இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

விடியற்காலத்தின் நட்சத்திரமே!

சூரிய உதயத்தின் சில நிமிடங்களுக்கு முன் கீழ்வானில் ஓர் நட்சத்திரம் உதிக்கும்; அதுதான் விடியற் காலத்தின் நட்சத்திரம்; அதை “விடிவெள்ளி” என்றும் கூறுவர். உலகைக் கவிந்த காரிருளை ஓட்டும் சூரியன் வரவை முன்னறிவிப்பது இவ்விடிவெள்ளி. விடிவெள்ளி தோன்றிவிடின், விடியும் தருணம் ஆகி விட்டது, சூரியன் உதயமாகப் போகிறது என நாம் அறிகிறோம்.

மாமரி அன்னை இவ்விடிவெள்ளிக்கு ஒப்பான வர்கள். அவர்கள் உலகில் தோன்றிய காலத்தில், பாவ மென்னும் காரிருள் உலகை மூடிக் கொண்டிருந்தது. அஞ்ஞான அந்தகாரத்தில் மூழ்கியிருந்தனர் பெரும் பாலானோர். தெரிந்தெடுக்கப்பட்ட பிரஜைகளென இஸ்ராயேல் மக்கள் அழைக்கப்பட்டனர்; அவர்களிடை யேயும் தேவசிநேகம் என்பது வெறும் வெளிச்சடங்கு களோடு மட்டும் நின்றிருந்தது. அவர்களில் அநேகர் சர்வேசுரனையும் அவரது கற்பனைகளையும் மறந்து காலங்கடத்தி வந்தனர். 

இச்சமயத்தில்தான் “மாமரியன்னை” என்னும் “விடிவெள்ளி” உலக வானில் தோன்றியது. பாவக் காரிருளையகற்ற ஞானச் சூரியனாகிய உலக இரட்சகர் வரும் தருணம் அடுத்து வந்து விட்டது என்பதை உலகோருக்குப் பறைசாற்றியது அவ்விடி வெள்ளி; உலக மாந்தரோ அதை அறிந்து கொள்ள வில்லை. தாங்கள் எதிர்பார்த்த மெசையாவின் வருகையை, கன்னி மாமரியின் பிறப்பு முன்னறிவிக்கிறது என்பதை அவர்கள் உணர்ந்தார்களில்லை.

இதன் காரணமாகத்தான் திருச்சபை தேவமாதாவை “விடியற்காலத்தின் நட்சத்திரமே” என்று வாழ்த்துகிறது.

இதனால்தான் அர்ச். தமாசீன் அருளப்பரும், “சூரியனைச் சுட்டிக்காட்டும் விண்மீன்” (Stella demonstrans Solem) என்று அன்னையை அழைத்தார்.

சூரியனின் முன்னோடி விடிவெள்ளி. அவ்வாறே, நம் இருதயத்தில் குடிகொண்டுள்ள தேவசிநேகத்திற்குத் தப்பாத ஓர் அடையாளம் மாதா பக்தி. ஒருவனிடத்தில் உண்மையான மாதா பக்தி இருக்குமேயானால் அவனிடம் தெய்வ பக்தி இருப்பது நிச்சயம். அர்ச். ஜெர்மானுஸ் சொல்வதுபோல், “மாதா பக்தி ஓர் ஆத்துமத்தில் காணப்படுமானால், அது தேவ இஷ்டப்பிரசாதத்தில் இருக்கிறது; அல்லது கூடிய சீக்கிரத்தில் தேவ இஷ்டப் பிரசாதத்தை அடையும் என்பதற்கு அறிகுறி.” 

“மரியாயின் வழியாக சேசுவிடம் செல்” (Ad Jesum per Mariam) என்பது திருச்சபையில் வழங்கும் ஓர் பொன்மொழி. ஆம்; மரியன்னை வழியாகவே உலக இரட்சகர் நம்மை வந்தடைந்தார். இவ்வழியாகவே நாமும் அவரிடம் போய்ச் சேர வேண்டுமென்பது அவருடைய திருவுள்ளம். மாதா பக்தியே சேசுவிடம் சேருவதற்றுக் குறுக்கு வழி. இவ்வழியையன்றி, பிறவழித் தேடுவோன் தன் நித்திய கேட்டை நோக்கிச் செல்கிறான் என்பது மறுக்கவியலா உண்மை; ஏனெனில் அவன் சர்வேசுரனின் விருப்பத்தை நிறைவேற்றவில்லை; அவரது திருவுள்ளத்தை சட்டை பண்ணவில்லை.

முற்காலத்தில் வழிப்பிரயாணிகளுக்கு விடி வெள்ளி துணைபுரிந்தது. தற்காலத்தில் பொழுதறி வதற்குக் கடிகாரம் இருக்கிறது. முற்காலத்தில் அவ்வித கருவி ஒன்றுமில்லை. பகலில் சூரிய பிரயாணத்தினாலும், அதிகாலையில் விடிவெள்ளி மூலமாகவும் பொழுதறிந்து வந்தனர். அதிகாலையில் பிரயாணம் செய்ய விரும்புவோர் விடிவெள்ளியின் உதவிகொண்டுதான் பிரயாணம் தொடங்குவர்.

இவ்வுலகில் நாம் வழிப் பிரயாணிகள்; மோட்சமாகிய நமது சொந்த நாட்டை நோக்கிப் பிரயாணம் செய்கிறோம். இப்பிரயாணத்தில் நமக்கு உறுதுணை செய்பவர்கள் மாமரி அன்னையாகிய விடிவெள்ளி. இவ்விடிவெள்ளியை நம்பிப் பிரயாணம் செய்வோர், வழியில் ஏற்படும் ஆபத்துகளுக்கு அஞ்ச வேண்டியதில்லை. தம்மை நம்பினோரைக் கைவிடாதவர்கள் மாமரி அன்னை. அவர்களது ஆதரவில் நமக்கு யாதொரு குறைவும் ஏற்படாது. மாமரி அன்னை நமது பக்கத்தில் இருக்கும் வரையும், நம்மை எவ்வித ஆபத்தும் அண்டாது.

“ஓ! உதய தாரகையே! அன்னை மாமரியே! இதோ! எங்களை முழுவதும் உமது அடைக்கலத்தில் ஒப்படைக்கிறோம். நீரே எங்களை சேசுவிடம் இட்டுச் செல்லும் வழி; எங்கள் வழிப் பிரயாணத்தில் எங்களுக்கு ஆதரவும் நீரே; இவ்வுண்மையை நாங்கள் முற்றிலும் இதுவரை அறியவில்லை. கடவுளின் அருளால் இப்பொழுது அறிந்து கொண்டோம். தேவமாதாவே! எங்களை உமது அன்பின் அணைப்பில் ஏற்றுக்கொள்ளும். உம்மை விட்டு என்றும் பிரியாதிருக்கவும், மரியாயின் மக்கள் என்ற பெயருக்கு ஏற்ற விதமாய் நடக்கவும் வரம் பெற்றுத் தாரும்.”


விடியற்காலத்தின் நட்சத்திரமே!
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!