நரகத்திற்குச் சென்று திரும்பி வருதல்!

நரகத்தைப் பற்றிய இந்தக் கனவு எப்படிப்பட்ட அச்சம் தருகிற, தீவிரமுள்ள தியானமாக இருக்கிறது! இங்கே டொன் போஸ்கோவுக்கு மேலிருந்து ஞான வெளிச்சம் தரப்படுகிறது. இங்கே சத்தியம் உறுதிப்படுகிறது, அது பாவத்தையும், நரகத்தையும் பற்றி மேலோட்டமாகப் பேசுபவர்களின் கற்பனையான கனவுகளிலிருந்து இருதயத்தையும், மனதையும் விடுவிக்கிறது. இதில் வரும் வழிகாட்டி, ஓர் எல்லைக் கோட்டை டொன்போஸ்கோவுக்குச் சுட்டிக் காட்டு கிறார். இந்தக் கோட்டிற்கு அப்பால், இனி அன்பு இல்லை, நண்பர்கள் இல்லை , எந்த விதமான ஆறுதலும், தேறுதலும், சுகமும் இல்லை. ஒழுக்கங்கெட்ட உலகத்தைப் பின்செல்பவர்களுக்காக அங்கே கடும் அச்சமும், நம்பிக்கையின்மையும் மட்டுமே காத்திருக் கிறது.

இளம் பருவத்தினரைக் காப்பாற்றும்படி நாம் டொன் போஸ்கோவைப் பின்பற்ற வேண்டும் என்பது கடவுளின் சித்தமாக இருக்கிறது. அறுவடை மிகுதியாயிருக்கிறது; அறுவடை செய்வோர் அதிகம் தேவைப்படுகிறார்கள், நம் தந்தையாகிய டொன் போஸ்கோவின் செயல்திட்டத்தை மாற்றியமைக்கும் அதீத ஆர்வமும், மூடத்தனமுமின்றி, கடுமையாக உழைக்க முன்வருகிற அறுவடையாளர்கள் தேவைப்படுகிறார்கள்.


பிரமாணிக்கம் தேவைப்படுகிறது.

நரகத்தைப் பற்றிய இந்தக் கனவில், சிறுவர்களின் மீட்பிற் காக ஒரு தெளிவான செயல்திட்டம் தரப்படுகிறது:

“அவர்களுக்கு மேலதிகாரிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இவர்கள் கீழ்ப்படிவார்களாக.

“அவர்களுக்கு இல்லத்து விதிகள் இருக்கின்றன, அவற்றை அனுசரிப்பார்களாக.

“அவர்களுக்குத் திருவருட்சாதனங்கள் இருக்கின்றன. அவற்றை அவர்கள் அடிக்கடி பெறுவார்களாக.”

சலேசிய சபை இதை அறிவின் வழியாகவும், வேதத்தின் வழியாகவும், கருணையின் வழியாகவும் பெற்றுக் கொள்ளும். அதற்கு அபரிமிதமான தாராளமும், பொறுமையும் தேவைப் படுகிறது. ஆனாலும் கிறீஸ்தவர்களின் சகாயமாகிய மாமரி கெடுமதியுள்ள பாம்பின் தலையை மிதிக்கவும், சிறுவர்களைக் காப்பாற்றவும் கல்வியாளர்களுக்கு உதவுவார்கள்.

1868, மே 3, ஞாயிறு, அர்ச். சூசையப்பரின் பாதுகாவலின் திருநாளன்று இரவில், டொன் போஸ்கோ தம் கனவுகளை மீண்டும் விவரிக்கத் தொடங்கினார்:

நான் உங்களுக்குச் சொல்ல வேண்டிய இன்னொரு கனவும் இருக்கிறது. போன வியாழனன்றும், வெள்ளியன்றும் நான் உங்களுக்குச் சொன்ன கனவுகளின் ஒரு வகையான பின்விளைவு என்னை முற்றிலுமாகச் சோர்ந்து போகச் செய்தது. அவற்றைக் கனவுகள் என்றோ , நீங்கள் விரும்புகிறபடி எப்படி வேண்டு மானாலும் சொல்லிக் கொள்ளுங்கள். எது எப்படியானாலும், நீங்கள் அறிந்துள்ளது போல, ஏப்ரல் 17 இரவில் ஓர் அச்சமூட்டும் தேரை என்னை விழுங்கும்படி என்மீது குனிந்து நின்றதாகத் தோன்றியது. அது இறுதியாக மறைந்து போனபோது, “நீர் ஏன் அவர்களுக்குச் சொல்வதில்லை?” என்று ஒரு குரல் என்னிடம் கேட்டது. நான் குரல் வந்த திசையில் திரும்பிய போது, என் படுக்கை அருகில் பிரசித்தி பெற்ற ஒரு மனிதர் நின்று கொண்டிருப்பதைக் கண்டேன். பேசாமல் இருந்து விட்டது பற்றிய குற்ற உணர்வுடன் நான் அவரிடம், “நான் என் சிறுவர்களிடம் எதைக் கூற வேண்டும்?” என்று கேட்டேன்.

''நீர் உம் கடைசிக் கனவுகளில் கண்டவற்றையும், கேட்டவற்றையும், நீர் அறிந்து கொள்ள விரும்பியவற்றையும், நாளை இரவில் உமக்கு வெளிப்படுத்தப்பட இருப்பதையும் கூறும்!” என்று சொல்லியபின் அவர் மறைந்து விட்டார்.

மறுநாள் முழுவதையும் எனக்காகக் காத்திருக்கிற வேதனை யான இரவைப் பற்றிக் கவலைப்பட்டுக்கொண்டே நான் கழித்தேன். இரவு வந்தபோது, உறங்கச் செல்ல சோம்பல்பட்டுக் கொண்டு, நான் என் எழுது மேஜையருகில் அமர்ந்து கொண்டு, நள்ளிரவு வரையிலும் புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருந்தேன். இன்னும் அதிகமான பயங்கரக் கனவுகள் காண்பது பற்றிய வெறும் எண்ணமே என்னை முழுவதுமாக நடுங்கச் செய்தது. ஆனாலும் மிகுந்த முயற்சியெடுத்து, இறுதியாக நான் படுக்கச்சென்றேன்.

உடனே உறங்கி விழுந்து, கனவு காணத் தொடங்கி விடாதபடி, என் தலையணையை நேராக வைத்து, அதன்மீது சாய்ந்து கொண்டேன். என்றாலும் என்னுடைய கடும் களைப்பின் காரணமாக, என்னையுமறியாமல் நான் உறங்கி விட்டேன். உடனே முந்திய இரவில் வந்த அதே ஆள் என் படுக்கையருகில் தோன்றினார். (டொன் போஸ்கோ இவரை, “தொப்பி வைத்த மனிதர்” என்று அடிக்கடி அழைத்தார்.)

“எழுந்து என் பின்னே வாரும்!” என்று அவர் சொன்னார்.

“கடவுளின் நிமித்தமாக, தயவு செய்து என்னை விட்டு விடும். நான் முழுவதும் களைத்துப் போயிருக்கிறேன்! இப்போது ஒரு பல்வலியும் பல நாட்களாக என் உயிரை வாங்குகிறது, நான் ஓய்வெடுக்க வேண்டும். மேலும் பயங்கரக் கனவுகள் என்னை முற்றிலுமாகத் தேய்வடையச் செய்து விடுகின்றன” என்று நான் மறுப்புத் தெரிவித்தேன்.

அவரோ மறுபடியும், “எழுந்திரும். நமக்கு நேரம் அதிக மில்லை” என்று வற்புறுத்தினார்.

நான் அவருக்குக் கட்டுப்பட்டு, அவரைப் பின்சென்றேன். “என்னை எங்கே கூட்டிச் செல்கிறீர்?” என்று நான் கேட்டேன்.

“கவலைப்படாதீர். அதை நீரே பார்ப்பீர்.” அவர் என்னை ஒரு மிக விஸ்தாரமான, எல்லையற்ற சமவெளிக்குக் கூட்டிச் சென்றார். அது உண்மையாகவே ஓர் உயிரற்ற பாலைவனமாக இருந்தது. ஒரு மனிதனையோ, மரத்தையோ, புதர் பூண்டுகளையோ கூட என்னால் அங்கே காண முடியவில்லை. அது மஞ்சள் பூத்ததாகவும், காய்ந்து போன தாவரங்களைக் கொண்டதாகவும் இருந்தது, என் மனச் சோர்வை மேலும் அதிகரித்தது. நான் எங்கே இருக்கிறேன் என்றோ, என்ன செய்யப் போகிறேன் என்றோ எனக்கு எதுவும் தெரியவில்லை . ஒரு கணம் என் வழிகாட்டியும் கூட என் கண்களிலிருந்து மறைந்து விட்டார். ஆகவே நான் தொலைந்து போனேன் என்றும், தன்னந்தனியாக இருக்கிறேன் என்றும் நான் பயந்தேன். சுவாமிருவாவையோ, சுவாமி ஃப்ரான்செஸியாவையோ, மற்றவர்களையோ எங்கும் காண முடியவில்லை. இறுதியாக என் நண்பர் என்னை நோக்கி வருவதைக் கண்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டேன்.

“நான் எங்கே இருக்கிறேன்?” என்று நான் கேட்டேன். 

“என்னோடு வாரும். நீரே கண்டுபிடித்துக் கொள்வீர்!” 

“சரி. சரி. நான் உம்மோடு வருகிறேன்.”

அவர் வழிகாட்டியபடி முன்செல்ல, நான் மவுனமாக அவரைப் பின்தொடர்ந்தேன். ஆனால் ஒரு நீண்ட, சோர்வூட்டுகிற நடைக்குப் பிறகு, நான் இந்தப் பரந்த சமவெளியை எப்படிக் கடக்கப் போகிறேன், பல்வலியையும், வீங்கிய கால்களையும் வைத்துக் கொண்டு அதை எப்படிக் கடப்பது என்று கவலைப்படத் தொடங்கினேன். திடீரென, எனக்கு முன் ஒரு சாலையை நான் கண்டேன். “இப்போது எங்கே போவது?” என்று நான் என் வழிகாட்டியைக் கேட்டேன்.

“இப்படி வாரும்” என்று அவர் பதில் சொன்னார்.