இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

வேதசாட்சிகளின் இராக்கினியான மாமரி

உலகில் நிகழந்த அனைத்து நிகழ்வுகளிலும் அதிகம் புலம்புதலுக்குரிய நிகழ்ச்சியைக் கேட்டு உருகாத அளவுக்கு மிகக் கடினமான இருதயம் யாரிடம் இருக்கக் கூடும்? உயர்குடிப் பிறந்தவர்களும், பரிசுத்தமானவர்களுமான ஒரு பெண் இருந்தார்கள். அவர்களுக்கு ஒரே ஒரு மகன் இருந்தார். இந்த மகன் நாம் எவ்வளவு கற்பனை செய்ய முடியுமோ, அவ்வளவு நல்லவராகவும், நேசிக்கப்படத் தக்கவராகவும் இருந்தார். அவர் மாசற்றவராகவும், புண்ணியங்கள் நிரம்பி வழிபவராகவும், அழகானவராகவும் இருந்தார். தமது தாயை இவர் மிகுந்த கனிவுடன் நேசித்தார். எந்த அளவுக்கென்றால், அந்த அன்னைக்கு அவர் ஒரு மிக அற்பமான வேதனையும் தந்ததில்லை, மாறாக, அவர்களுக்கு முழுமையான மரியாதையும், கீழ்ப்படிதலும், பிரியமும் எப்போதும் காட்டி வந்தார். 

இந்த அன்னையும் பூமியின் மீது தனது முழுப் பாசத்தையும் இந்த ஒரே மகனின் மீது வைத்திருந்தார்கள். அதன்பின் என்ன நிகழ்ந்ததென்று கேளுங்கள். இந்த மகன், அவரது எதிரிகளின் பொறாமையின் காரணமாகப் பொய்யாகக் குற்றஞ்சாட்டப்பட்டார்; அவர் மாசற்றவர், குற்றமற்றவர் என்ற உண்மையை நீதிபதி அறிந்திருந்தாலும், அவனே அதை ஒப்புக்கொண்ட போதிலும், அவரது எதிரிகளைப் பகைத்துக் கொள்ள விரும்பாமல், அவர்கள் கேட்டபடி அவன் அவரை அவமான மரணத்திற்குத் தீர்வையிட்டான். பரிதாபத்திற்குரிய அந்தத் தாய், பிரியத்துக்கும் அன்புக்கும் உரியவராகிய தன் மகன் ஒரு காட்டுமிராண்டித்தனமான மரணத்தால் தம் இளமையின் உச்ச நிலையில் தன்னிடமிருந்து அநியாயமான முறையில் பறித்துக் கொள்ளப்படும் துயரத்தை அனுபவிக்க வேண்டியிருந்தது. 

ஏனெனில், வாதைகளாலும், கடைசித் துளி வரை சிந்தப் பட்டதாலும், ஒரு பொது இடத்தில், அவமானக் கழுமரம் ஒன்றில், அதுவும், அவரது தாயின் கண்களுக்கு முன்பாகவே அவர் கொல்லப்பட்டார். பக்தியுள்ள ஆத்துமங்களே, நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? இந்த நிகழ்ச்சியும், இந்தப் பரிதாபத்திற்குரிய தாயும் நம் தயவிரக்கத் திற்குத் தகுதியானவர்கள் இல்லையா?

நான் யாரைப் பற்றிப் பேசுகிறேன் என்று உங்களுக்கு ஏற்கனவே புரிந்து விட்டது. மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட இந்த மகன் நம் அன்புக்குரிய மீட்பரான சேசுதான்; இந்தத் தாய், நம் மீது தான் கொண்ட நேசத்தால், தன் தெய்வீக மகன் மனிதர்களின் காட்டுமிராண்டித்தனத்தால், தேவ நீதிக்குப் பலியாகப்படுவதைக் காண சித்தங்கொண்டு மிகப் பரிசுத்த கன்னிமாமரிதான். ஆகவே, மாமரி நமக்காக அனுபவித்த இந்த மாபெரும் சித்திரவதை - ஆயிரம் மரணங்களுக்கும் அதிகமான இந்த வாதை - நம் தயவிரக்கத்திற்கும், நம் நன்றியறிதலுக்கும் தகுதியுள்ளதாக இருக்கிறது. இவ்வளவு அதிகமான அன்புக்கு வேறு எந்த விதத்திலும் ஈடு செய்ய நம்மால் முடியாது என்றாலும், எதன் வழியாக மாமரி வேதசாட்சிகளின் இராக்கினியாக ஆனார்களோ, அந்தத் துன்பங்களின் மிகுதியை ஒரு சில கணங்கள் தியானிக்கவாவது முன்வருவோம்.

ஓ துன்புறுத்தப்பட்டவர்களாகிய என் மாதாவே, வேதசாட்சி களின் இராக்கினியே, வியாகுல மாதாவே, என் இரட்சணியத்திற்காக மரித்த உமது திருமகனுக்காக நீர் வெகுவாக மனங்கசந்து அழுதீர். ஆனால் நான் நித்தியத்திற்கும் இழக்கப்படுவேன் என்றால், உமது இந்தக் கண்ணீர்களால் எனக்கு என்ன பயன்? ஆகையால் உங்கள் வியாகுலங்களின் பேறுபலன்களைக் கொண்டு, என் பாவங்களுக்கு மெய்யான மனஸ்தாபத்தையும், உண்மையான ஜீவிய மாற்றத் தையும், அவற்றோடு சேசுவின் துன்பங்களின் மீதும், உங்கள் வியாகுலங்களின் மீதும் நிலையான, கனிவுள்ள தயவிரக்கத்தையும் எனக்குப் பெற்றுத் தந்தருளும்.

சேசுநாதர் மற்றெல்லா வேதசாட்சிகளையும் விட அதிகமாகத் தம் வாழ்நாளில் துன்புற்றார் என்பதால், அவர் துயரங்களின் அரசர் என்று அழைக்கப்படுவது போலவே, மாமரியும் சரியான காரணத்தோடு வேதசாட்சிகளின் இராக்கினி என்று அழைக்கப் படுகிறார்கள். தன் திருமகனுக்குப் பிறகுநு அனைத்திலும் அதிகக் கொடுமையான வேதசாட்சியத்தை அனுபவித்ததன் மூலம் இந்தப் பெயரை அவர்கள் சம்பாதித்துக் கொணடார்கள். இவ்வாறு, சரியான காரணத்தோடு புனித லாரென்ஸின் ரிச்சர்ட் என்பவரால் அவர்கள் ""வேதசாட்சிகளின் வேதசாட்சி'' என்று அழைக்கப் பட்டார்கள். ""உன்னைத் துன்பத்தால் சூழச்செய்து முடி சூட்டுவார்'' (இசை.22:18) என்ற இசையாஸின் வார்த்தைகளை முழு உண்மையோடு மாமரிக்கும் பொருத்திக் கூறலாம். அதாவது, மற்ற எல்லா வேத சாட்சிகளுடையவும் ஒருங்கிணைந்த எல்லாத் துன்பங்களுக்கும் அதிகமான மரியாயின் துன்பங்கள், வேத சாட்சிகளின் இராக்கினியாக அவர்களைக் காட்டுகிற அரச முடியால் சூட்டப்பட அவர்களைத் தகுதியுள்ளவர்களாக்கு கின்றன.

கர்த்தூசியரான டெனிஸ், பெல்பார்ட், கத்தாரினுஸ், மற்றும் வேறு பலர் எண்பிப்பது போல, மாமரி ஓர் உண்மையான வேதசாட்சி என்பதில் எந்த சந்தேகத்திற்கும் இடமில்லை. ஏனெனில் ஒருவர் மரணமடையவில்லை என்றாலும், மரணத்தை விளைவிக்கப் போதுமான துன்பத்தை அனுபவிக்கிறார் என்றால் அந்தத் துன்பம் அவருடைய வேதசாட்சியமே என்பது சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட கருத்தாக இருக்கிறது. சுவிசேஷகரான அர்ச். அருளப்பர் கொதிக்கும் எண்ணெய்க் கொப்பறையில் இறக்கவில்லை, மாறாக, ""உள்ளே சென்றதை விட அதிக உயிர்த் துடிப்புடன் அவர் வெளியே வந்தார்'' என்றாலும், அவர் ஒரு வேதசாட்சியாக வணங்கப்படுகிறார். ""வேத சாட்சிய மகிமையைக் கொண்டிருப்பதற்கு, கீழ்ப்படிதலை, அதன் உச்சபட்ச அளவுக்கு செயல்படுத்துவது, அதாவது மரணம் வரைக்கும் கூட கீழ்ப்படிவது, போதுமானதாக இருக்கிறது'' என்று அர்ச். தாமஸ் அக்குயினாஸ் கூறுகிறார். ""கொலைஞனின் வாளால் அல்ல, மாறாக இருதயத்தின் கசப்பான துயரத்தால், மாமரி வேதசாட்சியாக இருந்தார்கள்'' என்று அர்ச். பெர்னார்ட் கூறுகிறார். மாமரியின் திருச்சரீரம் கொலைஞனின் கரத்தால் காயப்படுத்தப் படவில்லை என்றாலும், அவர்களுடைய ஆசீர்வதிக்கப்பட்ட திரு இருதயம் அவர்களது திருமகனின் திருப்பாடுகளைக் கண்டு துயர வாளால் குத்தித் துளைக்கப்பட்டது. இந்த அவர்களது கடும் துயரம் ஒரு முறை அல்ல, ஓராயிரம் முறை அவர்கள் சாவதற்குப் போதுமானதாக இருந்தது. இதிலிருந்து மாமரி ஒரு நிஜமான வேதசாட்சி மட்டுமல்ல, மாறாக அவர்களுடைய வேதசாட்சியம் மற்ற எல்லா வேதசாட்சியங்களுக்கும் அப்பாற்பட்டது என்று நாம் காண்கிறோம். அவர்களுடைய வாழ்வு முழுவதும் ஒரு நீட்டிக்கப் பட்ட மரணமாகவே இருந்தது என்று சொல்லலாம்.

சேசுவும், மரியாயே நீரும் எவ்வளவோ மாசற்றதவர்களாக இருந்தும், என்மீதுள்ள அன்பின் காரணமாக எவ்வளவோ அதிக மாகத் துன்பப்பட்டீர்கள். நரகத்திற்குத் தகுதியுள்ளவனாகிய அடியேனாவது உம் அன்பிற்காக ஏதாவது ஒரு துன்பத்தை அனுபவிக்கும் வரத்தை எனக்குப் பெற்றுத் தாருங்கள். அர்ச். பொனவெந்தூரோடு சேர்ந்து நானும், ""ஓ இராக்கினியே, நான் உங்களை நோகச் செய்திருக்கிறேன் என்றால், நீதிப்படி என் இருதயத்தைக் காயப்படுத்துங்கள்; நான் உங்களுக்கு ஊழியம் செய்திருக்கிறேன் என்றால், அதற்கு வெகுமதியாக இப்போது நான் காயங்களைக் கேட்கிறேன். என் ஆண்டவராகிய சேசுவம், அவரோடு நீங்களும் காயப்பட்டும், நான் ஒரு காயமும் இல்லாமலும் இருப்பதைக் காண்பது எனக்கு அவமானமாக இருக்கிறது. சுருங்கச் சொன்னால், ஓ என் மாதாவே, உங்கள் திருமகன் மிக அதிகமான வாதைகளுக்கு மத்தியில் தலைசாய்த்து சிலுவையின் மீது மரிப்பதைக் கண்டு நீங்கள் அனுபவித்த துக்கத்தின் வழியாக, ஒரு நல்ல மரணத்தை எனக்குப் பெற்றுத் தரும்படியாக நான் உங்களை மன்றாடுகிறேன். ஆ, பாவிகளுக்காகப் பரிந்து பேசுகிறவர்களே, காலத்திலிருந்து நித்தியத்திற்குக் கடந்து செல்லும் தனது மாபெரும் பயணத்தில் என் துன்பப்பட்ட ஆத்துமம் ஈடுபட்டிருக்கிற போராட்டத்தின் நடுவில், அதற்கு உதவி செய்வதை நிறுத்தி விடாதீர்கள். என் மரணத் தருவாயில் என் முழு நம்பிக்கை யாகிய உங்களுடையவும், சேசுவினுடையவும் திருப்பெயர்களை மன்றாட இயலாத அளவுக்கு நான் பேச்சுத் திறனையும், பலத்தையும் இழந்து போயிருக்கலாம் என்பதால், இப்போதே உங்களை மன்றாடுகிறேன்; அந்தக் கடைசி கணத்தில் எனக்கு உதவும்படி உங்கள் திருமகனிடமும், உங்களிடமும் நான் இரந்து மன்றாடுகிறேன். சேசுவே, மரியாயே, என் ஆத்துமத்தை உங்களிடம் ஒப்படைக்கிறேன் என்று நான் சொல்கிறேன்.