப்புக் கொடுத்தார். சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் வசித்த அரசரும் குருவுமான மெல்கிசெதேக் என்பவர் அப்பத்தையும், திராட்சை இரசத்தையும் காணிக்கையாக ஒப்புக் கொடுத்தார். பிதாப்பிதாவாகிய ஆபிரகாம் தம் ஏக புதல்வன் ஈசாக்கைப் பலியாக ஒப்புக் கொடுக்கத் துணிந்தார். எனவே கடவுளுக்குக் காணிக்கை ஒப்புக் கொடுத்தல் இன்று நேற்று ஏற்பட்டதன்று.

சாதாரணமாய் மனிதர் கடவுளுக்குக் காணிக்கை யாக ஒப்புக் கொடுக்கும் பொருட்கள் மிருகங்களாகும். விசேஷமாய் ஆடுகளும், சிறப்பாக செம்மறியாடுகளும் கடவுளுக்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்டு வந்தன. இந்துக்களிடையே முதலாய் இப்பழக்கம் இன்று வரை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. ஆடுகளைக் கடவுளுக்குக் காணிக்கையாக ஒப்புக் கொடுக்கும் போது அவருக்கு மனிதன் தன் நன்றியைத் தெரிவிக்கிறான்; தன் பாவங்களுக்குப் பரிகாரம் தேடு கிறான்; தான் முழுவதும் கடவுளுக்குச் சொந்தம் என்ப தைக் கிரியையினால் வெளிப்படுத்துகிறான் -ஆடுகளை வெட்டி அவைகளை கடவுளுக்கு ஒப்புக்கொடுக்கிறான். இதுதான் பலி (Sacrifice) எனப்படும். சில சமயங்களில் இவ்விதம் பலியிடப்பட்ட மிருகம் நெருப்பிலிடப்பட்டு எரிக்கப் பட்டது. இதுதான் தகனப் பலியாகும். (Holocaust) பலியும், தகனப்பலியும் கடவுள் ஒருவருக்கு மட்டுமே உரியது. ஏனெனில் அவருக்கு மட்டும் நாம் முழுதும் சொந்தம். சிருஷ்டிகளுக்குப் பலி ஒப்புக் கொடுத்தல் மாபெரும் துரோகமாகும்.

பழைய ஏற்பாட்டில் யூத மக்கள் பலி கொடுக்க வேண்டுமென தேவன் மோயீசன் மூலம் கட்டளையிட் டிருந்தார். அப்பலிக்காக சர்வேசுரன் விரும்பிய பொருள் ஆடுகள், அதிலும் விசேஷமாய் செம்மறி ஆட்டுக் குட்டிகள். ஒவ்வொரு நாளும் காலையில் ஒன்றும், மாலையில் ஒன்றுமாக இரு ஆட்டுக் குட்டிகள் பலியிடப் பட்டன (யாத். 29:39). செம்மறி ஆட்டுக்குட்டி சாந்த குணத்திற்கும் மாசற்றதன்மைக்கும் அடையாளம். எனவே இதைக் கடவுள் விசேஷ விதமாய்ப் பலிப்பொருளாகத் தெரிந்து கொண்டார்.

இப்பலிப் பொருட்கள் யூதர்கள் கட்டிக் கொண்ட பாவங்களுக்குப் பரிகாரமாகவும் ஒப்புக் கொடுக்கப் பட்டன என்று முன்பே கூறியுள்ளோம். ஆயினும் அவற்றால் முற்றிலும் பாவத்திற்குப் பரிகாரம் செய்ய முடியவில்லை. அதிலும் விசேஷமாய் ஆதித்தாய் தந்தையர் கட்டிக் கொண்ட பாவத்திற்குப் பரிகாரம் செய்து கடவுளுடைய கோபத்தைத் தணிக்க அவைகளால் முடியவில்லை. பழைய ஏற்பாட்டின் செம்மறிப் புருவைகளின் பலி செய்ய முடியாத காரியத்தைப் புதிய ஏற்பாட்டில் திவ்விய இரட்சகர் சாதித்துள்ளார். தம்மைத் தாமே கல்வாரியில் பலியாக ஒப்புக் கொடுத்தார்; தமது கடைசித் துளி இரத்தம் வரை சிந்தினார்; ஆதித்தாய் தந்தையரின் பாவத்திற்குப் பரிகாரம் செய்தார்; தேவ கோபத்தைத் தணித்தார்; நம்மைத் தேவனுடன் சமாதானப்படுத்தினார்; பாவத்தின் அடிமைத்தனத் தினின்று நம்மை மீட்டார். அத்துடன் நில்லாமல், தினந்தோறும் அதே கல்வாரி மலைப் பலியை திவ்விய பலி பூசையில் புதுப்பிக்கிறார். பழைய ஏற்பாட்டில் ஒப்புக் கொடுக்கப்பட்ட செம்மறிக் குட்டிகளின் பலிகள் நமதாண்டவர் ஒப்புக் கொடுக்கவிருந்த மகத்தான பலியைச் சுட்டிக் காட்டின. நமதாண்டவர் புதிய ஏற்பாட்டின் ஏக பலிப் பொருள். எனவே பழைய ஏற்பாட் டின் பலிகளையும் அவைகள் குறித்துக் காட்டிய மகத்தான கல்வாரி மலைப் பலியையும் நமக்கு எடுத்துக் காட்ட மிகப் பொருத்தமான உபமானம் “செம்மறிப் புருவை.” தமது பலியால் நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்ததால் திவ்விய சேசு “உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவை” என அழைக்கப்படுதல் முற்றிலும் தகுதியே.

எஜிப்து நாட்டில் பாரவோன் அரசனிடம் அடிமைப் பட்டிருந்த யூத ஜனங்களை மீட்டு, பாலும், தேனும் பொழியும் நாட்டிற்கு அழைத்துச் செல்ல மோயீசனையும் ஆரோனையும் கடவுள் அனுப்பினார். இவர்கள் இருவரும் எஜிப்து நாட்டு அரசன் பாரவோனை அணுகி, தாங்கள் வந்த அலுவலைத் தெரிவித்தபோது அரசன் அதற்கு இணங்கவில்லை. மோயீசனும், ஆரோனும் சர்வேசுரன் தங்களுடன் இருக்கிறார் என்பதைக் காட்ட பல புதுமைகள் செய்தனர். ஆயினும் மன்னன் மனம் மாறவில்லை. அப்போது மோயீசனையும், ஆரோனையும் நோக்கிக் கடவுள் கூறியதாவது: “நீங்கள் இஸ்ராயேல் புத்திரரின் சபையார் யாவரையும் கூப்பிட்டுச் சொல் லுங்கள். இம்மாதத்தின் பத்தாம் தேதியிலே குடும்பத் திற்கும் வீட்டிற்கும் ஒவ்வொரு தலைவர் ஒவ்வொரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்தெடுக்கக் கடவர்... ஆட்டுக் குட்டியோவெனில் மாசற்றதும், ஆண்பாலானதும், ஒரு வயதுள்ளதுமாயிருக்க வேண்டியது... இதை இம்மாதத்தின் பதினான்காம் தேதி வரை வைத்துக் கொண்டு, இஸ்ரா யேல் சபையின் ஒவ்வொரு கூட்டத்தாரும் சாயங்காலத்தில் அதை அறுத்து, அதன் இரத்தத்தில் கொஞ்சமெடுத்து... வாசல் நிலைக்காலிரண்டிலும், நிலையின் மேற்சட்டத்திலும் தெளிக்கக் கடவார்கள். பிறகு அன்று இராத்திரியிலே அடுப்பில் சுட்ட மாமிசங்களைப் புளித்திராத அப்பங்களோடும், காட்டுக் கீரைகளோடும் புசிப்பார்கள்...” (யாத். 12-ம் அதிகாரம்).

இவ்விதம் யூதர்கள் செய்தனர். எந்தெந்த வீடு களின் நிலைக்கால்களில் இரத்தம் பூசப்படவில்லையோ, அவ்வீடுகளிலிருந்து எஜிப்து நாட்டாரின் தலைச்சன் பிள்ளைகள் யாவரும் கொல்லப்பட்டனர். இதைக் கண்ட பாரவோன் மோயீசனுக்கு இசைந்து, யூதர்களை எஜிப்து நாட்டினின்று அழைத்துச் செல்ல அனுமதியளித்தான். இச்சம்பவம் வெறும் சரித்திர சம்பந்தமானது மட்டுமன்று--நமதாண்டவரின் பலியையும், நம்மைப் பேயின் அடிமைத்தனத்தினின்று தமது திரு இரத்தத்தால் அவர் நம்மை மீட்டதையும், அத்துடன் தம்மைத்தாமே நமக்குப் போஜனமாக திவ்விய நற்கருணையில் கொடுப்பதையும் முன்னதாகவே குறித்துக் காட்டியது என்று சிந்திப்பவர் யாவருக்கும் எளிதில் விளங்கும்.

இவ்விதமாக நம்மைத் தமது விலைமதியாத திரு இரத்தத்தால் பேயின் அடிமைத்தனத்தினின்று மீட்ட நமதாண்டவருக்கு எப்பொழுதும் நன்றியறிந்திருப்போம். நம்மீது இவ்வளவு அன்பு காட்டியெ திவ்விய சேசுவுக்கு நமது பிரதியன்பைக் காட்ட முயலுவோம். அவர் சிந்தின இரத்தத்தின் பலனை அடையப் பிரயாசைப்படுவோம். திவ்விய செம்மறிப் புருவையானவர் அன்று கல்வாரி மலையில் ஒப்புக் கொடுத்த பலி நாள்தோறும் நமது கோவில்களில் திவ்விய பலிபூசையின்போது புதுப்பிக்கப் படுகின்றது. எனவே திவ்விய பலிபூசையின் மேல் அதிக பக்தி கொள்வோம். கூடுமானால் தினம் திவ்விய பலி பூசை கண்டு அதன் பலன்களைப் பெற பிரதிக்கினை செய்வோம்.

தமது விலைமதியாத திரு இரத்தத்தால் நம்மை மீட்டு இரட்சித்த நமதாண்டவராகிய சேசு கிறீஸ்து நாதருக்கு அநவரத காலமும் ஸ்துதியும், ஸ்தோத்திரமும் உண்டாகக் கடவது!

“சர்வ வல்லபரும் நித்தியருமான சர்வேசுரா, தேவரீ ருடைய ஏக திருக்குமாரனை உலகத்தின் இரட்சகராக ஏற்படுத்தி, அவருடைய திரு இரத்தத்தினால் சாந்தப்படத் திருவுளங் கொண்டீரே! அந்தத் திரு இரத்தத்தின் வல்லமையினால் எங்களை இவ்வுலகில் உண்டாகும் தீமைகளினின்று காப்பாற்றும். அத்திரு இரத்தத்தின் பலன் வீண்போகாதபடி கிருபை செய்தருளும். எஜிப்து நாட்டில் அடிமைப்பட்டிருந்த யூத ஜனங்களின் தலைச்சன் பிள்ளை களை எவ்விதம் ஆட்டின் இரத்தத்தின் காரணமாகக் காப்பாற்றினீரோ, அவ்விதமே உமது திருக்குமாரன் எங்களுக்காகச் சிந்திய விலைமதியாத திரு இரத்தத்தைப் பார்த்து, எங்களை நரக நெருப்பினின்று காப்பாற்றும்.” 


உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப்புருவையாகிய சேசுவே!
எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி!
எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி!
எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி!