இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மேற்றிராணியாரின் தேவை நிறைவு செய்யப்பட்டது.

லூசனா பட்டணத்து மேற்றிராணியார் தம்முடைய மேற்றிராசனத்தில் பெரிய குருமடம் ஒன்றைத் தொடங்கினார். அதில் போதனாமுறைப் பயிற்சியளிக்க ஒரு குரு பேராசிரியர் மிக அவசியமாய்த் தேவைப்பட்டார். அவர் அதற்கென அதி சங். வின்சென்ட் என்ற திறமையுள்ள குருவைத் தேர்ந்தெடுத்தார். ஆனால் அதி சங். வின்சென்ட் காச நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். ஏற்கெனவே பல தடவைகளில் இரத்தம் கக்கிய அவரின் நிலை மிக மோசமாகியிருந்தது. ஆயினும் மேற்றிராணியார் இந்தக் குருவானவரையே தம் குருமடத்தில் போதனாமுறைப் பேராசிரியராக நியமித்து அந்தச் செய்தியை வின்சென்ட் சுவாமியிடம் கூறி அப்பொறுப்பை ஏற்றுக் கொள்ளும்படி கட்டளையிட்டார். வின்சென்ட் சுவாமி மேற்றிராணியாரிடம்: “ஆண்டகையவர்களே, என்னை குணப்படுத்தும் சக்தி உங்களுக்கிருக்கிறதா? என் நிலைதான் உங்களுக்குத் தெரியுமே'' என, மேற்றிராணியார்: “அந்த சக்தி எனக்கு கிடையாது. ஆனால் அச்சக்தி படைத்த ஒரு அர்ச்சியசிஷ்டவள் இருக்கிறாள். இதோ அவளுடைய படம். இவள் உங்களைக் குணப்படுத்துவாள்'' என்று கூறி அர்ச். பிலோமினம்மாளின் படத்தைக் கொடுத்தார். வின்சென்ட் சுவாமி அதை அன்புடன் வாங்கி அதைத் தம் நெஞ்சில் வைத்த அக்கணமே குணமடைந்தார்.