அர்ச். தோமையார் வரலாறு - பிடிக்கப்போனவர் பிடிபட்டனர்

அப்போஸ்தலரை அனுப்பிவிட்டு அரசன் இரா உணவு அருந்தச் சென்றான். அங்கே அரசி திருப்பதி என்பாள் அரசன் வருகைக்காகக் காத்திருந்தாள். உடனே அரசன் அவளிடம் கிருஷ்ணன் மனைவிக்கு நிகழ்ந்ததை விரிவாகச் சொல்லி, அதன் பொருட்டு அவள் தமையன் எவ்வளவு துயரம் அடைத்திருக்கின்றான் என்பதை விவரித்தான். 

பின்னர், "என் காதலி! திருப்பதி! உன் அண்ணனுக்கு ஆறுதல் நீதான் வருவிக்கக்கூடும். நீயும், நம் மைந்தன் விஜயனும் போய் மகு தானியைப் பாருங்கள். உன்னுடைய நய மொழிகளால் அவள் மனத்தை மாற்றலாம். நீ போய் முயல்வாயாக" என்று அரசியை ஏவினான். அரசனது விருப்பத்திற்கு இணங்கி மறுநாள் காலை திருப்பதியும் அவள் மகன் விஜயனும் மகு தானியைத் தேடிப்போயினர். திருப்பதி மகு தானியைக் கண்டதும் கட்டியணைத்து முத்தமிட்டாள்; அன்பு காட்டினாள்; நல்வார்த்தையாடினாள். பின்பு தான் வந்த காரணத்தைப்பற்றிப் பின் வருமாறு பேசத் தொடங்கினாள்: 

"மகு தானி! என் அருமை அண்ணியே! உன்னைப்பற்றி ஊரெல்லாம் பலவாறாகப் பேசுகின்றனரே. உன்னை இவ்வாறு மயக்கினது யார்? உன்னால் அரசருக்கு ஆறாத்துயர் உண்டாயிருக்கின்றது. அரசவை முழுவதுமே மனக் கலக்கம் ஏற்பட்டிருக்கின்றது. நான் மிகைப்படுத்திக் கூறவில்லை. விபரீத வேதத்தை உனக்குக் கற்பித்தது யார்?” என்று வினவினாள். அவள் பதில் அளிக்குமுன் விஜயன், "அந்த மந்திரவாதி ஒரு விபரீதக் கடவுளைப்பற்றிப் பேசுகிறான். ஆனால் இகபரங்களைப் படைத்தவர் நம் தேவர்களன்றி வேறு எவராயிருக்கக் கூடும்?'' என உரைத்தான். 

இதைக் கேட்டு மகு தானி சிறுவனை நோக்கிப் புன்னகை செய்து, திருப்பதியின் பக்கம் திரும்பி, "என் அன்புச் சகோதரியே! அவர் போதித்ததை நீ மட்டும் கேட்டிருப்பாயாயின் அவரைக் கடவுள் என்று கூடச் சொல்லுவாய். நம் உறவினர்களாகிய சின்ன ஆச்சி கண் பார்வையற்றுக் குருடியாய் இருந்தாள் அல்லவா? அவர்தான் அவளுக்குப் பார்வையளித்தார்! வியாதிக்காரரைக் குணப்படுத்துகிறார். இறந்தோர்க்கு உயிர் கொடுக்கிறார். எல்லார்க்குமே நித்திய வாழ்வின் மார்க்கத்தை தெளிவாகக் காட்டுகிறார். 

இவ்வுலக வாழ்வு சொற்பக்காலம், மறு உலக வாழ்வோ நீடூழி காலம் என்று எண்பிக்கின்றார். அவர் செய்யும் அற்புதங்களைப்பற்றி நான் சொல்லுவதை நம்ப உனக்கு ஐயமுண்டானால், அரசனது படைத்தள கர்த்தன் சீத்தாராமனைக் கேட்டுப்பார். அவன் மனைவியையும் மகளையும் குணப்படுத்தியவர் அவரே. பின்னொருகால் சீத்தாராமனின் மகன் இறந்து போனான். உடனே அவன் உறுதியான நம்பிக்கையுடன் அப்போஸ்தலரைக் கொண்டுவரச் சிறைச்சாலைக்குப் போனான். 

பிரமாணிக்கத்தின் பேரில் காவற்காரர் அப்போஸ்தலரை வெளிவிட்டார்கள். வீட்டிற்கு அழைத்து வந்தான். அங்கு வந்ததும் சிறிது நேரம் செபஞ் செய்த பின்னர் குழந்தையின் கையைப் பிடித்துத் தூக்கினார் அப்புனிதர். இறந்து போயிருந்த மைந்தன் மறுபடியும் உயிர்த்தான். இப்போது முழுசுகத்துடன் இருக்கின்றான். அரசர் அவரை இப்பொழுது சிறையிலிருந்து வெளியிட்டிருப்பதால், தன்னைத் தேடி வருறவர்களுக்குச் சத்திய வேதத்தைப் போதிப்பதுமின்றி பிணியாளிகளையும் குணப்படுத்திக் கொண்டிருக்கிறார்'' என்றுரைத்தாள்.

அரசி இதைக்கேட்டு ஆச்சரியப்பட்டு, "அப்படியானால் நாம் போய் அவரைப் பார்க்கலாம் அல்லவா?'' என்றாள். 

உடனே இருவரும் அப்போஸ்தலரைப் பார்க்கச் சீத்தாராமன் வீடு சென்றார்கள். வாயிலில் ஒரு குஷ்டரோகி இருந்தான். அவனை உள்ளே விடாது தடுத்தார்கள் மக்கள். மகு தானியும் திருப்பதியுமே உள்ளே அனுப்பப்பட்டனர். அப்போஸ்தலர் அங்கு வந்துள்ள நோயாளிகளைக் கண்காணித்து, அவர்களைக் குணப்படுத்தி அவர்களுக்கு அன்புடன் ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார். இதைக் கண்ட திருப்பதி தன்னை அறியாமலே, "இத்தகைய மீட்பு அலுவலை நம்பாதவர்களைக் கடவுள் சபிப்பாராக!" என்று கூவினாள்.

மகு தானியோ அப்போஸ் தலரைப் பார்த்து, "சுவாமி, வாசலண்டை ஒரு குஷ்டரோகி வந்திருக்கின்றான், அவனை உள்ளே வர விடாது தடுக்கின்றார்கள்" என்றாள். “மீட்பு அடைய விரும்புவோர் எவராயினும் அவரைத் தடுப்பது தருமம் அன்று. அவன் உடனே உள்ளே வரட்டும்'' என்று பாவுல் சீத்தாராமனுக்கு உத்தரவிட்டார். அப்படியே குஷ்டரோகி கொண்டுவரப்பட்டான். 

அப்போஸ்தலர் அவன் தலையின் மீது தம் கையை வைத்து, "உம் திருக்குமாரன் இயேசுவின் பேரால் குருடர்களுக்குப் பார்வையும், செவிடர்களுக்குக் கேள்வியும், குஷ்டரோகிகளுக்கு ஆரோக்கியமும், இறந்தோர்க்கு உயிரும் அளிக்க வல்லமை கொடுத்த இறைவா, இந்த நோயாளியைக் குணப்படுத்த உம் வானதூதர்களில் ஒருவரை அனுப்பும். அப்போது தேவரீரே மெய்யான கடவுளென்றும், உம்மையன்றி வேறே கடவுள் இல்லையென்றும் இவர்கள் கண்டுபிடித்து, நீரே சர்வ வல்லவரென்று நம்பி, உம்மையே ஆராதிப்பார்கள். தேவரீரோடும் பரிசுத்த ஆவியோடும் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற வருமாயிருக்கிற எங்கள் இரட்சகரான இயேசுவையும் ஆராதிப்பார்கள். இவ்வண்ணமே கிருபை செய்தருள்வீராக ஆமென்" என்று செபித்தார். 

செபம் முடிந்தவுடனே ஒரு இளைஞன், கண்களைப் பறிக்கும் தோற்றத்தோடு கூட்டத்தினுள் தோன்றினான். குஷ்டரோகியைக் கை தூக்கி எடுத்துச் சற்று விலகிச் சென்று, தன் கைகளால் அவனுடைய புண்களைத் தடவினான். உடனே அக்குஷ்டரோகி ஆரோக்கியமடைந்தான். அவனை அப்போஸ்தலர் முன் கொண்டுவந்து நிறுத்திவிட்டு அவ்வாலிபன் மறைந்து போயினன். "மெய்யாகவே வானதூதர் வானுலகிலிருந்து நம் மத்தியில் வந்தார்" என்று எல்லாரும் கடவுளைப் போற்றித் துதித்தார்கள். தோமையார் குணமடைந்த மனிதனுடைய விருப்பப்படி அவனுக்கு ஞானோபதேசம் செய்த பின்னர் ஞானஸ்நானங் கொடுத்தார்.

இவைகளை யெல்லாம் கண்கூடாகக் கவனித்துப் பார்த்திருந்த திருப்பதியோ தன்னை அடக்கமுடியாமலே தோமையாரை அணுகி அவர் பாதத்தில் தெண்டனிட்டு விழுந்து, "மெய்யான கடவுளின் அப்போஸ்தலரே! எனக்கும் நித்திய சீவியவழியைக் காட்டியருளும்" என்று மன்றாடினாள். சர்வேசுரனின் கருவூலம் சதா திறந்தேயிருக்கின்றது. அவரை நம்பினோர் ஏராளமாய் அதினின்று பங்கடையலாம். நீயும் அவரை நம்புவாயாகில் அவருடைய அருட்சாதனங்கள் உனக்கும் தாராளமாக வழங்கப்படும்'' என்றார். 

"உம்முடைய தேவனை விட வேறு தேவன் இல்லவேயில்லை. அவருடைய அடியாளாக என்னைத் தயைசெய்து தேவரீர் ஏற்றுக் கொள்ளும்'' என்று உருக்கமாக வேண்டிக்கொண்டாள். அப்போது அப்போஸ்தலர் அவளை ஆசீர்வதித்தார். சற்று மெளனமாயிருந்த பிற்பாடு, "மக்களே! இயேசு என்னை அழைக்கின்றார். நான் அவர் திருச்சமுகம் அடையும் காலம் கிட்டிவிட்டது. ஆகையால் ஞானஸ்நான நீரையும் பரிசுத்த ஆவியின் வரங்களையும் பெற்றுக்கொள்ளுங்கள்'' என்றார் தோமையார். 

பின்னர், கடவுளைப் பிரமாணிக்கமாய்ச் சேவிக்கவும், திருச்சபையை நேசிக்கவும், குருக்களை மதிக்கவும், ஞாயிறு தோறும் பலிபூசை ஒப்புக்கொடுக்கவும், ஆண்டவருடைய அருள் வாக்கைக் கேட்கவும் வேண்டிய அவசியத்தைப்பற்றிப் போதித்து முடித்ததும், தகுதியுள்ளோரா யிருந்தோருக்கு ஞானஸ்நானமும் உறுதிப் பூசுதலும் கொடுத்தார். அன்னோர் அனைவரும் தேவ ஆசீர்வாதம் பெற்றுத் தத்தம் இல்லங்களுக்கு ஏகினர்.