இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

பிலோமினாவின் சின்ன சகோதரிகள்

யார் இவர்கள்? அர்ச். பிலோமினம்மாள் முஞ்ஞானோவுக்கு வந்ததால் அவ்வூரின் இளைஞர்கள் மிகப்பெரும் உற்சாகமடைந்தனர். தங்கள் மோட்சத்தின் இளவரசி தன் கன்னிமையைக் காக்க, கொலைஞர்களின் கசையையும், வில்லாளர்களின் அம்புகளையும், ஈட்டியின் தாக்குதலை யும் எதிர்த்து நின்றாள் என்று நினைக்கவே பெருமிதம் அடைந் தனர். அவளைப் போல் தாங்களும் இருக்க வேண்டும். எதற்கும் அஞ்சக்கூடாது - ஆண்டவரை விடவா உலகம் வந்துவிட்டது? என்ற துணிச்சல் கொண்டார்கள்.

விசேஷமாய், இளம் கன்னிப்பெண்கள் அர்ச். பிலோமினம்மாளை தங்கள் சகோதரியாகப் பாவித்து அவளிடம் ஜெபித்து, தாங்கள் அவளைப் போலிருக்க என்ன செய்யலாம் என்று ஆலோசனை கேட்டார்கள். அர்ச். பிலோமினம்மாளிடம் அமர்ந்து ஆலோசனை கேட்டால், அவள் அதற்கு உடன் பதில் தருகிறாள். அவள் இந்த இளம் கன்னியரின் இருதயங்களை ஆண்டவர்மேல் அன்பால் மூட்டினாள். அவர்களும் எந்த மடத்திற்கும் செல்லாமல் தங்கள் வீட்டிலிருந்தபடியே சேசுவை நேசித்து மாதாவுக்கு ஆறுதலளிப்பதை தங்கள் அழைத்தலாக ஏற்றார்கள். இப்படிப் பலர் முஞ்ஞானோவிலும் பக்கத்து ஊர்கள், பட்டணங்களிலும் தங்கள் கன்னிமையை, சேசுவை நேசிப்பதற்கெனவே அர்ப்பணித்தார்கள். கன்னிமை ஒரு பெரிய பொக்கிஷம் - அதைக் கடவுளுக்களிப்பதைப் போல் சிறந்தது எதுவுமில்லை என்றும், கன்னிமையானது உலகின் மத்தியில் எழுப்பப்படும் அர்ச்சியசிஷ்டதனத்தின் நினைவு மண்டபம் என்றும் உணர்ந்தார்கள். இப்படி அநேக சிறு பெண்கள் தங்கள் கன்னிமையை சேசுவுக்கென காப்பாற்ற முன்வந்ததால் பிலோமினாவின் சின்ன சகோதரிகள் என்ற பெயர் அவர்களுக்கு உண்டாயிற்று. அவர்களுடைய சின்னமாக லீலி மலர் திருச்சபையால் அங்கீகரிக்கப்பட்டது. அவர்களுக்கென சில ஒழுங்குமுறைகள் வரையப்பட்டன. இவர்கள் மடத்தில் வாழவில்லை. தங்கள் குடும்பங்களி லேயே இருந்து தங்கள் ஒழுங்குகளை அனுசரித்து, உத்தம தனம் அடைகிறார்கள் என்று கேட்டதும் 12-ம் சிங்கராயர் பாப்பரசர் தம்மையும் மீறி இப்படிக் கூறினார்: “அர்ச். பிலோமினம்மாளின் மிகப் பெரிய புதுமை இதுவே! எல்லாம் கெட்டு, அழுகிப் போகிற ஒரு நூற்றாண்டில் உலகத்தையும், சரீரத்தையும் வென்று வாழும் பரிசுத்த தாராளமுள்ள ஆன்மாக் களை நாம் காண்கிறோமே! ஓ அவர்கள் அனைவரையும் நாம் ஆசீர்வதிக்கிறோம்!'' என்றார். இதுவே புதிய ஏதேன் தோட்டம், கற்பின் விருட்சம், பரிசுத்ததனத்தின் பூந்தோட்டம்: அர்ச். பிலோமினாவின் சின்ன சகோதரிகளின் கூட்டம்.

இவ்வாறு உலக பாவங்களுக்குப் பரிகாரமாக, தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கும் ஆன்மாக்களை வழிநடத் தும் தலைவியாக விளங்குகிறாள் சின்னக் கன்னி பிலோமினா. அர்ச். பிலோமினம்மாளின் இரத்தத்தின் மகிமை, கடவுளை மகிழ்வித்து தேவதாயின் மாசற்ற இருதயத்துக்கு அன்பும், ஆறுதலும் கொடுத்து பரிகார முத்திரையாய் விளங்குகின்றது.