இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

பரிசுத்த மாமரியின் கற்பு

ஆதாமின் வீழ்ச்சியின் காலத்திலிருந்து, புலன்கள் புத்திக்கு எதிராகக் கலகம் செய்வதால், எல்லாப் புண்ணியங்களிலும் கற்பு என்னும் புண்ணியமே நாம் அனுசரிக்க மிகக் கடினமான புண்ணியமாக இருக்கிறது. "நாம் ஈடுபட்டிருக்கிற எல்லாப் போராட்டங்களிலும் அதிகக் கடுமையானவை, கற்பைக் காக்க நாம் செய்யும் போராட்டங்களே; அதற்காக நாம் தினமும் போராடுகிறோம், ஆனால் வெற்றி அரிதாகவே கிடைக்கிறது'' என்கிறார் அர்ச். அகுஸ்தினார். ஆயினும், மாமரியில், இந்தப் புண்ணியத்தின் உத்தமமான முன்மாதிரிகையை நமக்குத் தர சித்தங்கொண்ட சர்வேசுரன் என்றென்றும் ஸ்துதிக்கப்படுவாராக!

"சரியான காரணத்தோடுதான் மாமரி கன்னியர்களில் உத்தம கன்னிகை என்று அழைக்கப்படுகிறார்கள்; ஏனெனில், அவர்கள் மற்றவர்களின் ஆலோசனையோ, முன்மாதிரிகையோ இன்றி, தனது உத்தம, மாசற்ற கன்னிமையைக் கடவுளுக்கு ஒப்புக்கொடுப்பதில் முதலானவர்களாக இருந்தார்கள்'' என்று அர்ச். பெரிய ஆல்பர்ட் கூறுகிறார். இவ்வாறு, ""அவளுக்குப் பின் கன்னியர்கள் அரசரின் தேவாலயத்திற்குள் கூட்டி வரப்படுவார்கள்'' (சங்.44:15) என்று தாவீதரசர் ஏற்கெனவே முன்னுரைத்தது போல, மாமரியே தன்னைக் கண்டுபாவிக்கும் சகல கன்னியரையும் கடவுளிடம் கூட்டி வந்தார்கள். ஆலோசனையோ, முன்மாதிரிகையோ இன்றி. ஆம்; ஏனெனில் அர்ச். பெர்னார்ட் சொல்வது போல: ""ஓ கன்னிகையே, கன்னிமையால் கடவுளை மகிழ்விக்கவும், பூமியின் மீது ஒரு சம்மனசுப் போல வாழவும் உங்களுக்குக் கற்றுத் தர யார் இருந்தார்கள்?'' ஆ, ""இந்த மகா பரிசுத்த, மாசற்ற கன்னிகை அனைவருக்கும் கற்பின் மாதிரிகையாக இருக்கும்படி சர்வேசுரன் அவர்களைத் தம் தாயாராகத் தெரிந்துகொண்டார்'' என்று அர்ச். ஸோஃப்ரோனியஸ் பதிலளிக்கிறார். ஆகவே, அர்ச். அம்புரோஸ் மாமரியைக் ""கன்னிமையின் விருதுக்கொடி தாங்குபவர்'' என்று அழைக்கிறார்.

தனது மாசற்றதனத்தின் காரணமாக, திவ்விய கன்னிகை காட்டுப் புறாவைப் போல் அழகானவர்கள் என்று பரிசுத்த ஆவியானவரால் அறிக்கையிடப்படுகிறார்கள்: ""காட்டுப்புறாவின் அழகு போலிருக்கின்றன உன் கன்னங்கள்'' (உந்.சங்.2:2). இந்தப் பகுதி பற்றி கர்த்தூசியரான டெனிஸ் விளக்கம் கூறும்போது, ""மாமரி முட்கள் நடுவேயுள்ள லீலி மலருக்கு ஒப்பிடப்படுகிறார்கள், ஏனெனில் மற்ற கன்னியர்கள் அனைவரும் தங்களுக்குத் தாங்களே, அல்லது மற்றவர்களுக்கு, முட்களாக இருந்தார்கள்; ஆனால் மாமரி தனக்கோ, மற்றவர்களுக்கோ அப்படி இருக்கவில்லை. ஏனெனில் தன்னைக் காண்பவர்கள் அனைவரின் மனங்களிலும் அவர்கள் கற்புள்ள எண்ணங்களை எழுப்பினார்கள்'' என்கிறார். அர்ச். தாமஸ் அக்குயினாஸ் இதை உறுதிப்படுத்தும் விதமாக, திவ்விய கன்னிகையின் அழகு அவர்களைக் கண்ட அனைவரிலும் பரிசுத்த கற்புக்கு ஒரு தூண்டுகோலாக இருந்தது என்கிறார். மாமரியோடு வாழ்ந்ததாலேயே அர்ச். சூசையப்பர் கன்னிமையுள்ளவராக நிலைத்திருந்தார் என்பது அர்ச். ஜெரோமின் கருத்தாக இருந்தது. ஏனெனில், மரியாயின் திவ்விய கன்னிமையை மறுதலித்த பதிதனான யஹல்விதியுஸ் என்பவனுக்கு எதிராக அவர் எழுதும்போது, ""மாமரி கன்னிகையாக நிலைத்திருக்கவில்லை என்று நீ சொல்கிறாய். அவர்கள் தான் கன்னிகையாக நிலைத்திருந்தது மட்டுமல்ல, மாறாக, சூசையப்பரும் மாமரியின் வழியாகவே தமது கன்னிமையைக் காத்துக் கொண்டார் என்று நான் சொல்கிறேன்'' என்று அவர் சொல்கிறார்.

"சரீரப் பரிசுத்ததனத்திற்கு எதிராக சோதிக்கப்பட்டவர்களில் பலர் நம் பரிசுத்த இராக்கினியின் மீது பக்தி கொண்டதால் தங்கள் கற்பைக் காப்பாற்றிக் கொண்டார்கள்'' என்று முத். அவிலா அருளப்பர் கூறுகிறார். ஓ, அசுத்ததனத்திற்கு எதிரான சகல சோதனைகளின் மீதும் வெற்றி கொள்ள "மரியாயே!' என்னும் திருப் பெயர் எவ்வளவு விசேஷ வல்லமையுள்ளதாக இருக்கிறது! ஓ மகா பரிசுத்த கன்னிமரியாயே, அந்தச் சோதனைகளிலிருந்து என்னை இரட்சித்துக் கொள்ளுங்கள். என் எல்லாச் சோதனைகளிலும் உங்களிடம் தஞ்சமடைந்து, அந்தச் சோதனை என்னில் நீடித் திருக்கும் வரை உங்களை இடைவிடாது மன்றாடிக் கொண்டிருக்க எனக்கு அருள்வீர்களாக. ஆமென்.

கன்னிமையாகிய இந்தப் புண்ணியத்தைப் பிதாவின் இந்த அன்பு மகள் எவ்வளவு அதிகமாக நேசித்தார்கள் என்றால், தன் கன்னிமையைக் காப்பாற்றிக் கொள்ள, சர்வேசுரனுக்குத் தாயாகும் மாபெரும் மகிமையைக் கூட துறந்து விட அவர்கள் சித்தமா யிருந்திருப்பார்கள் என்று அர்ச். நிஸ்ஸா கிரகோரியார் கூறுகிறார். அதிதூதரிடம், ""இது எப்படியாகும்? நானோ மனிதனை அறியேனே?'' என்று மாதா கேட்ட கேள்வியிலிருந்து நாமும் இந்த முடிவுக்கு வரலாம். மேலும், ""இதோ, நான் ஆண்டவருடைய அடிமை, உம்முடைய வார்த்தையின்படியே எனக்கு ஆகக்கடவது'' என்றும் தொடர்ந்து மாதா கூறினார்கள் (லூக்.1;34,38). இதன் மூலம், சம்மனசானவர் தனக்கு உறுதி கூறியது போல, பரிசுத்த ஆவியானவர் நிழலிடுவதால் மட்டுமே தான் ஒரு தாயாக ஆவார்கள் என்ற நிபந்தனையின் பேரிலேயே மாமரி தனது சம்மதத்தைத் தந்தார்கள் என்பது குறித்துக் காட்டப்படுகிறது.

கற்பைப் பாதுகாத்துக் கொண்டுள்ளவன் யாராயினும் அவன் ஒரு சம்மனசாக இருக்கிறான், அதை இழந்து விட்டவன் ஒரு பசாசாக இருக்கிறான் என்று அர்ச். அம்புரோஸ் கூறுகிறார். கற்புள்ளவர்கள் தேவதூதர்களாக ஆவார்கள் என்று நம் ஆண்டவர் நமக்கு உறுதி கூறுகிறார்: ""அவர்கள் பரலோகத்திலே தேவதூதர்களைப் போலிருப்பார்கள்'' (மத்.22:30). ஆனால் அசுத்தமுள்ளவர்கள் பசாசுக்களாக, கடவுளின் பார்வையில் வெறுப்புக்குரியவர்களாக ஆகிறார்கள். வளர்ச்சி பெற்றவர்களில் பெரும்பகுதியினர் இந்தத் தீமையால் இழக்கப்படுகிறார்கள் என்று சொல்வது அர்ச். ரெமிஜியுஸின் வழக்கமாக இருந்தது. நாம் அர்ச். அகுஸ்தினோடு ஏற்கெனவே சொல்லியுள்ளது போல, இந்தத் தீமையின் மீது வெற்றி கொள்வது மிக அரிது. ஏன்? ஏனெனில் அதன் மீதுவெற்றி கொள்வதற்கான வழிகள் மிக அரிதாகவே பயன்படுத்தப் படுகின்றன. அவை: உபவாசம், பாவ சந்தர்ப்பங்களை விலக்குதல், ஜெபம் ஆகியவையாகும்.

ஆ, என் மாசற்ற இராக்கினியே, அழகிய புறாவே, கடவுளின் நேசத்திற்குரியவர்களே, என் ஆத்துமத்தின் பல கறைகள் மற்றும் காயங்களின் மீது உங்கள் கண்களைத் திருப்ப அருவருப்புக் கொள்ளாதீர்கள். என்னைப் பார்த்து, என் மீது பரிதாபம் கொள்ளுங்கள்! உங்களை மிக அதிகமாக நேசிக்கும் கடவுள் உங்களுக்கு எதையும் மறுப்பதில்லை. உங்களிடம் தஞ்சமடையும் யாரையும் ஏற்க மறுப்பது எப்படியென்று நீங்களும் அறிந்ததில்லை. மரியாயே, நான் உங்களிடம் தஞ்சமடைகிறேன். என் மீது தயவாயிருங்கள். கன்னி சுத்தங்கெடாத மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்!