இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

சுவாமி கிருபையாயிரும்.

தேவமாதாவைப் புகழ்வதற்கு முன்னால், தேவனைப் புகழ நம்மை ஏவுகிறது திருச்சபை. “சுவாமி, கிருபையாயிரும்” - ஆம்! சகலத்திற்கும் ஆதிகாரணரான சர்வேசுரனை முதன்முதல் துதிப்பது மிகப் பொருத்தமுடையது! அர்ச். சின்னப்பர் சொல்லுவது போல, “சகலமும் அவராலும், அவரைக் கொண்டும், அவரிலும் உண்டாயிருக்கிறது; அவரே என்றென்றைக்கும் புகழப்படுவாராக” (ரோமர் 11:36).

தேவமாதா இன்று மகிமைப் பிரதாபத்தில் வீற்றிருப்பது எதனால்? இன்று தேவமாதா வான்வீட்டில் சகல வரப்பிரசாதங்களுக்கும் மத்தியஸ்தியாயிருப்பது எதனால்? பரலோக பூலோக அரசியாக மணிமுடி தாங்கி ஆட்சி புரிவது எதனால்? தனது சொந்த முயற்சியினாலா தேவமாதாவுக்கு இப்பெரும் பாக்கியங்கள் கிட்டின? இல்லை. 

தேவமாதாவும் நம்மைப் போல் ஒரு சிருஷ்டிதான். ஆகவே, தேவமாதா இன்று வானோர்க்கரசியாய், மங்கா ஒளி சுடராய், மோட்ச பிரதாபத்தில் வீற்றிருப்பது சகல வல்லபரான தேவனின் அன்புச் செயலே. “வல்லபமிக்கவர் பெருமையுள்ளவைகளை என்னிடத்தில் செய்தருளினார்” (லூக். 1:49) என்று தேவமாதாவே பாடவில்லையா? ஆகவே சகல நன்மைகளுக்கும் ஊற்றும் ஊறணியுமான தேவனை எல்லாவற்றிற்கும் முன்பாக வழிபடுவது முறையே.

“சுவாமி கிருபையாயிரும்.” இம்முதல் மன்றாட்டை யாரை நோக்கிக் கேட்கிறோம்? பரலோகத்தையும், பூலோகத்தையும் படைத்துக் காக்கும் சர்வ வல்லப கடவுளை நோக்கியன்றோ? ஆகவே இம்மன்றாட்டைச் சொல்லுங்கால் நம்மையே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி ஒன்று உண்டு. அவர் யார்? நாம் யார்?  

இக்கேள்விகளுக்குப் பதில் தானாகவே உதிக்கும்; அவர் சகலத்துக்கும் கர்த்தாவான கடவுள்; பரலோகத்தையும், பூலோகத்தையும், அவைகளில் அடங்கிய சகலத்தையும் படைத்த சர்வ வல்லப தேவன். நாம் ஒன்றுமில்லாமையிலிருந்து உண்டாக்கப்பட்ட சிருஷ்டிகள்; நம்மை உண்டாக்கினவருக்கு முன்னால் நாம் ஒன்றுமில்லை; காலில் மிதிபடும் தூசி; நீசப்பாவிகள்; அவரோடு பேசுவதற்கு முற்றிலும் அருகதையற்றவர்கள்.

இத்தகைய தேவனை நோக்கித்தான் நாம் அபயமிடுகிறோம். “சுவாமி கிருபையாயிரும்.” - நமது நெஞ்சின் ஆழத்திலிருந்து கிளம்பும் அபயக் குரல்! தண்ணீரில் அமிழ்ந்தி மூழ்குவோன், “உதவி, உதவி” என்று கதறுவது போல் பாவக் கடலின் நடுவே வாழும் நாமும் தேவனை நோக்கிக் கதறுகிறோம்; ஆம்! நமது நீசத்தனந்தான் நம்மை அவ்வாறு கதறச் செய்கிறது. நமது ஆத்தும சரீரத் தொல்லைகள் மத்தியில் அந்த அபயக் குரல் கிளம்புகிறது. 

வியாதி, வருத்தம், சில சமயங்களில் தாங்க முடியாத வேதனை முதலியவை நமது சரீரத்தை வருத்துகின்றன; ஆத்துமத்திலோ, மிருக உணர்ச்சிகள் மேலோங்கி உக்கிரமாய்த் தாக்குகின்றன; இருள் போல் துயரம் பரவுகிறது; மன வறட்சி ஏற்படுகிறது; சந்தேகங்கள் அடுக்கி வந்து மன நிம்மதியைக் குலைக்கின்றன; அலைகடல் துரும்பு போல் நம் ஆத்துமம் தத்தளிக்கிறது. ஆபத்து எப்பக்கத்திலும் நம்மைச் சூழ்கிறது; உதவி கிடைக்காவிடில் நமது நாசம் நிச்சயம்; நமது சீர்கேடான நிலைமை நம்மைப் பயமுறுத்துகிறது; தைரியத்தைக் கைநெகிழ்கிறோம்; அவநம்பிக்கை மேற்கொள்ளுகிறது; இன்னும் ஒரு கணம்; ஆபத்தில் மூழ்கி மடிவோம்; ஆனால் ஏற்ற தருணம் இதுவே; நமது முழுப் பலத்தையும் கூட்டி கடவுளை நோக்கி, “அபயம், அபயம்” என்று அலற வேண்டிய சமயம் இதுவே. 

“சுவாமி எங்களைக் காப்பாற்றும்; நாங்கள் சாகிறோம்” (மத். 8:25) என்று அப்போஸ்தலர்களைப் போல நாமும் ஓலமிட வேண்டும். நேச தேவமாதா திருச்சபையோடு சேர்ந்து, “சுவாமி கிருபையாயிரும்” என்று நாமும் கதற வேண்டும். தேவனின் அளவற்ற இரக்கம் நமக்கு மிக அவசியம் என்பதை உணர்ந்து எவ்விடத்தும் எப்பொழுதும், அவரை நோக்கி அபயமிடுவோம். தன் இரணங்களைக் காட்டி நமது மனதை இளக வைத்து நமது உதவியைக் கோரும் பிச்சைக்காரனைப் போல் நாமும் நமது துன்ப துயரங்களை அவர் முன் சமர்ப்பித்து, அவரது இரக்கத்தைக் கெஞ்சி மன்றாடுவோம்.

“ஓ! வாக்கினுள் அடங்கா, மனத்தினுக்கெட்டா பரம்பொருளே! சர்வ வல்லப தேவனே! ஏழை எனது அபயக் குரலுக்குச் செவிசாய்த்தருள்வீராக. சுவாமி நான் பாதாளத்திலிருந்து கூப்பிடும் அபயக்குரல் உமது சந்நிதி மட்டும் வரக்கடவது. என் அழுகுரலைக் கேட்டு எனக்கு உதவி புரியத் தீவிரியும். நீசப் பாவியிலும் நீசப் பாவியான எனது பரிதாபமான நிலைமையைப் பார்த்து எனக்கு இரங்குவீராக. சுவாமி வாரும்; தீவிரமாக வாரும். என துயர் தீரும்!” 

சுவாமி கிருபையாயிரும்.